சினிமா விமர்சனம்: ஜுராசிக் வேல்டு ஃபாலன் கிங்டம்

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

ஜுராசிக் வரிசை படங்கள் மீண்டும் புத்துயிர் பெற்ற பிறகு வெளியாகும் இரண்டாவது படம். 2015ல் வெளியான ஜுராசிக் வேர்ல்ட் படத்தின் தொடர்ச்சி.

இந்த வரிசையில் இன்னும் ஒரு படம் பாக்கியிருக்கிறது. பழைய ஜுராசிக் வரிசை படங்களை எடுத்த ஸ்டீவன் ஸ்பீல்பர்க், இந்தப் படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளராகப் பணியாற்றியிருக்கிறார்.

கோஸ்டா ரிகாவுக்கு அருகில் அமைந்திருக்கும் ஐலா நுபுலர் தீவு. ஜுராசிக் பார்க் அமைந்திருந்த இந்தத் தீவில் மீண்டும் அமைக்கப்பட்ட, ஜுராசிக் வேர்ல்ட் என்ற தீம் பார்க்கில், மரபணு மாற்றப்பட்ட டைனோசர்களால் பெரும் சேதமும் குழப்பமும் ஏற்பட அந்தத் தீவு கைவிடப்படுவதோடு இதற்கு முந்தைய பாகம் நிறைவடைந்தது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கைவிடப்பட்ட ஐலா நிபுலர் தீவில் உள்ள மவுண்ட் சிபோ எரிமலை குமுற ஆரம்பிப்பதில் இந்த பாகம் துவங்குகிறது.

அந்தத் தீவில் கைவிடப்பட்ட டைனோசர்களைக் காப்பாற்ற வேண்டுமா, கூடாதா என அமெரிக்காவில் விவாதம் நடக்கிறது.

டைனோசர்களை உருவாக்கியதே தவறு என வாதிடும் அறிஞர்கள், அந்தத் தவறை இயற்கை சரிசெய்யும்போது அப்படியே விட்டுவிட வேண்டும் என்கிறார்கள்.

ஆனால், அந்த தீம் பார்க்கில் முன்பு நிர்வாகியாக இருந்த க்ளேர், அந்த டைனோசர்களைப் பாதுகாக்க குழு ஒன்றை உருவாக்குகிறாள்.

அரசு அவளது திட்டத்தை நிராகரித்துவிட, அந்தப் பார்க்கை உருவாக்கியவர்களில் ஒருவரான பெஞ்சமின் லாக்வுட்டிடமிருந்து அழைப்பு வருகிறது.

அவர் அந்த டைனோசர்களைக் காப்பாற்றி, வேறு ஒரு தீவில் விடவேண்டுமென விரும்புகிறார். அவரது சொத்தை நிர்வகித்துவரும் மில்ஸ் இந்த டைனோசர்களைப் பிடித்துவந்து, விற்பனை செய்ய திட்டமிடுகிறான்.

க்ளேர், தனது முன்னாள் காதலன் ஓவன் மற்றும் டைனோசர் பாதுகாப்புக் குழுவினருடன் அந்தத் தீவுக்குச் சென்று டைனோசர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபடுகிறாள்.

வெகு சீக்கிரத்திலேயே மில்ஸின் திட்டம் இவர்களுக்குத் தெரிந்துவிடுகிறது. அதற்குள் மில்ஸின் ஆட்கள், டைனோசர்களைப் பிடித்து கப்பலில் ஏற்றிவிடுகிறார்கள்.

ஐலா நுபுலரில் எரிமலைகள் வேகமாக வெடிக்க ஆரம்பிக்க எல்லோரும் அங்கிருந்து வெளியேறிவிடுகிறார்கள்.

அந்தத் தீவில் பிடிக்கப்பட்ட டைனோசர்களை ஏலம் விடும் முயற்சியில் ஈடுபடுகிறான் மில்ஸ். இதைக் கண்டுபிடித்த பெஞ்சமின் லாக்வுட்டையும் மில்ஸ் கொன்றுவிடுகிறான்.

விலங்குகள் விற்பனையைத் தடுக்க முயல்கிறார்கள் க்ளேரும் ஓவனும். வில்லன்களை முறியடித்த பிறகு, அந்த விலங்குகளை பெஞ்சமினின் பேத்தி கூண்டுகளிலிருந்து திறந்துவிடுகிறாள்.

ஜுராசிக் வகை திரைப்படங்கள் வெளியான துவக்கத்தில் அந்தப் படங்கள் ஏற்படுத்திய ஆச்சரியத்தை இந்தப் படத்திலும் எதிர்பார்க்க முடியாது.

ஆகவே, திரைக்கதையைத்தான் முழுக்க முழுக்க நம்பியிருக்க வேண்டிய கட்டாயம் இயக்குநருக்கு. முன்பு ஸ்பீல்பெர்க் இந்த வரிசையை இயக்கிக்கொண்டிருந்த காலத்தில், கதை ஒரு மிகப் பெரிய தீவில் நடந்தது.

ஆனால், இந்தப் படத்தில் விலங்குகளை தீவிலிருந்து வெளியேற்றி கலிஃபோர்னியாவில் உள்ள ஒரு வீட்டிற்குக் கொண்டுவந்திருக்கிறார்கள். அதனால் பல சமயங்களில் திகில் வீடு தொடர்பான படத்தைப் பார்ப்பதுபோல இருக்கிறது.

துறைமுகத்திலிருந்து எந்த பிரச்சனையில்லாமல் கப்பல்களிலிருந்து விலங்குகளை ஏற்றி, கலிஃபோர்னியாவுக்குக் கொண்டுவருவது, வீட்டின் அடியிலேயே அவ்வளவு பெரிய மிருகங்களை அடைத்துவைப்பது, காக்கிச் சட்டை படத்தில் வருவதுபோல சர்வதேச அளவில் மாஃபியா தலைவர்களை அழைத்துவந்து இந்த மிருகங்களை ஏலம் விடுவது போன்றவையும் இந்த பிரம்மாண்ட கதையோடு பொருந்தவில்லை.

இயக்குநர் பயோனா, முன்பு திகில் படங்களை இயக்கிக்கொண்டிருந்தவர். அதே பாணி திகிலையும் இந்தப் படத்தில் ஆங்காங்கே பார்க்க முடிகிறது.

படம் ஒரு வீட்டிற்குள் குறுகிவிட்டதால், முந்தைய படங்களில் இருந்த பிரம்மாண்டம் இதில் இல்லையோ என்ற எண்ணமும் ஏற்படுகிறது.

படத்தின் நாயகியான ப்ரைஸ் டல்லாஸ் ஹோவர்ட்டின் நடிப்பு படத்தின் பலங்களில் ஒன்று. நாயகன் க்ரிஸ் ப்ராட்டிற்கு முந்தைய படத்தில் இருந்ததுபோன்ற பாத்திரம்தான்.

பிரிந்துவிட்ட காதலர்களான இருவருக்கும் இடையிலான வசனங்கள் சில இடங்களில் ரசிக்க வைக்கின்றன.

ஜூராசிக் பார்க் வகை திரைப்படங்களின் பெரும் ஆர்வமாக தொடரும் ரசிகருக்கு சற்று ஏமாற்றமளிக்கக்கூடிய திரைப்படம். மற்றவர்கள் சாதாரணமாக பார்த்து, ரசித்துவிட்டு வரலாம்.

சினிமா விமர்சனம்: காலா (காணொளி)

தொடர்புடைய செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :