You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சினிமா விமர்சனம்: காளி
2013ல் வெளிவந்த வணக்கம் சென்னை படத்திற்குப் பிறகு கிருத்திகா உதயநிதி இயக்கியிருக்கும் திரைப்படம். தமிழில் காளி என்ற பெயரில் வெளியாகியிருக்கும் இந்தப் படம் தெலுங்கில், காசி என்ற பெயரில் வெளியாகிறது.
அமெரிக்காவில் மிகப் பெரிய மருத்துவராக இருக்கும் பரத்திற்கு (விஜய் ஆண்டனி) அடிக்கடி விசித்திரமான கனவு ஒன்று வருகிறது. அந்தக் கனவில் குழந்தையை மாடு ஒன்று முட்டவரும்போது, ஒரு பெண் நடுவில் புகுந்து காப்பாற்றுவதுபோல அந்தக் கனவு இருக்கிறது.
அந்தக் கனவுக்கு அர்த்தம் தெரியாமல் பரத் திகைத்துப்போயிருக்கும்போது, தான் யாரை பெற்றோர் என்று நினைத்திருக்கிறோமா, அவர்கள் தம் பெற்றோர் இல்லை என்பது புரிகிறது. இதனால், தன் பெற்றோரைத் தேடி இந்தியாவுக்கு வருகிறான் பரத். அங்கே கனவுக்கரை என்ற கிராமம்தான் தனது சொந்த கிராமம் எனத் தெரிய, காளி என்ற பெயரில் மருத்துவராகச் செயல்பட்டுக்கொண்டே, தனது உண்மையான பெற்றோரைத் தேட ஆரம்பிக்கிறான். அந்தத் தேடல்தான் மீதப் படம்.
விஜய் ஆண்டனியின் முந்தைய படமான அண்ணாதுரை, ரசிகர்களின் பொறுமையை ரொம்பவுமே சோதித்தது. ஆனால், காளியில் வேறு மாதிரியான கதையைக் கையில் எடுத்து தப்பியிருக்கிறார் விஜய் ஆண்டனி.
படத்தின் கதையைக் கேட்கும்போது, ரொம்பவும் சென்டிமென்ட்டாக தோன்றினாலும் இந்தப் படத்தின் அடிப்படை, கதாநாயகன் தன் பெற்றோரைக் கண்டுபிடிக்க எடுக்கும் முயற்சிகள்தான். கதாநாயகன் பெற்றோரைத் தேடும் முயற்சியில் மதுசூதன ராவ், நாசர், ஜெயப்பிரகாஷ் என மூன்று பேரது கதை சொல்லப்படுகிறது. அவர்களுடைய ஃப்ளாஷ்பேக்கைச் சொல்லும்போது, மூன்று பேரின் சிறுவயது நபராக கதாநாயகனே வருவது ஒரு சுவாரஸ்யத்தை கதைக்கு அளிக்கிறது.
இதில், நாசரின் சிறுவயதில் திருடனாக வரும் கதை உண்மையிலேயே அட்டகாசம். திருட்டு, கட்டாயக் கல்யாணம், காதல், துரோகம் என அந்த சின்ன எபிசோடுக்குள் பல வண்ணங்கள். அந்த எபிஸோடில் வரும் 'அரும்பே, அரும்பே' பாடலும் நினைவில் நிற்கும் பாடல்.
அண்ணாதுரை படத்தைத் தவிர, விஜய் ஆண்டனி தேர்வுசெய்த பாத்திரங்கள் எல்லாமே அவருக்குப் பொருந்தக்கூடிய, அதிகம் உணர்ச்சிகளை வெளிப்படுத்த தேவையில்லாத பாத்திரங்கள்தான். இந்தப் படமும் அப்படித்தான். நான்கு வெவ்வேறுவிதமான பாத்திரங்கள். அதை முடிந்த அளவுக்குச் சிறப்பாகவே செய்கிறார் விஜய் ஆண்டனி.
இந்த நான்கு பாத்திரங்களுக்கு ஜோடியாக அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா ஐயர் என நான்கு கதாநாயகிகள். இதில் மனதில் நிற்பது, வயதான மனிதரைத் திருமணம் செய்துகொண்டு, திருடனைக் காதலிக்கும் ஷில்பா மஞ்சுநாத்தின் பாத்திரம். இரண்டாவது இடத்தைப் பிடிப்பவர், சித்த மருத்துவராக வரும் அஞ்சலி.
சென்டிமென்ட் காட்சிகள் நிறைந்த இந்தப் படத்தை சோர்வில்லாமல் கொண்டுசெல்பவர், யோகிபாபு. வரும் காட்சி ஒவ்வொன்றிலும் சிரிப்பு மூட்டாமல் செல்வதில்லை.
படத்தின் இசையும் விஜய் ஆண்டனிதான். ஏற்கனவே சொன்னதுபோல அரும்பே, அரும்பே பாடல் திரும்பத் திரும்பக் கேட்கவைக்கிறது. மற்ற பாடல்களும் கேட்கும் ரகம்தான் என்றாலும் 'யுகம் நூறை' போன்ற பாடல்களில், விஜய் ஆண்டனியின் முந்தைய பட பாடல்களின் சாயல் தென்படுகிறது.
வணக்கம் சென்னையோடு ஒப்பிட்டுப்பார்த்தால் பல மடங்கு மேம்பட்டிருக்கிறார் கிருத்திகா உதயநிதி. சவாலான திரைக்கதையுள்ள படத்தை சிறப்பாகவே கையாண்டிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். அவ்வப்போது, படம் தொய்வடைவதுதான் இந்தப் படத்தின் ஒரே பலவீனம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்