"இன்று பில்கிஸ் பானு, நாளை...." பாலியல் வழக்கில் குற்றவாளிகள் விடுதலை குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி

பில்கிஸ் பானு பாலியல் வல்லுறவு வழக்கில் 11 குற்றவாளிகளை விடுதலை செய்தது தொடர்பான தண்டனை குறைப்பு கோப்புகளை தாக்கல் செய்ய இந்திய உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மனு தாக்கல் செய்ய மத்திய அரசும், குஜராத் அரசும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
"சிறை நன்னடத்தை சலுகை" என்று குறிப்பிட்டு, அந்த வழக்கில் 11 குற்றவாளிகளின் தண்டனைக் குறைப்பு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய விரும்பவில்லை என்று அரசாங்கம் இன்றைய விசாரணையின்போது சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த வழக்கில் 11 குற்றவாளிகளை "முன்கூட்டியே" விடுவித்த மாநில அரசின் நடவடிக்கையை எதிர்த்து பில்கில் பானு, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்திய உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
குற்றவாளிகளின் தண்டனை நீக்கம் "சமூகத்தின் மனசாட்சியை உலுக்கிய நடவடிக்கை" என்று அவர் கூறினார். 2002ஆம் ஆண்டில் நடந்த குஜராத் கலவரத்தில் அவரது மூன்று வயது மகள் உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் கொல்லப்பட்டனர்.
இந்த வழக்கில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து பில்கிஸ் பானு தாக்கல் செய்த வழக்கில், கடந்த மார்ச் 27 அன்று உச்ச நீதிமன்றம், தண்டனைக் குறைப்பு தொடர்பான கோப்புகளை தாக்கல் செய்யுமாறு குஜராத் அரசுக்கும், மத்திய அரசுக்கும் உத்தரவிட்டது.
நீதிபதிகள் கே.எம்.ஜோசப் மற்றும் பி.வி. நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு, 11 குற்றவாளிகளுக்கு அவர்களின் சிறைவாசத்தின் போது வழங்கப்பட்ட விடுதலை குறித்து கேள்வி எழுப்பியதுடன், குற்றத்தின் தீவிரத்தை அரசு பரிசீலித்திருக்கலாம் என்றும் தெரிவித்தது.
"கர்ப்பிணி மீது கூட்டுப் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டதுடன் பலர் கொல்லப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவரின் நிலைமையை சராசரி இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 302 உடன் ஒப்பிட முடியாது. ஆப்பிளை ஆரஞ்சு பழத்துடன் ஒப்பிட முடியாது என்பது போல், படுகொலைகளை ஒரே கொலையுடன் ஒப்பிட முடியாது. குற்றங்கள் என்பவை பொதுவாக ஒரு சமூகம் மற்றும் பெரிய சமுதாயத்துக்கு எதிராக நடத்தப்படுகின்றன. சமத்துவமற்றவற்றை சமமானதுடன் நடத்த முடியாது" என்று உச்ச நீதிமன்றம் கூறியதாக பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்குப் பிறகு வெடித்த கலவரத்தில் இருந்து தப்பிச் செல்லும்போது பில்கில் பானு சில கும்பலால் கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டபோது அவருக்கு வயது 21. அந்த சம்பவத்தின்போது அவர் ஐந்து மாத கர்ப்பிணி. மேலும், கொல்லப்பட்ட ஏழு குடும்ப உறுப்பினர்களில் பில்கிஸ் பானுவின் மூன்று வயது மகளும் அடங்குவார்.
“மத்திய அரசு ஒப்புதல் அளித்ததால், மாநிலம் (குஜராத் அரசு) அதன் மனசாட்சிப்படி நடக்கத் தேவையில்லை என அவசியமில்லை. இன்று, இந்த பெண்மணி. நாளை அது வேறொருவராக இருக்கலாம். ஏன் இன்று நீங்களாகவோ நாளை நாங்களாகவோ இருக்கலாம். இதுபோன்ற விஷயங்களில் ஒரு திடமான தரநிலைகள் இருக்க வேண்டும். குற்றவாளிகளுக்கான தண்டனை குறைப்பு தொடர்பான கோப்புகளை காண்பிக்காவிட்டால் எங்களுடைய முடிவை கூட நாங்கள் திரும்பப் பெற வேண்டியிருக்கும்," என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
இந்த வழக்கில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் எஸ்.வி.ராஜு, குற்றவாளிகளுக்கு நிவாரணம் வழங்கும் முடிவு தொடர்பான அசல் கோப்புகளை சமர்பிப்பதற்கான உத்தரவை மறுஆய்வு செய்ய மத்திய அரசும் குஜராத் அரசும் கோரும் என்று தெரிவித்தார்.
அப்போது நீதிபதிகள் கே.எம்.ஜோசப், பி.வி.நாகரத்னா ஆகியோர், "மறுஆய்வு மனுவை தாக்கல் செய்யாமல் கோப்புகளை தாக்கல் செய்யாமல் இருக்க முடிவெடுத்தால் அரசாங்கங்களின் நிலைப்பாடு நீதிமன்ற அவமதிப்புக்கு சமம்," என்று எச்சரித்தனர்.
“கோப்புகளை இன்றே எங்களுக்கு காண்பிப்பதில் என்ன பிரச்னை? அதை தாக்கல் செய்யாததால் நீங்கள் ஏற்கெனவே நீதிமன்றத்தை அவமதித்தவராக கருதப்படுகிறீர்கள். எதற்காக தயங்குகிறீர்கள்? நீங்கள் மறுஆய்வு மனுவை கூட தாக்கல் செய்யவில்லை. உங்களை நாங்கள் தடுக்கவில்லையே?" என்று நீதிபதி ஜோசப் கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து, மறுஆய்வு மனு தாக்கல் செய்வதில் தனது நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு மத்திய அரசையும் குஜராத் அரசையும் கேட்டுக்கொண்ட அமர்வு, வழக்கில் 11 குற்றவாளிகளின் விடுதலையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை மே 2ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.
பின்னணி

பட மூலாதாரம், Getty Images
2008ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21ஆம் தேதியன்று, பில்கிஸ் பானு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டார். அத்துடன், அவரது குடும்பத்தினர் 14 பேர் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த குற்றவாளிகள் 11 பேரையும் அரசு அமைத்த குழுவின் முடிவின் பேரில் தண்டனைக்குறைப்பு செய்து விடுவித்தது குஜராத் அரசு.
தன் மீதான பாலியல் வல்லுறவு வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த 11 குற்றவாளிகள் அவர்களின் தண்டனை காலத்துக்கு முன்பே நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பில்கிஸ் பானு ரிட் மனு தாக்கல் செய்திருந்தார்.
கடந்த ஆண்டு டிசம்பரில் குற்றவாளிகள் விடுதலை தொடர்பான இவரது மறுஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் பில்கிஸ் பானு ரிட் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் டிசம்பர் 13ஆம் தேதி பிறப்பித்த 3 பக்க உத்தரவில் பில்கிஸ் பானுவின் மறுஆய்வு மனுவை நிராகரிப்பதாக கூறியது. மேலும், மறுஆய்வு மனு, அதற்கு ஆதரவாக இணைக்கப்பட்ட ஆவணங்கள், மனுதாரர் குறிப்பிடும் தீர்ப்புகளை நாங்கள் ஆராய்ந்து விட்டோம் என்றும் அது தெரிவித்தது.
இந்த வழக்கை திறந்தவெளி நீதிமன்றத்தில் பட்டியலிட பில்கிஸ் பானு விடுத்த கோரிக்கையையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












