கமல்ஹாசன்: தக் லைஃப் திரைப்படத்தில் சாதிப் பெயர் சூட்டுவதன் நோக்கம் என்ன?

தமிழ் திரைப்பட கதாபாத்திரங்களுக்கு சாதிப் பெயர் சூட்டப்படுவது மீண்டும் ஒருமுறை சர்ச்சையாகி இருக்கிறது. ஏற்கெனவே இதுபோன்ற விமர்சனங்களுக்கு ஆளான கமல்ஹாசனே இப்போது மீண்டும் தனது புதிய திரைப்படத்துக்காக சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.

கமல்ஹாசன் நடிப்பில் இயக்குநர் மணிரத்னம் இயக்கும் படத்தின் பெயர் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. தக் லைஃப்(Thug Life) என பெயரிடப்பட்டுள்ள அந்தப் படத்தில், கமல்ஹாசன், ரங்கராய சக்திவேல் நாயக்கர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது திரைப்படக்குழுவினர் வெளியிட்டுள்ள தலைப்பு அறிவிப்பு காணொளி மூலம் தெரியவந்துள்ளது.

படத்தில், நடிகர் கமல்ஹாசன் நாயக்கர் சாதிப் பெயரை பயன்படுத்தி நடிப்பது தற்போது சர்ச்சையாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசனின் தேவர் மகன் படம் தொடங்கி, விருமாண்டி, சமீபத்தில் அறிவிக்கப்பட்டு, பின் கைவிடப்பட்ட சபாஷ் நாயுடு உள்ளிட்ட படங்களிலும் சாதிப் பெயர்கள் பயன்படுத்தப்பட்டதால் சர்ச்சைக்குள்ளாகின.

கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் 35 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் ‘KH234’ படத்தின் அறிவிப்பு வீடியோவில், கமல்ஹாசன், “என் பேரு ரங்கராய சக்திவேல் நாய்க்கே(நாயக்கர்). காயல்பட்னக்காரே. பொறக்கும்போதே என் தலையில எழுதி வச்சுட்டாக, சக்திவேல் நாய்க்கே கிரிமினல், குண்டா, யாகுசானு. யாகுசானா ஜப்பான் மொழியில கேங்ஸ்டர்னு சொன்னாவ.” என்பார்.

பின்னர், சிறிய சண்டைக்காட்சிக்கு பிறகு, “காலம் என்னைய தேடி வந்தது இது மொத முறையில்ல… கடைசிமுறையுமில்ல…”என்பார். அந்த வீடியோவின் முடிவில் மீண்டும், “என் பேரு ரங்கராய சக்திவேல் நாயக்கன், ஞாபகம் வச்சுக்கங்க,” என அந்த அறிவிப்பு வீடியோ முடியும்.

சமீபத்தில் இயக்குநர் மாரிசெல்வராஜின் மாமன்னன் படத்தின் இசை வெளியிட்டு விழாவில், தேவர் மகன் படம் தனக்குள் ஏற்படுத்திய வலி குறித்து பேசியிருப்பார். இந்நிலையில், மீண்டும் ஒரு சாதி பெயர் கொண்ட படத்தில் கமல் நடிக்கிறாரா என பலரும் விமர்சித்துள்ளனர்.

தமிழ் சினிமா சூழலை சீர்கெடுக்கிறதா?

பிபிசியிடம் பேசிய எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம், இந்தப் படம் தமிழ் திரைப்படச் சூழலில் மீண்டும் சாதியை மீட்டுருவாக்கும் என தான் நம்பவில்லை எனக் கூறினார். ஆனால், இது தற்போது ஏற்பட்டுள்ள ஒரு ஆரோக்கியமான சூழலை நிச்சயம் சீர்குலைக்கும் என்றார்.

“தமிழ் திரையுலகில் நீண்ட காலத்திற்கு பிறகு தற்போது தான் சமூகம் சார்ந்த படங்கள் வரத் துவங்கியுள்ளன. இளைய தலைமுறையினர் நல்ல சமூக கருத்துள்ள படங்களை எடுக்கத் தொடங்கியுள்ளனர். ஆனால், இதுபோன்ற படங்களால், அந்தத் தன்மை சீரழிக்கின்றது. குறிப்பாக, மூத்த நடிகர்களாக உள்ள ரஜினி, கமல் போன்றோர் அந்த சூழலை முற்றிலுமாக குலைக்கின்றனர்,” என்றார்.

படத்தில் என்ன இருக்கப் போகிறது என்பதை முன்கூட்டியே சொல்ல முடியாது என்றாலும், கமல் தற்போது உள்ள சமூக பொறுப்புணர்வுடன், இந்தப் பெயரைத் தவிர்த்திருக்க வேண்டும் என்றும் கூறினார் ஸ்டாலின் ராஜாங்கம்.

“சமூகக் கருத்துள்ள படங்களைப் பார்த்து, மக்கள் இத்தனைக் காலம் தாங்கள் செய்தவற்றை நினைத்து ஒரு குற்றவுணர்வுடன் இருக்கிறார்கள். ஆனால், அவற்றை கெடுக்கும் விதமாக இவ்வகைப் படங்கள் அமைகின்றன,”என்றார்.

ஆனால், படம் வெளியாவதற்கு முன்னதாகவே, அவற்றில் என்ன இருக்கிறது எனத் தெரியாமல் அதனைப்பற்றி விவாதிப்பது சரியல்ல என்றார், எழுத்தாளர் சுகா என்கிற சுரேஷ் கண்ணன்.

கதாபாத்திரத்திற்கு சாதிப்பெயர் வைப்பது சரியா?

படத்தில் சாதிப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ள எழுத்தாளர் சுகுணா திவாகர், “இன்னும் எவ்வளவு நாளைக்கு சாதிப்பெயர் வைத்து கமல்ஹாசன் சினிமா விளையாட்டு விளையாடுவாரோ? எனக் கேட்டால் 'இது சமூக எதார்த்தம். நோயைச் சொல்ல முடியாமல் மருத்துவம் பார்க்க முடியாது' என்பார்.

ஒரு தலித்தாக நடித்து அந்த சாதிப்பெயரைப் படத்துக்கு டைட்டிலாக வைக்கவோ, ஒரே ஒரு காட்சியிலாவது அந்தச் சாதியின் பெயரை வெளிப்படையாகச் சொல்லவோ முடியாதபோது இது எதார்த்தம் என்பதே பொய்தான். கமல், மணிரத்னத்தின் சாதி விளையாட்டுக்குக் கண்டனங்கள்!,” என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

படத்தின் பெயரை ஆங்கிலத்தில் வைத்திருந்ததற்கு அதிருப்தியை வெளிப்படுத்திய இயக்குநர் ராசி அழகப்பன், படத்தில் சாதிப் பெயரைக் கொண்ட கதாபாத்திரம் கொண்டிருப்பது ஒரு பிரச்னை இல்லை என்றார்.

“ஒரு வரலாற்றுக் கதை எனும்போது, அதில் வரும் கதாபாத்திரத்திற்கு சாதிப் பெயர் இருப்பது பிரச்னை இல்லை. ஆனால், அந்தப் பெயரை வைத்து என்ன கதை சொல்லப்போகிறார்கள் என்பதில்தான் சிக்கல் இருக்கிறது. இதனை மிகவும் கவனமாகவும், நுட்பமாகவும் கையாள வேண்டும்,” என்றார் ராசி அழகப்பன்.

'சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர் கமல்'

படத்தின் கதாபாத்திரங்களுக்கு சாதிப் பெயர் வைப்பது சரி என வாதாடிய ராசி அழகப்பன், “பழைய படங்களிலும் கூட சாதி பெயர்கள் இருந்திருக்கிறது. வேலு நாயக்கர் என அந்தப்படத்தில் பெயர் வைக்கப்பட்டபோது, அவர் உண்மையில் அந்த குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் அல்ல, மும்பைக்குச் சென்ற ஒரு கேங்ஸ்டரின் பெயர் அவ்வளவே.

இந்தப் படத்தைப் பொறுத்தவரையில், இயக்குனர் மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன், இருவரும் கவனமாக இருப்பார்கள் என நம்புகிறேன்,” என்றார்.

ஆனால், இத்தனை காலம் திரையுலகில் இருந்து, தன்னை சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர் என நிரூபித்த பிறகு இதுபோன்ற விமர்சனங்களை புறந்தள்ள வேண்டும் என்றார் இயக்குநரும், மக்கள் நீதி மையத்தின் ஊடகப்பிரிவு மாநிலச் செயலாளருமான முரளி அப்பாஸ்.

“நீங்கள் வரலாற்றுக் கதைகளைக் கூறும்போது, வரலாற்றில் எப்படி இருந்ததோ அப்படித்தான் அழைக்க முடியும். ஒரு வரலாற்றுக் கதை, அதில் அந்தக் கதாபாத்திரத்தின் பெயர் அப்படி இருந்தால், அதனை அப்படித்தான் வைக்க முடியும். நாம் இன்றும் வ.உ.சிதம்பரம் பிள்ளை போன்ற தலைவர்களை சாதிப் பெயருடன்தான் அழைக்கிறோம். ஏனென்றால், அவர்கள் அப்படித்தான் அழைக்கப்பட்டனர்,” என்றார்.

தொடர்ந்து, பேசிய அவர், தேவர் மகன் படத்திற்கும் சாதிப் பெயர் வைத்ததில் தவறு இல்லை என வாதாடினார்.

“ஒரு சமூகம் படிக்காமல், வன்முறையில் இருக்கிறார்கள் என்றால், அவர்கள் பெயரைச் சொல்லித்தானே அவர்கள் அப்படி இருக்கிறார்கள் எனச் சொல்ல முடியும். அந்தப் பெயரைச் குறிப்பிடாமலேயே அவர்கள்தான் என்று எப்படி சொல்ல முடியும். அந்த சமூகத்தினர் படிக்க வேண்டும் என்ற கருத்தைச் சொல்வதற்காக வந்ததுதான் தேவர் மகன் படம்,” என்றார் முரளி அப்பாஸ்.

படத்தின் அறிவிப்பு வீடியோவிற்கு பிறகு, கதாநாயகனின் பெயரில் உள்ள ஒற்றுமையை வைத்து, படம் நாயகன் படத்தின் நீட்சியாக இருக்குமோ, தேவர் மகன் படத்திற்கும் இதற்கும் தொடர்பு இருக்குமோ என்றெல்லாம் சமூக ஊடகங்களில் விவாதிக்கப்பட்டாலும், படம் வெளியாகும்போதே, படத்தின் உண்மைக்கரு தெரியவரும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)