10.5% இடஒதுக்கீட்டை விட அதிக பலன் பெற்றதா வன்னியர் சமூகம்? ஆர்.டி.ஐ மூலம் வெளியான புதிய தகவல்- பாமக கூறுவது என்ன?

பட மூலாதாரம், FB/DR.S.RAMADOSS
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
10.5 சதவீத உள்ஒதுக்கீடு விவகாரத்தில், திமுகவும் பாமகவும் மோதலில் ஈடுபட்டுள்ள நிலையில், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில் வன்னியர்கள் அதிக பலன் பெற்றுள்ளதாக வெளியான ஆர்.டி.ஐ தகவல், விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வன்னியர்கள் பலன் பெற்றது உண்மையா?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீடு
தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு மட்டும் 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டை வழங்கும் சட்டம், 2021- ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
தமிழக சட்டமன்ற தேர்தல் நேரத்தில், இந்த உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டதால் தேர்தல் ஆதாயத்துக்காக, அன்றைய எடப்பாடி பழனிசாமி அரசு அவசர கதியில் இடஒதுக்கீடு வழங்கியதாக விமர்சனம் எழுந்தது.
பா.ம.க-வின் நீண்டகால கோரிக்கைக்கு கிடைத்த வெற்றியாக இது பார்க்கப்பட்டாலும், சட்டமன்றத் தேர்தலில், இந்த உள்ஒதுக்கீடு எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. பா.ம.க., போட்டியிட்ட 23 தொகுதிகளில் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
அதேநேரம், வன்னியர் உள்ஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், வன்னியர் உள் இடஒதுக்கீடு சட்டம் செல்லாது என உச்ச நீதிமன்றமும் தீர்ப்பளித்தது.
மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் வன்னியர்கள் தனிப்பிரிவாக பார்க்கப்பட வேண்டும் என்பதற்கான தரவுகளை கொடுப்பதற்கு தமிழக அரசு தவறிவிட்டது என்றும் உரிய தரவுகளைத் திரட்டிய பிறகு வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என்றும் 2022 மார்ச் 31ம் தேதி அளித்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, அதே ஆண்டு, வன்னியர்களுக்கு உள் இடஓதுக்கீடு வழங்குவது பற்றி 3 மாதங்களில் பரிந்துரைக்கும்படி தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு தமிழக அரசு ஆணையிட்டது. தொடர்ந்து, காலநீட்டிப்பு வழங்கப்பட்டும் பரிந்துரைகள் வழங்கப்படவில்லை.

பட மூலாதாரம், X/@draramadoss
''கடந்த ஜூலை 11ம் தேதியுடன் ஆணையத்துக்கு வழங்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்துவிட்ட நிலையில், அதனை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. வன்னியர்களுக்கான சமூக நீதியை மறுக்க, அரசும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் நாடகம் நடத்துகிறது'' ராமதாஸ் விமர்சித்திருந்தார்.
பா.ம.க.,வின் விமர்சனத்துக்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், "வன்னியர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதைக் கருதி இடஒதுக்கீட்டை அமல்படுத்த நாங்களும் முயற்சி செய்து வருகிறோம். உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் முடிவடையாததால்தான் காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது" என்றார்.
இதன் தொடர்ச்சியாக, அண்மையில் திண்டிவனத்தில் தனியார் கல்லூரி விழாவில் பேசிய ராமதாஸ், 'ஊமை ஜனங்கள் இன்னும் 2 மாதத்தில் பேசப் போகிறார்கள். உங்களிடம் வந்து 10.5 சதவீத இடஒதுக்கீடு கேட்பதற்கு எனக்கு அவமானமாக இருக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசை கைகாட்டுகிறீர்கள் என்றால், நீங்கள் ஏன் முதல்வராக இருக்கிறீர்கள்?' என தி.மு.க., அரசை விமர்சித்தார்.
ஆர்.டி.ஐ மூலம் வெளியான தகவல்
இந்தநிலையில், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில், யார் அதிகம் பலன் பெற்றது என்பதை காட்டும் ஆர்.டி.ஐ., தகவல் ஒன்று வெளியாகி, பா.ம.க., வட்டாரத்தின் கொந்தளிப்பை அதிகப்படுத்தியுள்ளது.
சென்னையை சேர்ந்த பொன் பாண்டியன் என்பவர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையிடம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விகளுக்கு கிடைத்த பதில்களில் இந்த தரவுகள் இருந்துள்ளன.
அதில், கடந்த 10 ஆண்டுகளில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில் வன்னியர், சீர்மரபினர், இதர மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பெற்ற இட ஒதுக்கீடு குறித்த புள்ளிவிபரங்களை கேட்டிருந்தார்.
இதற்கு துறையின் சார்பு செயலர் ரீட்டா லிடியா, கடந்த ஜூலை 31ம் தேதி விரிவான பதில் அனுப்பியிருக்கிறார்.

எந்தெந்த துறைகள்?
- எம்.பி.பி.எஸ்., படிப்பில், கடந்த 10 ஆண்டுகளில் எம்.பி.சி இடஒதுக்கீட்டில் தேர்வான 4873 மாணவர்களில் 2781 பேர் (11.4 சதவீதம்) வன்னியர் சமூகத்தினர், இதர மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் 1414 பேர் (5.8 சதவீதம்) என ஆர்.டி.ஐயில் கூறப்பட்டுள்ளது.
- பல் மருத்துவப் படிப்பில் 2018 முதல் 2022 வரையிலான 5 ஆண்டுகளில் 6234 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 437 பேர் (9.4 சதவீதம்) வன்னியர்கள். சீர்மரபினர் 163 பேர் (3.5 சதவீதம்).
- கால்நடை அறிவியல் மாணவர் சேர்க்கையில் 2018 முதல் 2022 வரையில், 2820 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், 464 பேர் (16.5 சதவீதம்) வன்னியர்கள். 73 பேர் சீர்மரபினர் (1.9 சதவீதம்). இதர மிக பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் 191 பேர் (6.8 சதவீதம்).
- அரசு சட்டக் கல்லூரிகளில் 2018 முதல் 2022 வரையில் 17,990 பேர் தேர்வாகியுள்ளனர். இவர்களில் 20 சதவீத இடஒதுக்கீட்டில் தேர்வான 4060 மாணவர்களில் 1683 பேர் (8.3 சதவீதம்) வன்னியர்கள். 1296 பேர் (6.4) சீர்மரபினர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- காவல் சார் ஆய்வாளர் பணிக்கான தேர்வில் 2013 முதல் 2022 வரையில் தேர்வான 1919 பணியாளர்களில் 605 பேர், மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர். இவர்களில் வன்னியர்கள் 327 பேர் (17 சதவீதம்), சீர்மரபினர் 7.9 சதவீதம்.
- தமிழ்நாடு மருத்துவர் தேர்வு வாரியம் மூலம் 2013 முதல் 2022 வரையில் உதவி மருத்துவர் பணியிடங்களுக்கு தேர்வான 8,379 பேரில் 2,191 பேர் மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர். இதில், 1433 பேர் (17.1 சதவீதம்) வன்னியர்கள். சீர்மரபினர் 365 பேர் (4.4 சதவீதம்).
- ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக, 2021ம் ஆண்டு தேர்ச்சி பெற்ற 3044 முதுநிலை ஆசிரியர்களில் 533 பேர் (17.5 சதவீதம்) வன்னியர்கள், சீர்மரபினர் 130 பேர் (4.3 சதவீதம்). இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் 30 பேர் (7.6 சதவீதம்)
- வனச் சீருடை பணிக்கு 2013 முதல் 2023 வரை வனப் பணியாளர் பதவிக்கு 1520 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களில், வன்னியர்கள் 308 பேர் (20.2 சதவீதம்). சீர்மரபினர் 105 பேர் (6.9 சதவீதம்). இதர மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் 68 பேர் (4.5 சதவீதம்).
- 2012 முதல் 2023 வரையில், அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய குரூப் 2, 2ஏ பணியிடங்களில் 2682 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 481 பேர் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள். இவர்களில் 366 பேர் (13.6 சதவீதம்) வன்னியர்கள். சீர்மரபினர் 4.8 சதவீதம் (129 பேர்).
- 2013 முதல் 2022 வரை நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்ற 27,784 பேரில் 5214 பேர் (19.5) வன்னியர்கள். சீர்மரபினர் 1565 பேர் (5.8 சதவீதம். இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் 2881 பேர் (10.8).
- 1.9.2023 அன்று மொத்தம் பணியாற்றிய குரூப் 1 துணை ஆட்சியர்கள் 542 பேரில் 63 (11.6 சதவீதம்) பேர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வன்னியர்கள் என, ஆர்.டி.ஐ., தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், X/@drramadoss
"கல்வி, வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர், எந்தளவுக்குப் பயன் பெற்றுள்ளனர் என்பதை அறியவே ஆர்.டி.ஐ., மூலம் விண்ணப்பித்தேன். வேறெந்த உள்நோக்கமும் இல்லை.''
''மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள சீர்மரபினருக்கு உரிய முக்கியவத்துவம் கிடைப்பதில்லை. 10.5 சதவீத ஒதுக்கீட்டை வன்னியர்களுக்கு வழங்கினால், இதர சமூகத்தினருக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை உணர்த்தவே, ஆர்.டி.ஐ., மூலம் தகவல்களை வாங்கினேன்" என பிபிசி தமிழிடம் கூறினார் பொன் பாண்டியன்
இந்த தரவுகள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள மருத்துவர் ராமதாஸ், ''1989ம் ஆண்டு முதல் தற்போது வரையிலான புள்ளிவிவரங்களை வெளியிட்டால்தான் வன்னியர் மற்றும் பிற சமூகங்களுக்கு கிடைத்த பிரதிநிதித்துவம் தெரிய வரும். அதைவிடுத்து, கடந்த 10 ஆண்டுகளுக்கான புள்ளிவிவரங்களை மட்டும் வெளியிடுவது வன்னியர் சமூகத்தை ஏமாற்றும் செயல்'' எனத் தெரிவித்துள்ளார்.
தரவுகளில் பாரபட்சமா?

"தி.மு.க., தயவில் பரப்பப்படும் பொய்ச் செய்திகளில் இந்த ஆர்.டி.ஐ., தகவலும் ஒன்று. வன்னியர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றக் கூடாது என்பதற்காக, அவர்களின் வசதிக்கு ஏற்ப தரவுகளைப் பயன்படுத்தியுள்ளனர்" என்கிறார் பா.ம.க., செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் கே.பாலு.
தொடர்ந்து பேசிய அவர், "1989ம் ஆண்டு அம்பா சங்கர் ஆணைய பரிந்துரைப்படி, 20 சதவீத இடஒதுக்கீட்டை, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு தி.மு.க., அரசு வழங்கியது. அப்போது, 20.77 சதவீத மக்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதாக தெரிவித்தனர்.''
''அதன்படி, வன்னியர் 14 சதவீதம், இதர சமூகத்தினர் 3.34 சதவீதம், சீர்மரபினர் 3.47 சதவீதம் இருப்பதாக தெரிவித்தனர். எம்.பி.சி., இடஒதுக்கீடு வழங்கப்பட்ட பிறகு, வன்னியர்களுக்கு அநீதி மட்டுமே இழைக்கப்பட்டுள்ளது தெரியும்" என்கிறார்.
"மருத்துவப் படிப்பில் வன்னியர் 11.4 சதவீதம் பெற்றுள்ளதாகவும் இது அவர்கள் கேட்கும் 10.5 சதவீதத்தைவிட அதிகம் என்கின்றனர். 89ம் ஆண்டு கணக்கின்படி வன்னியர் மக்கள் தொகை என்பது 14 சதவீதம். அவர்களுக்கு கிடைத்தது 11.4 சதவீதம் என்றுதான் பார்க்க வேண்டும்.''
"துணை ஆட்சியருக்கான குரூப் 1 பதவிக்கான 542 இடங்களில் 63 இடங்களில் வன்னியர்கள் உள்ளனர். இதை 11.6 சதவீதம் என்கின்றனர். இது எந்த வருடம் முதல் எடுக்கப்பட்ட தரவு, இவர்களில் பதவி உயர்வில் வந்தவர்கள் எவ்வளவு பேர், நேரடி ஒதுக்கீடு, இடஒதுக்கீடு, பொதுப்பிரிவு என, எந்த தகவலும் இல்லை." என்கிறார் கே.பாலு
அரசுக்கு லாபமா, நட்டமா?

பட மூலாதாரம், Facebook
மேலும், "வன்னியர்கள், 10.5 சதவீதத்தை ஏற்றுக் கொள்ள காரணம், அம்பா சங்கர் பரிந்துரை அடிப்படையில் நீதிபதி ஜனார்த்தனம் சில பரிந்துரைகளை கொடுத்தார். அதில், வன்னியர்கள் 14 சதவீதம் உள்ளனர். ஆனால், இங்கு இடஒதுக்கீடு 69 சதவீதமாக உள்ளதால், 10.5 சதவீதம் வழங்கலாம் என்றார். அதை அடிப்படையாக வைத்து, தமிழகத்தில் வன்னியர்கள் 10.5 சதவீதம் உள்ளதாகவும் அதைவிட அதிகமாக தற்போது அனுபவிப்பதாகவும் கூறுவது எதார்த்ததுக்கு எதிரானது." என்கிறார் கே.பாலு.
"நாங்கள் போராடித்தான் 10.5 சதவீதத்தை வாங்கினோம். எங்களுக்கு இதன்மூலம் பாதிப்பு வரும் என்றால், இடஒதுக்கீட்டை ஏன் கேட்க வேண்டும்? அரசுப் பணிகளில் 13 சதவீதம், 14 சதவீதம் வன்னியர்கள் இருப்பதாக அரசே கூறும் போது, 10.5 சதவீதம் கொடுப்பதன் மூலம் அரசுக்கு லாபமா, நட்டமா?" எனக் கேள்வி எழுப்புகிறார் கே.பாலு.
'திமுகவை குறை சொல்வது சரியல்ல'

பட மூலாதாரம், @RSBharathiDMK
பா.ம.க.,வின் குற்றச்சாட்டு குறித்து, பிபிசி தமிழிடம் பேசிய தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி, "ஆர்.டி.ஐ., தகவலுக்கும் தி.மு.க.,வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. '10.5 சதவீத இடஒதுக்கீட்டை கொடுப்பதற்கு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்' என முதல்வர் கூறிவிட்டார். இதற்காக, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய பிறகு கொடுக்கப்படும் என்றும் கூறிவிட்டார்."
"அருந்ததியருக்கு 3 சதவீத உள்ஒதுக்கீட்டுக்கு தரவுகள் இருப்பதால் அதை ஏற்றுக் கொள்வதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால், அ.தி.மு.க., அரசு வழங்கிய 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டுக்கு உரிய தரவுகள் இல்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர். அதை சரிசெய்வோம் என முதல்வர் கூறிய பிறகும் தி.மு.க.,வை குறைசொல்வது சரியல்ல" என்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், "தேர்தலுக்கு தேர்தல் வன்னிய சமூக மக்களை ஏமாற்ற பா.ம.க., நாடகம் நடத்துகிறது. 2021 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி சேருவதற்காக அவசரம் அவசரமாக 10.5 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வந்தனர். தேர்தல் சமரசத்துக்காக ராமதாஸ் நாடகம் ஆடினார். ஆனால், தமிழ்நாட்டு மக்கள் அதை ஏற்கவில்லை." என்று கூறினார்.
கருணாநிதிதான் எம்.பி.சி., பிரிவை உருவாக்கி 20 சதவீத இடஒதுக்கீட்டை கொடுத்தார் என்று கூறிய ஆர்.எஸ்.பாரதி, அவரது வழியில் 10.5 சதவீதம் இடஒதுக்கீடு முதல்வர் ஸ்டாலின் கையால்தான் நிறைவேறும் என்றும் கூறினார்.
"அவசர கோலத்தில், 10.5 சதவீதம் வாங்கியதால்தான் தேர்தலில் ராமதாஸ் தோற்றார். மக்களும் அவரை நம்பி ஓட்டுப் போடவில்லை. நாடாளுமன்றத் தேர்தலிலும் பா.ம.க-வின் பிரசாரம் எடுபடவில்லை. வன்னிய மக்களுக்கு யார் நல்லது செய்கிறார்கள் என மக்களுக்குத் தெரியும்" என்கிறார் ஆர்.எஸ்.பாரதி.
ராமதாஸ் கேட்ட 22 சதவீத ஒதுக்கீடு

அதேநேரம், பா.ம.க., முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை மறுத்துப் பேசுகிறார், மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர் ஆர்.டி.ஐ., தகவலில் உண்மை இருக்கிறது. அதை தி.மு.க., ஆதரவு செய்தியாக பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. என்று கூறுகிறார்.
மேலும், " வெறும் இடஒதுக்கீட்டை மட்டும் மையமாக வைத்து வாக்குகளைப் பெறுவது என்பது தற்போது மிக கடினம். தொடக்க காலங்களில், 22 சதவீத இடஒதுக்கீட்டை ராமதாஸ் கோரினார். மாநில ஒதுக்கீட்டில் 20 சதவீதமும் மத்திய ஒதுக்கீட்டில் 2 சதவீதத்தையும் அவர் கேட்டார். பின்னர், 2 சதவீத இடஒதுக்கீடு கோரிக்கையை கைவிட்டுவிட்டார்." என்று சுட்டிக்காட்டுகிறார்.
"இன்றைய காலகட்டத்தில், ஓட்டு சேகரிப்புக்கான ஓர் அம்சமாக இடஒதுக்கீடு இல்லை. விலைவாசி உயர்வும் வேலைவாய்ப்பின்மையும் தான் மக்களின் அன்றாட பிரச்னையாக உள்ளது. எனவே, கடந்த காலங்களைப் போன்ற போராட்டத்தை, பா.ம.க., இனி முன்னெடுப்பது சிரமம்" என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












