காலா இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பேசிய 10 விஷயங்கள் என்ன?

நடிகர் ரஜினி காந்த் தனது திரைப்பட தோல்விகள், நதி நீர் இணைப்பு, அரசியல் கட்சி துவக்கம் உள்ளிட்ட பல விஷயங்களை புதன்கிழமை இரவு நடந்த காலா இசை வெளியீட்டு விழாவில் பேசியிருக்கிறார்.

''கருணாநிதி குரலை கேட்க வேண்டும்''

காலா திரைப்பட இசை வெளியீட்டு விழா சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் புதன்கிழமை நடந்தது. நிகழ்ச்சியின் இறுதியில் பேசிய ரஜினி, காலா இசை வெளியீட்டு விழாவை பார்க்கும்போது படத்தின் வெற்றி விழா போன்று இருக்கிறது எனச் சொல்லி கடந்த தசாப்தத்தில் அவரது திரைப்பட வெற்றி தோல்விகள் குறித்து பேசினார். பேச்சின் துவக்கத்திலேயே, திமுக தலைவர் கருணாநிதி குறித்து தனது பேச்சில் குறிப்பிட்டார்.

''கடைசியாக சிவாஜி திரைப்படத்தின் வெற்றி விழாவை கொண்டாடினேன். அதில் பெரியவர் டாக்டர் கலைஞர் கலந்து கொண்டு கௌரவித்து பேசினார். அவர் பேசிய விஷயத்தையும் குரலையும் என்றைக்கும் மறக்க முடியாது. 75 ஆண்டுகளாக தமிழகத்தின் மூலையெங்கும் ஒலித்த அவரது குரலை, தற்போது கேட்க தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் நானும் ஒருவன். கூடிய விரைவில் அது நடக்கும் என நம்புகிறேன். ஆண்டவனையும் வேண்டிக்கொள்கிறேன்'' என்றார் காலா திரைப்பட நாயகன்.

சிவாஜி திரைப்படத்திற்கு பிறகு ரோபோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்ததை தொடர்ந்து வெற்றி விழா கொண்டாட விரும்பியதாகவும், ஆனால், உடல்நிலை மோசமானதால் சிங்கப்பூர் சென்று மருத்துவ உதவிகள் மூலமாகவும் ரசிகர்களின் பிரார்த்தனைகள், ஆசீர்வாதங்கள் மூலமாகவே பிழைத்து வந்ததாகவும் குறிப்பிட்டார் ரஜினிகாந்த்.

கோச்சடையான் தோல்வி ஏன்?

'' உடல் விரைவில் குணமடைய வேண்டுமானால் மருத்துவர்கள் மனதை புத்துணர்ச்சியாக வைத்திருக்க அறிவுறுத்தினார்கள். மனது கெட்டுப் போனால் உடல் கெட்டுப்போகும் என்றும் மனதுக்கும் உடலுக்கும் தொடர்பு உண்டு என கூறினார்கள். எனக்கு நடிப்பு தவிர வேறு வேலை தெரியாததால் மீண்டும் களமிறங்கினேன்'' என்று ரஜினி பேசினார்.

'' ராணா திரைப்பட வேலைகள் நடந்தபோதுதான் உடல்நலம் குன்றியது. ஒரு சில புத்திசாலிகள் ராணா திரைப்படத்தையே சற்று மாற்றி அனிமேஷனில் செய்யலாம் என்றார்கள். எனது மகள் சௌந்தர்யா அனிமேஷன், சிஜி துறையில் நிபுணர் என்பதால் ஏழு எட்டு நாட்களில் நடித்தால் போதுமானது என்றார்கள். ஆகவே, மீண்டும் நடிக்கத் துவங்கினேன். அது தொழில்நுட்பம் முழுமைபெற்ற காலகட்டம் இல்லை. காலதாமத்திற்கு, படம் முழுமையான தரத்துடன் வரவேண்டுமெனில் கூடுதலாக ஒரு குறிப்பிட்ட தொகை செல்வாகும் என்றார்கள் அந்த அதிபுத்திசாலிகள்'' என்று அவர் தெரிவித்தார்.

'' அப்போது இத்தோடு நிறுத்திவிடலாம் என நான் சொல்லிவிட்டேன். ஏனெனில் எனக்கு இத்திரைப்படத்தின் மீதிருந்த நம்பிக்கை போய்விட்டது. அவர்கள் சொல்லும் தொகையை பார்த்தால் படத்தின் பட்ஜெட் எங்கேயோ போயிருக்கும். ஆகவே தலை போவதற்கு தலைப்பாகை போனால் பரவாயில்லை என்றுதான் படத்தை வெளியிட்டேன். அது நன்றாக வசூல் செய்யவில்லை. ஆகவே வெற்றி விழா கொண்டாடவும் முடியவில்லை.

அப்படத்தில் நான் சில விஷயங்களை தெரிந்து கொண்டேன். புத்திசாலிகளுடன் பழக வேண்டும். அதிபுத்திசாலிகளுடன் பழக கூடாது, அவர்களின் ஆலோசனையை கேட்கக் கூடாது. அதிபுத்திசாலிகள் பல யோசனைகளை செய்வார்கள். ஏனெனில் அவர்கள் இருக்கும் இடத்தில் பல கதவுகள், ஜன்னல்கள் மூடி இருக்கும். ஆனால் நேரம் வரும்போது ஓடிவிடுவார்கள் ஆகவே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்'' என கோச்சடையான் திரைப்பட தோல்வியின் பின்னணியை விவரித்தார் ரஜினி.

தென்னிந்திய நதிகளை இணைக்க வேண்டும்.

''நிறைய கதைகளுக்கு பிறகு லிங்காவின் கதை பிடித்திருந்தது. ஏனெனில் தண்ணீர் பஞ்சம், அணைப் பற்றிய கதை. எனக்கு தண்ணீர் என்றாலே எனக்கே தெரியாமல் ஒரு ஈடுபாடு வந்துவிடுகிறது. தண்ணியில்லாமல் மக்கள் கஷ்டப்படுவதால் நாயகன் அணை காட்டும் கதாபாத்திரம் அது''

'' நான் இமயமலைக்குச் செல்வதே கங்கையை பார்ப்பதற்குத்தான். சில இடங்களில் ரௌத்திரமாகவும், மெதுவாக நடனமாடியும், பின்னர் மௌனமாக போகும். ஆகவே, நதிநீர் இணைப்பு என்பது என் கனவு. தென்னிந்திய நதிகளை மட்டும் இணைத்து விட்டால் மறுநாளே நான் கண்ணை மூடிவிட்டாலும் எனக்குப் பரவாயில்லை'' எனப் பேசினார் ரஜினி.

''மகள் வயதையொத்த நடிகையுடன் டூயட் கிடையாது''

''தண்ணீர் பற்றிய கதை என்பதால் 'லிங்கா' உடனே செய்யலாம் என ஒப்புக்கொண்டேன். அது நான் நினைத்த அளவுக்கு போகவில்லை. இத்திரைப்படத்தின் மூலம் நான் இரண்டு விஷயம் தெரிந்துகொண்டேன். ஒன்று, நல்லவனாக இருக்கணும் ஆனால் ரொம்ப நல்லவனாக இருக்கக் கூடாது. அது திரைப்படத்திலும் சரி வாழ்க்கையிலும் சரி. ரொம்ப நல்லவனாக இருந்தால் அபாயமானது மேலும் கோழை என நினைத்து விடுவார்கள் !''

இரண்டாவது, எனக்கு 65 வயது. அதிகபட்சம் நாற்பது நாற்பத்தி ஐந்து வயதுடைய கதாபத்திரத்தில் நடிக்கலாம். 30-35 வயது நாயகனாக நடித்து என்னுடைய மகளுடன் சிறு குழந்தையாக வளர்ந்த எனது நண்பர் சத்ருகன் சின்ஹா மகளை ஹீரோயினாக எனது திரைப்படத்தில் நடிக்க வைத்தது சரியல்ல என உணர்ந்தேன். இத்தோடு இது போன்ற விஷயங்களை நிறுத்திவிட வேண்டும் என முடிவுசெய்தேன்.''

''ரஜினி முடிந்துவிட்டார் என்றார்கள்''

'' கோச்சாடையான் சரியாக போகவில்லை. அனிமேஷன் படமாகிவிட்டது. லிங்காவும் சிறப்பாக வெற்றி அடையவில்லை என்றவுடன், அவ்வளவுதான் ரஜினி முடிந்துவிட்டார் என்றார்கள். இது நாற்பது வருடமாக சொல்லிக்கொண்டே இருப்பதுதான். அவர்களையும் குறை சொல்வதற்கு இல்லை. ஏனெனில் அவர்களும் இக்குதிரை என்னடா ஓடிக்கொண்டே இருக்கிறது! எனப் பார்த்தார்கள்.

பத்து வருஷம் பாத்தாங்க, இருபது வருஷம் பாத்தாங்க, முப்பது வருஷம் பாத்தாங்க, நாற்பது வருஷமா ஓடிட்டே இருக்கிறதே எனப் பார்த்தார்கள். பொறாமை வரத் தானே செய்யும். வயிறெல்லாம் எரியத்தான் செய்யும்.

நான் என்ன செய்வது? நான் ஓட வில்லை. நீங்கள் தான் என்னை ஓட வைக்கிறீர்கள். ஆண்டவன் ஓட வைக்கிறார். அது அவர்களுக்கு புரிவதில்லை. நான் என்ன செய்வது? '' என தனது திரைப்பட வாழக்கை முடிவுக்கு வருவது மீதான விமர்சனங்களுக்கு பதிலளித்தார் ரஜினிகாந்த்.

செவிட்டு தவளை கதை

''நான்கு தவளைகள் ஒரு மலை ஏறவேண்டும். அவை ஏறத்துவங்கிய போது கீழே இருந்த மற்ற தவளைகள் மேலே தேள், பாம்பு இருக்கும் எனக் கூறின. கீழே உள்ள தவளைகள் கத்திக்கொண்டே இருந்ததில் மூன்று தவளைகள் மேலே இருந்து கீழே விழுந்துவிட்டன. ஒன்று மட்டும் மேலே சென்று விட்டது. எல்லாருக்கும் ஆச்சர்யம். காரணம் என்னவெனில் ஒரு தவளைக்கு மட்டும் காது கேட்காது. ஆகவே யார் என்ன சொன்னாலும் என் ரூட்டில் நான் போய்க்கொண்டே இருப்பேன்'' என தனது பாணியை விவரித்தார் ரஜினி.

ரஞ்சித்துக்கு வாய்ப்புத் தந்தது எப்படி?

''வயதுக்கேற்ற கதை, காலத்துக்கேற்ற கதை செய்ய வேண்டுமென முடிவெடுத்து அதற்கான கதைகள் கேட்கத் துவங்கினேன். சௌந்தர்யா பரிந்துரையின் பேரில் ரஞ்சித்திடம் கதை கேட்டேன்.

அவர் முழுமையான கதை தயாரிக்க 15 நாட்கள் வேண்டுமென்றார். ஆனால் சரியான நேரத்துக்கு வரவில்லை. சில நாட்களுக்கு பிறகு வந்து மீண்டும் சில நாட்கள் வேண்டுமென்றார். இதுவரை தயாரித்த கதையை சொல்லுங்கள் என்றேன். அவர் மறுத்துவிட்டார். '' உங்களுக்கு இது ஒரு படம், எனக்கு இது பெரிய வாய்ப்பு. எனக்கு முதலில் கதையில் நம்பிக்கை வரவேண்டும்'' என்றார். அவர் சந்தர்ப்பவாதியல்ல அவருக்குத் தன் மேல் நம்பிக்கை இருந்தது அப்போதே நான் இவர்தான் அடுத்த படத்துக்கான இயக்குநர் என முடிவு செய்தேன்'' எனப் பேசினார் ரஜினி.

''காலா அரசியல் படம் இல்லை''

''கபாலிக்குப் பிறகு அடுத்த திரைப்படத்தில் நடிக்க கதை கேட்டேன். வெற்றிமாறன் சொன்ன கதை அருமை. ஆனால் அரசியல் திரைப்படம். அப்போது எனக்கு அரசியலில் இறங்கும் எண்ணம் இல்லை. ஆகவே மக்களை குழப்ப ஆசைப்படவில்லை. எனவே இப்போதைக்கு வேண்டாம் என வெற்றிமாறனிடம் சொன்னேன்.

ரஞ்சித்தை மீண்டும் கூப்பிட்டேன். கதை இருக்கா என கேட்டேன் அவர் எனக்கான கதை இல்லை என்றார். நான் மும்பை தாராவி தமிழர்கள் குறித்து அவரிடம் சொன்னேன். திருநெல்வேலியில் இருந்து 80 வருடத்துக்கு முன்னர் அங்கே சென்ற தமிழர்கள் அங்கே உள்ளனர். முதலில் 80 - 85% மக்கள் அப்பகுதியில் தமிழர்களே பிறகு சுருங்கி சுருங்கி தற்போது 60 - 65% பேராக சுருங்கிவிட்டனர் என்றேன்.

கபாலி உங்களின் படம். காலா எனது படமாகவும் உங்களின் படமாகவும் இருக்க வேண்டும் என ரஞ்சித்திடம் கூறினேன்'' என்றார்.

ரஜினி காந்த் அரசியல் கட்சி துவங்கவுள்ளதாக கூறியுள்ள நிலையில், காலா அரசியல் நுழைவுக்கு முன்னோட்டமான படமாக இருக்கக்கூடும் என ரசிகர்கள் கருதி வந்த நிலையில் ''காலா அரசியல் படம் கிடையாது ஆனால் படத்தில் அரசியல் இருக்கும்'' எனத் தெளிவுபடுத்தினார் ரஜினி காந்த்.

''எனக்குச் சவாலான வில்லன்கள்''

எனது திரைவாழ்வில் எனக்குச் சவாலாக அமைந்த, எனது திரைப்படத்தில் நடித்த வில்லன்கள் இருவர்தான். ஒருவர் 'பாட்சா' ஆண்டனி, மற்றொருவர் 'படையப்பா' நீலாம்பரி. தற்போது 'ஹரிதாதா'. எனக்கே அவருடன் நடிக்க குஷியாகிவிட்டது என நானா படேகர் உடன் நடித்த அனுபவம் பற்றி பகிர்ந்து கொண்டார் சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படும் ரஜினிகாந்த்.

''நேரம் வரும்''

ரஜினி அரசியல் கட்சி துவங்குவது குறித்து பேசுகையில் ''எனக்கு இன்னும் அரசியல் கட்சித்துவங்க தேதி வரவில்லை. கடமை இருக்கிறது. நேரம் வரும். நேரம் வரும்போது ஆண்டவன் ஆசிர்வாதத்தோடு மக்கள் ஆதரவோடு தமிழ்நாட்டுக்கும் தமிழக மக்களுக்கும் நல்ல நேரம் பிறக்கும்'' என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: