பிரிட்டனை தன் மேஜிக்கால் கட்டிப்போட்ட சர்கார்

    • எழுதியவர், ஜான் ஜுப்ரிஸ்கி
    • பதவி, பிபிசி

1956 ஏப்ரல் 9. காலை 9.25 மணிக்கு பிபிசி அலுவலகத்திற்கு திடீரென நூற்றுக்கணக்கான தொலைபேசி அழைப்புகள் வந்தன.

தொலைகாட்சியில் பிபிசி நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தவர்கள், அதில் ஒரு கொலை சம்பவம் நேரடியாக ஒளிபரப்பப்பட்டதை பார்த்தார்கள். அது தொடர்பான தொலைபேசி அழைப்புகள்தான் அவை.

மாயஜால வித்தைக்காரர் ஒருவர் 17 வயது பெண் ஒருவரை தன்வசப்படுத்தி, மேசை ஒன்றில் படுக்க வைத்தார். பிறகு அவர் ஒரு வாளால் அந்த பெண்ணை இரண்டு துண்டாக வெட்டினார். அதை பார்ப்பதற்கு கசாப்புக் கடையில் இருக்கும் இறைச்சித் துண்டுகளைப் போல் தோன்றியது.

அந்த சமயத்தில் பனோராமா என்ற பெயரில் பிரபலமான நிகழ்ச்சி தொலைக் காட்சியில் ஒளிபரப்பட்டது. அந்த நிகழ்ச்சியின் கடைசி எபிசோடில், இந்த மாயாஜால தந்திர சாதனை நடத்தப்பட்டது. ஆனால், அந்த நிகழ்ச்சி திடீரென முடிக்கப்பட்டதால், விபரீதமாக தவறு ஏதோ நடந்துவிட்டதாக நினைத்த மக்கள், தொலைகாட்சி சேனலை தொலைபேசியில் அழைத்து விசாரிக்கத் தொடங்கினார்கள்.

ஏனெனில் மாயாஜால நிபுணர் தனது சகாவை மேஜையில் இருந்து எழும்பச் சொன்னபிறகும் அவரிடம் இருந்து எந்த எதிர்வினையுமே இல்லை. அப்போது, தலை குனிந்தவண்ணம், மாயாஜால வித்தைக்காரர் மேஜையில் இருந்தவரின் முகத்தை கருப்பு துணி கொண்டு மூடினார்.

உடனே கேமராவின் முன் தோன்றிய நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும், முன்னணி நடிகருமான ரிச்சர்ட் டிம்பல்பாய், நிகழ்ச்சி முடிவடைந்துவிட்டதாக அறிவித்தார். அதன் பிறகுதான், லீம் க்ரோவ் ஸ்டுடியோசுக்கு தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் வந்துக் கொண்டேயிருந்தன.

மேற்கத்திய நாடுகளில் சர்கார் பிரபலமானது எப்படி?

மேற்கத்திய நாடுகளின் மாயாஜாலத் துறையில் சுலபமாக சர்காருக்கு இடம் கிடைத்துவிடவில்லை. அங்கு மூன்று வாரம் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்காக டியூக் ஆஃப் யோர் தியேட்டர் பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டு விற்பனை குறைவாகவே இருந்தது.

இந்த சமயத்தில் பனோராமா நிகழ்ச்சியில் சர்காருக்கு வாய்ப்பு கிடைத்தது, அவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்துவிட்டது. அந்த வாய்ப்பை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக் கொள்ள விரும்பினார் சர்கார்.

அவர் கலந்துக்கொண்ட பனோரமா நிகழ்ச்சி திடீரென முடிக்கப்பட்டதற்கு விளக்கம் கோரும் உத்தியோகபூர்வ நோட்டீசும் வழங்கப்பட்டது. கொடுக்கப்பட்ட விளக்கத்தில் சர்காருக்கு கொடுக்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்து விட்டதாக கூறப்பட்டிருந்தது.

ஆனால் சர்காரை பிடிக்காதவர்கள்கூட, அவரின் நேரம் தவறாத குணத்தை மறுக்கமுடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தனது சகாவான தீப்தியை வாளால் வெட்டிய பிறகு அப்படியே மேசையில் விட்டுவிட்ட நிலையில் நிகழ்ச்சியை பாதியிலேயே முடித்துக் கொண்டார். வழக்கமாக இதுபோன்ற மாயாஜால நிகழ்ச்சிகளில் மீண்டும் உயிர் பிழைக்க வைப்பது போன்ற காட்சிகள் இடம்பெறும்.

இந்த சம்பவத்திற்கு அடுத்த நாள் வெளியான செய்தித்தாள்கள் அனைத்திலும் சர்கார் மற்றும் அவரது சாதனைகளே பிரதானமாக இடம்பெற்றிருந்தன. பின்னர், யார்க் டியூக்கில் அவரது நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டுகள் அனைத்தும் விற்றுத்தீர்ந்தன என்பதை கூற வேண்டிய அவசியமே இல்லை.

வங்கதேசத்தில் பிறந்தவர் சர்கார்

இந்தியாவின் வங்காள மாநிலம் டாங்காயில் மாவட்டம், அஷோக்புர் கிராமத்தில் (தற்போதைய வங்கதேசத்தில்) 1913ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் தேதியன்று ப்ரோதுல் சந்த்ர சர்கார் பிறந்தார்.

கணிதத்தில் வல்லவரான அவரின் மனமோ மாயாஜாலத்தில் ஈடுபட்டது. முதலில் தனது மந்திர சாகசங்களை கிளப்கள், சர்க்கஸ் மற்றும் அரங்குகளில் நிகழ்த்தினார்.

ஆனால் வங்காளத்தின் சில நகரங்களைத் தாண்டி, மக்கள் அவரை அறிந்திருக்கவில்லை. எனவே, தானே உலகின் மிக பெரிய வித்தைக்காரர் என்று கூறத்தொடங்கினார். அவரது யுக்தி நன்றாக வேலை செய்ய, அவர் நாடு முழுவதும் பிரபலமானார்.

சரி, சிறிய ஊரிலிருந்து நாடு புகழும் பிரபல மாயாஜால வித்தைக்காரராக உயர்ந்துவிட்டார். அந்த காலகட்டத்தில் இந்திய மாயஜாலக்காரர்களுக்கு திறமை இருப்பதாக மேற்கத்திய நாடுகள் ஒருபோதும் நம்பியதில்லை.

இரண்டாம் உலகப்போரின்போது இந்தியாவிற்கு வந்த ராணுவ வீரர்களுக்கு, புத்துணர்வூட்டுவதற்காக பல்வேறுவிதமான கலைநிகழ்ச்சிகளை நடத்துவதற்காக வெளிநாடுகளில் இருந்து கலைக்குழுவினர் அழைத்து வரப்பட்டிருந்தனர். வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட சர்கார், கலைக் குழுவினருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டதோடு, மாயாஜாலங்கள் தொடர்பான பத்திரிகைகளில் கட்டுரைகளையும் எழுதத் தொடங்கினார்.

அமெரிக்காவில் பி.சி.சர்கார்

1950ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோ நகரில் மாயாஜால வித்தைக்கான மாநாட்டில் கலந்துக் கொள்ளுமாறு சர்காருக்கு அழைப்பு வந்தது. அங்கு சென்று அவர் நிகழ்ச்சியை நடத்திய பிறகு, ஷர்மன் ஹோட்டலில் இருந்து வெளியே வந்தார். அவரை பார்ப்பதற்காக அங்கே காத்திருந்த கணக்கிலடங்கா ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் அவரை சூழ்ந்துகொண்டனர். சர்கார் உலக அளவில் பிரபலமான மாயஜாலக்கதை இதுதான்.

ஆனால் அவரது முதல் நிகழ்ச்சி ஏமாற்றம் அளித்தது. அந்த நிகழ்ச்சியில் அவர் கண்ணைக் கட்டிக்கொண்டு, கரும்பலகையில் எழுதப்படவற்றை படிக்கவேண்டும். ஆனால் அந்த நிகழ்ச்சியில் அவர் வெற்றிபெறவில்லை.

அந்த காலக்கட்டத்தில் மிகவும் பிரபலமாக இருந்த இரு மாயவித்தைக்காரர்கள், மோசடி செய்வதாக சர்கார் குற்றம்சாட்டினார்.

அது அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்ததாக இருந்ததை நினைவு கூர்கிறார் இந்தத்துறையை சேர்ந்த ஜெனி பத்திரிகையின் ஆசிரியர் சாமுவேல் பேட்ரிக் ஸ்மித்.

"அமெரிக்காவில் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டதில்லை. ஆனால் சர்காரின் குற்றச்சாட்டுக்கு பிறகு சர்காரின் ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் என மாயஜாலத் துறையினர் இரு பிரிவாகப் பிரிந்தனர்" என்று அவர் கூறுகிறார்.

தான் மிகப்பெரிய மாயவித்தைக்காரர் என்று தன்னைப்பற்றியே சர்கார் கூறிக்கொண்டதை பெரிய ஏமாற்றுவித்தையாகவே பலர் கருதினார்கள்.

இதனால் அவரது மாய வித்தைகள் மீது பலர் சந்தேகங்களை எழுப்பினார்கள். அவரும், அவரது நிகழ்ச்சிகளும் விமர்சனத்திற்கு உள்ளாக, அதைப்பற்றி பலர் பேச, சரியா தவறா என்பதை தெரிந்துக் கொள்ள பலர் முயன்றனர். இது அவருக்கு எதிர்மறையான விளம்பரத்தைத் தேடிக் கொடுத்து, அவரது நிகழ்ச்சிகளில் அரங்கம் நிரம்பி வழிந்தது.

சர்காரின் விளம்பர யுக்தியும் பிறரிடம் இருந்து வித்தியாசப்பட்டது. மாயாஜாலங்கள் தொடர்பான பத்திரிகைகள் மற்றும் புத்தகங்களில் தனது நிகழ்ச்சி, மாயஜால வித்தை பற்றிய நேர்மறையான விமர்சனங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பதற்கான முயற்சிகளை அவர் எடுத்தார். அதுவரை இல்லாத வகையில், மற்றவர்களை கவர்ந்திழுக்கக்கூடிய புகைப்படங்கள் மற்றும் சுவரொட்டிகளையும் சர்கார் பயன்படுத்தினர்.

ஆனால் அவை அனைத்தும் கவர்ச்சி என்ற ஒரு சிறிய வட்டத்திற்குள்ளே இருந்தன. ஆங்கிலேயே மாயஜால நிபுணர்களின் பார்வையில் சர்கார் ஒரு வெளிநாட்டவராகவே இருந்தார்.

1955ஆம் ஆண்டின் முக்கிய சம்பவம்

ஹிட்லரின் மனம் கவர்ந்த மாயாஜால நிபுணர் ஹெல்மட் எவால்ட் ஸ்கிரீவர் என்பவர் கலாநக் என்ற பெயரில் மேடையில் மாயாஜால நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருந்தார். தனது திறமையை நகலெடுப்பதாகவும், திருடிவிட்டதாகவும் சர்கார் மீது 1955ஆம் ஆண்டு கலாநக் குற்றஞ்சாட்டினார்.

அதன்பிறகு, கலாநக்குக்கு எதிராகவும், சர்காருக்கு ஆதரவாகவும் மாயஜாலத் துறை நிபுணர்கள் ஓரணியில் திரண்டனர்.

சர்கார் மீது குற்றம் சுமத்திய கலாநக், தனது தேச அடையாளத்தை மறைத்ததாக குற்றம் சாட்டப்பட்டார். அதுமட்டுமல்ல, சர்கார் திருடியதாக அவர் குற்றம் சுமத்தியவை அனைத்தும், பிறரிடம் இருந்து அவர் திருடினார் அல்லது திருடியதாக குற்றம் சாட்டப்பட்டார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

1955ஆம் ஆண்டு பாரீசில் சர்கார் நடத்திய இந்திரஜால் அல்லது 'த மேஜிக் ஆஃப் இண்டியா ஷோ' என்ற நிகழ்ச்சி அவரை உலகம் முழுவதும் பிரபலமாக்கியது. தனது பல சகாக்கள், பல்வேறு விதமான மாயஜால வித்தைகள் மற்றும் வெவ்வேறு உபகரணங்களை கொண்டு அந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தினார் சர்கார்.

இந்த நிகழ்ச்சிதான், இந்திய மாயஜால நிபுணர்களை பற்றி மேற்கத்திய நாடுகளின் மனோபாவத்தை மாற்றியது என்பது சர்காரின் இமாலய வெற்றி என்றே சொல்லலாம்.

தாஜ்மஹலைப் போன்ற அரங்க வடிவமைப்பை சர்கார் செய்வார். அதுமட்டுமல்ல, சர்க்கஸ் யானைகளை தங்களது தும்பிக்கையை உயர்த்தி நிகழ்ச்சிக்கு வரும் பார்வையாளர்களை வரவேற்கும். இதுபோன்ற விதமான வித்தியாசமான, அனைவரையும் கவரும் வகையிலான ஏற்பாடுகளை செய்வது சர்காரின் வழக்கம்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளும் அற்புதமாக இருக்கும். அடுத்தடுத்த காட்சிகளில் ஆடைகளை மாற்றி பார்வையாளர்களை பரவசமூட்டுவது, கண்கவர் ஒளி அமைப்புகள் என மிகவும் கடுமையாக மனக்கணக்கு போட்டு பணியாற்றினார் சர்கார்.

இவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், சர்காரின் வாழ்க்கையின் திருப்புமுனையாக இருந்த்து பிபிசியின் பனோரமா நிகழ்ச்சியில் ஏற்பட்ட பரபரப்புதான் என்று சொல்வது மிகையாகாது. அது, தொலைக்காட்சி அறிமுகப்படுத்தப்பட்ட ஆரம்ப காலகட்டம், தொழில்நுட்பங்களும் இன்றைய அளவிற்கு இல்லை.

கிடைத்த சந்தர்ப்பங்களை திறமையாகவும், தனக்கு சாதகமாகவும் பயன்படுத்திக் கொண்டது சர்காரின் சாமர்த்தியமே. சர்கார் அளவுக்கு வேறு எந்த ஒரு மாயாஜால நிபுணரும் சந்தர்ப்பங்களை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட்தாக சொல்லிவிடமுடியாது.

மருத்துவர்களின் ஆலோசனையை லட்சியப்படுத்தினார்

அரங்க மேடையை சிறப்பு பாணியினால் அலங்கரிப்பது, நிகழ்ச்சியில் எதிர்பாராத மாற்றங்களை புகுத்துவது என, பிற மாயஜால நிபுணர்களில் இருந்து மாறுபட்டு திகழ்ந்தார் சர்கார். இந்திய மாயஜால துறையை உலக அளவில் கொண்டு சென்ற புகழ் அவரையே சாரும்.

1970ஆம் ஆண்டுவாக்கில் அவரது உடல் ஆரோக்கியம் சீர்கெட, பயணங்களை மேற்கொள்ளவேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள். ஆனால் ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிகளை முடித்து கொடுக்க வேண்டியிருந்த்தால் ஜப்பானுக்கு நான்கு மாத பயணமாக சென்றார் சர்கார். அவர் தனது உயிருக்கும் மேலாக நேசித்தது தனது கலையை என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.

1970 ஜனவரி ஆறாம் தேதியன்று ஹொக்கைடா தீவில் ஷிபேத்சு நகரில் தனது இந்திரஜால நிகழ்ச்சியை திருப்திகரமாக நடத்தி முடித்தார் சர்கார். நிகழ்ச்சியை முடித்துவிட்டு வெளியே வந்த அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு அவரை மரணத்திற்கு இட்டுச் சென்றது. சர்காரின் மறைவு மாயஜாய நிபுணர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்று சொல்வது மிகையாகாது, உலகம் முழுவதும் இருந்த அவரது துறை நிபுணர்களும், ரசிகர்களும் அவருக்குப் பிரியாவிடை கொடுத்தார்கள்.

மாயஜாலத் துறையின் வரலாற்றை எழுதிய டேவிட் ப்ரைஸ் இவ்வாறு கூறுகிறார், 'மேற்கத்திய நாடுகளின் மாயஜால நிபுணர்களுக்கு சவால்விடுக்க வேண்டிய அவசியம் இருந்த்து. அதற்காக இந்தியாவுக்கு நன்றி கூறவேண்டும். ஏனெனில் சர்கார் போன்ற மாபெரும் திறமையான நிபுணரை மாயாஜாலத் துறைக்கு அளித்த நாடு அது. மாயஜாலத்துறையில் இந்தியாவிற்கு என்று ஒரு தனிச் சிறப்பான இடத்தை ஏற்படுத்தியவர் சர்கார்.' என்று புகழ்கிறார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: