ஆதாரை பயன்படுத்தி நம் வங்கிக் கணக்கில் பணத்தை எவ்வாறு எடுக்கிறார்கள்? தடுப்பது எப்படி?

    • எழுதியவர், இம்ரான் குரேஷி
    • பதவி, பிபிசி இந்திக்காக பெங்களூருவிலிருந்து

மிக மெதுவாகவும் சீராகவும் இந்தியாவில் ஆதாரால் இயக்கப்படும் கட்டண முறையை (AePS) பயன்படுத்தி இணைய மோசடி வழக்குகள் அதிகமாகி வருகின்றன. குறிப்பாக இதனால் A, B மற்றும் C வகை நகரங்களைச் சேர்ந்த மக்கள் தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழக்கிறார்கள்.

பெங்களூருவில் மட்டும் சமீபத்தில் 116 வழக்குகள் பதிவாகியுள்ளன. ஆந்திராவின் கடப்பா, தெலங்கானாவின் ஹைதராபாத், பிகாரின் நவாடா, ராஜஸ்தானின் பாரத்பூர் ஆகிய நகரங்களில் இந்த வழக்குகள் பதிவாகியுள்ளன. இது தவிர, ஹரியாணா, மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம் மகாராஷ்ட்ரா, குஜராத், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் உள்ள நகரங்கள் மற்றும் சிறு நகரங்களிலும் இந்த வழக்குகளின் பட்டியல் நீளமாக உள்ளது.

தற்போது இந்தியர்களின் முதன்மை அடையாள அட்டையாக உள்ள ஆதார் அட்டை மக்களை ஏமாற்றும் மோசடியாளர்களின் முதன்மையான கருவியாக தற்போது மாறியுள்ளது. முதலில், ஆதார் அட்டையைப் பயன்படுத்துவதில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றி வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்ப்பதற்கு முன், பெங்களூருவின் சமீபத்திய உதாரணத்தைப் பார்ப்போம்.

பெங்களூருவில் பதியப்பட்ட 116 ஆதார் மோசடி வழக்குகள்

பெங்களூரு வழக்கில், பிகாரைச் சேர்ந்த முகமது பர்வேஸ் எஸ்தானி மற்றும் அபுசார் ஷமிம் அக்தர் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் ஓ.டி.பி.யோ அல்லது குறுஞ்செய்தியோ இல்லாமலேயே இந்த மோசடிகளை அவர்கள் அரங்கேற்றியுள்ளனர்.

ஆனாலும், சம்பந்தப்பட்ட நபரின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக வங்கியிடம் இருந்து மெசேஜ் வரும்போதுதான் தாம் ஏமாற்றப்பட்டுள்ளதை அந்த நபர் கண்டுபிடிக்கிறார். 2018ம் ஆண்டு ஹைதராபாத்தில் மொபைல் சிம் கார்டு விற்பனையாளர், வாடிக்கையாளர்களின் கைரேகைகள் மற்றும் மொபைல் எண்களை நகல் எடுத்து ஏமாற்றுவதற்காக பின்பற்றிய அதே முறைதான் இதிலும் பின்பற்றப்பட்டுள்ளது.

பெங்களூரு வழக்கில், பாதிக்கப்பட்டவர்கள் சில சமயங்களில் சப்-ரிஜிஸ்ட்ரார் அலுவலகங்களுக்குச் சென்று சொத்துகளை விற்றோ அல்லது வாங்கவோ பதிவு செய்திருக்கிறார்கள். அப்போது அவர்கள் வழங்கிய ஆவணங்கள், முத்திரைகள் மற்றும் பதிவுத் துறையின் இணைய முகப்பான (Portal) காவேரி 2.0 இல் பதிவேற்றப்பட்டவுடன் பொது ஆவணங்களாக மாறிவிடும்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் பொதுவில் இருந்த ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்து, பாதிக்கப்பட்டவர்களின் ஆதார் எண் மற்றும் பயோமெட்ரிக் விவரங்களைப் பயன்படுத்தி அவர்களை ஏமாற்றியுள்ளனர். ஏமாற்றப்பட்ட தொகைகள், அதிர்ஷ்டவசமாக, ஒரு நாளைக்கு ரூ. 25,000 ஐ தாண்டவில்லை, ஏனெனில் AePS அதற்கு மேல் எந்தத் தொகையையும் வழங்கவில்லை.

“116 வழக்குகளில் மோசடி செய்யப்பட்ட மொத்தத் தொகையை நாங்கள் இன்னும் கணக்கிடவில்லை. நாங்கள் விசாரித்து வருகிறோம்,” என்று பெங்களூரு போலீஸ் கமிஷனர் பி.தயானந்தா பிபிசி ஹிந்தியிடம் தெரிவித்தார். ஆதார் அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் முத்திரைகள் மற்றும் பதிவுத் துறையின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் மம்தா கவுடா புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

“குடிமக்கள் ஆதார் அட்டையைப் பயன்படுத்த விரும்பினால், அவர்கள் அட்டையில் உள்ள எண்களின் கடைசி நான்கு இலக்கங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். டிரைவிங் லைசென்ஸ், பான் கார்டு, வாக்காளர் அட்டை போன்ற பிற அடையாள அட்டைகளையும் அவர்கள் பயன்படுத்தலாம். இனிமேல் பதிவு செய்யப்பட்ட ஆவணத்தின் முதல் பக்கம் மட்டுமே காவேரி 2.0ல் தெரியும்,'' என்று பிபிசி ஹிந்தியிடம் மம்தா கவுடா தெரிவித்தார்.

“தரவுத்தளம் (database) போதுமான அளவு பாதுகாக்கப்பட்டுள்ளதா, இணைய முகப்பு குறியாக்கம் (Encryption) செய்யப்பட்டுள்ளதா என வழக்கின் பல்வேறு அம்சங்கள் குறித்த கேள்விகள் எழுந்துள்ளன. கைது செய்யப்பட்டவர்கள் வெறும் பலிஆடுகளாக இருக்கலாம். அவர்களுக்குப் பின்னால் ஒரு பெரிய கும்பல் கூட இருக்கலாம். இது நாடு முழுவதும் உள்ள மற்ற வழக்குகளைப் போலவே இருப்பதால், சிபிஐ விசாரனைக்கு இந்த வழக்கு தகுதி பெறுகிறது” என்று செக்யூரிடி கன்சல்டன்சி சர்வீசஸின் இணைய பாதுகாப்பு நிபுணர் ஷஷிதர் சிஎன் பிபிசி ஹிந்தியிடம் கூறினார்.

ஆதார் தகவல்களை கேட்கும் தனியார் நிறுவனங்கள்

ஆனால், ஆதாரைப் பயன்படுத்தியதற்காக அரசுத் துறைகள் அல்லது ஏஜென்சிகளைக் பயன்படுத்துபவர்கள் மட்டுமே ஏமாற்றப்படுகிறார்கள் என்று அர்த்தமல்ல.

மும்பையைத் தளமாகக் கொண்ட நேரடி விற்பனை ஆலோசனை நிறுவனமான ஸ்ட்ராடஜி இந்தியாவின் பிரஞ்சல் ஆர் டேனியல் கூறுகையில், நாட்டில் 600க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை விளம்பரப்படுத்த நேரடி விற்பனை மாதிரியைப் (Direct Selling Model) பயன்படுத்துகின்றன.

இந்த செயல்பாடுகள் 2000ன் தகவல் தொழில்நுட்ப சட்டம், 2023 இன் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம், 2021 இன் நுகர்வோர் பாதுகாப்பு (நேரடி விற்பனை) விதிகள் மற்றும் 2020 இன் நுகர்வோர் பாதுகாப்பு (இ-காமர்ஸ்) விதிகள் போன்ற விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும். இதன் விளைவாக, அவர்கள் இந்தியாவில் அமைந்துள்ள சர்வர்களில் முக்கியமான தரவைச் சேமிக்க வேண்டும்.

இருப்பினும், பல நேரடி விற்பனை நிறுவனங்கள் இந்தியாவிற்கு வெளியே அமைந்துள்ள சர்வர்களில் தங்கள் நேரடி விற்பனையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தரவை இன்னும் சேமிக்கின்றன. வாடிக்கையாளர்கள் தங்களை பதிவு செய்யும்போதும் பொருட்களை வாங்குவதற்கான ஆர்டர்களை கொடுக்கும்போதும் இந்த தரவுகள் சேமிக்கப்படுகின்றன.

"பல மோசடியான MLM திட்டங்கள் தங்களை நேரடி விற்பனை நிறுவனங்களாகக் கூறிக்கொள்கின்றன. முதலீட்டாளர்களிடமிருந்து பணத்தை பிடுங்குவதற்காக அவர்கள் கிரிப்டோகரன்ஸிகளைப் பயன்படுத்தும்போது முக்கியமான தரவுகளைச் சேகரித்து விற்பனை செய்கின்றன. நம் நாட்டில் ஒவ்வொரு வாரமும் 20 க்கும் மேற்பட்ட இந்த மாதிரியான செயல்பாடுகள் தொடங்கப்படுகின்றன," என்று அவர் கூறினார்.

"எங்கள் குழு வாரந்தோறும் மோசடியான MLM செயல்பாடுகளை கண்டறிந்து பகுப்பாய்வு செய்து, அவற்றை எங்கள் மோசடி எச்சரிக்கை பட்டியலில் தொகுக்கிறது. பொன்சி MLM திட்டங்களில் பொதுமக்கள் தங்கள் நேரம், பணம், ஆற்றல் மற்றும் நம்பிக்கையை முதலீடு செய்வதிலிருந்து இது மக்களை எச்சரிக்கை செய்யும். இது போன்ற 4,000 MLM மோசடிகள் எங்கள் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது," என்று அவர் கூறினார். MLM திட்டங்களில் KYCன் போது, ​​தனிநபர்கள் ஆதாருக்கு மாற்றுகளைப் பயன்படுத்த வேண்டும் என டேனியல் கூறினார்.

மும்பை, ஓபன் லைபிலிட்டி அலையன்ஸ் தலைவர் தினேஷ் பரேஜா பிபிசி ஹிந்தியிடம் கூறுகையில், “ஆதார் அட்டை ஒருவரை அடையாளம் காண்பதற்கான எளிதான வழியாக மாறியுள்ளது. ஆனால், ஆதாரில் மக்கள் பெரும்பாலும் அறியாத பாதுகாப்புகள் வழிமுறைகளும் உள்ளன. கார்டைப் பயன்படுத்தியவுடன் அதைத் தடுக்கலாம். உங்களுக்குத் தேவைப்படும்போது, ​​​​அதைத் திறக்கலாம். இது உங்கள் கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டுக்கான பரிவர்த்தனை வரம்புகளை அமைப்பது போன்றது. கட்டுப்பாடுகளை விதிப்பது உங்கள் கையில் உள்ளது” என அவர் தெரிவித்தார்.

மேலும், “ஆதார் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த ஏன் பணம் செலவழிக்கவில்லை என்று தெரியவில்லை. ஆதாரில் லாக் மற்றும் அன்லாக் செய்யும் வசதி உள்ளது ஆனால் இது மிகப்பெரிய இணையதளம். அதை எங்கு கண்டுபிடிப்பது என்று மக்களுக்குத் தெரியாது. இந்த மாதிரியான இணையக் குற்றங்களின் ஆரம்பப்புள்ளி என்பது தெரிந்தோ தெரியாமலோ எதையாவது க்ளிக் செய்வார்கள். அதன்பின் உடனடியாக குற்றவாளியால் இணைய வழி தாக்குதல் நடத்தப்படும். இது, ஒரு திருடன் நமது வீட்டிற்குள் நுழைந்து திருடுவதற்கு முன்பு வீட்டைநோட்டமிடுவது போலத்தான்”என்று பரேஜா கூறினார்.

ஆதார் மோசடி: செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை என்ன?

அனைத்து இணைய வல்லுநர்கள், ஆலோசகர்கள் மற்றும் காவல்துறையினருடனான உரையாடலின் அடிப்படையில், செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.

  • ஆவணங்களில் ஆதார் அட்டை எண்ணைப் பயன்படுத்துவது கட்டாயமில்லை. உண்மையில், ஆதார் சில சூழ்நிலைகளில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என சட்டத்தில் உள்ளது.
  • ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை அல்லது ரேஷன் கார்டு போன்ற வேறு எந்த அடையாள அட்டையும் வங்கிக் கணக்கு தொடங்குவதற்கும், மொபைல் இணைப்புகளைப் பெறுவதற்கும், பள்ளிச் சேர்க்கைகளுக்கும், தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கும் பயன்படுத்தப்பட வேண்டும்.
  • ஏதேனும் ஆவணம் பொது தளத்தில் பகிரப்பட்டால், முழு ஆதார் எண்ணையும் எழுத வேண்டாம். உங்கள் ஆதார் எண்ணின் கடைசி நான்கு இலக்கங்களை மட்டும் பயன்படுத்தவும்.
  • ஒரு குடிமகன் தனது ஆதார் அட்டையின் கடைசி நான்கு இலக்கங்களுடன் 1947 என்ற எண்ணுக்கு SMS அனுப்பலாம். குடிமகன் தற்காலிக பயன்பாட்டிற்காக விர்ச்சுவல் ஐடி எண்ணைப் பெறுவார்.
  • குடிமகன் பயன்படுத்திய பிறகு ஆதார் அட்டையை லாக் செய்யலாம். UIDAI இணையதளத்தில் லாக் அல்லது அன்லாக் செய்யும் வசதி உள்ளது.
  • அரசு நிறுவனங்கள்/நிறுவனங்கள் கைரேகைகளை பகிரங்கமாக வெளிப்படுத்த அனுமதிக்கக் கூடாது. ஆவணத்தில் கைரேகைகள் மறைக்கப்பட வேண்டும்.
  • ஆவணங்களின் நகல்களை எடுத்தால், கைரேகைகள் படிய வேண்டும்.
  • ஒரே ஆவணத்தில் ஆதார் எண், கைரேகைகள் மற்றும் பெயரைப் பயன்படுத்த வேண்டாம்.
  • உங்கள் வங்கிக் கணக்கு, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு ஆகியவற்றில் அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் வரம்பை நிர்ணயிக்கவும். நீங்கள் பயன்படுத்தும் போது மட்டுமே அதை முடக்கவும்.
  • நீங்கள் இணைய மோசடிக்கு ஆளானால், இணைய மோசடிகளுக்கான தேசிய உதவி எண் 1930 ஐ உடனடியாக அழைக்கவும். பணம் மாற்றப்பட்ட கணக்கை போலீசார் கண்காணித்து, பணத்தை திரும்பப் பெற முயற்சிப்பார்கள்.

81.5 கோடி இந்தியர்களின் ஆதார் தகவல்கள் திருட்டு?

81.5 கோடி இந்தியர்களின் ஆதார் தகவல்கள் திருடப்பட்டு “டார்க் நெட்டில்” வைக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத தகவல்கள் குறித்து ஆதார் அதிகாரிகளிடம் நாம் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் இல்லை. பதிலைப் பெற்றவுடன் இந்த செய்தி புதுப்பிக்கப்படும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)