You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சினிமா விமர்சனம்: நடிகையர் திலகம்
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்த் திரையுலகிலும் தெலுங்கு திரையுலகிலும் 50களிலும் 60களிலும் கோலோச்சிய சாவித்ரி தேவியின் பிரகாசமும் துயரமும் நிரம்பிய வாழ்க்கைக் கதைதான், நடிகையர் திலகம். தெலுங்கில் மகாநதி என்ற பெயரில் வெளியானது இந்தப் படம்.
1980. பெங்களூரில் பேச்சு மூச்சற்றுக் கிடக்கும் ஒரு பெண்மணியை மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். பிறகு, அவர்தான் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் புகழ்பெற்ற நடிகையான சாவித்ரி என்பது தெரியவருகிறது. அவரது வாழ்க்கைக் கதையை எழுதுவதற்காக வருகிறார் அப்போதுதான் பணியில் சேர்ந்திருக்கும் மதுரவாணி.
மதுரவாணியின் தேடல், சாவித்ரியின் வாழ்க்கைக்குள் நம்மை பின்னோக்கி அழைத்துச் செல்கிறது. சிறுவயதிலேயே தந்தையை இழந்த சாவித்ரி, தன் உறவினர் வீட்டில் வாழ்ந்து வருகிறார்.
குழந்தையாக இருக்கும்போதே நடனம் கற்க ஆரம்பித்து நாடகங்களில் நடிக்கும் சாவித்ரி, பிறகு சென்னைக்கு வந்து வாய்ப்புகளைத் தேடுகிறார். மெல்ல மெல்ல வாய்ப்புகள் வர ஆரம்பிக்கின்றன. அதே நேரத்தில் ஜெமினி கணேசனின் பழக்கமும் ஏற்படுகிறது. அவருக்கு ஏற்கனவே திருமணமாகியிருந்தும் ரகசியமாக திருமணம் செய்துகொள்கிறார்கள். அதற்குப் பிறகும் தொடர்ந்து புகழேணியில் ஏறிக்கொண்டேயிருக்கிறார் சாவித்ரி.
ஆனால் ஜெமினி கணேசனின் திரையுலக வாழ்வில் ஏற்படும் வீழ்ச்சி, சாவித்ரியைப் பார்த்துப் புழுங்க வைக்கிறது. பிறகு, ஜெமினி கணேசனின் பேச்சைக் கேட்காமல் படங்களை இயக்க ஆரம்பித்து, தயாரித்து பெரும் கடனில் வீழ்கிறார்.
ஜெமினி கணேசனுக்கு பிற பெண்களுடன் இருக்கும் தொடர்புகளால் அவரைவிட்டும் விலகுகிறார். மதுவிற்கு அடிமையாகி, கோமாவில் வீழும் சாவித்ரி, 19 மாதங்களுக்குப் பிறகு மரணமடைகிறார்.
இந்தக் கதையை கொஞ்சம் கொஞ்சமாகக் கோர்க்கும் மதுரவாணி, சாவித்ரியின் துணிச்சலால் தூண்டப்பட்டு தன் தந்தை பார்த்துவைத்திருக்கும் மணமகனை மறுத்துவிட்டு, காதலனைத் தேடிச் செல்கிறாள்.
ஒரு வாழ்க்கைக் கதையை சினிமாவாக்குவதில் பல பிரச்சனைகள் இருக்கின்றன. உண்மையான சம்பவங்களை அப்படியே சொல்ல முடியாதது ஒரு பக்கமென்றால், சுவாரஸ்யத்திற்காக வேறு எதையும் சேர்க்கவும் முடியாது. அதனால், அந்தத் திரைப்படம் ஒரு ஆவணப் படத்தைப்போல முடிந்துவிடும் ஆபத்து உண்டு. இந்தக் கதைக்கும் அந்தப் பிரச்சனைகள் உண்டு.
ஆனால், சாவித்ரியின் வாழ்வே கொண்டாட்டமும் பரவசமும் சந்தோஷமும் துயரமும் நிரம்பிய சாகஸம் என்பதால், அந்த விபத்து இந்தப் படத்தில் தவிர்க்கப்பட்டிருக்கிறது. தவிர, நேரடியாக சாவித்ரியின் கதையைச் சொல்லாமல், ஒரு பத்திரிகையாளரின் தேடலின் மூலம் கதையைச் சொல்வது, அலுப்பைத் தவிர்க்கிறது.
சாவித்ரியாக நடித்திருக்கும் கீர்த்தி சுரேஷிற்கு, அவரது திரைவாழ்வின் மிக முக்கியமான படமாக நடிகையர் திலகம் இருக்கும். சென்னைக்கு துள்ளலோடு வந்து இறங்கும் இளம் பெண்ணாக, மிகப் பெரிய நடிகையாக, ஜெமினி கணேசனின் இரண்டாவது மனைவியாக, குடிப் பழக்கத்திற்கு அடிமையாகி வீழும் நட்சத்திரமாக என பிரமிக்கவைத்திருக்கிறார்.
இரண்டு இடங்களில் அவரது நடிப்பைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். சாவித்ரி அவ்வப்போது தனது கீழ்த் தாடையை இடமிருந்து வலமாக அசைப்பார். அது அவரது பாணியாகவே இருந்தது. அதை நுணுக்கமாகக் கவனித்து செய்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
அதேபோல, சாவித்ரி குடிக்கு அடிமையான பிறகு, முகமெல்லாம் வீங்கியிருக்கும் காட்சிகள். இந்தக் காட்சிகளிலும் பின்னியெடுக்கிறார் கீர்த்தி சுரேஷ். சாவித்ரி பாத்திரத்தில் அவரைத் தவிர வேறு யாரையும் இனி நினைத்துப் பார்க்க முடியாது என்பதே அவரது வெற்றி.
ஜெமினி கணேசனாக வரும் துல்கர் சல்மானை நிஜ ஜெமினி கணேசனோடு ஒப்பிட்டுப் பார்த்தால் சற்று ஏமாற்றமாக இருக்கலாம். நமக்குத் திரைப்படங்கள் மூலமாகத் தெரியவந்த ஜெமினி கணேசன், சற்று நளினமானவர். மென்மையானவர். ஆனால், துல்கர் சல்மானின் தோற்றம் அவருக்கு ஒரு முரட்டுத்தனமான இமேஜை அளிக்கிறது.
அது மட்டுமே நெருடல். மற்றபடி, சாவித்ரியை வளைக்கும் தருணத்தில் கொஞ்சிப் பேசுவதாகட்டும் பிறகு அவரது வளர்ச்சியைப் பார்த்து புழுங்குவதாகட்டும் துல்கரின் நடிப்பில் குறை சொல்ல முடியாது. ஒரு பெண் மையப் படத்தில் தனக்கான குறைவான இருப்பை உணர்ந்தே இந்தப் பாத்திரத்தை ஏற்றிருக்கும் துல்கர், மிகச் சிறப்பாகவே நடித்திருக்கிறார்.
சாவித்ரியின் கதையில் ஜெமினி கணேசனைத் தவிர்த்த எல்லோருமே துணைப் பாத்திரங்கள்தான். இருந்தாலும் அவருடைய மாமாவாக வரும் ராஜேந்திர பிரசாத், தயாரிப்பாளர் அலூரி சக்கரபாணியாகவரும் பிரகாஷ் ராஜ் ஆகியோரும் அந்தந்தப் பாத்திரங்களோடு பொருந்திப் போகிறார்கள்.
இணை கதையாக வரும் மதுரவாணியின் கதையில், மதுரவாணியாக வரும் சமந்தாவுக்கும் இது மிக முக்கியமான படமே. அப்பள நிறுவனத்தைப் பற்றி எழுதிக்கொண்டிருக்கும் துவக்க நிலை பத்திரிகையாளர் என்ற நிலையிலிருந்து மெல்ல மெல்ல தன்னுடைய தேடலின் மூலம் ஒரு நல்ல பத்திரிகையாளராகவும் தன்னம்பிக்கை கொண்ட பெண்ணாகவும் உருவெடுக்கும் மதுரவாணியின் பாத்திரம் இவருக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறது.
இந்தப் படத்தின் திரைக்கதையில் சில பிரச்சனைகள் இருக்கவே செய்கின்றன. சாவித்ரியின் கதை துவங்கி, அவருக்கு சினிமாத் துறையில் வாய்ப்புக் கிடைக்கும் வரை படம் மிக மெதுவாக, தகவல் சார்ந்ததாக, ஒரு ஆவணப் படத்தைப்போலவே நகர்கிறது.
மேலும் இந்தப் படம் அடிப்படையில் ஒரு தெலுங்குப் படம். அதனால், சாவித்ரிக்கும் தெலுங்குத் திரையுலகிற்கும் இடையிலான உறவை மையப்படுத்தியே படம் முழுக்கவும் நகர்கிறது.
தமிழில் 100 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் சாவித்ரியின் வாழ்க்கைக் கதையில், சிவாஜி கணேசன் என்ற பெயர் ஒன்றிரண்டு இடங்களில் போகிறபோக்கில் சொல்லப்படுகிறது. பிற்காலத்தில் சாவித்ரியின் நண்பராக இருந்த சந்திரபாபு, கதையிலேயே இல்லை. சாவித்ரி நடித்திருக்கும் படங்கள் வரும் காட்சியிலும் பெரும்பாலும் தெலுங்குப் படங்களும் பாடல்களுமே காட்டப்படுகின்றன.
நீண்ட நாட்களுக்குப் பிறகு படம் நெடுக, கவனிக்க வைக்கும் வசனங்கள். எழுதியவர் மதன் கார்க்கி. பாராட்டப்பட வேண்டிய மற்றொருவர் கலை இயக்குனர். 50களின் திரையுலகை மீண்டும் உயிர்த்தெழச் செய்ய ரொம்பவுமே பாடுபட்டிருக்கிறார் மனிதர்.
மிக்கி ஜே மெயர் இசையில் 'மௌன மழையிலே', 'மஹாநதி' பாடல்கள் அசத்துகின்றன. பின்னணி இசையிலும் மெச்சத்தக்க ஒரு படம் இது. இருவேறு காலகட்டங்களுக்கேற்றபடி வெவ்வேறுவிதமான இசை பாணிகளை பின்பற்றியிருப்பதும் அசத்தல்.
சாவித்ரி திரையுலகில் கோலோச்சிய காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு இந்தப் படம் ஒரு மறக்கமுடியாத மீள் பயணமாக இருக்கும். மற்றவர்கள் கீர்த்தி சுரேஷைப் பார்க்கப் போய், சாவித்ரியை சந்தித்து வருவார்கள்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்