You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
4 மாநில தேர்தல் முடிவுகள்: பாஜகவின் இமாலய வெற்றி 2024 மக்களவை தேர்தலில் ஆட்சியை பிடிக்க எப்படி உதவும்?
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக இமாலய வெற்றியைப் பெற்றுள்ளது. தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. மிசோரம் தேர்தல் முடிவுகள் நாளை வரவுள்ளன.
இவற்றில் இந்தி பேசும் பிரதான மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி, ஏற்கெனவே கைவசம் இருந்த மாநிலங்களை இழந்துள்ளது. இதனால் இந்தியாவில் தற்போது பாஜக 12 மாநிலங்களிலும், காங்கிரஸ் மூன்று மாநிலங்களிலும் ஆட்சி செய்கின்றன.
எனவே இந்த முடிவுகள் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான அரையிறுதியாக பார்க்கப்படுகின்றன. பாஜக அடைந்துள்ள வெற்றி அந்தக் கட்சியினரை உற்சாகப்படுத்தியுள்ளது.
இந்தத் தேர்தல் ஏன் நாடாளுமன்றத் தேர்தலுக்கான அரையிறுதி?
அடுத்த ஆண்டு (2024) மக்களவைத் தேர்தல் நடைபெற இருப்பதாலும், இந்த மாநிலங்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான மக்களவைத் தொகுதிகள் இருப்பதாலும் இந்த ஐந்து மாநிலங்களின் முடிவுகள் மக்களவை தேர்தல்களுக்கான அரையிறுதி என அழைக்கப்படுகின்றன.
நாட்டின் பிரதான கட்சிகளாக உள்ள பாஜக, காங்கிரஸ் இரண்டும் நேருக்கு நேர் மோதுகின்றன. நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மத்திய பிரதேசத்தில் 230 இடங்களிலும், ராஜஸ்தானில் 199 இடங்களிலும், சத்தீஸ்கரில் 90 இடங்களிலும் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நேரடிப் போட்டி நிலவியது.
தெலங்கானாவில் 119 இடங்களில் காங்கிரஸ், பிஆர்எஸ் இடையே நேரடி போட்டி இருந்தது.
நாடாளுமன்ற தொகுதிகளைப் பொருத்தமட்டில், மத்திய பிரதேசத்தில் 29 மக்களவைத் தொகுதிகளும், ராஜஸ்தானில் 25 இடங்களும், சத்தீஸ்கரில் 11 இடங்களும், தெலங்கானாவில் 17 இடங்களும், மிசோரமில் ஒரே ஒரு தொகுதியும் என இந்த ஐந்து மாநிலங்களில் மொத்தம் 83 தொகுதிகள் உள்ளன.
எனவே, இந்த மாநிலங்களில் வெற்றி பெறுவது நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு வாய்ப்புகளை பிரகாசிக்கச் செய்யும் என இரு கட்சிகளுமே நம்பின.
எனவே பாஜக, காங்கிரஸ் இரண்டு கட்சிகளுமே அதை மனதில் கொண்டே ஐந்து மாநில தேர்தல் பிரசாரத்தை வடிவமைத்தன. கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் குஜராத் மற்றும் திரிபுராவில் வெற்றி பெற்ற பாஜக, கர்நாடகா மற்றும் இமாச்சல பிரதேசத்தில் தோல்வியைத் தழுவியது.
எனவே நாடாளுமன்றத் தேர்தலில் தனக்கு ஆதரவான அலையை உருவாக்குவதற்கு பாஜக இந்த ஐந்து மாநில தேர்தல் வெற்றிகளில் கூடுதல் கவனம் குவித்தது. அதே போன்று, காங்கிரஸ் இந்தத் தேர்தல்களில் வெற்றி பெறுவதன் மூலம், இந்தியா கூட்டணியில் பிற கட்சிகளிடம் தொகுதிப் பங்கீட்டின் போது தனக்கு கூடுதலான இடங்களை உறுதி செய்ய முடியும் என எதிர்பார்த்தது.
முடிவுகள் உணர்த்தும் செய்தி என்ன?
இந்தி பேசும் பிரதான மாநிலங்களில் வெற்றி பெற்றிருப்பது பாஜகவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் கடந்த கால தேர்தல்களைப் பார்க்கும்போது, சட்டமன்றத் தேர்தல் முடிவுகளே மக்களவை தேர்தல்களிலும் பிரதிபலிக்கும் என உறுதி செய்ய்ஹம் வகையில் இல்லை.
கடந்த 2003ஆம் ஆண்டில் இருந்து பார்க்கும்போது மக்களவைத் தேர்தல்களுக்கு முன்பாக அதிகபட்சம் 5 மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல்கள் நடந்துள்ளன.
அப்போதும் மக்களவைத் தேர்தலுக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கும் இடையில், ஆறு மாதங்களுக்கும் குறைவாகவே கால அவகாசம் இருந்துள்ளன. தற்போதும் அதே நிலைதான் இருக்கிறது.
மத்திய பிரதேசத்தின் நிலை என்ன?
காங்கிரஸ் கட்சி 1998இல் மத்திய பிரதேசத்தில் வெற்றி பெற்ற நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவே அதிக எண்ணிக்கையில் நாடாளுமன்ற இடங்களைப் பிடித்தது.
பிறகு, 2003-04இல் மத்திய பிரதேசத்தில் நடந்த சட்டமன்றம் மற்றும் மக்களவை தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றது. 2008ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதோடு, 2009ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 16 இடங்களைக் கைப்பற்றியது.
கடந்த 2013ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. அதன் பின்னர் 2014ஆம் ஆண்டு மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மத்திய பிரதேசத்தில் மொத்தமுள்ள 29 இடங்களில் பாஜக 27 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும் வெற்றி பெற்றன.
கடந்த 2018ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவியது. ஆட்சி அமைப்பதில் கமல்நாத் வெற்றி பெற்றாலும், மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் ஒரு நாடாளுமன்ற இடத்தை மட்டுமே பெற முடிந்தது.
காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே 2019இல் வாக்கு வித்தியாசம் தோராயமாக 25 சதவீதமாக இருந்தது.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 114 இடங்களிலும், பாஜக 109 இடங்களிலும் வெற்றி பெற்றன. காங்கிரஸ் கட்சியின் மாநில அரசு 20 மாதங்கள் மட்டுமே நீடித்த நிலையில், ஜோதிராதித்ய சிந்தியாவிற்கு ஆதரவாக இருந்த எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்.
இப்போது மத்திய பிரதேசத்தில் பாஜக தனது ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
ராஜஸ்தானில் நடந்தது என்ன?
ராஜஸ்தானில் 1998ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் மகத்தான வெற்றியைப் பதிவு செய்தது. அசோக் கெலாட் முதல்வரானார். ஆனால், ஓராண்டுக்குள் நடைபெற்ற மக்களவை தேர்தலில் தேர்தலில், பா.ஜ.கவே அதிக நாடாளுமன்ற இடங்களில் வெற்றி பெற்றது.
ஆனால், 2003இல் இருந்து 2014ஆம் ஆண்டு வரை நிலைமைகள் வேறாக இருந்தன. சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறும் கட்சியே, மக்களவை தேர்தலில் இன்னும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இருப்பினும், 2018ஆம் ஆண்டில் இந்த நிலைமை மாறியது.
சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றாலும், 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 25 இடங்களை வென்றது, ஆர்.எல்.பி ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சியால் எந்த இடத்திலும் வெற்றிபெற முடியவில்லை.
ராஜஸ்தானில் 2018ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது, ஆனால் பாஜகவுடனான வாக்கு வித்தியாசம் 0.5 சதவீதமாக இருந்தது. காங்கிரஸ் 100 இடங்களிலும், பாஜக 73 இடங்களிலும் வெற்றி பெற்றது.
இப்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியால் களத்தில் தனது வாக்கு வங்கியைத் தக்க வைத்துக் கொள்ளவோ, வாக்கு சதவீதத்தை அதிகரிக்கவோ முடியவில்லை என்பது இந்தத் தேர்தல் முடிவுகளில் புலனாகிறது.
சத்தீஸ்கர் நிலை என்ன?
சத்தீஸ்கர் மாநிலம் 2000ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 2003 முதல், சட்டமன்ற, மக்களவைத் தேர்தல்களில் பாஜக ஆதிக்கம் செலுத்தி வந்தது.
இருப்பினும் கடந்த 2013ஆம் ஆண்டு 41 சதவீதமாக இருந்த பாஜகவின் வாக்கு சதவீதம் 2018இல் 32 சதவீதமாகக் குறைந்தது.
அந்த ஆண்டு சத்தீஸ்கரில் மொத்தமுள்ள 90 இடங்களில் 68 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இப்போது தனது வாக்கு சதவீதத்தை மீட்டெடுத்துள்ள பாஜக, சத்தீஸ்கர் மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தியுள்ளது.
தெலங்கானாவில் காங்கிரஸ் வெற்றி
தெலங்கானா மாநிலம் 2013ஆம் ஆண்டு உருவானது முதல் நடைபெற்ற இரண்டு சட்டமன்றத் தேர்தல்களில் பிஆர்எஸ் (முன்னதாக டிஆர்எஸ்) மகத்தான வெற்றியைப் பதிவு செய்தது. அதே நேரம் நாடாளுமன்றத் தேர்தலில் கலவையான முடிவுகள் கிடைத்தன.
இந்தியா கூட்டணியில் அங்கமாக இல்லாத பி.ஆர்.எஸ். பாஜகவையும் கடுமையாக எதிர்த்து வருகிறது. இப்போது காங்கிரஸ் அடைந்துள்ள வெற்றியின் மூலம், தென்னகத்தில் பாஜக கால் ஊன்றவிடாமல் செய்து விட்டது என்ற ஆறுதலை மட்டுமே பெற்றுக் கொள்ளலாம். இருப்பினும் இந்த வெற்றி பி.ஆர்.எஸ் கட்சிக்கு எதிராகவே பெறப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக வெற்றிபெமா?
பாஜக அடைந்துள்ள இந்த வெற்றி நாடாளுமன்றத் தேர்தலில் தொடரும் என்கிறார் பத்திரிக்கையாளர் மாலன்.
பிபிசி தமிழிடம் அவர் பேசியபோது, “மோதி என்ற காரணி இப்போதும் பலன் கொடுக்கிறது. அதையே இந்தத் தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றன. காங்கிரஸ் கட்சி அடைந்துள்ள தோல்வி, இந்தியா கூட்டணிக்குள் அவர்களைப் பலவீனப்படுத்தும். ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளாராக மற்ற கட்சிகள் ஏற்க மாட்டார்கள். அந்த சூழலும் நரேந்திர மோதிக்கு சாதகமாக முடியும்,” என்றார்.
பிரதமர் மோதியை தனிப்பட்ட முறையில், தாக்குவது காங்கிரஸுக்கு பலனளிக்காது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
“பிரதமர் மோதிக்கு மக்களிடையே ஒரு செல்வாக்கு இருக்கிறது. ஆனால் அவரை தனிப்பட்ட முறையில் தாக்குவதை ராகுல் காந்தியே மேற்கொள்கிறார். மோதியை 'மரண வியாபாரி' என்று பேசிய ராகுல் காந்தி சமீபத்தில் 'ராசியில்லாதவர்' என்ற பொருளில் தாக்கிப் பேசினார். இதுபோன்ற தாக்குதல்கள் மக்களின் ஏற்பைப் பெறாது,” என்றார்.
“மென்மையான இந்துத்துவா என்ற கொள்கையை காங்கிரஸ் கட்சி மேற்கொள்கிறது. இந்த போலியான வேடத்தை மக்கள் விரும்பவில்லை. சத்தீஸ்கர் மாநிலத்தில் பசுவின் சானத்தை அரசே வாங்கும் என உறுதி கொடுத்தார்கள். ஆனால் மதச்சார்பின்மையைப் பின்பற்றுவதாகக் கூறுகிறார்கள். கள நிலைமை என்ன என்பதையே அவர்கள் புரிந்துகொள்ளவில்லை,” என்கிறார் பத்திரிகையாளர் மாலன்.
மிசோரம் முடிவுகள் நாளை வெளியாகும்
மிசோரமில் பாஜகவின் கூட்டணிக் கட்சியான மிசோ தேசிய முன்னணிக்கும் (எம்என்எஃப்) காங்கிரஸ் கட்சிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. அதேநேரம் ஜோரம் மக்கள் இயக்கம் முக்கிய எதிர்க் கட்சியாக உள்ளது.
மிசோரமில் 1998 முதல் 2008 வரை மிசோ தேசிய முன்னணி அரசாங்கம் இருந்தது, 1999 முதல் 2004 வரை மிசோ தேசிய முன்னணியின் ஆதரவு வேட்பாளர் மட்டுமே மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று வருகிறார்.
மிசோரமில் காங்கிரஸ் ஆட்சி 2008 முதல் 2018 வரை இருந்தபோது, ஒவ்வொரு முறையும் காங்கிரஸ் வேட்பாளர் மிசோரம் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று வந்தார். 2018இல் மிசோ தேசிய முன்னணி மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், 2019 மக்களவைத் தேர்தலில் அதன் வேட்பாளர் வெற்றி பெற்றார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)