"இந்தியாவின் பிக் கேம் பிளேயர்": யுவ்ராஜ் சிங் பற்றிய 4 விஷயங்கள்

யுவ்ராஜ் சிங்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், பிரதீப் கிருஷ்ணா
    • பதவி, பிபிசி தமிழ்

யுவ்ராஜ் சிங் - இந்திய கிரிக்கெட்டின் முக்கிய அங்கமாக விளங்கியவர். ஒரு ஆல்ரவுண்டராக பல போட்டிகளில் இந்தியா வெற்றி பெறக் காரணமாக இருந்திருக்கிறார்.

இந்திய அணிக்காக 17 ஆண்டுகள் சர்வதேச அரங்கில் விளையாடியிருக்கும் அவர், பத்தாயிரம் ரன்களுக்கு மேல் எடுத்திருக்கிறார். அந்தக் காலகட்டத்தில் பல்வேறு சாதனைகள் படைத்த யுவ்ராஜ், பத்மஶ்ரீ, அர்ஜுனா போன்ற பல விருதுகளும் வாங்கியிருக்கிறார்.

டிசம்பர் 12 அன்று பிறந்த நாளை கொண்டாடும் யுவ்ராஜ் சிங் என்றால் உங்கள் நினைவுக்கு வருவது என்ன?

1. 'பிக் கேம் பிளேயர்'

"யுவ்ராஜ் சிங் போன்ற ஒரு பிக் கேம் பிளேயரை நான் பார்த்ததில்லை" என்கிறார் கிரிக்கெட் வல்லுநரும் வர்ணனையாளருமான நானீ.

''மிகப்பெரிய, மிகவும் முக்கியமான போட்டிகளிலும், தொடர்களிலும் முன்னணி வீரர்கள்கூட நெருக்கடி காரணமாக சோபிக்கத் தவறுவார்கள். ஆனால், அப்படியான சூழ்நிலையிலும் எப்போதும் சிறப்பாக விளையாடும் வீரர்களை 'பிக் கேம் பிளேயர்' என்பார்கள். யுவ்ராஜ் அப்படியான ஒரு வீரர்'' என்கிறார் நானீ.

"ஒரு வீரர் இரண்டு உலகக் கோப்பை வெற்றிகளில் மிக முக்கியப் பங்காற்றியிருக்கிறார் என்பது அசாத்தியமான விஷயம்" என்றும் அவர் கூறுகிறார்.

இந்தியாவின் இரண்டு உலகக் கோப்பை வெற்றிகளில் (2007 டி20 உலகக் கோப்பை & 2011 ஒருநாள் உலகக் கோப்பை) பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார் யுவ்ராஜ் சிங்.

யுவ்ராஜ் சிங்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2011 ஒருநாள் உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருது வென்றார் யுவ்ராஜ் சிங்

2011 உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருது பெற்று இந்தியா உலக சாம்பியன் ஆவதில் மிக முக்கியக் காரணமாகத் திகழ்ந்தார் யுவ்ராஜ். பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் கலக்கினார். 90.5 என்ற பேட்டிங் சராசரியில் 362 ரன்கள் எடுத்தார். பேட்டிங் செய்த 8 இன்னிங்ஸ்களில் ஒரு சதமும், 4 அரைசதங்களும் அடித்தார் அவர். அதே போல பந்துவீச்சிலும் 15 விக்கெட்டுகள் (சராசரி - 25.13) கைப்பற்றினார்.

அதேபோல் 2007 டி20 உலகக் கோப்பையிலும் அரையிறுதியில் ஆட்ட நாயகன் விருது வென்று இந்தியாவை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றிருந்தார். அதுமட்டுமல்லாமல் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு சூப்பர் 8 போட்டியில் ஓர் ஓவரின் ஆறு பந்துகளிலும் ஆறு சிக்ஸர்கள் விளாசி உலக சாதனை படைத்தார் யுவ்ராஜ்.

அவரது அந்த அதிரடியால் இந்திய அணி கடைசி மூன்று ஓவர்களில் மட்டும் 69 ரன்கள் சேர்த்தது. அந்தப் போட்டியில் இந்தியா வென்றது என்னவோ 18 ரன்கள் வித்தியாசத்தில்தான்.

"2007 உலகக் கோப்பையில் சீனியர்கள் பெரும்பாலும் ஒதுங்கிவிட்டனர். அந்த இளம் அணியில் யுவ்ராஜே ஒரு சீனியர் வீரர் போலத்தான். அங்கு அவர் தனது சிறப்பான பங்களிப்பைக் கொடுத்தார். அதேநேரம், 2011 உலகக் கோப்பையில் சச்சின், சேவாக், ஜஹீர் என ஜாம்பவான்கள் நிறைந்திருந்தனர். அவர்களுக்கு மத்தியில் ஆடியபோதும் அவர் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்தார்" என்கிறார் நானீ.

யுவ்ராஜ் சிங்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2007 டி20 உலகக் கோப்பையில், ஸ்டுவர்ட் பிராட் வீசிய ஒரு ஓவரின் 6 பந்துகளிலுமே சிக்ஸர் அடித்தார் யுவ்ராஜ்

அதேநேரம், யுவ்ராஜ் சிங்கின் உலகக் கோப்பை பங்களிப்பு இதற்கெல்லாம் முன்பு 2000ஆம் ஆண்டிலேயே தொடங்கிவிட்டது என்கிறார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் வித்யுத் சிவராமகிருஷ்ணன்.

"தனது சிறப்பான செயல்பாட்டால் 2000ஆம் ஆண்டின் அண்டர் 19 உலகக் கோப்பையை யுவ்ராஜ் சிங் வென்று கொடுத்தார்" என்று கூறும் வித்யுத், அந்த அணியில் யுவ்ராஜ் சிங்குடன் இடம்பெற்றிருந்தார்.

"அந்த (2000) அண்டர் 19 உலகக் கோப்பை, வெள்ளை உடையில், சிவப்புப் பந்துடன் ஆடப்பட்டது. இலங்கையில் ஆடிய அந்தத் தொடரில், யுவ்ராஜ் அனைத்திலுமே கலக்கினார். அந்த இலங்கை ஆடுகளங்களுக்கு ஏற்பத் தனது சுழல்பந்துவீச்சில் கலக்கிய அவர், பேட்டிங்கிலும் நல்ல பங்களிப்பைக் கொடுத்தார். தொடர் நாயகன் விருது வாங்கி எங்கள் அணி கோப்பை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தார்" என்றார் வித்யுத்.

2000ஆம் ஆண்டின் அண்டர் 19 உலகக் கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருது வென்ற யுவ்ராஜ், 203 ரன்கள் எடுத்தார். 11.5 என்ற சராசரியில் 12 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

2. 'ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எப்போதுமே ஜொலித்தவர்'

யுவ்ராஜ் சிங்கின் உலகக் கோப்பைப் பங்களிப்பைப் பற்றிக் கூறிய நானீ, இன்னொரு விஷயத்தைக் குறிப்பிட்டுப் பேசினார். அது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவரது பங்களிப்பு.

"உலகக் கோப்பைகளில் எப்போதும் இந்தியாவுக்கு பிரச்னையாக இருப்பது ஆஸ்திரேலியாதான். அவர்களை வீழ்த்தினால் இந்தியா கோப்பை வென்றுவிடும். அதுதான், 2007, 2011 இரு தொடர்களிலும் நடந்தது.

நன்கு கவனித்தால், அந்த வெற்றிகளுக்கு யுவ்ராஜ் மிக முக்கியக் காரணமாக இருந்திருப்பார். 2007 டி20 உலகக் கோப்பை அரையிறுதி (30 பந்துகளில் 70 ரன்கள்), 2011 உலகக் கோப்பை காலிறுதி (57 ரன்கள் + 2 விக்கெட்டுகள்) என இரண்டு போட்டிகளிலுமே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர்தான் ஆட்ட நாயகன். அவருடைய இந்தப் பங்களிப்பு அசாத்தியமானது" என்கிறார் நானீ.

ஒரு தசாப்தத்திற்கு முன்பு வரை இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது மிகவும் கடினமான ஒன்றாகக் கருதப்பட்டது. ஆனால், அப்படியான காலகட்டத்தில், உலகக் கோப்பையில் இந்திய அணி இரண்டு முறை ஆஸ்திரேலியாவை நாக் அவுட் செய்ய யுவ்ராஜ் சிங் உதவினார்.

யுவ்ராஜ் சிங்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2011 உலகக் கோப்பை காலிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவை வெற்றி பெறவைத்தார் யுவ்ராஜ் சிங்

இந்த உலகக் கோப்பைகள் மட்டுமல்ல, 2000 அண்டர் 19 உலகக் கோப்பையிலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக (அரையிறுதியில்) அரைசதம் அடித்தார் யுவ்ராஜ்.

மேலும், 2000 ஐசிசி நாக் அவுட் டிராஃபியிலும் ஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்த யுவ்ராஜ்தான் காரணம்.

அந்தப் போட்டியில் 80 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருது வென்றார் அவர். இதில் சிறப்பு என்னவெனில், அதுதான் சர்வதேச அரங்கில் அவர் பேட்டிங் செய்த முதல் இன்னிங்ஸ்.

யுவ்ராஜ் சிங்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2000 நாக் அவுட் டிராபியில் கென்யாவுக்கு எதிராக அறிமுகம் ஆகியிருந்தாலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராகத்தான் முதல் முறை சர்வதேச அரங்கில் பேட்டிங் செய்தார் யுவ்ராஜ்

3. இந்திய ஃபீல்டிங்கில் மாற்றத்தைக் கொண்டு வந்தவர்

யுவ்ராஜ் சிங் இந்திய கிரிக்கெட்டில் ஏற்படுத்திய மிகப் பெரிய தாக்கமாக வித்யுத், நானீ இருவருமே சொல்லும் விஷயம், ஃபீல்டிங்கில் அவர் கொண்டு வந்த மாற்றம்.

"இந்திய அணி ஃபீல்டிங்குக்காக அதிகம் பேசப்பட்ட அணி கிடையாது. ஏக்நாத் சோல்கர், வெங்கட்ராகவன், அசாருதீன், கே.ஶ்ரீகாந்த் போன்ற நிறைய நல்ல ஃபீல்டர்கள் இருந்திருக்கிறார்கள். அதேநேரம், டைவ் அடிப்பது, ஸ்கேட் செய்வது போன்ற விஷயங்களை அவ்வளவாகச் செய்ய மாட்டார்கள். ஆனால், யுவ்ராஜ் சிங் இந்திய ஃபீல்டிங்கை ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இணையாக எடுத்துச் சென்றார்" என்கிறார் நானீ.

2000களின் தொடக்கத்தில் யுவ்ராஜ் சிங் மற்றும் மொஹம்மது கைஃப் இருவரின் துடிப்பான ஃபீல்டிங், இந்திய ஃபீல்டிங் பற்றிய பார்வையையே மாற்றியது.

யுவ்ராஜ் சிங்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, யுவ்ராஜ் சிங்குக்குப் பிறகு பாயின்ட் திசையில் கோலோச்சக்கூடிய ஒரு ஃபீல்டர் இந்தியாவுக்கு கிடைக்கவில்லை என்கிறார் நானீ

ஒருவர் பாயின்ட் திசையிலும், மற்றொருவர் கவர் திசையிலும் நின்று தங்கள் ஃபீல்டிங்காலேயே எதிரணி பேட்டர்களுக்கு சவாலளித்தனர்.

மிகவும் கடினமான அந்த பாயின்ட் திசையில் மிகச் சிறப்பாக யுவ்ராஜ் செயல்பட்டதாகக் கூறும் நானீ, அதைப் பார்த்தே அடுத்த தலைமுறை வீரர்கள் ஃபீல்டிங்கில் அதிக கவனம் செலுத்தியிருக்க வேண்டும் என்கிறார்.

"பாயின்ட் திசையில் நிற்பது மிகவும் கடினமானது. பந்து எப்படிவேண்டுமானாலும் வரும். ஆனால், அங்கே யுவ்ராஜ் சிறப்பாகச் செயல்பட்டார். ஜடேஜா போன்ற இன்றைய தலை சிறந்த ஃபீல்டர்கள் நிச்சயம் அதைப் பார்த்து உத்வேகம் பெற்றிருக்க வேண்டும்" என்றார்.

யுவ்ராஜ் அடுத்த தலைமுறையை மட்டுமல்ல, தன் அணியில் இருந்த வீரர்களுக்கும் பெரும் உத்வேகம் கொடுத்ததாகக் கூறுகிறார் வித்யுத்.

"அந்த (2000) அண்டர் 19 உலகக் கோப்பைக்காக இலங்கையில் இருந்தபோது அவர் ஃபீல்டிங்குக்கு தனி கவனம் செலுத்துவார். அவர் இயற்கையாகவே ஒரு 'அத்லீட்'. இருந்தாலும் தொடர்ந்து கடினமாக உழைத்தார். ஆங்கிள்கள் கட் செய்வது, டைரக்ட் ஹிட்கள் அடிப்பது எனக் குறிப்பிட்ட விஷயங்களுக்கும் நேரம் செலவழித்தார். அதைப் பார்த்து மற்ற வீரர்களுக்குமே ஃபீல்டிங்கில் அதிகம் கவனம் செலுத்தத் தோன்றும்" என்றார் அவர்.

ஸ்டம்புகளை நேராக அடிப்பதில் (டைரக்ட் ஹிட்) அவர் அளவுக்குத் துல்லியமாக செயல்பட்டவர்கள் யாரும் இல்லை என்று சொல்லும் வித்யுத், 2000 நாக் அவுட் டிராஃபி அரையிறுதியில் நடந்த விஷயத்தையும் நினைவு கூர்ந்தார்.

யுவ்ராஜ் சிங்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தன் ஃபீல்டிங்கை மேம்படுத்த யுவ்ராஜ் சிங் கடினமாக உழைத்ததாகக் கூறுகிறார் வித்யுத் சிவராமகிருஷ்ணன்

"அந்தப் போட்டியில் யுவ்ராஜ் பேட்டிங்கில் 84 ரன்கள் அடித்திருப்பார். ஆனால், அடுத்து ஆஸ்திரேலியா ஆடும்போது ஃபீல்டிங்கில் அவர் பெரிய தாக்கம் ஏற்படுத்தினார். மைக்கேல் பெவனை அவர் டைரக்ட் ஹிட் மூலம் ரன் அவுட் செய்ததுதான் ஆஸ்திரேலியாவின் சரிவுக்கு வழிவகுத்தது" என்றார் வித்யுத்.

இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ தரவுகளின்படி, 1999 உலகக் கோப்பைக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் அவுட்கள் செய்த ஃபீல்டர்கள் வரிசையில் நான்காவது இடத்தில் (21 ரன் அவுட்கள்) இருக்கிறார் யுவ்ராஜ். ஆனால், முதல் மூன்று இடங்களில் இருக்கும் ஜெயவர்தனே, அட்டப்பட்டு, பான்டிங் ஆகியோரை விட சுமார் 30 போட்டிகள் குறைவாகவே ஆடியிருக்கிறார் அவர்!

4. புற்றுநோயைப் போராடி வென்றவர்

2011ம் ஆண்டு யுவ்ராஜ் சிங்குக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரின்போதே அவர் சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தார். அதற்கு மத்தியில் விளையாடித்தான் அந்தத் தொடரின் நாயகனாக உருவெடுத்தார்.

"புற்றுநோயோடு போராடிக்கொண்டு உலகக் கோப்பையில் அவர் அப்படி செயல்பட்டதெல்லாம் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஒன்று. வாழ்க்கையோடே போராடி வென்றுவிட்டார்" என்கிறார் நானீ.

புற்றுநோய்க்காக அமெரிக்காவில் சிகிச்சை எடுத்த யுவ்ராஜ், விரைவிலேயே குணமடைந்து மீண்டும் இந்திய அணிக்குள் நுழைந்தார். இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோவின் 2012ம் ஆண்டுக்கான சிறந்த டி20 அணியில் இடம்பிடிக்கும் அளவுக்கு இருந்தது கேன்சரில் இருந்து மீண்டு வந்த அவரது செயல்பாடு.

யுவ்ராஜ் சிங்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான உலகக் கோப்பை (2011) போட்டியில் உடல் உபாதைகளுக்கு மத்தியிலும் விளையாடி சதமடித்தார் யுவ்ராஜ்

விமர்சனங்களும் சர்ச்சைகளும்

பல உச்சங்களைக் கண்ட யுவ்ராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்க்கையில் விமர்சனங்களும் சர்ச்சைகளும் அவ்வப்போது எழவே செய்தன.

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்தியாவின் முக்கிய அங்கமாக விளங்கிய யுவ்ராஜ் சிங்கால் டெஸ்ட் போட்டிகளில் பெரிய தாக்கம் ஏற்படுத்த முடியவில்லை. சொல்லப்போனால் அவரால் அதிக வாய்ப்புகளுமே பெற முடியவில்லை. டிராவிட், சச்சின், கங்குலி, லக்‌ஷ்மண் நிறைந்திருந்த மிடில் ஆர்டரில் அவருக்கு பெரிய அளவு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. மொத்தம் 40 டெஸ்ட் போட்டிகளிலேயே அவர் விளையாடியிருக்கிறார். அந்த வாய்ப்புகளிலும் அவரால் பெருமளவு சோபிக்க முடியவில்லை.

யுவ்ராஜ் சிங்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2014 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை பௌலர்களுக்கு எதிராக ரன் சேர்க்க யுவ்ராஜ் பெரிதும் சிரமப்பட்டார்

அதேபோல், 2012 டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்டிருந்த அவர், அடுத்த உலகக் கோப்பையின்போது கடுமையாக விமர்சிக்கப்பட்டார். 2014 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 21 பந்துகளை சந்தித்த யுவ்ராஜ் சிங்கால் 11 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்தியா 20 ஓவர்களில் 130 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. இது பெருமளவு ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டது.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இன்ஸ்டாகிராம் லைவ்-ன்போது சஹல் பற்றி ஜாதி ரிதீயிலாகக் குறிப்பிட்டதாக பெரும் பிரச்னை ஏற்பட்டது. தான் சொன்னது தவறுதலாகப் புரிந்துகொள்ளப்பட்டதாகக் கூறிய யுவ்ராஜ் சிங், அதற்காக மன்னிப்பும் கோரினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு