ராஜஸ்தான் தேர்தல் முடிவுகள்: பா.ஜா.க முன்னிலை, காங்கிரசிடமிருந்து ஆட்சியை கைப்பற்றுகிறது

பா.ஜ.க 115 இடங்களிலும், காங்கிரஸ் 70 இடங்களிலும், பிற கட்சிகள் 14 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.

ராஜஸ்தானில் ஆட்சியமைக்க 100 இடங்கள் தேவை என்ற நிலையில், தற்போது, பாஜக 115 இடத்தில் முன்னிலை வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக 58% தொகுதிகளிலும், காங்கிரஸ் 35% தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.

ராஜஸ்தான் மாநிலச் சட்டமன்றத்தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை சரியாக காலை 8 மணிக்குத் தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே காங்கிரஸை விட அதிகமான தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.

முன்னாள் முதலமைச்சரும், ஜல்ரபதன் தொகுதியின் பா.ஜ.க வேட்பாளருமான வசுந்தரா ராஜே வெற்றி பெற்றிருக்கிறார்.

சர்தார்புரா தொகுதியில் முதலமைச்சர் அஷோக் கெலாட், டோங்க் தொகுதியில் சச்சின் பைலட் ஆகியோர் முன்னிலை வகித்து வருகின்றனர்.

வெற்றிக்குப்பின் வசுந்தரா ராஜே என்ன சொன்னார்?

வெற்றிக்குப்பின் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்திய வசுந்தரா ராஜே, இது பிரதமர் மோதியின் ‘அனைவருக்குமான வளர்ச்சி’ திட்டத்திற்குக் கிடைத்த வெற்றி என்றார்.

மேலும் பேசிய அவர், ராஜஸ்தான் மக்கள் காங்கிரஸ் அரசின் மோசமான நிர்வாகத்தையும் நிராகரித்துள்ளனர் என்றார்.

ராஜே ஜல்ரபதன் தொகுதியில் 53,193 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.

ராஜஸ்தான் தேர்தல் களம்

ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் 25-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. ராஜஸ்தானில் மொத்தம் 199 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மைக்கு 100 இடங்கள் பெறவேண்டும்.

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ், பாஜக இரு கட்சிகள் மட்டுமே மாறிமாறி ஆட்சியில் இருந்து வருகிறது. தற்போது அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த தேர்தலில் மொத்தமுள்ள 199 இடங்களில் காங்கிரஸ் 100 இடங்களிலும், பாஜக 73 இடங்களிலும் வெற்றி பெற்றன.

இந்த தேர்தலிலும் காங்கிரஸ் - பாஜக இரு கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி நிலவியது.

ராஜஸ்தானில் காங்கிரஸ் மீதான அதிருப்தி நிலவுவதாக தேர்தல் பிரசாரங்களில் பாஜக பிரதானமாக முன்வைத்தது.

போட்டி எப்படி இருந்தது?

தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகள் பாஜக பெரும்பான்மை பெறும் என கணித்துள்ளன.

அதன்படி, டிவி 9 பாரத்வர்ஷ் – போல்ஸ்ட்ராட் நடத்தியக் கணிப்பின் படி பா.ஜ.க 100 முதல் 110 இடங்களும், காங்கிரஸ் 90 முதல் 100 இடங்களும் பெறும் வாய்ப்புள்ளது.

ஜன் கி பாத் நடத்திய கணிப்பு, பா.ஜ.க 100 முதல் 122 இடங்களையும், காங்கிரஸ் 62 முதல் 85 இடங்களையும், பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று கூறுகிறது.

டைம்ஸ் நவ் – ஈடிஜி நடத்திய கணிப்பின்படி, பா.ஜ.க 108 முதல் 128 இடங்களும் காங்கிரஸ் 56 முதல் 72 இடங்களும் பெற வாய்ப்புள்ளது.

தைனிக் பாஸ்கர் நடத்திய கணிப்பின்படி, பா.ஜ.க 98 முதல் 105 இடங்களும் காங்கிரஸ் 85 முதல் 95 இடங்களும் பெற வாய்ப்புள்ளது.

ஏபிபி சி-வோட்டர் நடத்திய் கணிப்பில், பா.ஜ.க 94 முதல் 114 இடங்களும் காங்கிரஸ் 71 முதல் 91 இடங்களும் பெற வாய்ப்புள்ளது என்று முடிவுகள் வெளியாகியிருக்கின்றன.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)