தமிழ்நாட்டின் முதல் தட்டான் கணக்கெடுப்பு: தண்ணீரை காக்க உதவும் 80 வகை தட்டான்பூச்சிகள்

    • எழுதியவர், ச. பிரசாந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

தமிழ்நாட்டில் முதல் முறையாக தட்டான்பூச்சி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 80 வகையான தட்டான்பூச்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 12 அரிய வகை தட்டான்பூச்சிகளும் கண்டறியப்பட்டுள்ளன.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரையில், நம் வீடுகளுக்கு அருகிலேயே காணப்பட்ட தட்டான்களின் எண்ணிக்கை தற்போது காலநிலை நெருக்கடி காரணமாக வெகுவாகக் குறைந்து வருகிறது.

சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த தட்டான்பூச்சிகள் ஒரு பகுதியின் நீர் நிலைகளின் ஆரோக்யத்துக்கான குறியீடாகும்.

தமிழகத்தில் முதல் முறையாக நாங்கள், 688.59 சதுர கிலோமீட்டரில் அமைந்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில், சூழலியல் வல்லுநர்கள், மாணவர்கள், வனத்துறை பணியாளர்களைக் கொண்ட 37 குழுக்களை அமைத்து தட்டான்கள் கணக்கெடுப்பு நடத்தியுள்ளோம்.

இதில், 48 தட்டான்கள், 32 ஊசித்தட்டான்கள் என, 80 தட்டான் பூச்சியினங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாடு வனத்துறையினர் சூழலியலாளர்களுடன் நீலகிரியில் நவம்பர் முதல் வாரத்தில் தட்டான்பூச்சி கணக்கெடுப்பை நடத்தினர்.

பிபிசி தமிழிடம் பேசிய முதுமலை புலிகள் காப்பகத்தின் துணை இயக்குநர் வித்யா, ‘‘சிறுத்தை, யானைகள் என அனைத்துக்கும் கணக்கெடுப்பு நடத்தப்படும் நிலையில், நாம் தட்டான் பூச்சிகள் போன்ற சிற்றுயிர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் விட்டுவிடுகிறோம்.

தட்டான்களின் இருப்பு, நீர்நிலைகளின் உண்மை நிலை என்ன? அவை எந்த அளவுக்கு மாசடைந்துள்ளது என்பதைத் தெரிவிக்கும் குறியீடாக உள்ளது," என்று சுட்டிக் காட்டுகிறார்.

தட்டான்களுக்கு நீர்நிலைகள்தான் வாழ்விடம், நீரின் மீது அமர்ந்துதான் இனப்பெருக்கம் செய்யும்.

ஒரு சில தட்டான் வகைகள் மாசடையாத நீரில் மட்டுமே இருக்கும். சில தட்டான்கள் மாசடைந்த நீர்நிலைகளில் மட்டுமே வாழும்.

இதனால், எந்த வகை தட்டான் எங்கு இருக்கிறது என்பதைக் கண்டறிவதன் மூலம் சதுப்பு நிலங்கள், நீர்நிலைகளின் ஆரோக்கியத்தைக் கண்டறிய முடியும்.

தட்டான்களின் வகைகளைப் பதிவு செய்துள்ளதால், அவற்றை நீர்நிலைகளின் ஆரோக்கியத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க, தெப்பக்காடு, தொரப்பள்ளி உள்பட, 70 இடங்களில் நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கணக்கெடுப்பில் Kodagu Clubtail, Long Legged Clubtail, Coorg False Spreadwing, Indolestes Pulcherrimus, Caconeura Ramburi உள்ளிட்ட 12 அரிய வகை தட்டான்கள் கண்டறியப்பட்டதாக கேரளாவை சேர்ந்த சூழலியலாளர் விவேக் சந்திரன் கூறுகிறார்.

இவை மேற்குத்தொடர்ச்சி மலையின் நீலகிரி, கேரளா, வயநாடு, கர்நாடாக வனப்பகுதி, கோவா பகுதிகளில் மட்டுமே காணப்படும் தட்டான்கள்.

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மொத்தமாக, 200 தட்டான் பூச்சி வகைகள் உள்ளன.

மழைக்காலத்தில் இரண்டு நாட்கள் நடத்தப்பட்ட இந்த கணக்கெடுப்பிலேயே, 80 வகைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது நீலகிரி காட்டில் தட்டான் பூச்சிகள் ஆரோக்கியமாக உள்ளதை உணர்த்துகிறது என கணக்கெடுப்பில் பங்கேற்ற கோவையைச் சேர்ந்த சூழலியலாளர் மோகன் பிரசாத் தெரிவித்தார்.

இந்தக் கணக்கெடுப்பில் கேரளா காட்டில் இருக்கும் மலபார் ‘பேம்பூ டெயில்‘ – Malabar Bambootail தட்டான் வகைகள் பதிவு செய்யப்பட்டன.

நீலகிரி காடுகளில் இருக்கும் Nilgiri Torrent Dart, Nilgiri Mountain Hawk, Lamelligomphus Nilgiriensis போன்ற தட்டான்களை அதிகம் காண முடியாததால், அவை இந்தப் பருவத்தில் வேறு வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்திருக்க வாய்ப்புள்ளதாக சூழலியலாளர் மோகன் பிரசாத் தெரிவித்தார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)