திரைப்பட விமர்சனம்: பீச்சாங்கை

தமிழில் கடந்த சில ஆண்டுகளில் சற்று வித்தியாசமான கதை, திரைக்கதையுடன் பல படங்கள் வெளிவந்திருக்கின்றன. பீச்சாங்கை படத்தை மிகச் சிறந்த படமென்று சொல்ல முடியாவிட்டாலும், மேலே சொன்ன வரிசையில் சேர்க்கக்கூடிய படம் என்று நிச்சயமாகச் சொல்லலாம்.

நாயகன் ஸ்மூது, ஒரு பிக்பாக்கெட் திருடன். ஒரு விபத்தில் அவரது தலையில் அடிபட்டதில், Alien Hand Syndrome எனப்படும் பிரச்சனை ஏற்பட்டு, அவரது கை அவரது கட்டுப்பாட்டை மீறி செயல்பட ஆரம்பிக்கிறது.

இதற்கிடையில், ஆபாச படம் பார்க்கும் அரசியல்வாதியின் செல்போனை திருடும் வேலை ஸ்மூதுக்கு வருகிறது. அதைப் பறிகொடுத்த அரசியல்வாதி ஸ்மூதைத் தேடுகிறார்.

தொடர்ந்து பிரச்சனைகளில் சிக்கிக்கொள்வதால், காதலியும் பிரிந்து சென்றுவிடுகிறார். நாயகன் இதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதே மீதிக் கதை.

பீச்சாங்கை

முதல் படத்திலேயே ஒரு வித்தியாசமான கதையைக் கையில் எடுத்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக்.

மிகக் குறைந்த செலவில் உருவாக்கப்பட்ட படம் என்பது பல இடங்களில் வெளிப்படுகிறது. இந்தப் படத்தின் பல காமெடிக் காட்சிகள் மிகப் பழையவை. ஆனால், தனது திரைக்கதையாலும் படம் முழுக்க வரும் அபத்த நகைச்சுவையாலும் ரசிக்கவைக்கிறார் கார்த்திக்.

படத்தின் நாயகன், நாயகி துவங்கி படத்தில் நடித்திருக்கும் எல்லோருமே புதுமுகங்கள். ஆனால், சிற்சில இடங்களைத் தவிர, அது வெளிப்படவேயில்லை.

குறிப்பாக ஆபாசப்படம் பார்க்கும் வில்லனாக நடித்திருக்கும் விவேக் பிரசன்னா ஆச்சரியமூட்டுகிறார். இரண்டு, மூன்று இடங்களில்தான் படம் திரும்பத் திரும்ப சுற்றிவந்தாலும், அது தெரியாத வகையில் ஒளிப்பதிவு இருக்கிறது. பின்னணி, இசையும் பாடல்களும்கூட சிறப்பாக அமைந்திருக்கின்றன.

பீச்சாங்கை

ஆனால், முதல் பாதி படத்தின் பிற்பகுதியில் படம் தொய்வடைவதையும் சில காட்சிகள் ஏனோதானோவென்று அமைக்கப்பட்டிருப்பதையும் சற்று கவனித்திருக்கலாம்.

படத்தில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம், படம் முழுக்க வயதுவந்தவர்களுக்கான காட்சிகளும் காமெடிகளும் இருப்பது. தமிழில் இம்மாதிரியான 'அடல்ட் காமெடி' ரொம்பவுமே குறைவு.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்