You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மோனலிசாவின் சிரிப்புக்குப் பின்னால் உள்ள அறிவியல் என்ன தெரியுமா?
உலகிலேயே மிகவும் புகழ்பெற்றதாக மோனலிசா ஓவியம் திகழ்கிறது. இந்த ஓவியம் பல்துறை மேதை லியானர்டோ டா வின்சி-யால் வரையப்பட்டது. ஒரு கலைஞர் என்பதைத் தாண்டி லியானர்டோ பல துறைகளில் ஞானியாகத் திகழ்ந்தார்.
ஓவியத்தைக் கடந்து பல துறைகள் குறித்து அறிந்துகொள்ள வேண்டும் என்கிற அறிவுப்பசி கொண்டவர் அவர். கணிதவியல், ஒளியியல், உடற்கூறியல் முக்கியமாக, உடற்கூராய்வில் அவர் நாட்டம் கொண்டிருந்தார்.
அவர் கலையையும் அறிவியலையும் பிரித்துப் பார்க்கவில்லை. பிணவறையில் என்ன பார்க்கிறாரோ, அவை அவருடைய ஓவியங்களில் பிரதிபலித்தன. லியானர்டோவின் ஓவியங்களை பகுப்பாய்வு செய்வது மகிழ்ச்சிகரமான ஒன்று. ஏனெனில் அவருடைய அசாதாரண திறமை அந்த ஆய்வில்தான் ஜொலிக்கிறது.
ஆனால், உடற்கூராய்வு மீதான காதல்தான் மிக பிரபலமான மோனலிசா முகத்தை வரைய அவருக்கு உதவியது என உங்களுக்குத் தெரியவந்தால், அந்த ஓவியத்தை நீங்கள் பார்க்கும் விதம் முன்பு போன்று இருக்காது. எல்லாவற்றிலும் அவர் தன் அறிவை பயன்படுத்தியிருக்கிறார் என்பது அவருடைய ஓவியங்கள், குறிப்புகளில் இருந்தும் தெரியவருகிறது.
மோனலிசாவின் கண்கள்
“ஒளியியலில் இருந்து ஓவியத்தைக் கற்றுக்கொண்டார்” என சொல்வதன் அர்த்தம் என்ன? ஒரு அறையில் நீங்கள் எங்கு சென்றாலும் மோனலிசாவின் கண்கள் உங்களையே சுற்றிவருவதை போல் உணர்ந்திருக்கிறீர்கள் அல்லவா? அதையே ஒரு உதாரணமாக எடுத்துக்கொள்வோம்.
கண்ணில் உள்ள கருவிழி, யாரை பார்க்கிறோமோ அதனை நேராக பார்ப்பதாலும் எதிர்திசையில் இருப்பவரின் கருவிழி அப்படி நேராக இல்லாமல் சமமற்ற விதத்திலும் இருக்கும். இதுதான் மோனலிசாவின் மாயைக்குக் காரணம். இது ‘மோனலிசா விளைவு’ என்று கூறப்படும் அளவுக்கு மிக மிக பிரபலமாக உள்ளது. ஆனால், இது மாயை அல்ல. முழுக்க முழுக்க ஒளியியல் அடிப்படையிலானது.
மோனலிசாவின் புகழ்பெற்ற சிரிப்பை எடுத்துக்கொள்ளுங்கள். மோனலிசாவை நீங்கள் நேராக நோக்கினால், அவர் சிரிக்காதது போன்றே இருக்கும். இப்போது, அவரை நீங்கள் ஒருபுறத்திலிருந்து மேலோட்டமாக பார்த்தால், சிரிப்பது போன்று இருக்கும்.
ஓவியங்களில் ‘ஸ்ஃபுமாட்டோ’ (Sfumato) எனப்படும் தெளிவற்ற புறக்கோடுகளை மோனலிசாவின் உதடுகளின் மூலையில் பயன்படுத்தியிருப்பார். ஒளியியலை நன்கு அறிந்த லியானர்டோ, நாம் ஒன்றை நேராக பார்க்கும்போதுதான் நம் பார்வை கூரானதாக இருக்கும் என்பதை உணர்ந்திருந்தார்.
மோனலிசா சிரிக்கிறாரா?
நமது கண்கள் ஏமாற்றப்படலாம். மிக நேர்த்தியாக வரையப்பட்ட ஓவியத்தில், மோனலிசாவின் உதட்டின் மூலையில் கீழ்நோக்கிய கோடுகளை வரைந்திருப்பதன் மூலம் இந்த விளைவை ஏற்படுத்தியுள்ளார். மோனலிசா சிரிக்கவில்லை.
ஓவியத்தில் உள்ளவரின் பார்வை அழுத்தமாக வரையப்பட்டு, உதடுகள் மங்கலாகும்போது உதட்டின் மூலைகள் மேல்நோக்கி எழுவது போன்று தோன்றும். இதனால், உதட்டின் வடிவம் மாறும். அதனால்தான் அவர் சிரிப்பது போன்று தோன்றும். இது கிட்டத்தட்ட கண்ணுக்கு புலப்படாது. இதனால்தான் அவரது உதடு அசைந்துகொண்டே சிரிப்பது போன்ற மாயத்தோற்றம் ஏற்படும்.
முகம் அசைவது எதனால்?
கலை விமர்சகரும் வரலாற்று ஆய்வாளருமான எஸ்தெல் லோவட் கூறுகையில், “மோனலிசாவின் முகத்தில் அடர்த்தியான புறக்கோடுகள் இருக்காது, அனைத்துமே மங்கலாகத்தான் இருக்கும். இதனால் அவரது முகம் அசைவது போன்ற உணர்வை ஏற்படுத்தும்.
மேலும், உங்களை நோக்கியது போன்று அவர் வரையப்படவில்லை. வேறு திசையில் இருப்பதால் அவர் அசைவது போன்று தோன்றும். மேலும், அவர் முப்பரிணாமத்தில் இருப்பதாகவும் தோன்றும்.
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் கலை வரலாற்று துறையில் எமெரிட்டஸ் ஆய்வு பேராசிரியரான மார்ட்டின் கெம்ப் கூறுகையில், “லியானர்டோ என்ன செய்கிறார் என மக்கள் உணரும்போது அவர் மகிழ்ச்சியடைந்திருப்பார் என நினைக்கிறேன். உடல் பக்கவாட்டு திசையிலும் மோனலிசாவின் பார்வை நேராகவும் இருக்கும் இந்த ஓவியம் மிக தைரியமானது என்று நினைக்கிறேன்.
ஆண்களின் கண்களை நோக்குவது கண்ணியமானது அல்ல என்ற கருத்து இருப்பதால், பெண்களின் ஓவியங்கள் பல, ஆண்களின் கண்களை நேரடியாக நோக்குவது போன்று இருக்காது. இதனால், அந்த ஓவியங்களில் கண்கள் கீழ்நோக்கி இருக்கும். அந்த வழக்கத்தை லியானர்டோ உடைத்துள்ளார்” என்றார்.
பிபிசி தொகுப்பாளர் ஆண்ட்ரூ மார் மோனலிசா ஓவியம் குறித்து 'பிபிசி ரீல்ஸ்'-இல் பகிர்ந்துகொண்டவை.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)