You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ராஜஸ்தான் அரச குடும்பத்தினர் பாஜகவுடன் நெருக்கமாக இருப்பது ஏன்?
- எழுதியவர், திரிபுவன்
- பதவி, மூத்த பத்திரிகையாளர், பிபிசி இந்திக்காக
சுதந்திரத்திற்குப் பிறகு, ஜனநாயகம் முழுவீச்சில் தலையெடுக்கத் துவங்கியபோது, ராஜஸ்தானில் அதுவரை வானளாவிய பெருமையுடன் நின்றிருந்த மன்னராட்சியின் இருப்பு ஆட்டம் காணத்துவங்கியது.
ஆனால், ராஜஸ்தான் மன்னர் பரம்பரை மனம் தளரவில்லை. மாநிலத்தில் துளிர்விட்டுக்கொண்டிருந்த ஜனநாயக அரசியலைக் கட்டுப்படுத்தத் தம்மால் இயன்றவரை முயன்றது.
ராஜஸ்தான் மாநிலம் உருவான பிறகு, ஜெய்ப்பூர் மகாராஜாவின் பாராட்டு மற்றும் பரிந்துரையின் பேரில், அம்மாநிலத்தின் முதல் முதலமைச்சரின் பெயரை, அபோதைய நாட்டின் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல், ஜெய்ப்பூர் நகர அரச மாளிகையில் முடிவு செய்தார். அந்தப் பெயர் ஹிராலால் சாஸ்திரி.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அம்மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருந்தது. ஆனால், அதற்கு முன், ஜனநாயகம் மக்கள் கூடும் பொது இடத்தில் மலரவில்லை, ஆனால் 217 ஆண்டுகளாக மன்னராட்சியின் அதிகார மையமாக அறியப்பட்ட அரச மாளிகையில் மலர்ந்தது.
ராஜஸ்தான் என்று பெயரிடப்பட்ட இம்மாநிலம்1949-ஆம் ஆண்டு மார்ச் 30-ஆம் தேதி ஜெய்ப்பூர் நகர மாளிகையின் தர்பார் மண்டபத்தில் பிறந்தது.
அந்நிகழ்வில், விடுதலைக்காகப் போராடியவர்களான ஜெயநாராயண வியாஸ், மாணிக்கலால் வர்மா, கோகுல்பாய் பட் உள்ளிட்ட பலருக்கும் இருக்கை வசதி கூட செய்யப்படவில்லை.
விழாவின் முன் வரிசையில் அரசர்கள், மகாராஜாக்கள், ஜாகிர்தார்கள், நவாப்கள், பெரிய அதிகாரிகள், மற்றும் பிரபுக்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.
இதைப் பார்த்த காங்கிரஸ் தலைவர்களும், சுதந்திரப் போராட்டத்தின் முன்னணியில் இருந்த தலைவர்களும் விழாவைப் புறக்கணித்தனர்.
சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்ற இந்த மாவீரர்களை யாரும் தடுக்கவோ, திரும்ப அழைத்துவரவோ முயற்சிக்கவில்லை.
இதெல்லாம் நடக்கும்போது நாட்டின் அப்போதைய துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் படேல் இருந்தது இன்னொரு ஆச்சரியம்.
ஜனநாயகத்தை எச்சரித்த அரச குடும்பங்கள்
1949-இல் ராஜஸ்தானின் முதல்வர் பதவி குறித்தும், அமைச்சரவை அமைப்பது குறித்தும் காங்கிரஸ் தலைவர்களிடையே தொடங்கிய கசப்பும் சர்ச்சையும் இன்றுவரை நின்றபாடில்லை.
இந்தச் சர்ச்சையால் ஹிராலால் சாஸ்திரியை தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார். 1951-ஆம் ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதி ஜெயநாராயண் வியாஸ் புதிய முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். அவர் அதே ஆண்டு ஏப்ரல் 26-ஆம் தேதி பதவியேற்றார்.
அதே ஆண்டில், மாநிலத்தின் 160 இடங்கள் கொண்ட சட்டமன்றத்திற்கான தேர்தல்கள் முடிவு செய்யப்பட்டன. அவை 1952-இல் நிறைவடைந்தன.
தொடர்ச்சியான சர்ச்சைகளாலும் முரண்பாடுகளாலும் பாதிக்கப்பட்ட காங்கிரஸ், இந்தத் தேர்தலில் 82 இடங்களைப் பெற்று தோற்காமல் தப்பித்தது.
அறுதிப் பெரும்பான்மைக்கு 81 இடங்கள் தேவை. இத்தேர்தலில் சமஸ்தானங்களும் போட்டியிட்டன. அவர்களது தேர்வான ராம் ராஜ்ய பரிஷத் 24 இடங்களைப் பெற்றன.
இத்தேர்தலில் மிகவும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இரண்டு சமஸ்தானங்களால் முன்னால் முதல்வர் ஜெயநாராயண் வியாஸ் மோசமாகத் தோற்கடிக்கப்பட்டதுதான். அவர் இரண்டு இடங்களில் போட்டியிட்டு, இரண்டிலும் முன்னாள் அரச குடும்பங்களின் வேட்பாளர்களிடம் தோற்றார்.
ஜோத்பூரில் மகாராஜா ஹனுவந்த் சிங்கிடம் ஓரிடத்திலும், ஜலோர்-ஏ தொகுதியில் மாதவ் சிங்கிடமும் அவர் தோற்றார். ஹனுவந்த் சிங் சுயேட்சையாகப் போட்டியிட்டார். மாதவ் சிங் ராம் ராஜ்ய பரிஷத் சார்பாகப் போட்டியிட்டார்.
ஆரம்பத்தில் இதுவே ஜனநாயக அரசியலுக்கு அரச குடும்பங்களின் சவாலாகவும் எச்சரிக்கையாகவும் இருந்தது.
அரச மகுடங்களை அசைத்த சட்டங்கள்
ஜனநாயகம் வலுப்பெறத் துவங்கியதும், இளவரசர்கள் மேலும் முகம் சுளித்தனர். அவர்கள்து ஜாகிர்தார்கள் அரசாங்க நிர்வாகத்தின் வேலைகளைக் கடினமாக்கினர்.
ஜவஹர்லால் நேரு காலத்திலும், லால் பகதூர் சாஸ்திரியின் காலத்திலும் இந்தச் சூழல்கள் சரியாகப் புரிந்துகொள்ளப்படவில்லை.
இந்திரா காந்தி பிரதமரானதும், நான்கு முக்கியமான சட்டங்கள் மூலம் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்து, மன்னராட்சியின் மேட்டிமையைத் தகர்த்து, சாமானியர்களுக்குச் சமமாக்கினார்.
என்னென்ன மாற்றங்கள்?
- அரச குடும்பங்களுக்கு வழங்கப்படும் பணம் மற்றும் சிறப்பு மரியாதைகளை நிறுத்த ‘ப்ரிவி பர்ஸ் சட்டம்’ (Privy Purse Act) கொண்டு வந்தது
- நில உச்சவரம்புச் சட்டத்தின் மூலம் நிலமற்றவர்களுக்கு நிலங்களை வழங்குதல்
- அரச குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஆயுதம் ஏந்தி பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதைத் தடுக்க ஆயுதச் சட்டம் கொண்டுவந்தது
- தங்கச் சட்டத்தின் மூலம் அரசகுடும்பங்களின் பாரம்பரிய செழிப்பை முடிவுக்குக் கொண்டு வருதல் மற்றும் கட்டுப்படுத்துதல்
அரச குடும்பங்கள் ஏன் பா.ஜ.க.வை ஆதரிக்கின்றன?
இப்போதுதான் நமக்கு இந்தக் கேள்வி தோன்றுகிறது.
அரச குடும்பங்கள் ஏன் பா.ஜ.க.வை ஆதரிக்கின்றன?
இதற்கான எளிய பதில்: இந்திரா காந்தி புதிய மாற்றங்களின் மூலம் ராஜஸ்தான் சமஸ்தானங்களை தரைமட்டமாக்கியது.
இந்திரா காந்தியில் நடவடிக்கைகளால் அரச குடும்பக்களின் மகிமை மங்கி, அது கடந்த கால நினைவாக மாறியது. அவர்கள் சாதாரண குடிமக்களுக்குச் சமமானவர்கள் ஆகினர்.
இது இன்றளவும் சமஸ்தானங்களையும் இளவரசர்களையும் தொந்தரவு செய்கிறது.
ராஜஸ்தானின் அரச குடும்பமும் பா.ஜ.க.வும்
சமஸ்தானங்களின் வரலாற்றாசிரியரும் நிபுணருமான பேராசிரியர் ராஜேந்திர சிங் கங்காரோட், ஒருவருடைய சலுகைகள் பறிக்கப்பட்டால், அவர் அரசாங்கத்திற்கு எதிரானவராக மாறுகிறார். ராஜஸ்தானின் அரச குடும்பங்களிலும் இதேதான் நடந்தது, என்கிறார்.
"காங்கிரஸ் ஆட்சியில் அவர்களது சலுகைகள் பறிக்கப்பட்டபோது, அவர்கள், குறைந்தபட்சம் தங்கள் உரிமைகளைப் பறிக்காத ஒரு கட்சியுடன் தங்களை இணைத்துக் கொள்ள வழி தேடத் துவங்கினர்," என்கிறார் கங்காரோட்.
அவர்கள் முதலில் ராம ராஜ்ஜிய பரிஷத்திலும் பிறகு சுதந்திரக் கட்சி ஒன்றான போது, அவரக்ள் பாரதிய ஜனசங்கம் மற்றும் பாரதிய ஜனதா கட்சியுடன் தொடர்பு வைத்துக்கொள்வது எளிதாகிவிட்டது.
ஆனால், அரச குடும்பத்தைச் சேர்ந்த சிலர் காங்கிரசிலும் இணைந்தனர்.
ராஜஸ்தானின் ஏதாவது ஒரு அரச குடும்பத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவரை நீங்கள் சந்தித்தால், அவர் கீழ்கண்டவாறு பேசுவார்:
“காங்கிரஸ் முதலில் எங்கள் ஆட்சியைப் பறித்தது. பின்னர் எங்கள் ஜாகிர்களைப் பறித்தது. பின்னர் தனியுரிமைகளை ஒழித்தது. பெரும் விவசாய நிலங்களைப் பறித்தது. ஆயுதங்களை எடுத்துக்கொண்டது. அதன்பின்னும் அவர்கள் நிறுத்தவில்லை. எங்களின் விலைமதிப்பற்ற தங்கம், வெள்ளி மற்றும் வைர நகைகளையும் பறித்துக்கொண்டது.”
சிலர் இதை சோசலிசம் என்றும் சிலர் சுதந்திரத்திற்குப் பிறகான சமத்துவம் என்றும் கூறுவார்கள்.
ஆனால் இதற்குப் பிறகு, ராஜஸ்தான் அரசியலில் சில அரச குடும்பத்தினர் தத்தளித்தனர், சிலர் தோற்றனர், சிலர் விடாமல் முயற்சித்தனர்.
ஆனால் பைரோன் சிங் ஷெகாவத் மற்றும் வசுந்தரா ராஜேவின் ஆட்சிக் காலத்தில் அவர்கள் மீண்டும் தலையெடுக்க வேண்டிய நேரம் வந்தது.
ஜாகிர்தாரி முறை ஒழிப்பில் ஜாகிர்தார்களை எதிர்த்தவர் மற்றும் ஜனநாயக உரிமைகளை ஆதரித்த ஜனசங்கத்தின் ஆரம்பகால தலைவர்களில் ஷெகாவத் மட்டுமே இருந்தார்.
முதல் தேர்தலுக்குப் பிறகு, ஹனுவந்த் சிங் விமான விபத்தில் இறந்தபோது, ஆட்சியைப் பிடிக்கும் சமஸ்தானங்களின் கனவு தகர்ந்தது.
இருப்பினும், அரச குடும்பத்தினர் பல தொகுதிகளில் போட்டியிட்டு வென்றனர்.
ராஜஸ்தான் அரச குடும்பத்தினர் இன்று அம்மாநில அரசியலில் மிகவும் பிரபலமான மற்றும் பெரிய பெயர்களாக உள்ளனர். மக்களவையிலும் இடம்பெற்றுள்ளனர். ஜெய்ப்பூர், அல்வார், பரத்பூர் ஆகிய அத்தனை அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் இதில் அடக்கம்.
இப்போது முதன்முறையாக ஜெய்ப்பூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் இந்தச் சட்டமன்றத் தேர்தலில் வித்யாதர்நகர் தொகுதியில் இருந்து போட்டியிடவிருக்கிறார்.
அவர், தியா குமாரி. இத்தொகுதியிலிருந்து பா.ஜ.க நிறுவனர்களில் முக்கிய தலைவரும், மாநில அரசியலின் அதிகாரப் புள்ளியுமான பைரோங் சிங் ஷெகாவத்தின் மருமகனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூர் முன்னாள் மகாராஜா பிரிகேடியர் பவானி சிங் மற்றும் பத்மினி தேவியின் ஒரே மகள் தியா. ராஜ்சமந்த் தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினராக உள்ளார். இதற்கு முன்பு அவர் சவாய் மாதவ்பூரில் பாஜக எம்.எல்.ஏ.வாக இருந்தார்.
காயத்ரி தேவிக்கும் இந்திரா காந்திக்கும் இருந்த மோதல்
தியா குமாரியின் பாட்டி மகாராணி காயத்ரி தேவி 1962, 1967 மற்றும் 1971 ஆகிய ஆண்டுகளில் சுதந்திரக் கட்சி சார்பில் ஜெய்ப்பூரில் இருந்து மூன்று முறை எம்.பி.யாக இருந்தார். காயத்ரி தேவி இந்திரா காந்தியிடமிருந்து நேரடிப் போட்டியை எதிர்கொண்டவர்களில் ஒருவர்.
காயத்ரி தேவியின் மகன் பிருத்விராஜ் சிங் 1962-இல் சுதந்திரக் கட்சியிலிருந்து தௌசா தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த ஆண்டு அம்மாவும் மகனும் மக்களவையில் இருந்தனர்.
காயத்ரி தேவி 1967-இல் டோங்க் மாவட்டத்தில் உள்ள மால்புரா தொகுதியில் சுதந்திரக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு காங்கிரஸின் தாமோதர் லால் வியாஸிடம் தோல்வியடைந்தார்.
அந்தத் தேர்தலில் காயத்ரி தேவி தோல்வியடையாமல் இருந்திருந்தால், ராஜஸ்தானின் காங்கிரஸ் அல்லாத அரசியலின் கடிவாளம் மகாராணியின் கைகளில் இருந்திருக்கும் என்றும், ஒருவேளை ஷெகாவத்துக்குப் பதிலாக, 1977-இல் அவர் பா.ஜ.க.வை வழிநடத்தியிருப்பார் என்றும் ராஜஸ்தான் அரசியலின் பழைய நிபுணர்கள் கருதுகின்றனர்.
அவரது கடைசி நாட்களில், அவர் பா.ஜ.க முதல்வர் வசுந்தரா ராஜேவுக்கு எதிராக, சாமானிய மக்களின் பிரச்சனைகளுக்காகப் போராட்டம் கூட நடத்தினர்.
அவருக்கு இந்திரா காந்தியுடனும் ஒரு மோதல் ஏற்பட்டது. இந்திரா அவரை வெறுத்தார். 1975-ஆம் ஆண்டு வரி தொடர்பான சில விஷயங்களுக்காகப் பல மாதங்கள் அவர் காயத்ரி தேவியை சிறையில் அடைத்தார்.
அமெரிக்க அதிபர் ஜான் எஃப். கென்னடியின் மனைவி ஜாக்குலின் கென்னடி, மார்ச் 1962-இல் பல நாட்கள் அவரது இடத்தில் தங்கி ஜெய்ப்பூரில் யானை சவாரி செய்தார். மேலும், போலோ போட்டிகளைக் கண்டார், சந்தைகளுக்குச் சென்று, காயத்ரி தேவியின் தனிப்பட்ட விருந்தினராகத் தங்கினார். அதில் இருந்தே, காயத்ரி தேவி மீது இந்திரா பொறாமை கொண்டதாக ராஜஸ்தானின் அரச குடும்பத்தில் நம்பப்படுகிறது.
வசுந்தரா ராஜேவின் ஒரு பழைய நேர்காணலின் படி, ராஜமாதா விஜயராஜே சிந்தியா, தனது காலத்தில் உலகின் மிக அழகான பெண்களில் ஒருவர் காயத்ரி தேவி என்று நம்பினார்.
காயத்ரி தேவியின் மகன் பிரிகேடியர் பவானி சிங் 1989-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். ஆனால் அவர் ஒரு சாதாரண பா.ஜ.க தொண்டரான கிர்தாரிலால் பார்கவாவால் தோற்கடிக்கப்பட்டார்.
மேவார் தேர்தல் களத்தில் எத்தனை அரச குடும்பங்கள் உள்ளன?
ஜெய்ப்பூரைப் போல நாத் துவாராவில், காங்கிரஸின் சக்திவாய்ந்த தலைவரும், அரசியல் உளவியலில் நிபுணருமான பேராசிரியர் சி.பி. ஜோஷி, மேவார் அரச குடும்பத்தின் இளைஞரான விஸ்வராஜ் சிங் மேவாரிடமிருந்து போட்டியை எதிர்கொள்கிறார்.
சட்டசபை சபாநாயகர் ஜோஷி, பல ஆண்டுகளாக மக்கள் மத்தியில் இருந்து வருகிறார். விஸ்வராஜ் முதல்முறையாக களமிறங்குகிறார். ஆனால் போட்டி கடுமையாக உள்ளது.
ராஜஸ்தானின் இந்தச் சட்டமன்றத் தேர்தலில், அரச குடும்பங்களுடன் தொடர்புடைய முகங்கள் களமிறக்கப்பட்ட பல பகுதிகளில் கிட்டத்தட்ட இதே நிலைதான்.
இந்த முறை, உதய்பூரின் முன்னாள் அரச குடும்பத்துடன் தொடர்புடைய லக்ஷ்யராஜ் சிங்கையும் பா.ஜ.க குறிவைத்தது. ஆனால் அவர் அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்தார். அவர் வராததால், விஸ்வராஜ் சிங்கை அழைத்து வந்திருக்கிறது பா.ஜ.க.
விஸ்வராஜ் சிங், சித்தோர்கர் எம்.பி.யாக இருந்த மகாராணா மகேந்திர சிங்கின் மகன் ஆவார். லக்ஷ்யராஜ் சிங் மேவார், அரவிந்த் சிங் மேவாரின் மகன் ஆவார். மகேந்திர சிங்கும் அரவிந்த் சிங்கும் சகோதரர்கள். பரம்பரை சொத்து தொடர்பாக இரு குடும்பத்தினருக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளது. ஆனால் சிட்டி பேலஸ் அரவிந்த் சிங்கிடம் உள்ளது.
ராஜஸ்தானின் இரண்டு அரச குடும்பங்களும் ஜாட் இனத்தவர். அவை பரத்பூர் மற்றும் தோல்பூர் ஆகும்.
தோல்பூரின் ஜாட் அரச குடும்பத்தின் மருமகள் வசுந்தரா ராஜே 2003-ஆம் ஆண்டு முதல் ஜலவாரில் உள்ள ஜல்ராபட்டன் தொகுதியில் இருந்து தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார். அவரது மகன் துஷ்யந்த் சிங் 2004-ஆம் ஆண்டு முதல் ஜலவர்-பரான் மக்களவை தொகுதியில் இருந்து எம்.பி.யாக இருந்து வருகிறார்.
அரசியலில் ராஜஸ்தான் அரச குடும்பங்கள்
வசுந்தரா ராஜே தற்போது முன்னணியில் உள்ளார்.
ராஜே 1985-ஆம் ஆண்டு முதல் முறையாக தோல்பூரில் இருந்து பா.ஜ.க சார்பில் எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1991, 1996, 1998, 1999 ஆகிய ஆண்டுகளில் ஜலவர் தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினராக இருந்தார்.
மாநில அரசியலில் மிகவும் திறம்பட மற்றும் சுறுசுறுப்பாக செயல்படும் வகையில், பரத்பூரில் உள்ள ஜாட் இனத்தவர்கள் அரச குடும்பத்திற்கு பின்னால் உள்ளனர்.
இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த விஸ்வேந்திர சிங் 2013-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து டீக்-கும்ஹர் தொகுதியில் இருந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாகவும், அரசாங்கத்தில் அமைச்சராகவும் இருந்து வருகிறார். 1989-இல் ஜனதா தளம் மற்றும் 1999 மற்றும் 2004-இல் பா.ஜ.க. சார்பில் எம்.பி.யானார்.
விஸ்வேந்திர சிங் 1993-இல் நாட்பாய் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது மனைவி மகாராணி திவ்யா சிங் ஒருமுறை எம்.எல்.ஏ.வாகவும், ஒருமுறை எம்.பி.யாகவும் இருந்துள்ளார்.
விஸ்வேந்திர சிங்கின் தந்தை மகாராஜா பிரிஜேந்திர சிங் 1962-இல் மக்களவை உறுப்பினராகவும், 1972-இல் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.
ஒரே அரச குடும்பத்தைச் சேர்ந்த ராஜா மான் சிங், 1952 முதல் 1980 வரை ஏழு முறை டீக்-கும்ஹர் மற்றும் வைர் ஆகியோரின் வெவ்வேறு காலங்களில் எம்எல்ஏவாக இருந்தார். 1985-ஆம் ஆண்டு தேர்தலின் போது போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் அவர் கொல்லப்பட்டார்.
ராஜா மான்சிங்கின் மகள் கிருஷ்ணேந்திர கவுர் தீபா 1985, 1990, 2003, 2008 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் எம்.எல்.ஏ.வாக இருந்தார். இந்த முறை பா.ஜ.க அவருக்குப் போட்டியிட வாய்ப்பளிக்கவில்லை.
இதே அரச குடும்பத்தைச் சேர்ந்த அருண் சிங் 1991 முதல் 2003 வரை தொடர்ந்து நான்கு முறை எம்.எல்.ஏவாக இருந்தார்.
பரத்பூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த பச்சுசிங் என்கிற கிரிராஜ்சரண் சிங், முதல் மக்களவைத் தேர்தலில் சவாய் மாதோபூரில் இருந்து வெற்றி பெற்றார்.
நீண்ட காலமாக, மகாராஜா கர்னி சிங் 1952 முதல் 1972 வரை நடந்த தேர்தல்களில் பிகானரில் இருந்து மக்களவை உறுப்பினராகத் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது இவரது பேத்தி சித்தி குமாரி பிகானர் கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார். இம்முறையும் தேர்தல் களத்தில் இருக்கிறார்.
அல்வார் அரச குடும்பமும் ராஜஸ்தான் அரசியலில் முக்கிய இடம் பெற்றுள்ளது. பன்வர் ஜிதேந்திர சிங் தற்போது காங்கிரஸ் மூத்த தலைவராகவும், ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கமானவராகவும் உள்ளார். இரண்டு முறை எம்.எல்.ஏ.வாகவும், ஒருமுறை எம்.பி.யாகவும் இருந்துள்ளார். பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் மத்திய அமைச்சராகவும் இருந்தார். இவரது தாயார் யுவராணி மகேந்திர குமாரி பாஜக எம்.பி.யாக இருந்துள்ளார்.
ஜோத்பூர் அரச குடும்பம் ஆரம்பத்தில் மிகவும் செல்வாக்கு பெற்றிருந்தது.
ஹனுவந்த் சிங் சட்டசபை தேர்தலிலும், லோக்சபா தேர்தலிலும் வெற்றி பெற்றார். இவரது மனைவி ராஜ்மாதா கிருஷ்ண குமாரி 1972 முதல் 1977 வரை ஜோத்பூரில் இருந்து மக்களவை உறுப்பினராக இருந்தார். ஹனுவந்த் சிங் மற்றும் கிருஷ்ண குமாரியின் மகனான கஜ் சிங்கும் 1990 இடைத்தேர்தலில் பா.ஜ.க ஆதரவுடன் ராஜ்யசபாவிற்கு வந்தார்.
கிருஷ்ண குமாரி மற்றும் ஹனுவந்த் சிங் ஆகியோரின் மகளும், ஹிமாச்சல பிரதேசத்தின் காங்கிரஸ் தலைவருமான சந்திரேஷ் குமாரி, ஜோத்பூரில் இருந்து எம்.பி.யாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கோட்டாவின் முன்னாள் மகாராஜா, பிரிஜ்ராஜ் சிங் 1962-இல் காங்கிரஸிலிருந்து மக்களவை உறுப்பினராகவும், 1967 மற்றும் 1972-இல் ஜலவாரில் இருந்து பாரதிய ஜனசங்கச் சீட்டில் உறுப்பினராகவும் இருந்தார். அவர் 1977 மற்றும் 1980-இல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டுத் தோற்றார்.
பிரிஜ்ராஜ் சிங்கின் மகன் இஜ்ஜேராஜ் சிங் 2009-ஆம் ஆண்டு கோட்டா மக்களவைத் தொகுதியில் இருந்து காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் 2014-இல் தற்போதைய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் தோல்வியடைந்தார். இதையடுத்து இஜ்ஜேராஜ் மற்றும் அவரது மனைவி கல்பனா தேவி ஆகியோர் பா.ஜ.க.வில் இணைந்தனர். கல்பனா தேவி 2018-இல் லாட்புரா தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ ஆனார், இப்போது மீண்டும் பாஜக வேட்பாளராக உள்ளார்.
கரௌலி அரச குடும்பமும் அரசியலில் தீவிரமாக இருந்து வருகிறது. பிரஜேந்திரபால் சிங் 1952, 1957, 1962, 1967 மற்றும் 1972 ஆகிய ஆண்டுகளில் எம்.எல்.ஏ.வாக இருந்தார். தொடக்கத்திலும் முடிவிலும் சுயேட்ச்சையாகப் போட்டியிட்டார், ஆனால் இடைப்பட்ட தேர்தல்களில் காங்கிரஸில் சார்பில் போட்டியிட்டார். இதே அரச குடும்பத்தைச் சேர்ந்த ரோகினி குமாரி 2008-ஆம் ஆண்டு பா.ஜ.க சார்பில் எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நிறம் மாறிய அரசியல்
ராஜாதிராஜ சர்தார் சிங் கேத்ரி, மகாராவல் லக்ஷ்மண் சிங், குன்வர் ஜஸ்வந்த் சிங் தவுட்சர் போன்றவர்களும் 1958 முதல் ராஜ்யசபை பதவிகளை வகித்தனர்.
அரசியலில் மிகவும் சுவாரஸ்யமான திருப்புமுனை 1977-இல் ஜனதா கட்சி வெற்றி பெற்ற போது நடந்தது.
அந்த நேரத்தில் மஹாராவல் லக்ஷ்மண் சிங் தலைமையில் அனைத்து அரச குடும்பங்களும் ஒன்றுபட்டன. ஆனால் வெற்றிக்குப் பிறகு மகாராணி காயத்ரி தேவிக்கும் லக்ஷ்மண் சிங்குக்கும் இடையே ஒரு பிணக்கு ஏற்பட்டது.
இந்தத் தகராறு தீவிரமடைந்ததால், வாய்ப்புக்காக ஏற்கனவே விழிப்புடன் இருந்த பைரோங் சிங் ஷெகாவத் தீவிரமாகச் செயல்பட்டார். தனது அரசியல் சாமர்த்தியத்தாலும் திறமையாலும் சாதித்து முதலமைச்சரானார்.
அரச குடும்பங்களின் சக்தி வாய்ந்த முகங்களுக்கிடையே ஒரு சாதாரண ராஜபுத்திரனாக இருந்த ஷெகாவத் முதலமைச்சரானதன் மூலம், அரச குடும்பங்களுக்குப் பதிலாக மக்களின் அபிலாஷைகள் முன்னிறுத்தப்படுவதைக் காட்டினார்.
ஷெகாவத் ஜெய்ப்பூர் நகர அரண்மனை கூட்டங்களுக்குச் செல்ல மறுத்துவிட்டார். அரச குடும்பங்களின் பிரதிநிதிகளை ஓரங்கட்டினார்.
மகாராவல் லக்ஷ்மண் சிங் சட்டசபையின் சபாநாயகராகவும், காயத்ரி தேவி ராஜஸ்தான் மாநிலச் சுற்றுலா கழகத்தின் தலைவராகவும் நியமிக்கப்பட்டனர். அவருக்காகவே இந்தக் கழகம் உருவாக்கப்பட்டது.
இதற்குப் பிறகு, மாநிலத்தின் அரசியல் வேகமாக மாறியது. அரச குடும்பங்களின் ஆடம்பரத்திற்கு மாறாக, சாதாரண ராஜபுத்திர தலைவர்களின் பெயர்கள் முன்னிலை பெற்றன.
ஜஸ்வந்த் சிங் ஜசோல், கல்யாண் சிங் கல்வி, தன்சிங், தேவிசிங் பதி, நர்பத் சிங் ராஜ்வி, சுரேந்திர சிங் ரத்தோர் மற்றும் ராஜேந்திர சிங் ரத்தோர் என பல தனித்துவமான பெயர்கள் அதில் இடம்பெற்றன.
இதனால், அரச குடும்பங்களின் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.
1987-இல் ராஜஸ்தானின் அரசியல் ஒரு குறுகிய பாதை வழியாக சென்றபோது, மத்திய அரசியலில் வி.பி. சிங் ஆதிக்கம் செலுத்துவதை அரச குடும்பம் கண்டது.
இன்றைய நிலைமை என்ன?
அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்திக்கு வி.பி.சிங் சவால் விடுத்தபோது, பெரிய அரச குடும்பங்கள் தங்கள் எதிர்காலம் சிங்கிடம் இருப்பதைக் கண்டன.
உண்மையில், வி.பி. சிங் ராஜஸ்தானின் தியோகர் பகுதியின் மருமகன். இதன் மூலம் 1993 தேர்தலில் ராஜபுத்திர அரச குடும்பங்கள் மற்றும் திகனேதர்களுக்கு பல சீட்டுகள் வழங்கப்பட்டன. பராக்ரம் சிங் பனேரா, வி.பி.சிங் பத்னோர் போன்ற தலைவர்கள் உருவானார்கள்.
1993 மற்றும் 1998-க்கு இடையில் ஷெகாவத்தின் அரசாங்கம் அமைக்கப்பட்டபோது, கோட்டைகளின் அரசியல் ஆதிக்கம் முடிந்து ஒரு புதிய சுற்றுலாக் கொள்கை பிறந்தது.
இந்தக் கொள்கைக்குப் பிறகு, அரசாங்கத்தின் உதவியுடனும் வழிகாட்டுதலுடனும் வெறிச்சோடிய கோட்டைகளுக்கு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கினர். பாலைவனத்தில் செழிப்பு ஏற்பட்டது.
தேர்தல் வந்ததும், அரண்மனைகள் மற்றும் அரச குடும்பங்களில் உள்ள கருவூலங்கள் அனைத்தையும் ஷெகாவத் வீணடித்துவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதன் விளைவாக 200 இடங்களில் பா.ஜ.க 33 இடங்களையும், காங்கிரஸ் 153 இடங்களையும் கைப்பற்றியது.
1998-இல், அசோக் கெலாட் காங்கிரசின் அரசு அமைந்தது, 2003 தேர்தல் வந்தபோது, மகாராணி வசுந்தரா ராஜேவின் புயல் வீசியது, காங்கிரஸ் 56 இடங்களாகக் குறைந்து, பாஜக 120 இடங்களைப் பெற்றது.
பா.ஜ.க முதல் முறையாக அறுதிப் பெரும்பான்மை பெற்றது. வசுந்தரா ராஜே ஒரு யாத்திரையைத் தொடங்கி மாநிலத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கையும் ஆராய்ந்தார். மேலும் எந்த அரச குடும்பத்திலோ அல்லது ராஜபுத்திர குடும்பத்திலோ அரசியலுக்கான சாத்தியக்கூறுகளைக் கண்டால், அவர் அதை முன்னெடுத்துச் சென்றார்.
இப்போது வசுந்தராவுக்குப் பிந்தைய காலத்தில், பா.ஜ.க தலைமை மீண்டும் அரச குடும்பங்களை நாடியுள்ளது.
காங்கரோட், ராஜஸ்தானின் அனைத்து அரச குடும்பங்களும் அடக்குமுறையாளர்களாக இருக்கவில்லை, என்றாலும் அதிகாரத்தின் தன்மை மாறாது என்பது உண்மை, என்கிறார்.
“முன்பு மன்னர்களுக்கும் நவாப்களுக்கும் விரிக்கப்பட்ட சிவப்புக் கம்பளம் இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களுக்கு விரிக்கப்படுகிறது. அவர்கள் தன்னிச்சையான முடிவுகள் எடுக்கிறார்கள்,” என்கிறார்.
இந்த முடிவுகளின் விளைவாக, சாதாரண தொண்டர்கள் கோஷங்களை எழுப்பி அரண்மனைகளை அடைகிறார்கள்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)