இயக்குநர்கள் - தயாரிப்பாளர்கள் இடையே முரண்பாடு ஏற்படுவது ஏன்?

தமிழ் திரைப்பட இயக்குநர் அமீர் குறித்து தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கூறிய கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்க, நேற்று(புதன்கிழமை) தனது கருத்துகளுக்கு வருத்தம் தெரிவித்தார் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா.

இருப்பினும், அந்த அறிக்கையில் உள்ளவற்றைச் சுட்டிக்காட்டி, போலியான வருத்தத்திற்கு உண்மையைப் பலி கொடுக்க முடியாது என இயக்குனரும் நடிகருமான சசிகுமார், இயக்குநர் அமீருக்கு ஆதரவாக காட்டமான ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

ஒரு படத்தின் இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் இடையே இருந்த முரண்பாடு, 17 ஆண்டுகளுக்குப் பிறகு பொது வெளிக்கு வந்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளும், எதிர்குற்றச்சாட்டுகளும், தமிழ் திரையுலகத்தின் வணிகத்திற்கும், படைப்பிற்கும் இடையே உள்ள முரணை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.

தமிழ்திரையுலக இயக்குநர்கள் அதிகம் செலவு செய்கிறார்களா?, தயாரிப்பாளர்கள் அதிக லாபம் எதிர்பார்க்கிறார்களா?, படத்தின் பட்ஜெட்டிற்கும் வெற்றிக்கும் தொடர்பு இருக்கிறதா?,உள்ளிட்ட பல கேள்விகள் எழுந்துள்ளதன

என்ன நடந்தது?

2007 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இயக்குநர் அமீர் இயக்கத்தில், ஞானவேல் ராஜா தயாரிப்பில் வெளியான படம் பருத்திவீரன். நடிகர் சூர்யாவின் தம்பியான கார்த்திக் இந்தப் படத்தில் தான் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். பருத்திவீரன், வழக்கமான ‘மதுரை டெம்ப்ளேட்’ படங்களிலிருந்து மாறுபட்ட படமாக இருந்ததாக அப்போது கருதப்பட்டது.

இந்தநிலையில், சமீபத்தில் யூட்டியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த தயாரிப்பாளர் ஞானவேல்ராஜ், பருத்திவீரன் படத்தின் கணக்கு விஷயத்தில் அமீர் தன்னை ஏமாற்றிவிட்டதாகக் குற்றம்சாட்டியிருந்தார்.

அந்தப்பேட்டியில், “படத்திற்கு சொன்ன கணக்கைவிட அதிகமாக செலவு செய்து பணத்தை திருடிவிட்டார். பணத்தை உழைத்து சம்பாதிக்காமல் திருடி சம்பாதிக்கிறார்,”எனக் குற்றச்சாட்டியிருந்தார்.

இதற்கு பதிலளித்த இயக்குநர் அமீர், ஞானவேல்ராஜா சொன்னதில் கொஞ்சம் கூட உண்மையில்லை என்றார்.

“அவர் என் மீது சுமத்திய குற்றச்சாட்டில் கொஞ்சம் கூட உண்மை இல்லை. என்னுடைய நற்பெயரைக் கெடுக்கும் வகையில் அவர் என்னைப்பற்றி பேசி இருக்கிறார். என்னைப்பற்றி அவர் பேசியதை நான் வண்மையாக கண்டிக்கிறேன்,” என்றார் அமீர்.

இவ்விஷயம் தமிழ் திரையுலகில் தீயாகப் பரவ, ஞானவேல் ராஜாவின் பேச்சை, இயக்குர் பாரதிராஜா, பொன்வண்ணன், கரு.பழனியப்பன், சசிக்குமார், சமுத்திரக்கனி, கவிஞர் சினேகன் உட்பட பலர் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். மேலும், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, இதற்காக பொது வெளியில் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தனர்.

இந்நிலையில் தான், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, புதன்கிழமை ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டு, வருத்தத்தை தெரிவித்தார். அந்த அறிக்கையில், “அவரது(அமீர்) சமீபத்திய பேட்டிகளில் என் மீது அவர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது. அதற்கு பதில் அளிக்கும்போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தி இருந்தால், அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்,” எனக் கூறியிருந்தார்.

தற்போது, இவ்விவகாரம் இரண்டு தரப்பினருக்கு இடையிலான பிரச்னை என்பதைத் தாண்டி, படைப்பாளிகளுக்கும், வணிகத்தினருக்குமான பிரச்னையாகப் பார்க்கப்படுகிறது.

படத்தின் செலவு அதிகமானால் யார் பொறுப்பு?

ஜல்லிக்கட்டு மீதான தடைக்கு எதிரான மக்கள் போராட்டத்தை மையமாகக் கொண்டு மெரினா புரட்சி என்ற படத்தை இயக்கிய இயக்குநர் எம்.எஸ்.ராஜ், படைப்பாளிகளுக்கும், இயக்குநர்களுக்கும் எப்போதும் ஒரு சட்டரீதியான ஒப்பந்தம் இருக்கும் என்கிறார்.

“வழக்கமாக, படத்தின் கதை முடிவு செய்யப்பட்ட பின்னர் இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் இடையே ஒரு சட்டப்பூர்வமான ஒப்பந்தம் போடப்படும். அந்த ஒப்பந்தத்தில், எத்தனை நாட்களுக்கும் படத்தை முடிக்க வேண்டும், இயக்குநரின் சம்பளம், அது எப்போது வழங்கப்படும், எத்தனை தவனைகளாக வழங்கப்படும் உள்ளிட்ட அனைத்தும் அதில் இருக்கும் அப்படித்தான் தற்போது எந்த ஒரு படமாக இருந்தாலும் தொடங்கும்,” என்கிறார் ராஜ்.

ஆனால், இவை அனைத்தும் ஒப்பந்தத்தில் உள்ளதுபோல அமல்படுத்துவதற்காக நடைமுறை சிக்கல்கள் அனைத்தும் இயக்குநரின் பொறுப்பாகவே கருதப்படும் என்கிறார் அவர்.

“இதில், ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட நாட்களுக்குள் படத்தை முடிக்க முடியாமல் போவதற்கும், குறிப்பிட்ட தொகைக்குள் செலவைச் சுருக்க முடியாமல் போவதற்கும் பல்வேறு காரணிகள் உள்ளன. ஆனால், அந்த காரணிகள், ஹீரோவாக இருந்தாலும் சரி, அல்லது ஒரு சாதாரண லைட் மேனாக இருந்தாலும் சரி, அந்த பொறுப்பு இயக்குநர் மேல் தான் இறக்கி வைக்கப்படும்,” என்றார்.

பருத்திவீரன் படத்தை உதாரணமாகக் கொண்டு விளக்கினார் ராஜ். “படத்தில் புதுமுக நாயகரை அறிமுகப்படுத்தும்போது, அவர்களுக்கு நடிக்கச் சொல்லித்தர வேண்டியிருக்கும். அதனால், ஒரு நாள் முழுக்க பயிற்சியளித்து, மறுநாள் தான் படப்பிடிப்புக்குச் செல்ல வேண்டிய சூழல் ஏற்படலாம்.

ஆனால், இவை அனைத்தையும் உடனுக்குடன் தயாரிப்பாளரிடம் பேசி, அதற்கான மாற்றுவழி அல்லது தீர்வைக்காண வேண்டும். இல்லையென்றால், அது இயக்குநரின் சம்பளத்தில் தொடங்கி, அடுத்தடுத்த படங்கள் வரை பாதிப்புகளை ஏற்படுத்தலாம்,” என்றார்.

தயாரிப்பாளர்கள் கறாரானவர்களா?

தமிழ்திரையுலகைப் பொறுத்தவரையில், படத்தின் செலவு சார்ந்து தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநர்களுக்கும் முரண்பாடுகள் இருக்குமே தவிர, அது பெரியளவில் வெடித்ததில்லை என்றார்.

“ஒரு தயாரிப்பாளருக்கு, படத்தின் கதையைப் பொறுத்து, படத்திற்கு இயக்குநர் கூறும் பட்ஜெட்டைவிட எவ்வளவு அதிகம் ஆகும் என்பது நன்றாகவே தெரியும். அந்த கூடுதல் தொகையையும் சேர்த்து, அதற்கு மேலும் லாபம் எடுக்க முடியும் என்றால் தான் பெரும்பாலும் படத்தை தயாரிக்கவே ஒப்புக்கொள்வார்கள். ஆனால், சில நேரங்களில், தயாரிப்பாளர்கள் கடன்பெற்று படத்தை தயாரிக்கும்போது தான், அவர்கள் அந்த கடனுக்காக வட்டியால் நெருக்கடிக்குள்ளாகும்போது, அந்த கோபத்தை, இயலாமையை இயக்குநர்கள் மீது காண்பிக்கிறார்கள்,” என்றார்.

ஆனால், முன்பு இருந்ததைவிட, தற்போது தமிழ்திரையுலகம் எவ்வளவோ மாறிவிட்டதாகவும் கூறுகிறார் ராஜன்.

“முன்பெல்லாம் பெரும்பாலும் படங்கள் குறித்த நேரத்தில் முடிக்கமாட்டார்கள், ஒரு சில ஹிட் படங்களுக்குப் பிறகு நடிகர்கள் குறித்த நேரத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வரமாட்டார்கள். ஆனால், இப்போது நிலைமை அப்படி இல்லை.

அதனால், இப்போது பெருமளவு, இயக்குநர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இடையே ஒரு சுமூகமான சூழல் உள்ளது. முன்பு ஹீரோக்களை நம்பியிருந்த தயாரிப்பாளர்கள், தற்போது இயக்குநர்களை நம்பி படம் எடுக்கிறார்கள,” என்றார் ராஜன்.

படைப்பிற்கும் வணிகத்திற்கும் இடையில் இருக்கும் முரண்

ஆனால், தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும் இடையே இருக்கும் இந்த முரண், பல காலமாக இருப்பதாகக் கூறுகிறார் எழுத்தாளர் சுகுணா திவாகர்.

“தயாரிப்பாளர் படத்தை ஒரு வணிகமாகத்தான் பார்ப்பார்கள். அவர்களுக்கு படத்தின் செலவைக் குறைத்து, அவர்கள் முதலீடு செய்யும் தொகையை விட ஒரு மடங்கு, இரண்டு மடங்கு அதிகம் சம்பாதிக்க வேண்டும் என நினைப்பார்கள் அது இயல்புதான். அதேவேளையில், ஒரு சில படங்களை வெற்றிகரமாக இயக்கிய இயக்குநருக்கு, தன்னுடைய படைப்பு தான் நினைத்ததைப்போல, விரும்புவதைப்போல வர வேண்டும் என்பதற்காக மெனக்கெடுவார்.

அதில், அவர் நேரத்தையும், பணச் செலவையும் பார்க்கமாட்டார். ஏனெனில், அவருக்கு அவருடைய படைப்பு முக்கியம். அதேவேளையில், தயாரிப்பாளருக்கு வணிகம் தான் முக்கியம். இப்படி, வணிகத்திற்கும், படைப்பிற்கும் இடையில் பல காலமாக முரண்கள் இருந்து வந்துள்ளன,” என்றார் அவர்.

படத்தின் பட்ஜெட்டிற்கும் வெற்றிக்கும் தொடர்பு உண்டா?

இதுகுறித்து பேசிய தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம், படத்தின் மொத்த செலவிற்கும் அதன் வெற்றிக்கும் தொடர்பு இல்லை என்றார்.

"படம் எவ்வளவு பெரிய பட்ஜெட்டில் எடுத்திருந்தாலும், அவர்களுக்கு பிடித்தால் நிச்சயம் வந்து பார்ப்பார்கள். ஆனால், படத்தின் பட்ஜெட்டைப் பொறுத்து திரையரங்குகளில் படம் ஓடுவது இல்லை.

சமகாலத்திலேயே அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்கள் திரையரங்கில் சரியாக ஓடாமல், சின்ன பட்ஜெட் படங்கள் இரண்டு வாரங்களுக்கு மேல் ஓடிய நிகழ்வுகளும் நடந்துள்ளன,"என்றார் அவர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)