மெஹந்தியால் உடல் அரிப்பு, ஒவ்வாமை ஏற்படுவது ஏன்?தடுப்பது எப்படி?

    • எழுதியவர், கலைவாணி பன்னீர்செல்வம்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

மஹதி தனது சிறப்பான நாளை எதிர்பார்த்துக் காத்திருந்தார். மாமன்மார்கள் சீர் கொண்டு வர, மணப்பெண் தோழிகள் கையில் மெஹந்தி கோன்களுடன் வந்து மஹதியின் கையை அலங்கரித்தனர்.

மஹதிக்கு மருதாணி என்றால் மிகவும் பிடிக்கும். அது சிவப்பதை வைத்து தான் வரப்போகும் மாப்பிள்ளை தன் மீது எவ்வளவு பாசம் வைத்திருக்கிறார் என்பதை தெரிந்துகொள்ள முடியும் என்று தோழிகள் கேலி பேசியபடியே, ஆளுக்கு ஒரு கை, கால் என பிரித்துக்கொண்டு மஹதியை மெஹந்தியால் அலங்கரித்தனர்.

சற்று நேரத்தில் மஹதிக்கு மெஹந்தி போட்ட இடத்தில் சற்று அரிப்பு ஏற்பட்டது. ஆனால், கல்யாண கலாட்டாக்களிலும், ஆடல்-பாடல்களிலும் அவர் அதை பெரிதுப்படுத்திக் கொள்ளவில்லை.

இதையடுத்து நடனமாடிய களைப்பில் மஹதி உறங்கிப் போனார். மறுநாள், கண் விழிக்கும்போதே கை, காலில் வலி. எழுந்து பார்க்கும்போது மெஹந்தி போட்ட இடங்களில் எல்லாம் சற்றே தடிப்பு தெரிந்தது.

தவறான மெஹந்தியால் சோகமான திருமண நிகழ்வு

தண்ணீரில் நன்றாக கழுவிவிட்டு, ‘அலர்ஜி’ என்று நினைத்து அவர் விட்டுவிட்டார். மணப்பெண்ணை காண வந்த மாப்பிள்ளை வீட்டார் மஹதியின் கையில் உள்ள தடிப்பை பார்த்துவிட்டு வேப்பிலையும் மஞ்சளையும் அரைத்து பூசுமாறு அறிவுறுத்த அவரும் அதை செய்தார். ஆனால், அது அவருக்கு எரிச்சலையும் பிரச்னையையும் அதிகரித்தது.

அன்று மாலை, மஹதியின் கையில் தடித்த இடம் எல்லாம் கொப்பளிக்கத் தொடங்கியது. அப்போதுதான் அவர் நிலைமை தீவிரமாவதை உணர்ந்தார். இதையடுத்து அவர், அவசர அவசரமாக இரவோடு இரவாக தோல் மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு அலர்ஜி தடுப்புக்கான மாத்திரையும், தடவுவதற்கான மருந்துகளும் கொடுக்கப்பட்டன. மறுநாள் காலை முகூர்த்தம். புரோகிதர் மணமேடையில் அமர்ந்திருக்கும் மணமகள் மஹதியை பார்த்து, சில பொருட்களை கையில் கொடுத்து அக்னி குண்டத்தில் போடுமாறு கூறினார்.

அப்போது அவர் கையில் சுற்றி இருந்த முந்தானையில் நெருப்பு பட்டு விடும் என, அதனை அகற்றுமாறு புரோகிதர் கூறியுள்ளார். அப்போது அவரது கையில் மெஹந்தியால் ஏற்பட்டுள்ள அலர்ஜி மற்றும் கொப்பளங்களை கண்டு மாப்பிள்ளை துடித்துப் போனார்.

என்னதான் மாப்பிள்ளை தன்மீது காட்டிய அன்பு, மஹதிக்கு சந்தோஷத்தைக் கொடுத்தாலும் அடுத்தடுத்த நாட்களில் அந்த கொப்புளங்கள் வறண்டு அதிலிருந்து ரத்தம் போன்ற நீர்க்கசிவுகள் வெளியேறியது. இது அவரது தேன்நிலவு சுற்றுலாவையும் கெடுத்துவிட்டது.

ஏற்கெனவே முன்பதிவு செய்திருந்த விமான டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டு மருத்துவமனைகளுக்கு அலைவதாக மாறிப்போனது திருமண வைபவம்.

அலர்ஜி ஏற்பட காரணம் என்ன?

ஒரு சாதாரண மெஹந்தி தானே என பலரும் நினைக்கலாம். ஆனால், பல மெஹந்தி கோன்களில் அதிகம் சிவப்பு நிறம் வர வேண்டும் என்பதற்காக இளம் பர்பிள் நிறத்தில் உள்ள பிபிடி (Paraphenylenediamine) என்ற ரசாயனம் கலக்கப்படுகிறது.

இது பெரும்பாலும் பலருக்கும் ஒப்புக்கொண்டாலும் சிலருக்கு அது ஒப்புக்கொள்வதில்லை. அது ஏன் என கூறுகிறார், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் தோல் மருத்துவர் வானதி.

"எப்படி ஒரு மருந்து ஒரு சிலருக்கு உயிர் காக்கும் மருந்தாக இருக்கிறதோ, அதே மருந்து வேறொருவருக்கு உயிரை பறிக்கும் மருந்தாக மாறிவிடும். அதேபோன்றுதான் ஒவ்வொரு மனிதனின் உடலும் அது ஒரு சிலவற்றை ஏற்றுக்கொள்ளும். ஒரு சிலவற்றை கடுமையான பின்விளைவுகளுடன் நிராகரிக்கும்” என்றார்.

”மருதாணி மெஹந்தியானது”

முந்தைய காலங்களில் ’பாடி ஆர்ட்’ (Body Art) என்ற உடலில் வரையும் படக்கலைக்கு மருதாணி இலைகள் பயன்படுத்தப்பட்டன. மாப்பிள்ளைகளுக்குக் கூட திருமணத்துக்கு முந்தைய நலுங்கில் கை அல்லது கால்களில் மருதாணி வைக்கப்பட்டன. பின் அது பெரும்பாலும், பெண்களுக்கு என்றானது.

உறவினர் வீட்டு விசேஷம், தீபாவளி, பொங்கல், பிறந்தநாள், சீர், திருவிழா என சிறப்பான நாட்களில் எல்லாம் மகளிர் மற்றும் குழந்தைகளின் கைகளை அலங்கரித்தது இயற்கையான மருதாணி. இந்தப் பழக்கம் இந்தியாவில் மட்டுமின்றி, அரபு நாடுகளிலும் அதிகம் உள்ளது.

மருதாணி இலைகளைப் பறித்து மைய அரைத்து அதில் எலுமிச்சை, டீத்தூள் என அவரவர் விருப்புக்கு ஏற்ப நிறம் சிவக்க சில இயற்கைப் பொருட்களை சேர்த்து கைகளில் அலங்கரித்தனர்.

அதேசமயம், மருதாணி போட்டாலே பெண்களுக்கு ஒரு வித சந்தோஷ உணர்வும் விசேஷ நாட்களின் மகிழ்ச்சியும் தொற்றிக் கொள்ளும். மன ரீதியாக அவர்கள் சற்று லேசாக உணர்வார்கள்.

டிசைன்களின் மோகத்தால் வந்த வினை

இளம்பெண்கள் ஒன்றுகூடி ஆற்றங்கரையோரம் மருதாணி பறித்து, பாறாங்கல்லில் வைத்து அரைத்து, அதனை அனைவரும் கைவிரல்களுக்கு தொப்பி போல அலங்கரித்து வைத்துக் கொள்வார்கள். நடுவில் ஒரு வட்டமும், சுற்றியும் புள்ளிகளும் வைப்பதுதான் ஒரே பிரதான டிசைனாக இருந்தது. நாள்பட நாள்பட அதில் பல டிசைன்கள் வந்தன. பிளாஸ்டிக் லேயர் போன்ற வார்ப்புகளை கையில் வைத்து மருதாணியை அதில் தேய்த்து எடுத்தால் கையில் அதன் அச்சு அப்படியே பிடித்துவிடும்.

ஆனால், வீடுகளில் அரைக்கும் மருதாணியில் நீர்த்தன்மை அதிகம் இருக்கும் என்பதால், அச்சு சரிவர விழவில்லை. இதையடுத்து, கை முழுக்க அவலட்சணமாக அல்லாமல், பல பெண்களுக்கும், வெவ்வேறு விதமாக மருதாணி வைக்க ஆசை வந்தது. எனவே, அதனை கோன் போன்ற வடிவில் மருதாணியை அரைத்து கெட்டியாக விற்கத் தொடங்கியபோதுதான், அது நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்க பல வித ரசாயனங்கள் சேர்க்கப்பட்டன.

சிவக்காத மருதாணியால் கேலி

மருதாணியில் இருந்த மற்றொரு விஷயம் அது சிலருக்கு குறைவாக சிவப்பது. இளம் ஆரஞ்சு நிறத்தில் இருந்து சிவப்பு, கருஞ்சிவப்பு என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி மருதாணி சிவக்கும். இதனை காதல் ’இன்டிகேட்டராகவும்’, அன்பின் அளவீட்டு மாணியாகவும் பலரும் பார்த்தனர். அது சிவக்காவிட்டால், கேலிகளுக்கும் ஆளாகினர். எனவே, அது சிவந்தாக வேண்டிய கட்டாயத்தில்தான் மெஹந்தி கோன்களில் பிபிடி கெமிக்கல் சேர்க்கப்பட்டது.

மருதாணி வைத்தால் சிவப்பது எப்படி?

இதுகுறித்து விளக்கினார் மருத்துவர் வானதி. “மருதாணியின் தாவரவியல் பெயர் லாவ்சோனியா இனர்மிஸ் (Lawsonia inermis). இதில், லாவ்சோன் (Lawsone) என்ற நிறமிதான் தோலில் சில நாட்களுக்கு நிறமியாகப் படிந்து இருக்கும். இது உடலின் புரோட்டீன் வடிவ செல்களோடு நீண்ட நேரம் சேரும்போது வெளிப்படும் எதிர்வினைதான் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி மருதாணி சிவக்க காரணமாகிறது” என்றார்.

செயற்கையாக ரசாயனம் சேர்த்து தயாரிக்கப்படும் மெஹந்தி கோன்களில் பிபிடி என்ற வேதிப்பொருள் சில சமயம் அதிகம் சிவக்க வேண்டும் என அதிகம் சேர்க்கப்படுகிறது. பிபிடி என்பது ஒரு நறுமணம் தரும் இளம் ஊதா நிற ரசாயனம். இது ஆக்சிஜனேற்றம் ஆக ஆக சிவப்பாகவும், பின் கருப்பு நிறத்திலும் உடலில் நீண்ட நேரம் படப்பட நிறம் மாறும்.

பிபிடி ரசாயனத்தைப் பயன்படுத்தும் பிற துறைகள்

“நரை முடியை கருமையாக்க பயன்படுத்தப்படும் ‘ஹேர் டை’யில்தான் இது பெரும்பாலும் பயன்படுகிறது. இது 2 சதவீதம் மட்டுமே பயன்படுத்த அனுமதி. ஆனால், பல சாய தயாரிப்பு நிறுவனங்கள் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். இது பெரும்பாலும் துணிகளுக்குப் பயன்படுத்தப்படும் சாயம் ஆகும். அதுமட்டுமின்றி முந்தைய காலத்தில் புகைப்படங்களை தயாரிப்பதற்கும் (Photo Developing), ரப்பர் தயாரிப்பதற்கு ஒரு மூலப்பொருளாகவும் காலணி பட்டைகளில் கலப்படமாகவும் பயன்படுத்தப்படுகிறது” என்றார் மருத்துவர் வானதி.

இந்த ரசாயனம் தோல், கண், வாயில் படும்போதும், இப்பணி செய்வோரின் உணவில் ஏதாவது வகையில் படும்போதும் அது உடலில் பல்வேறு விதமான பாதிப்புக்களை ஏற்படுத்தும்.

மெலனின் பாதுகாப்பு

கறுப்பான தோல் நிறம் உடையவர்களின் மெலனின் அவர்களை தோல் பிரச்னையில் இருந்து பாதுகாப்பது போல், வெளுப்பாக இருப்பவர்களின் மெலனின் அந்த அளவு பாதுகாக்காது என்றும் மருத்துவர் குறிப்பிட்டார்.

தொடர்ச்சியாக பயன்படுத்தினால் ஆபத்து

’ஹேர் டை’யைத் தொடர்ந்து பயன்படுத்துவதாலும் வரும் பின்விளைவுகளை கூட மருத்துவர் வானதி தெளிவாக விவரித்தார். “என்னிடம் வரும் நோயாளிகளில் சிலர் அவர்களின் ஹேர் டைதான் அலர்ஜிக்கான காரணம் எனக் கூறினால் நம்ப மாட்டார்கள். ‘மேடம் நான் 10 வருடம் இதே பிராண்ட் ஹேர் டைதான் பயன்படுத்துகிறேன். அலர்ஜியெல்லாம் வந்ததில்லை, எனவே ஹேர் டை அடிக்கக் கூடாது என சொல்லாதீர்கள். என்னால் டை அடிக்காமல் வெளியே தலைகாட்ட முடியாது’ எனக் கூறிவிடுவார்கள்.

ஒரு ரசாயனம் தொடர்ந்து தோலில் படும்போது, அது அந்த தோலை மிகவும் உணர்ச்சி மிக்கதாக மாற்றிவிடும். அப்படி மாறினால், அலர்ஜி, முடி உதிர்தல், வெண் புள்ளிகள் போன்ற பல பிரச்னைகளை ஏற்படுத்திவிடும்” என்றார்.

”எப்படி ஹேர் டை முதலில் பல முறை பயன்படுத்தியும் தராத அலர்ஜியை, தொடர் பயன்பாட்டில் தந்ததோ, அதுபோன்று தான் பிபிடி ரசாயனம் சேர்க்கப்பட்ட மெஹந்தி அல்லது ஹென்னா பொடியும். எனவே, முதன் முறை மெஹந்தியால் அலர்ஜி பாதிப்புக்கு ஆளாகாதவர்கள், தொடர்ந்து ஒரே இடத்தில் மீண்டும் மீண்டும் அந்த ரசாயனம் அதிகமுள்ள மெஹந்தியைப் பயன்படுத்தும் போது, அது ஒரு நாள் பிரச்னையாக மாறும்” என்றும் குறிப்பிட்டார் தோல் மருத்துவர் வானதி.

ஹேர் டை-யால் சொதப்பிய அமெரிக்கப் பயணம்

’ஹேர் டை’ அலர்ஜி உள்ள நோயாளி, அறிவுரையை மீறி அமெரிக்கப் பயணத்தின் போது ’ஹேர் டை’ பயன்படுத்திவிட்டு, மேற்கூரை இல்லாத பேருந்தில் நீண்ட நேரம் சூரிய வெளிச்சத்தின் பயணித்ததன் விளைவாக அவர், போட்டோ சிந்தெசிஸ் (Photo Synthesis) பாதிப்புக்கு ஆளானதாகக் கூறினார் மருத்துவர். இதனால் அவர் அமெரிக்க பயணத்தின் 10 நாட்கள் மருத்துவமனையில் முடங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் கூறினார்.

சில பேர் சிவப்பு மட்டுமின்றி கருப்பு அல்லது வெவ்வேறு நிற மெஹந்தியைப் பயன்படுத்துவார்கள். அதில் கருப்பு நிறம் வர அதிக பிபிடி ரசாயனம் சேர்த்திருப்பார்கள் என்றும் மருத்துவர் எச்சரித்தார்.

டாட்டூக்களிலும் பிபிடி, கவனம்!

இந்த ரசாயனம் நிரந்தரமாக பச்சை குத்தும் டாட்டூக்களிலும் நிறமிக்காக சேர்க்கப்படுவதால், அது டாட்டூ கிரானுலோமா என்ற புண்ணையும், காயத்தையும் ஏற்படுத்தும் என்றும் எச்சரித்தார். மேலும் இது ரத்த ஓட்டத்தில் தொடர்ந்து கலந்து பல பிரச்னைகளை ஏற்படுத்துவதோடு, ஒரே ஊசியை பலருக்கும் பயன்படுத்துவதால் ஹெச்ஐவி, டி.பி., உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படலாம் என்றும் தெரிவித்தார்.

பிபிடி ரசாயனத்தால் ஏற்படும் “கெமிக்கல் பர்ன்“ (Chemical burn) தீவிரமானால், தொண்டை வீக்கம், வயிறு வலி, வாந்தி, சிறுநீரக செயலிழப்புவரை ஏற்படலாம் என்றும் அவர் கூறினார்.

பாதுகாப்பாக மெஹந்தி போடுவது எப்படி?

அப்படியிருந்தும் திருமண வீடுகளில் மெஹந்தி நிகழ்ச்சிக்கு சென்றாலோ, அல்லது பெண்களே ஆசையாக இருக்கிறது என்றாலோ என்றேனும் ஒரு நாள் மெஹந்தி பயன்படுத்தலாம். அதற்கு முன் உடலின் உணர்ச்சி மிக்க பகுதிகளான முழங்கையின் மடக்கக்கூடிய உள்பகுதியிலும், காதின் பின்புறத்திலும் 2 நாட்கள் முன்னதாகவே ஒரு துளி மெஹந்தியை போட்டு அரிப்பு, எரிச்சல் வருகிறதா? என்று பார்த்துவிட்டு அதே மெஹந்தி பிராண்டை கை, கால்களில் போட்டு அலங்கரிக்கலாம். என்ன இருந்தாலும், ரசாயனம் நிறைந்த மெஹந்தி கோன்களை விட, இயற்கையான மருதாணி இலைகள்தான் பாதுகாப்பானது என்று மீண்டும் நினைவூட்டினார் மருத்துவர் வானதி.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)