மோதியுடன் பேசிய டிரம்ப் - இந்தியா ரஷ்ய எண்ணெய் வாங்குவது குறித்து கூறியது என்ன?

பட மூலாதாரம், Reuters
ரஷ்யாவிடமிருந்து அதிக எண்ணெய் வாங்கமாட்டோம் என்று பிரதமர் மோதி கூறியதாக மீண்டும் அறிவித்திருக்கிறார் அமெரிக்க அதிகபர் டொனால்ட் டிரம்ப்.
செவ்வாய்க்கிழமை இரவு தொலைபேசி வாயிலாக பிரதமர் மோதிக்கு தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார் டிரம்ப். அதற்கு மோதியும் நன்றி தெரிவித்தார்.
"அதிபர் டிரம்பின் அழைப்புக்கும் தீபாவளி வாழ்த்துக்கும் நன்றி. நம் இரு பெரும் ஜனநாயக நாடுகளும் உலகத்திற்கு நம்பிக்கையாய் இருக்கவேண்டும் என்றும், அனைத்து வகையான தீவிரவாதங்களுக்கு எதிராக ஒற்றுமையாக நிற்கவேண்டும் என்றும் இந்த தீப ஒளித் திருநாளில் வேண்டிக்கொள்கிறேன்," என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டார் மோதி.
அதற்கு முன்பாக செவ்வாய்க்கிழமையன்று அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் தீபாவளியைக் கொண்டாடினார்.
"நான் இந்திய மக்களை நேசிக்கிறேன். இரு நாடுகளுக்கு இடையிலும் பல சிறந்த ஒப்பந்தங்களை இயற்றிக் கொண்டிருக்கிறோம். நான் பிரதமர் மோதியுடன் இன்று பேசினேன். எங்களுக்குள் நல்ல உறவு இருக்கிறது. அவர்கள் ரஷ்யாவிடமிருந்து அதிகமாக எண்ணெய் வாங்கமாட்டார்கள்," என்று பிரதமர் மோதியிடம் பேசிய பிறகு கூறினார் டிரம்ப்.

பட மூலாதாரம், Reuters
"அவர்களுக்கு என்னைப் பிடித்திருக்கிறது. ரஷ்யாவுக்கும் யுக்ரேனுக்குமான யுத்தம் முடியவேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள். அவர்கள் அதிகமாக எண்ணெய் வாங்கப்போவதில்லை. அதை அவர்கள் வெகுவாகக் குறைத்திருக்கிறார்கள். தொடர்ந்து குறைத்துக் கொண்டிருக்கிறார்கள்" என்றும் அதிபர் டிரம்ப் கூறினார்.
மேலும் பேசிய அவர், "நாங்கள் வணிகம் குறித்துப் பேசினோம். அதில் அவர் ஆர்வமாக இருக்கிறார். அதேசமயம் சில காலம் முன்பு பாகிஸ்தானுடன் யுத்தம் நடக்கக் கூடாது என்று பேசியிருந்தோம். இரு நாடுகளுக்குமான வணிகத்தின் காரணமாக, இந்தப் பிரச்னை குறித்து என்னால் பேச முடிந்தது." என்று கூறினார்.
மோதியைத் தனது நல்ல நண்பர் என்று குறிப்பிட்ட டிரம்ப், "அவர் மிகச் சிறந்த மனிதர். கடந்த சில ஆண்டுகளில் என்னுடைய நல்ல நண்பராகவும் மாறிவிட்டார். இருளுக்கு எதிரான வெளிச்சத்தின் வெற்றியைக் குறிக்கும் விதமாக இன்னும் சற்று நேரத்தில் இங்கு விளக்கேற்றுவோம். இது அறியாமைக்கு எதிரான அறிவின் வெற்றி, தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றி" என்றும் டிரம்ப் பேசினார்.
காங்கிரஸ் சொன்னது என்ன?

பட மூலாதாரம், EPA
பிரதமர் மோதி அமைதி காப்பதாக காங்கிரஸ் கட்சி மீண்டும் குற்றம் சாட்டியிருக்கிறது.
அதிபர் டிரம்புக்கும் பிரதமர் மோதிக்கும் இடையிலான உரையாடல் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ்.
"அதிபர் டிரம்ப் தன்னை அழைத்தார் என்பதையும், இருவரும் பேசினோம் என்பதையும் ஒருவழியாகப் பிரதமர் மோதி பொதுவெளியில் ஒத்துக்கொண்டிருக்கிறார். ஆனால், டிரம்ப் தீபாவளி வாழ்த்து கூறியதாக மட்டுமே பிரதமர் சொல்லியிருக்கிறார்," என்று அந்தப் பதிவில் குறிப்பிட்ட ஜெய்ராம் ரமேஷ், மோதி மறைக்கும் விஷயத்தை டிரம்ப் வெளிப்படையாக உடைத்துவிட்டதாகக் கூறுகிறார்.
"தீபாவளி வாழ்த்துகளைத் தாண்டி, ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்வது பற்றியும், அதை நிறுத்துவதற்கான உத்திரவாதம் கொடுத்திருப்பது பற்றியும் அதிபர் டிரம்ப் கூறியிருக்கிறார்.கடந்த ஆறு நாள்களில் நான்காவது முறையாக இந்தியாவின் கொள்கைகளை டிரம்ப் அறிவித்திருக்கிறார்," என்று கூறினார்.
"முன்பு ஆபரேஷன் சிந்தூரை நிறுத்துவதாக பிரதமர் மோதி அறிவிப்பதற்கு முன்பாகவே மே 10-ஆம் தேதி மாலை டிரம்ப் அறிவித்தார்," என்றார் ஜெய்ராம் ரமேஷ்.
இந்திய எண்ணெய் இறக்குமதி குறித்து டிரம்ப் முன்பும் பேசியிருந்தார்

பட மூலாதாரம், Getty Images
பெருமளவு கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதி செய்கிறது ரஷ்யா. அதை அதிக அளவு வாங்கும் நாடுகளாக சீனா, இந்தியா மற்றும் துருக்கி விளங்குகின்றன.
சில தினங்களுக்கு முன் ஒரு கேள்விக்குப் பதில் கொடுக்கும்போது இந்தியாவைப் பற்றிப் பேசியிருந்தார் டிரம்ப். "பிரதமர் நரேந்திர மோதி என் நண்பர். எங்களுக்குள் நல்ல உறவு இருக்கிறது. ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்குவது எனக்கு வருத்தமளிப்பதாக இருந்தது. ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கமாட்டோம் என்று மோதி இன்று எனக்கு உறுதியளித்தார்" என்று கூறியிருந்தார் டிரம்ப்.
ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை இந்தியாவால் உடனடியாக நிறுத்திவிட முடியாது என்று சொன்ன டிரம்ப், இந்த மாற்றம் மெல்ல நடந்து விரைவில் முடிவுக்கு வரும் என்றார்.
டிரம்பின் அப்படிக் கூறியதும், பிரதமர் மோதியை விமர்சித்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
"பிரதமர் மோதி டிரம்பைக் கண்டு அஞ்சுகிறார். இந்தியா ரஷ்ய எண்ணெயை வாங்காது என்பதை டிரம்பே முடிவு செய்து அறிவிக்க மோதி அனுமதித்திருக்கிறார்." என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டார் ராகுல் காந்தி.
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு 50 சதவிகிதம் வரி விதித்தது டிரம்ப் நிர்வாகம். ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் மற்றும் ஆயுதங்கள் வாங்குவதால் இந்தியாவுக்கு விதிக்கப்படும் ''தண்டனை'' என்று அதைக் குறிப்பிட்டார் டிரம்ப்.

பட மூலாதாரம், Reuters
இந்தியாவின் பதில்
சமீபத்தில் இந்திய எண்ணெய் கொள்முதல் பற்றிய டிரம்பின் கருத்துக்கு பதிலளித்தார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால்.
"இந்தியா பெரும் அளவிலான எண்ணெய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்கிறது. தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கும் எரிசக்தி சூழ்நிலையில் இந்திய நுகர்வோரின் தேவைகளைக் காப்பதே எங்களின் பிரதான இலக்கு. சீரான விநியோகத்தை உறுதி செய்வதும், சீரான விலையை தக்கவைப்பதுமே எங்களுடைய இரு முக்கிய நோக்கங்கள்," என்று அவர் கூறினார்.
"அமெரிக்காவைப் பொறுத்தவரை, அவர்களிடமிருந்து எரிசக்தி கொள்முதல் செய்வதை அதிகரிப்பதற்காக பல ஆண்டுகளாக முயற்சி செய்துவருகிறோம். கடந்த சில ஆண்டுகளில் இதில் நல்ல முன்னேற்றம் கிடைத்திருக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான எரிசக்தி ஒத்துழைப்பை அதிகரிக்க இந்த அமெரிக்க நிர்வாகம் ஆர்வம் காட்டுகிறது. பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கின்றன," என்றும் ரந்திர் ஜெய்ஸ்வால் கூறினார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரி விதித்த பிறகும் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைக்கவில்லை.
ஆற்றல் மற்றும் தூய காற்று பற்றிய ஆராய்ச்சிக்கான ஐரோப்பிய சிந்தனைக்குழு மையம் (கிரியா - CREA) கடந்த செப்டம்பர் மாதம் வெளியிட்ட அறிக்கையில், 2.5 பில்லியன் யூரோ (2.91 பில்லியன் அமெரிக்க டாலர்) மதிப்பலான கச்சா எண்ணெயை ரஷ்யாவிடமிருந்து இந்தியா வாங்கியிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
எண்ணெய் பயன்பாட்டில் உலகின் மூன்றாவது பெரிய நாடாக இருக்கும் இந்தியா, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் கொள்முதல் செய்வதில் சீனாவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியாவுக்கு கூடுதலாக 25 சதவிகிதம் வரி விதித்திருந்தது அமெரிக்கா.
கிரியா அறிக்கையின்படி, செப்டம்பர் மாதம் 3.6 பில்லியன் யூரோ மதிப்பிலான புதைபடிவ எரிபொருட்களை ரஷ்யாவிடமிருந்து வாங்கியிருக்கிறது இந்தியா.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












