You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஹைதராபாத்துக்கு இடம்பெயர்ந்த கர்நாடக அரசியல் பதற்றம்
கர்நாடக அரசியல் களத்தில் பரபரப்பு நிலவி வரும் சூழ்நிலையில், இன்று காலை கர்நாடக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஹைதராபாத் நகருக்கு சென்றுள்ளனர்.
பெங்களூருவிலிருந்து இரண்டு பேருந்துகளில் கிளம்பிய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் சுமார் 10:30 மற்றும் 11:30 மணியளவில் ஹைதராபாத் வந்தடைந்தனர.
ஹைதராபாத்திலுள்ள ஒரு நட்சத்திர விடுதியில் சுமார் 70 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் ஹைதராபாத்திலுள்ள ஒரு விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், ஹைதராபாத்திலுள்ள தங்களது சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அந்த இரண்டு கட்சிகளுமே தெரிவிக்கவில்லை.
ஆனால், 116 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கடிதங்கள் ஏற்கனவே தங்கள் வசம் உள்ளதாக இரண்டு கட்சிகளும் தெரிவிக்கின்றன.
முன்னதாக, கர்நாடகா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து முதல்வராக பதவியேற்றுக் கொண்டுள்ள எடியூரப்பா, நாளை (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
இந்த பிரச்சனைக்கு சிறந்த தீர்வு நம்பிக்கை வாக்கெடுப்புதான் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த வழக்கை நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அஷோக் பூஷன் மற்றும் அர்விந்த் பாப்டே ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
கர்நாடகாவில் ஆட்சி அமைக்க எடியூரப்பாவுக்கு ஆளுநர் வஜூபாய் வாலா அழைப்பு விடுத்ததை எதிர்த்து, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தன. மேலும், எடியூரப்பாவுக்கு ஆளுநர் 15 நாட்கள் அவகாசம் வழங்கியிருந்தார்.
பெரும்பான்மையை தங்களால் நிரூபிக்க முடியும் என்றும், சில காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏக்களின் ஆதரவும் தங்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் முதல்வர் எடியூரப்பா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி வாதிட்டார்.
இந்த சமயத்தில் இதற்கு மேல் எந்த தகவல்களையும் குறிப்பிட முடியாது என்றும் அவர் கூறினார்.
நாளையே சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் மேலும் காலஅவகாசம் அளிக்க முடியாது என்றும் நீதிபதி சிக்ரி கூறினார். நம்பிக்கை வாக்கெடுப்புக்கு வரும் அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படுவது உறுதி செய்யப்படும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், அதற்கு முன்னதாக இடைக்கால சட்டப்பேரவைத் தலைவரை ஆளுநர் நியமித்து, புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றுக் கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஆளுநருக்கு கடந்த 15 மற்றும் 16-ஆம் தேதிகளில் எடியூரப்பா எழுதிய கடிதங்கள் நீதிபதிகள் முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்டன. அதில், பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளதாகவும், பேரவையில் தனது பலத்தை நிரூபிக்க முடியும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அதன்படி, நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஆனால், ஆங்கிலோ-இந்திய நியமன எம்.எல்.ஏ.வை நியமிக்கக் கூடாது என்று உத்தரவிட்டனர்.
இதனிடையே, கர்நாடக மாநில சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக பாஜக சட்டமன்ற உறுப்பினரான கே.ஜி. போப்பையாவை நியமனம் செய்து ஆளுநர் வஜூபாய் வாலா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
நம்பிக்கை வாக்கெடுப்பு முடியும் வரை எடியூரப்பா முக்கிய கொள்கை முடிவுகள் எதையும் எடுக்கக் கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க உரிமை கோரியதை ஆளுநர் ஏன் பரிசீலிக்கவில்லை என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அவர்கள் தரப்பு எம்.எல்.ஏ.க்களின் கையெழுத்திட்ட கடிதம் கிடைக்கவில்லை என்று ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் கையெழுத்துடன் கடிதம் கொடுக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி தெரிவித்தார்.
புதிய சட்டம்
சர்க்காரியா கமிஷன் பரிந்துரைகளின் அடிப்படையில், தனிப்பெரும் கட்சியையும், தேர்தலுக்கு முன்பு கூட்டணி வைத்திருந்த கட்சிகளின் கூட்டணியையும் ஆட்சி அமைக்க அழைக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அடிப்படையிலேயே ஆளுநர் பாஜகவை அழைத்திருக்கிறார் என ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தற்போது, பரிந்துரை அடிப்படையிலேயே முடிவுகள் எடுக்கப்படுகிறது, இதற்கு சட்டப்பூர்வமான எந்த பாதுகாப்பு அம்சமும் இல்லை என்று குறிப்பிட்ட நீதிபதிகள், இதற்கு ஒரு முழுமையான சட்டத்தை ஏற்படுத்த தாங்கள் நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் தெரிவித்தனர்.
கோடை விடுமுறைக்குப் பிறகு மீண்டும் நீதிமன்றம் கூடும்போது, புதிய சட்டம் இயற்றுவது தொடர்பாக முறையான வரைமுறைகள் உருவாக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, புதன்கிழமை நள்ளிரவு நடந்த விசாரணையின் முடிவில் கர்நாடக மாநில முதல்வராக பா.ஜ.க தலைவர் எடியூரப்பா பதவி ஏற்பதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனையடுத்து, மே 17ஆம் தேதி கர்நாடக மாநில முதல்வராக எடியூரப்பா பதவி ஏற்றுக் கொண்டார்.
கர்நாடக சட்டசபைக்கான தேர்தல் முடிவுகள் மே 15 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. 104 தொகுதிகளில் பாஜக வென்றது. காங்கிரஸ் 78 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களிலும் வென்றன.
எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில், காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் இணைந்து, 115 எம்.எல்.ஏ.க்களுடன் ஆட்சி அமைக்க உரிமை கோரின. கர்நாடகாவில் ஆட்சி அமைக்கக் கோரி எடியூரப்பாவும் ஆளுநரிடம் கடிதம் அளித்தார்.
அதனையடுத்து கர்நாடக முதல்வராக பதவியேற்று ஆட்சியமைக்க எடியூரப்பாவிற்கு அழைப்பு விடுத்தார் கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலா. 224 உறுப்பினர்கள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில், 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது.
நம்பிக்கை வாக்கெடுப்பு எவ்வாறு நடத்தப்படும்?
கர்நாடக சட்டப்பேரவையில் சனிக்கிழமை மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எவ்வாறு அது நடைபெறும்? அதன் நடைமுறை என்ன?
1. அதிக முறை தேர்ந்தெடுக்கப்பட்ட மூத்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவரை, சட்டப்பேரவை செயலாளர் அடையாளம் காட்ட வேண்டும்.
2. அப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏவை, இடைக்கால சபாநாயகராக சட்டப்பேரவை செயலாளர் முன்மொழிவார். அவருக்கு ஆளுநர் பதவி பிரமாணமும் செய்து வைப்பார்.
3. எம்.எல்.ஏக்கள் அனைவரும் உறுதி ஏற்பு விழாவில் பங்கேற்க அழைப்புவிடுக்குமாறு இடைக்கால சபாநாயகர் சட்டப்பேரவை செயலரை கோருவார்.
4. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் பதவியேற்றுக் கொள்வது என்பது ஒரு நீண்ட நெடிய நடைமுறையாகும். இதற்கு, உச்சநீதிமன்றம் அளித்த காலக்கெடுவான மாலை 4 மணிக்கு மேல் ஆகலாம். இதுகுறித்து பிபிசியிடம் பேசிய கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் ரமேஷ் குமார், "இதுபோன்ற தருணங்களில் ஆளுநரின் கடிதத்தை விட உச்சநீதிமன்ற உத்தரவைதான் மதிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
5. எம்.எல்.ஏக்களின் பதவியேற்பு விழா முடிந்தவுடன்...
அ. நம்பிக்கை வாக்கெடுப்பை இடைக்கால சபாநாயகர் நடத்தலாம்
ஆ. புதிய சபநாயகர் தேர்ந்தெடுக்கப்படலாம்.
6. முதலில் பொதுவாக சபையில் குரல் வாக்கெடுப்பு நடத்தப்படும். பின்பு கதவுகள் மூடப்படும் அதன் பின் ஆதரவு மற்றும் எதிர் தரப்பினர் தங்கள் வாக்குகளை தனித்தனியாக வெளிப்படுத்த வேண்டும்.
7. இந்த நடைமுறைகள் முடிந்தவுடன் முடிவுகளை சபாநாயகர் அறிவிப்பார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்