உலகக் கோப்பை: இந்தியாவின் தோல்வியைக் கொண்டாடியதாகக் கூறி காஷ்மீர் மாணவர்கள் மீது யுஏபிஏ வழக்கு - என்ன நடந்தது?

    • எழுதியவர், மஜீத் ஜஹாங்கீர்
    • பதவி, கந்தர்பாலில் இருந்து, பிபிசி ஹிந்திக்காக

உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியாவின் தோல்வியையும், ஆஸ்திரேலியாவின் வெற்றியையும் கொண்டாடியதாகக் கூறி ஏழு காஷ்மீர் மாணவர்கள் மீது சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம் (யு.ஏ.பி.ஏ -UAPA) கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக காஷ்மீரில் இத்பெரும் விவாதம் வெடித்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் வெற்றியைக் கொண்டாடியதாகக் கூறப்படும் இந்த ஏழு மாணவர்களும் நவம்பர் 20-ஆம் தேதி கைது செய்யப்பட்டு தற்போது போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்களின் குடும்பத்தினர் அவர்களை நிரபராதிகள் என்று தெரிவித்துள்ளனர்.

மாணவர்களின் குடும்பத்தார் என்ன சொல்கிறார்கள்?

இந்த மாணவர்கள் அனைவரும் கந்தர்பாலில் உள்ள விவசாயப் பல்கலைக்கழகத்தில் படித்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட மாணவர்களில் ஒருவரின் சகோதரர் பிபிசியிடம் பேசுகையில், “இந்தச் சம்பவம் நடந்தபோது எனது சகோதரர் விடுதியில் உள்ள அவரது அறையில் இருந்தார். சம்பவத்திற்கு முன் அனைத்து மாணவர்களும் அவரவர் அறைகளில் இருந்ததாக என் சகோதரர் என்னிடம் கூறினார். ஒருவர் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தார், ஒருவர் படித்துக் கொண்டிருந்தார், ஒருவர் வேறு வேலையில் ஈடுபட்டிருந்தார். இந்த சம்பவம் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று அண்ணன் என்னிடம் கூறினார்,” என்றார்.

மற்றொரு மாணவரின் தந்தை பிபிசியிடம் பேசுகையில், “இந்தச் சம்பவம் எப்படி நடந்தது என்று என் மகனுக்குத் தெரியாது. அவர் ஏதேனும் தவறு செய்திருந்தாலும், அவரை மன்னித்து அவரது எதிர்காலம் காப்பாற்றப்பட வேண்டும்,” என்றார்.

கைது செய்யப்பட்ட மாணவர்களின் குடும்பத்தினர் அனைவரும் அச்சமும் கவலையும் அடைந்துள்ளனர். அவர்கள் ஊடகங்களுடன் பேசுவதைத் தவிர்த்துவருவதுடன், தங்களது அடையாளத்தை வெளியிட விரும்பவில்லை.

மற்றொரு மாணவரின் குடும்ப உறுப்பினர் பிபிசியிடம் பேசுகையில், "எங்கள் மகன்கள் தவறு செய்திருந்தாலும், யு.ஏ.பி.ஏ போன்ற கடுமையான சட்டம் அவர்களின் வாழ்க்கையையே பாழடித்துவிடும்," என்று கவலையுடன் கூறினார்.

கைது செய்யப்பட்ட மாணவர்களின் வழக்கறிஞர் ஷபிக் அகமது பட் பிபிசியிடம் பேசும் போது, “நீதிமன்றம் இப்போது காவல்துறையிடம் அறிக்கை கேட்டுள்ளது. காவல்துறை அறிக்கையின் நகல் எங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை," என்றார்.

சம்பவத்தன்று என்ன நடந்தது?

கைது செய்யப்பட்ட மாணவர்கள், உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியின் போது இந்திய அணியை ஆதரித்த காஷ்மீரைச் சேராத மாணவர்களுடன் மோதலில் ஈடுபட்டதாகவும், ஆஸ்திரேலியாவின் வெற்றிக்குப் பிறகு சலசலப்பை உருவாக்கி கொண்டாடியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த மாணவர்கள் கந்தர்பாலில் உள்ள ஷேர்-இ-காஷ்மீர் வேளாண் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் படித்துவருகின்றனர்.

இந்த ஏழு மாணவர்களையும் போலீசார் நவம்பர் 20-ஆம் தேதி கைது செய்தனர். அவர்கள் மீது யு.ஏ.பி.ஏ.வின் பிரிவு 13-இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

காஷ்மீர் மண்டலத்தின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் விதி குமார் பிர்டி பிபிசியிடம் பேசுகையில், “இறுதிப் போட்டிக்குப் பிறகு கோஷங்கள் எழுப்பப்பட்டன. அது குறித்து இந்த ஏழு பேருக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர் ஒருவரே புகார் அளித்திருந்தார். அவர்கள் தன்னை மிரட்டியதாகவும் அவர் அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்," என்றார்.

அந்த மாணவர் போலீசில் அளித்த புகாரில், “இறுதிப் போட்டியின் போது இந்தியாவுக்கு ஆதரவாக இருந்ததற்காக, அந்த மாணவர்கள் என்னை எதிர்த்தனர். அப்போது என்னை அமைதியாக இருக்கும்படி உத்தரவிட்டதுடன், கொலை மிரட்டலும் விடுத்தனர். பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்ற முழக்கங்களை அவர்கள் திரும்பத் திரும்ப எழுப்பினர், மேலும் அவர்களது கோஷம் காஷ்மீரைச் சேராத அல்லாத மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது,” எனத்தெரிவித்துள்ளார்.

சக மாணவர்கள் சொல்வது என்ன?

மாணவர்கள் மீது யு.ஏ.பி.ஏ பிரிவில் குற்றம் சுமத்தப்பட்டதற்கு எதிரான விமர்சனங்கள் எழுந்த பின், கந்தர்பால் காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், “யு.ஏ.பி.ஏ.வின் பிரிவு 13 பிரிவினைவாத சித்தாந்தத்தை தூண்டுவதற்கும், வாதிடுவதற்கும் மற்றும் ஊக்குவிப்பதற்கும் எதிரானதாகும். இந்தப் பிரிவு பயங்கரவாதத் திட்டமிடல் பற்றியது அல்ல. ஒப்பீட்டளவில் சொல்லவேண்டுமானால் சாதாரண பிரிவின் கீழ் தான் மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது," என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இந்தியாவை ஆதரிப்பவர்களை பயமுறுத்துபவர்களுக்கு எதிராக இந்த பிரிவு பயன்படுத்தப்படுகிறது,” என்று அந்த அறிக்கையில் போலீசார் தெரிவித்துள்ளனர்.

கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள ஷுஹாமா பகுதியில் இருக்கும் வேளாண் பல்கலைக்கழகத்தை நாங்கள் சென்றடைந்தபோது, பெரும்பாலான மாணவர்கள் இது குறித்து பேசுவதைத் தவிர்த்தனர்.

இந்த விவசாயப் பல்கலைக்கழகத்தில் தற்போது காஷ்மீரைச் சேராத 50 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

பல்கலைக்கழகத்தில் படித்து வரும் பெயர் வெளியிட விரும்பாத மூத்த காஷ்மீரி மாணவர் ஒருவர், “இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான போட்டி நடக்கும்போது, ஒரு மாணவர் ஆஸ்திரேலியாவின் வெற்றியைக் கொண்டாடினார். மற்றொருவர் இந்தியாவின் தோல்வியைக் குறித்து வருத்தப்பட்டார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் பதற்றம் அதிகரித்திருக்கலாம்,” என்றார்.

அந்த மாணவர் மேலும் பேசுகையில், “கிரிக்கட் போட்டியினால் ஒருவரின் விசுவாசத்தை அளவிட முடியாது. மாணவர்கள் ஏதேனும் தவறு செய்திருந்தாலும், யு.ஏ.பி.ஏ போன்ற கடுமையான சட்டங்களை அவர்கள் மீது கண்மூடித்தனமாக திணிக்க வேண்டும் என்று எதுவும் இல்லை. சம்பவத்தின் போது நான் அங்கு இல்லை. ஒரு விளையாட்டுப் போட்டி மாணவர்களின் தலைவிதியை தீர்மானிக்க முடியாது. இங்கு காஷ்மீரி மற்றும் காஷ்மீரி அல்லாத மாணவர்கள் அனைவரும் ஒன்றாக வாழ்கின்றனர். நாங்கள் எல்லா பண்டிகைகளையும் ஒன்றாகக் கொண்டாடுகிறோம்,” என்றார்.

போட்டி முடிந்ததும் விடுதியில் இருந்த சில மாணவர்கள் தங்கள் அறைகளை விட்டு வெளியே வந்ததாகவும் அப்போது சில சத்தம் கேட்டதாகவும் பெயர் தெரிவிக்க விரும்பாத மற்றொரு மாணவர் கூறினார். அதன் பிறகு இந்த விவகாரம் எங்கு சென்றது என்பது தெரியவில்லை என்றார் அவர்.

பல்கலைக்கழக அதிகாரி என்ன சொன்னார்?

பெயர் வெளியிட விரும்பாத பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் பேசியபோது, “இந்த விவகாரம் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் நாளில் நடந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. போட்டி முடிந்ததும், காஷ்மீரைச் சேர்ந்த மற்றும் காஷ்மீரைச் சேராத மாணவர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டது. காஷ்மீரி மாணவர்கள் சிலர் கூச்சலிட்டு சத்தத்தையும் சலசலப்பையும் உருவாக்கினர். இந்தச் சம்பவத்தின் வீடியோ பதிவு செய்யப்பட்டு காவல்துறைக்கு அனுப்பப்பட்டது. அதன் பிறகு போலீசார் நடவடிக்கை எடுத்தனர்,” என்றார்.

இந்த முழு விஷயம் குறித்தும் பல்கலைக்கழகத்தின் டீன், பேராசிரியர் முகமது துஃபைல் பாண்டேவிடம் பேச பிபிசி முயன்றது. ஆனால் அவர் பேச மறுத்து விட்டார்.

காஷ்மீரில் யுஏபிஏ தவறாகப் பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு

கடந்த நான்கு ஆண்டுகளில் காஷ்மீரில் நூற்றுக்கணக்கானோர் யு.ஏ.பி.ஏ.வின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யு.ஏ.பி.ஏ அதாவது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ், குற்றப்பத்திரிகையை 90 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க முடியும். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான வரம்பை நீதிமன்றம் 180 நாட்களுக்கு நீட்டிக்க முடியும்.

தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கச் சிறப்பு விதிகளின் கீழ் யு.ஏ.பி.ஏ சட்டம் உருவாக்கப்பட்டது.

யு.ஏ.பி.ஏ-வில் இதுபோன்ற பல பிரிவுகள் உள்ளன. அதில் குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் குற்றமற்றவர் என்று நிரூபிக்கும் வரை ஜாமீன் பெற முடியாது.

ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான ரியாஸ் கவார் இது குறித்துப் பேசியபோது, ​​“இந்தச் சட்டம் இயற்றப்பட்டதிலிருந்து, காஷ்மீர் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இது தவறாகப் பயன்படுத்தப்பட்டுவருகிறது. இந்தச் சட்டத்தில் உள்ள மிகப்பெரிய பிரச்சினை என்னவென்றால், குற்றம் சாட்டப்பட்டவர் தான் தன்னை நிரபராதி என்று நிரூபிக்க வேண்டும் என்பது தான். அது பெரும்பாலும் சாத்தியமில்லை,” என்றார்.

அரசியல் தலைவர்கள் என்ன சொல்கின்றனர்?

இந்தச் சம்பவத்தை காஷ்மீரின் பல அரசியல் கட்சிகளும் கடுமையாக விமர்சித்துள்ளன.

மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்) தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான யூசுப் தாரிகாமி ஆகியோர் கிரிக்கெட்டில் ஒரு அணியின் வெற்றியைக் கொண்டாடியதற்காக யு.ஏ.பி.ஏ.வின் கீழ் மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது மிகவும் அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்று சமூக வலைதளமான ‘X'-இல் பதிவிட்டுள்ளனர்.

காஷ்மீரில் கிரிக்கெட் தொடர்பான இதுபோன்ற வழக்குகள் அல்லது மோதல் சூழ்நிலைகள் வெளிவருவது இது முதல் முறையல்ல.

கடந்த காலங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து அவை வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

2016-ஆம் ஆண்டிலும், வெஸ்ட் இண்டீஸ் இந்தியாவை வீழ்த்தியபோது, ​​ஸ்ரீநகரில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் காஷ்மீரைச் சேர்ந்த மற்றும் காஷ்மீரைச் சேராத மாணவர்களுக்கு இடையே மோதல் வெடித்தது. அப்போது காஷ்மீர் மாணவர்கள் இந்தியாவின் தோல்வியை கொண்டாடியதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதனையடுத்து நிலைமையைக் கட்டுப்படுத்த போலீஸார் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசவேண்டிய தேவை ஏற்பட்டது. அப்போது காஷ்மீர் அல்லாத மாணவர்கள் அந்தக் கல்வி நிறுவனத்தை காஷ்மீருக்கு வெளியே இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

2021-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடியதாக ஸ்ரீநகர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் மீது குற்றச் சாட்டு எழுந்தது. பின்னர் அவர்கள் மீது யு.ஏ.பி.ஏ.வின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்தியா-பாகிஸ்தான் இடையே போட்டி நடக்கும்போதெல்லாம் காஷ்மீரில் பதற்றமான சூழல் உருவாவது வழக்கமாக இருந்து வருகிறது.

ஒவ்வொரு முறையும் சாலைகளில் மக்கள் கூடாமல் இருக்க அரசு நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும்.

யுஏபிஏ (UAPA) என்றால் என்ன?

இந்தியாவில் சட்டவிரோத செயல்களை தடுக்க 1967-இல் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது.

இந்தச் சட்டத்தின்படி, ஒரு நபர் அல்லது அமைப்பு 'பயங்கரவாதத்தில்' ஈடுபட்டுள்ளதாக அரசாங்கம் 'உறுதியாக' நம்பினால், அந்த நபரை 'பயங்கரவாதி' என்று அறிவிக்க முடியும். அதாவது, எந்த விசாரணையும் இன்றி ஒருவரை பயங்கரவாதியாக அறிவிக்க முடியும்.

யு.ஏ.பி.ஏ.வின் ஆறாவது திருத்தத்தின் சில விதிகள் மீது உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்த வழக்கறிஞர் சஜல் அவஸ்தி , "யு.ஏ.பி.ஏ.வின் 35 மற்றும் 36 பிரிவுகளின் கீழ், எந்தவொரு வழிகாட்டுதலும் இல்லாமல், எந்த ஒரு நபரையும் அரசாங்கம் கைது செய்யலாம். பரிந்துரைக்கப்பட்ட நடைமுறையின் கீழ் பயங்கரவாதியாக அறிவிக்கப்படலாம்," என்றிருப்பதைச் சுட்டிக்காட்டினார்.

யு.ஏ.பி.ஏ-வின் 15வது பிரிவின்படி, இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, பொருளாதார பாதுகாப்பு அல்லது இறையாண்மைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அல்லது ஆபத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன், இந்தியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ பொதுமக்கள் அல்லது பொதுமக்களின் எந்தப் பிரிவினரிடையேயும் பயங்கரவாதத்தை பரப்புவது அல்லது பயங்கரவாதத்தை பரப்ப முயல்வது, தீங்கு விளைவிக்கும் நோக்கில் செய்யப்படும் செயல் ஆகியவை 'பயங்கரவாதச் செயல்' எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வரையறையில் வெடிகுண்டு வெடிப்பது முதல் போலி கரன்சி நோட்டுகளை புழக்கத்தில் விடுவது வரை அனைத்தும் அடங்கும்.

பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதத் தடுப்பு பற்றிய தெளிவான வரையறையை வழங்குவதற்கு பதிலாக, யு.ஏ.பி.ஏ.வின் பிரிவு 15-இல் கொடுக்கப்பட்டுள்ள 'பயங்கரவாதச் செயல்' என்பதன் வரையறையின்படியே அவற்றின் அர்த்தங்கள் இருக்கும் என்று மட்டுமே கூறுகிறது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)