பள்ளி மாணவர்களை அழ வைத்த நடிகர் தாமுவை பேச அழைத்தது யார்? விதிமீறல் பற்றி அரசு விளக்கம்

    • எழுதியவர், பாலசுப்ரமணியம் காளிமுத்து
    • பதவி, பிபிசி தமிழ்

சமீப காலங்களில், “பள்ளி மாணவர்களிடையே ஊக்கமளிக்கும் வகையில் பேசிய நடிகர் தாமு.. தேம்பி தேம்பி அழுத மாணவர்கள்” போன்ற தலைப்புகள் கொண்ட காணொளிகளையும் செய்திகளையும் அடிக்கடி பார்க்க முடிகிறது.

90கள் மற்றும் 2000களில் பிரபல நகைச்சுவை நடிகராக இருந்த தாமு தற்போது கல்வி சேவைகள் செய்துவருகிறார். இதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் இருக்கும் அரசு பள்ளிகளுக்கு சென்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் உரையாற்றும் நடிகர் தாமுவின் பேச்சை கேட்டு மாணவர்கள் தேம்பி அழும் காணொளிகளை செய்திகளில் காண முடிந்தது.

நடிகர் தாமு பள்ளி மாணவர்களிடம் அவர்களை படிக்க வைக்க அவர்களின் பெற்றோர் படும் கஷ்டங்கள் குறித்தும் மாணவர்கள் செய்யும் தவறுகள் குறித்தும் பேசுவதன் விளைவாக மாணவர்கள் அழுகின்றனர். ஆரம்பத்தில் சாதாரணமாக கடந்து செல்லப்பட்ட தாமுவின் இந்த செயல் தற்போது மிகுந்த சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

கவனத்தோடு அணுகப்பட வேண்டிய பள்ளி மாணவர்களை அழ வைத்துதான் ஊக்கப்படுத்த வேண்டுமா? குழந்தைகளுக்கான மனநல ஆலோசகர்களும் கல்வியாளர்களும் செய்ய வேண்டியதை நடிகர் தாமு எப்படி செய்கிறார்? இதற்கான அனுமதியை பள்ளிக்கல்வித்துறை எப்படி வழங்கியது? போன்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

மாணவர்கள் அழுவது பற்றி தாமு கூறியது என்ன?

நடிகர் தாமு மீது வைக்கப்படும் விமர்சனம் பற்றி அவரிடமே பிபிசி தமிழ் பேசியது.

அவர் கூறுகையில், “குழந்தைகளை அழ வைக்கிறேன் என்று விமர்சிக்கிறார்கள். குழந்தைகளுக்கு மருத்துவர் தடுப்பூசி போடுவார். அப்போது குழந்தை அழும். குழந்தைக்கு காது குத்துகிறோம். அப்போதும் குழந்தை அழும். அதை கொடுமை என்று சொல்ல முடியுமா? அது ஒரு சடங்கு. காது குத்துவதில் மருத்துவ காரணங்களும் உள்ளன. அது ஒரு மெமரி பாயின்ட். இந்த நிகழ்வுகளில் எல்லாம் குழந்தைகள் துன்புறுத்தப்படுகிறார்கள் என்று உளவியல் நிபுணர்கள் ஏன் குற்றம்சாட்டவில்லை?” எனக் கேள்வியெழுப்பினார்.

“மாணவர்களின் மனங்களில் தேவையற்ற எண்ணங்கள் இருக்கின்றன. அவர்களின் மனதிற்கு நான் தடுப்பூசி போல அன்பு என்னும் ஊசியை செலுத்துகிறேன். அப்படி செலுத்தும்போது மாணவர்களுக்குள் இருக்கும் குழந்தை அழுகிறது. நான் பேசிய பின்பு அவர்களுக்குள் இருக்கும் குழந்தை புதிதாக பிறக்கிறது. குழந்தை பிறக்கும்போது அழுதுகொண்டுதான் பிறக்கும். அதுபோலதான் அவர்களும் அழுகிறார்கள்” என தாமு தெரிவித்தார்.

தன் மீது அப்படி விமர்சனம் வைத்தது யார்? அவரது பெயரை சொல்லுங்கள் எனக் கேள்வி எழுப்பினார் நடிகர் தாமு. சமூக வலைதளங்களில் பலர் விமர்சித்துள்ளனர் என்ற கூறியதற்கு, “சமூக வலைதளத்திற்கு உயிர் இருக்கிறதா? என் மீது விமர்சனம் வைத்த நபர் யார் என்று சொல்லுங்கள். சமூக வலைதளத்தில் யாரோ ஒருவர் குப்பையை போட்டால் அந்த குப்பைக்கு நான் பதில் சொல்லவேண்டுமா? ஊடகங்கள் எனது நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து அதை ஆராய வேண்டும்,” எனத் தெரிவித்தார்.

“இதுவரை 28 லட்சம் பள்ளி மாணவர்களை அழ வைத்திருக்கிறேன்”

மேலும் பேசிய நடிகர் தாமு, ஆசிரியர் எனும் வார்த்தை புதிய விளக்கத்தை அளித்தார்.

“ஆசு + இரியர்”. ஆசு என்பது மனதில் இருக்கும் குப்பை. ஆசிரியரை விடவா ஒரு உளவியல் நிபுணர் தேவை. அதேபோல, காவல்துறையை விடவா மாணவர்களுக்கு பாதுகாப்பு தேவை. ஆசிரியர்கள்தான் என்னை மாணவர்களிடம் பேச அழைக்கிறார்கள். இது வரை நான் பேசி 28 லட்சம் மாணவர்கள் அழுதிருக்கிறார்கள். இதை நான் கடந்த பதினொரு வருடங்களாக செய்துவருகிறேன். என்னுடைய பேச்சைக் கேட்கும் மாணவ, மாணவியர் எதிர்பாலினத்தவர் பின்னே போக மாட்டார்கள். எனது பேச்சை கேட்டால், புகைப்பழக்கம், குடிப்பழக்கத்திற்கு செல்ல மாட்டார்கள்,” என நடிகர் தாமு தெரிவித்தார்.

சில நாட்களுக்கு முன்பு சேலத்தில் பள்ளி மாணவிகளிடம் பேசிய பின்பு ஊடகங்களிடம் தாமு பேசினார். அப்போது, "பள்ளி மாணவிகள் இதற்கடுத்து யாரிடமும் லவ் லெட்டர் வாங்க மாட்டார்கள் என்றும் தவறான வழியில் செல்லமாட்டார்கள்" என்றும் கூறினார்.

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர்,“அப்பா, அம்மா மீது காதல் வருவதை நான் தவறென்று கூறவில்லை. ஆனால், எனது பேச்சைக் கேட்ட பின்பு மாணவிகளிடம் தெளிவு வந்துவிடுகிறது. அதன்பின்பு அவர்கள் யாரிடமும் லவ் லெட்டர்கள் வாங்கவோ கொடுக்கவோ மாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.

“எனக்கு மாணவர்களிடம் பேச என்ன தகுதி உள்ளது எனக் கேட்கிறார்கள். நான் மாணவர்களை சிரிக்க வைக்கிறேன், ரசிக்க வைக்கிறேன். உளவியல் படித்தவர்களுக்கு இதனால்தான் என்மீது கோபம். அவர்களுக்கு பள்ளி மாணவர்களை அணுகத் தெரியாது. அதையெல்லாம் கலாம் சாரிடம் சென்று கற்றுக்கொள்ள வேண்டும். நான் அவரிடம்தான் கற்றுக்கொண்டேன். அவர்தான் எனக்கு பயிற்சி அளித்து, என்னை மாணவர்களிடம் அனுப்பினார். மாணவர்களிடம் பேசுவதற்கு கலாம் சார் சொன்ன பத்து கட்டளைகளை நான் பின்பற்றுகிறேன். கலாம் சார் விவேக்கை மரம் நடச் சொன்னார். என்னை கல்வியின் தரத்தை மேம்படுத்த உழைக்க சொன்னார்” என அவர் தெரிவித்தார்.

தாமு நிகழ்ச்சி பற்றி உளவியல் நிபுணர்கள் கூறுவது என்ன?

தாமு பேசியது குறித்தும் அவர் மாணவர்களிடம் பேசும் விதம் குறித்தும் உளவியல் வல்லுநர் நப்பின்னை சேரனிடம் பிபிசி தமிழ் பேசியது. அவர் கூறுகையில், “மாணவர்கள் இப்படி அழ வைப்பது மாணவர்களின் மனதில் மோசமான விளைவுகளை உண்டாக்கும். மாணவர்களிடம் அவர்கள் தனது அப்பா, அம்மாவின் பேச்சை கேட்கவில்லை அதனால் அவர்கள் தவறானவர்கள் என்று உணர்ச்சிப்பொங்க கூறும்பொழுது, மாணவர்கள் குற்ற உணர்ச்சிக்கு உள்ளாகி அவர்களை அவர்களே வெறுக்க ஆரம்பிப்பார்கள். இது அவர்களை மன அழுத்தத்திற்குள் தள்ளிவிடும்.” என அவர் தெரிவித்தார்.

“தடுப்பூசி போட்டால் குழந்தை அழுவதுபோலத்தான் தன் பேச்சை கேட்டு குழந்தைகள் அழுகிறார்கள் என்று தாமு கூறுகிறார். ஆனால், தடுப்பூசி போட்டால் அதன்பின்பு நோய் தாக்காது என்பதற்கு அறிவியல் ஆதாரம் உள்ளது. தாமு மாணவர்களிடம் அவ்வாறு பேசி அழ வைத்தால் மாணவர்களுக்கு இருக்கும் பிரச்னை சரியாகிவிடும் என்பதற்கு என்ன அறிவியல் ஆதாரம் உள்ளது?” என அவர் கேள்வியெழுப்பினார்.

“தாமு பேசக் கூடிய மாணவர்கள் வளரிளம் பருவத்தில் உள்ளனர். அந்தக் குறிப்பிட்ட வயது மாணவர்கள் படிப்பு, குடும்பம், சமூக எதிர்பார்ப்புகள் என ஏற்கெனவே மிகுந்த அழுத்தத்தில் இருப்பார்கள். மயிலிறகால் வருடப்பட வேண்டிய அந்த மாணவர்களின் மனதை நடிகர் தாமு கடப்பாரையை வைத்து தோண்டுகிறார். மைக் இருந்தால் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்ற சூழல் தற்போது உள்ளது” என உளவியல் வல்லுநர் நப்பின்னை தெரிவித்தார்.

மாணவர்கள் மத்தியில் யார் பேச வேண்டும் என்பதற்கு சில தகுதிகள் உள்ளன எனக்கூறிய உளவியல் வல்லுநர் நப்பின்னை, அறுவை சிகிச்சை செய்துகொள்ள எப்படி மருத்துவம் படித்த மருத்துவர்களிடம் மட்டுமே போகிறோமோ அதேபோலத்தான் மனரீதியான தீர்விற்கும் அதற்கான தகுதி உடையவர்களிடம்தான் நாம் செல்ல வேண்டும் என அவர் தெரிவித்தார்.

“பள்ளி மாணவர்களிடம் காதல் பற்றி கவனமாக பேசவேண்டும்”

மேலும் பேசிய அவர், “தாமு செய்வது எப்படியிருக்கிறது என்றால், பிறந்த குழந்தைக்கு பால் குடுப்பதற்கு பதில், கொதிக்கும் ரசத்தை ரசம் உடலுக்கு நல்லது என்று ஊற்றுவது போல் உள்ளது. மோட்டிவேசன் எனும் பெயரில் அறிவியல் ஆதாரம் இல்லாமல் பலர் இவ்வாறு பேசுகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

“மாணவர்கள் மத்தியில் காதல் போன்ற விஷயங்களை மிகவும் கவனத்தோடு பேச வேண்டும். காதல் தவறு கிடையாது. ஆனால், வளரிளம் பருவத்தில் வரக்கூடிய காதல் அவசியமற்றது. இதை பக்குவமாக அவர்களுக்கு எடுத்துக்கூற வேண்டும். மாறாக, காதலிக்காதே என்று சொல்லும்போது காதலித்து பார்த்தால் என்ன என்கிற எண்ணம் சில மாணவர்களிடம் வருவதற்கு வாய்ப்புள்ளது,” என்று உளவியல் வல்லுநர் நப்பின்னை தெரிவித்தார்.

“பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை கொடுப்பதற்கு படித்த உளவியல் நிபுணர்கள் பலர் உள்ளனர். அவர்களை பள்ளிக்கல்வித் துறை பயன்படுத்த வேண்டும். பள்ளி உளவியல் என்ற பாடமே உளவியலில் உள்ளது. அதை படித்து அதில் நிபுணத்துவம் பெற்றவர்கள்தான் பள்ளி மாணவர்களிடம் பேசுவதற்கு சிறந்த தேர்வு” என அவர் கூறினார்.

நடிகர் தாமுவை பேச அழைத்தது யார்? விதிமீறல் பற்றி தமிழ்நாடு அரசு விளக்கம்

இந்த விவகாரத்தில் எழுந்துள்ள மற்றொரு கேள்வி பள்ளிக்கல்வித்துறை எதன் அடிப்படையில் நடிகர் தாமு பள்ளி மாணவர்களிடம் பேசுவதை அனுமதித்தது என்பதுதான். இது குறித்து பள்ளிக்கல்வித்துறையின் இயக்குநர் க.அறிவொளி உடன் பிபிசி தமிழ் பேசியது.

அவர் கூறுகையில், “நடிகர் தாமு அரசுப் பள்ளிகளுக்குள் வந்து மாணவர்களிடம் பேசுவதற்கு பள்ளிக் கல்வித்துறையிடம் முறையாக அனுமதி வாங்கப்படவில்லை. அவரை அழைத்து நிகழ்ச்சிகள் நடத்திய அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டுள்ளேன். இதன்பிறகு நடிகர் தாமுவை அழைத்து அரசுப்பள்ளிகளில் நிகழ்ச்சிகள் நடத்துவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளேன்” என அவர் தெரிவித்தார்.

பள்ளி ஆசிரியர்களும் காவல்துறையும்தான் இந்த நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து தன்னை அழைத்ததாக தாமு கூறுகிறாரே என்று கேள்விக்கு, தனக்கு தெரிந்தவரை நடிகர் தாமுதான் தான் ஆசிரியர்களிடம் பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து தருகிறேன் என்று கூறியதாக அறிவொளி தெரிவித்தார்.

மேலும், “பள்ளி மாணவர்களிடம் யாரை அழைத்து பேச வைக்கப்போகிறோம் என்பதை முடிவு செய்வதற்கு தெளிவான விதிகள் இருக்கின்றன. அந்த விதிகளை ஆசிரியர்கள் பின்பற்றுவதில்லை. நிறைய ஆசிரியர்களுக்கு அவ்வாறு விதிகள் இருப்பதே தெரியாது. பள்ளி மாணவர்களிடம் பேசுபவர்கள் தேர்ந்த எழுத்தாளர்களாகவும் சாதனையாளர்களாகவும் இருக்கவேண்டும் என 40 வருடங்களுக்கு முன்பே விதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. காவல்துறை அதிகாரிகள் பள்ளி மாணவர்களிடம் பேசி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். ஆனால், காவல்துறை பள்ளி மாணவர்களிடம் யார் பேச வேண்டும் என்பதை முடிவு செய்ய முடியாது,” என அறிவொளி தெரிவித்தார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)