வயநாட்டில் 31 மணி நேரத்தில் 'மீட்பு' பாலம் - சென்னையில் பயிற்சி பெற்ற பெண் அதிகாரி சாதித்தது எப்படி?

வயநாடு மீட்புப் பணி: பாலம் அமைத்த 'டைகர்' மேஜர் சீதா ஷெல்கே - இவர் யார்?

பட மூலாதாரம், x/@official_dgar

படக்குறிப்பு, ராணுவத்தினரால் கட்டப்பட்ட பாலத்தின் மீது சீதா ஷெல்கே

கேரளாவின் வயநாட்டில் கனமழை மற்றும் அதைத் தொடர்ந்து நிலச்சரிவு இரண்டும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன. இதில், 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

மலைப்பாங்கான இடத்தில் மீட்புப்பணிகளை மேற்கொள்வதில் பல சிரமங்கள் இருந்தன. இந்த சிரமங்களை எளிதாக்க மீட்புப் பணிகள் நடைபெறும் இடத்தில் தற்காலிக பாலம் அமைத்த ராணுவ அதிகாரி ஒருவர் தற்போது அதிகமாக பேசப்பட்டு வருகிறார். அவர் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மராத்மோலா என்ற இடத்தில் சீதா ஷெல்கே பிறந்தவர்.

ராணுவ அதிகாரியான சீதா ஷெல்கே, வயநாடு பேரிடர் மீட்புப் பணிகளில் முக்கிய பங்கு வகித்துள்ளார். மகாராஷ்டிராவை சேர்ந்த மேஜர் சீதா ஷெல்கே சமூக ஊடகங்களில் பலரிடமிருந்தும் பாராட்டுகளை பெற்று வருகிறார்.

வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட சூரல்மலை மற்றும் முண்டக்கை கிராமங்களை இணைக்கும் பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதனால், மீட்புப் பணிகளுக்கு சிரமம் ஏற்பட்டதால், சீதா ஷெல்கேவின் தலைமையில் குறைவான நேரத்தில் அங்கு தற்காலிக இரும்பு பாலம் ராணுவத்தினரால் கட்டப்பட்டது.

சீதா ஷெல்கேவின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் ஒரு ‘புலி’ என சமூக ஊடகங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

மேஜர் சீதா ஷெல்கே யார்? ராணுவத்தினர் பாலம் கட்டும் பணியை குறுகிய நேரத்தில் எவ்வாறு செய்து முடித்தனர்?

வாட்ஸ் ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

வயநாடு பேரிடர்

கேரளாவின் வயநாட்டில் ஜூலை 30 நள்ளிரவில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவால் பலத்த சேதங்கள் ஏற்பட்டன. பல வீடுகள் மற்றும் குடும்பங்கள் மண்ணுக்கு அடியில் புதைந்துபோயின.

சூரல்மலை, மேப்படி, முண்டக்கை கிராமங்களை சேர்ந்த மக்கள் இந்த இயற்கையின் கோரத் தாண்டவத்தால் அதிர்ச்சியில் உள்ளனர். இதில் காணாமல் போன பலரையும் அவர்களின் உறவினர்கள் தேடி வருகின்றனர்.

இதில் இறந்தவர்களின் எண்ணிக்கை 215-ஐ தாண்டியுள்ளது. காணாமல் போன 250க்கும் மேற்பட்ட நபர்களை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

சூரல்மலை, முண்டக்கை மற்றும் மேப்படி ஆகிய கிராமங்கள் வயநாடு மாவட்டத்தில் அமைந்துள்ளன. இந்த இடத்தில் மலைத்தொடர்களில் இருந்து வரும் நீரோடை சூரல்மலையிலிருந்து முன்னோக்கி நகர்ந்து இருவாஞ்சிபுலா ஆற்றில் கலக்கிறது.

ஜூலை 30 மற்றும் அதற்கு முந்தைய சில நாட்கள் பெய்த கனமழையால் அந்த ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்தது.

ஜூலை 30 அன்று அந்த ஆற்று வெள்ளம் முண்டக்கை கிராமத்தை மூழ்கடித்தது. நிலச்சரிவால் முதலில் பாதிக்கப்பட்ட கிராமம் முண்டக்கை.

வயநாடு மீட்புப் பணி: பாலம் அமைத்த 'டைகர்' மேஜர் சீதா ஷெல்கே - இவர் யார்?

பட மூலாதாரம், Getty Images

அதன்பின், மீட்புப் பணிகள் உடனடியாக தொடங்கின. ஆனால், மீட்புப் பணிகளில் பெரிய தடைகள் இருந்தன. சூரல்மலை மற்றும் முண்டக்கை கிராமங்களை இணைக்கும் பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது.

பாலம் இல்லாததால், மீட்புப்பணிக்கான உபகரணங்கள், நிவாரண பொருட்களை எடுத்துச் செல்ல முடியவில்லை. எனவே, அங்கு உடனடியாக பாலம் கட்டுவதற்கான தேவை எழுந்தது.

அவசர தேவை காரணமாக ராணுவத்தினர் அந்த இடத்தில் பெய்லி பாலத்தை (தற்காலிக பாலம்) அமைத்தனர்.

இந்த பாலம் கட்டப்பட்ட பின்னர் தான் ஆம்புலன்ஸ், மற்ற உபகரணங்கள் மற்றும் வாகனங்கள் அந்த இடத்தை அடைய முடிந்தது. மீட்புப்பணியும் துரிதமானது.

மகராஷ்டிர ராணுவ அதிகாரியான மேஜர் சீதா ஷெல்கே, பாலத்தை அமைத்த ராணுவ குழுவினரை வழிநடத்தினார்.

யார் இந்த மேஜர் சீதா ஷெல்கே?

மகாராஷ்டிராவின் அகமது நகரில் உள்ள காடில்கோன் பகுதியை சேர்ந்தவரான சீதா ஷெல்கே, சென்னையில் உள்ள அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் (ஓடிஏ) பயிற்சியை முடித்தார்.

ராணுவ மருத்துவப் படையினர் தவிர அனைத்துவித ராணுவ பிரிவினருக்கும் 49 வார இளநிலை பயிற்சி படிப்பு அங்கே அளிக்கப்படுகிறது.

வயநாடு மீட்புப் பணி: பாலம் அமைத்த 'டைகர்' மேஜர் சீதா ஷெல்கே - இவர் யார்?

பட மூலாதாரம், X.COM /

படக்குறிப்பு, பாலத்தைக் கட்டும் பணியில் சீதா ஷெல்கே மற்றும் குழுவினர்

பெங்களூருவில் உள்ள மெட்ராஸ் இன்ஜினியர் குரூப் எனும் 70 பேர் அடங்கிய ராணுவப் பிரிவில் மேஜர் சீதா ஷெல்கே மட்டும்தான் பெண் அதிகாரி ஆவார்.

அவருடைய கண்காணிப்பில் இந்த பெய்லி பாலம் மிகக் குறுகிய காலத்தில், 31 மணிநேரத்தில் கட்டி முடிக்கப்பட்டது.

அந்த பாலத்தின் மீது சீதா ஷெல்கே நின்றிருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெள்ளிக்கிழமை வைரலானது. இதையடுத்து, அவரை பற்றி பலரும் பேசி வருகின்றனர்.

சீதா ஷெல்கேவின் பெற்றோர் தற்போது தக்லி தோகேஷ்வர் கிராமத்தில் வசித்து வருகின்றனர். அவருடைய தந்தை அசோக் ஷெல்கே அப்பகுதியில் பிரபலமான வழக்கறிஞராவார். சீதாவுக்கு மூன்று சகோதரிகள் உள்ளனர்.

‘மெட்ராஸ் சாப்பர்ஸ்’ படைப்பிரிவின் பணிகள்

மெட்ராஸ் இன்ஜினியர் குரூப் பிரிவுக்கு ‘மெட்ராஸ் சாப்பர்ஸ்’ எனும் பெயரும் உண்டு. பொறியியல் படைப்பிரிவான இப்பிரிவு, படைகளுக்கான சாலைகள், சாலைகளில் தடைகளை அகற்றுதல், பாலங்களை அமைத்தல் மற்றும் போர் காலத்தில் கண்ணி வெடிகளை கண்டறிந்து வெடிக்க செய்தல் உள்ளிட்ட பணிகளில் நிபுணத்துவம் பெற்றதாக உள்ளது.

இயற்கை பேரிடர்களின் போது மீட்புப் பணிகளில் இப்படைப்பிரிவு முக்கிய பங்கு வகிக்கிறது. கேரளாவில் 2018-ல் ஏற்பட்ட வெள்ளத்தின் போது, இப்பிரிவு முக்கிய பங்கு வகித்தது.

பெய்லி பாலம் அமைத்தது எப்படி?

ஜூலை 31 இரவு அன்று இந்த பாலம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டு ஆகஸ்ட் 1 மாலை 5 மணிக்கு நிறைவடைந்தன.

19 இரும்பு பலகைகளை கொண்டு அமைக்கப்பட்ட இந்த பாலம், ஒற்றை தூணை அடிப்படையாக கொண்டு எழுப்பப்பட்டது.

அந்த பாலத்தின் உறுதித் தன்மையை சோதிக்க, முதலில் தங்களது வாகனத்தை ராணுவத்தினர் ஏற்றினர். அதன்பின், அது மீட்புக் குழு உள்ளிட்ட மற்றவர்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது.

வயநாடு மாவட்டத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட சூரல்மலை மற்றும் முண்டக்கை கிராமங்களை இணைப்பதில் இந்த பாலம் மிக முக்கியமானது.

வயநாடு மீட்புப் பணி: பாலம் அமைத்த 'டைகர்' மேஜர் சீதா ஷெல்கே - இவர் யார்?

பட மூலாதாரம், x.com

ராணுவத்தில் இருப்பதை பெருமையாக கருதுகிறேன்”

மீட்புப் பணிகளின் போது பிடிஐ செய்தி முகமையிடம் பேசிய சீதா ஷெல்கே, ராணுவ அதிகாரியாக இருப்பதில் பெருமை கொள்வதாக தெரிவித்தார்.

“இந்த குழுவின் ஒரே பெண் அதிகாரி என்பதைவிட, நான் ஒரு இந்திய வீரர் மற்றும் இந்திய ராணுவத்தின் பிரதிநிதி,” என தெரிவித்தார்.

இந்த பணியில் தான் பங்கேற்றுள்ளதை பெருமையாக கருதுவதாக அவர் தெரிவித்தார். “மூத்த அதிகாரிகள் மற்றும் சக பணியாளர்களுக்கு இந்த பாராட்டுகளை சமர்ப்பிக்கிறேன்,” என்றார் அவர்.

மூத்த அதிகாரிகளின் வழிகாட்டுதல் மற்றும் சக பணியாளர்களின் தைரியத்துடன் வேகமாக பணியாற்றியதாலேயே இப்பணியை வெற்றிகரமாக முடிக்க முடிந்ததாக அவர் கூறினார்.

மேஜர் சீதா ஷெல்கே பல்வேறு அமைப்புகள், அரசு அமைப்புகள் மற்றும் இந்த பாலம் கட்டப்படுவதற்கு உதவியாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

வயநாடு மீட்புப் பணி: பாலம் அமைத்த 'டைகர்' மேஜர் சீதா ஷெல்கே - இவர் யார்?

பட மூலாதாரம், x.com

குவியும் பாராட்டு

அசாம் ரைபிள்ஸ் படையின் இயக்குநர் ஜெனரலான லெப்டினன்ட் ஜெனரல் விகாஸ் லகேரா, கடினமான சூழ்நிலையில் மேஜர் சீதா ஷெல்கேவின் பணியை பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.

நாகாலாந்தில் உள்ள அசாம் ரைபிள்ஸ் பயிற்சி மையம் மற்றும் பள்ளியில் சீதா ஷெல்கே பயிற்சியாளராகவும் இருந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ ரமேஷ் சென்னிதலா, சீதா ஷெல்கேவை பாராட்டி ட்வீட் செய்துள்ளார். “பேரிடர் பாதித்துள்ள வயநாட்டில் பெய்லி பாலம் அமைக்க வழிநடத்திய மேஜர் சீதா ஷெல்கேவுக்கு நன்றி, இதன்மூலம் பலரது உயிரை காப்பாற்ற முடிந்தது.” என அவர் பதிவிட்டுள்ளார்.

மேலும் பலரும் சமூக ஊடகங்கள் வாயிலாக அவருக்கு பாராட்டு தெரிவித்துவருகின்றனர்.

சமூக ஊடக பயனர் ஒருவர், “மேஜர் சீதா ஷெல்கே மற்றும் பொறியியல் படைப்பிரிவு குறித்து பெருமை கொள்கிறோம். வயநாட்டில் பெய்லி பாலம் 24 மணிநேரத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. போர்க்கால அடிப்படையில் இந்த பணியை மேற்கொண்டது நம்ப முடியாத அளவில் உள்ளது. உள்ளூர் ஊடகத்தினர் அவரை ‘டைகர்’ என குறிப்பிடுகின்றனர்” என பதிவிட்டுள்ளார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)