மலேசியாவில் தொங்கு நாடாளுமன்றம்: சொந்த தொகுதியில் டெபாசிட் இழந்த மகாதீர்

பட மூலாதாரம், Getty Images
மலேசியாவில் நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் எந்தவொரு கட்சிக்கோ அல்லது அரசியல் கூட்டணிக்கோ ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்கவில்லை. தற்போதைய சூழலில் அங்கு தொங்கு நாடாளுமன்றம் அமைந்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கூறி வருகின்றனர்.
இதையடுத்து புதிய அணிகளை உருவாக்கி ஆட்சியைப் பிடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன.
மகாதீர் படுதோல்வி
மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் தாம் போட்டியிட்ட தொகுதியில் தேர்தல் வைப்புத் தொகையை இழந்து படுதோல்வி கண்டுள்ளார். 24 ஆண்டுகள் அவர் பிரதமராக இருந்துள்ளார்.
கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் மகாதீர் லங்காவி தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இம்முறை அத்தொகுதியைத் தக்க வைக்க அவர் களமிறங்கினார்.
எனினும் இம்முறை அவருக்கு 4,566 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. மகாதீரை எதிர்த்துப் போட்டியிட்ட பெரிக்கத்தான் கூட்டணி வேட்பாளர் 25,463 வாக்குகளைப் பெற்று வெற்றியைப் பதிவு செய்தார். மிகக் குறைவான வாக்குகளைப் பெற்ற டாக்டர் மகாதீர், வைப்புத்தொகையை இழந்தார். ஐந்து முனை போட்டியில் மகாதீர் நான்காவதாகவே வந்தார்.
97 வயதான மகாதீர் கடந்த 1969ஆம் ஆண்டு முதன்முறையாக தேர்தலில் போட்டியிட்டு வென்றார். அப்போது முதல் அவர் எந்தத் தேர்தலிலும் தோல்வியைத் தழுவியதில்லை. ஏறக்குறைய 53 ஆண்டுகளாக அவர் தேர்தலில் வெற்றி பெற்று வந்துள்ளார்.
15ஆவது பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றால் தாம் மீண்டும் பிரதமர் பதவிக்குப் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் ஒருவேளை தோல்வி கண்டால் அரசியலில் இருந்து ஓய்வுபெறப் போவதாகவும் அவர் அறிவித்திருந்தார்.
இது அவரது அரசியல் பயணத்தில், தேர்தல் களத்தில் அவர் சந்தித்துள்ள முதல் தோல்வி.
ஆட்சி அமைய முயன்று வரும் தரப்பினர் இன்று மாலைக்குள் மலேசிய மாமன்னரிடம் எம்பிக்களின் ஆதரவுப் பட்டியலை அளிக்க வேண்டும் என்று அரண்மனை தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
மலேசிய நாடாளுமன்றத்தில் மொத்தம் 222 இடங்கள் உள்ளன. தேர்தலில் போட்டியிட்ட இரண்டு வேட்பாளர்கள் காலமானதை அடுத்து 220 தொகுதிகளுக்கு மட்டுமே வாக்குப்பதிவு நடைபெற்றது.
குறைந்தபட்ச பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க எந்தவோர் அரசியல் கட்சி அல்லது கூட்டணிக்கும் 111 இடங்கள் தேவைப்படும்.
இந்நிலையில், நம்பிக்கை கூட்டணி எனப்படும் பக்காத்தான் ஹராப்பான் வசம் 81 தொகுதிகள் உள்ளன.
பெரிக்கத்தான் தேசியக் கூட்டணி 72 இடங்களைக் கைப்பற்றி உள்ளது.
தேசிய முன்னணி எனப்படும் பாரிசான் தேசிய அணி 30 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
ஜிபிஎஸ் எனப்படும் அணி 22 தொகுதிகளையும் ஜிஆர்எஸ் என்ற கூட்டணி ஆறு இடங்களையும் தங்கள் வசம் கொண்டுள்ளன.

பட மூலாதாரம், Getty Images
யார் பிரதமராக அதிக வாய்ப்பு?
எந்தக் கூட்டணி ஆட்சியமைக்கும் என்பதைவிட, யார் பிரதமராவதற்கு அதிகமான ஆதரவு கிடைக்கும் என்பதே இப்போது எழுந்துள்ள மில்லியன் டாலர் கேள்வி. இதன் அடிப்படையிலேயே அனைத்து வகையான ரகசியப் பேச்சுவார்த்தைகளும் தலைவர்களின் சந்திப்புகளும் நடந்து வருகின்றன.
தேர்தலுக்கு முன்பு வரை மலேசிய அரசியல் களத்தில் நீண்ட காலமாக எதிர்க்கட்சித் தலைவராகவே பார்க்கப்பட்டு வரும் அன்வார் இப்ராகிம், முன்னாள் பிரதமர் மொஹைதின் யாசின், இடைக்கால அரசுக்கு தலைமையேற்று இருந்த இஸ்மாயில் சப்ரி யாகூப் ஆகியோர் மட்டுமே சம்பந்தப்பட்ட கூட்டணிகளின் சார்பில் பிரதமர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு இருந்தனர்.
முன்னாள் பிரதமர் மகாதீர், அம்னோ கட்சியின் தலைவர் சாஹிட் ஹமிதி, முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் ஆகியோரும் மறைமுகமாக பிரதமர் போட்டியில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்பட்டது.
ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் அன்வார், மொஹைதின் ஆகிய இருவர் மட்டுமே பிரதமர் பதவிக்கான போட்டியில் உள்ளனர். இருவருக்குமே பெரும்பான்மை பலம் இல்லை. எனவே தேர்தலுக்குப் பிறகு புதிய கூட்டணியை அமைக்க முயன்று வருகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
அன்வாரின் காத்திருப்பு முடிவுக்கு வருமா?
இதையடுத்து, மலேசிய அரசியல் களத்தில் 'எண் விளையாட்டு' தொடங்கி உள்ளது.
அன்வார் தலைமையிலான நம்பிக்கை கூட்டணியும் (பக்காத்தான்), தேசிய முன்னணியும் (பாரிசான்) இணைந்து கூட்டணி அரசாங்கத்தை அமைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இரு தரப்பும் இணைந்தால் ஆட்சியமைக்கத் தேவைப்படும் 111 இடங்கள் சாத்தியமாகும். எனினும், தேசிய முன்னணியில் அன்வாரை ஆதரிப்பது தொடர்பில் பிளவுபட்ட கருத்துகள் நிலவி வருகின்றன.
மற்றொரு பக்கம் பெரிக்கத்தான் தேசியக் கூட்டணியின் தலைவரான மொஹைதின் யாசினுக்கு ஜிபிஎஸ் கூட்டணியின் ஆதரவு உள்ளது உறுதியாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், சில தரப்பினருடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
தேசிய முன்னணி வசமுள்ள 30 பேரின் ஆதரவு கிடைத்தால் மட்டுமே அன்வார் இப்ராஹிமின் பிரதமர் கனவு கைகூடும் என்ற நிலை காணப்படுகிறது.
இந்நிலையில், பக்காத்தான் கூட்டணிக்கு நாடாளுமன்றத்தில் போதுமான பலம் உள்ளதாகச் சொல்கிறார் அன்வார். நாட்டை வழிநடத்த தமக்கு இம்முறையேனும் வாய்ப்பு கிடைக்கும் என்று தான் நம்புவதாகவும் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
"அதிக தொகுதிகளில் வென்றுள்ள கூட்டணி என்ற முறையில், வழக்கமான நடைமுறையின்படி அடுத்து ஆட்சி அமைப்பதற்கான ஆதரவு எங்களுக்குக் கிடைத்துள்ளது. பெரும்பான்மை ஆதரவு என்று சொல்லும்போது, அது நாடாளுமன்றத்தில் எங்களுக்கு 111 இடங்களுக்கு மேல் உள்ளதாக அர்த்தம்," என்கிறார் அன்வார்.
எனினும் பக்காத்தான் ஆட்சியமைக்க தேவைப்படும் ஆதரவை வழங்குவது யார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை. இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, நேரடியாக பதிலளிக்க மறுத்துவிட்டார்.
மொஹைதின் யாசின் தரப்போ, ஆட்சியமைக்கத் தயாராகி வருவதாகவும் தங்களுக்குப் பெரும்பான்மை பலம் உள்ளது வாக்கு எண்ணிக்கை முடிந்த கையோடு உறுதியாகிவிட்டது என்றும் கூறுகிறது.
இந்நிலையில், ஆட்சியமைக்கப் போதுமான எண்ணிக்கையிலான எம்பிக்களின் ஆதரவு உள்ள கூட்டணியின் தலைவர் மாமன்னரை சந்திக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆட்சியமைக்க உரிமை கோரும் கூட்டணியின் தலைவர், தமக்கு ஆதரவாக உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட சத்திய பிரமாணத்துடன் மாமன்னரை இன்று சந்திக்க வேண்டும்.
அத்தலைவருக்கு ஆதரவு இருப்பதை மாமன்னர் ஏற்கும் பட்சத்தில், ஆட்சியமைக்கும்படி அழைப்பு விடுப்பார். அதன் பின்னர் நாடாளுமன்றம் கூடுவது, பிரதமர் பதவியேற்பு, அதையடுத்து தமக்குள்ள பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் புதிய பிரதமர் நிரூபிப்பது உள்ளிட்ட வழக்கமான நடைமுறைகள் தொடங்கும்.

பட மூலாதாரம், Getty Images
இந்திய வம்சாவளியினர்
இம்முறை தேர்தல் களத்தில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியினரில் பத்து பேர் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களில் ஒன்பது பேர் அன்வார் தலைமையிலான கூட்டணியைச் சேர்ந்தவர்கள்.
மகாதீர், மலேசிய நாடாளுமன்றத்தில் நீண்ட காலமாக எம்பியாக இருந்து வரும் மூத்த தலைவர் துங்கு ரசாலி, மலேசிய இந்தியர் காங்கிரஸ் கட்சித் தலைவர் விக்னேஸ்வரன், பிரதமர் பதவிக்கான போட்டியில் இருப்பதாகக் கூறிய முன்னாள் அமைச்சர் கைரி ஜமாலுதின் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் தோல்வி கண்டுள்ளனர். தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் பின் தங்கியிருந்த மொஹைதின் யாசின் தலைமையிலான பெரிக்கத்தான் கூட்டணி, எதிர்பாராத வகையில் கூடுதல் இடங்களில் வெற்றி கண்டுள்ளது.
இவ்வாறு பல ஆச்சரியங்களையும் தெளிவற்ற முடிவுகளையும் வழங்கியுள்ளது இந்தப் பொதுத்தேர்தல். இந்நிலையில், மலேசிய மாமன்னரை அன்வாரும் மொஹைதின் யாசினும் இன்று சந்திக்க இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன் பின்னர் அரண்மனை எத்தகைய அறிவிப்பை வெளியிடும் எனும் எதிர்பார்ப்பு மலேசியர்கள் மத்தியில் நிலவுகிறது.
மாமன்னரின் அறிவிப்புக்காக மலேசியா காத்திருக்கிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












