இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்: திமுக அளித்த வாக்குறுதி என்ன? நடப்பது என்ன?

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தின் காரணம் என்ன? தீர்வு கிடைத்ததா? முழுவிவரம்

பட மூலாதாரம், SSTA

    • எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் பலர், ஊதிய முரண்பாட்டை சரிசெய்யக் கோரி, சென்னையில் கடந்த ஒரு வார காலமாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை எழும்பூர் டிபிஐ வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள், எட்டாவது நாளன்று (அக்டோபர் 5) நகரத்தில் உள்ள பல்வேறு சமுதாயக் கூடங்களுக்கு காவல்துறையால் குழுவாகப் பிரித்து அனுப்பப்பட்டார்கள்.

போராட்டத்தில் எந்தத் தீர்வும் எட்டப்படாத நிலையில், அவர்கள் கலைந்து செல்ல முற்பட்டனர். ஆனால் காவல்துறையினர் அவர்களை வலுக்கட்டாயமாக பேருந்துகளில் ஏற்றி சென்னையின் புறநகர் பகுதி, செங்கல்பட்டு, விழுப்புரம் பகுதிகளுக்குக் கொண்டு சென்று பல மணிநேரம் காக்க வைத்து அனுப்பியதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் பலர், தாங்கள் மோசமாக நடத்தப்பட்டதாகக் கூறி பொதுமக்களிடம் உதவி கேட்கும் வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கடந்த வியாழக்கிழமை அன்று(அக்5) அதிகாலையில், டிபிஐ வளாகத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டது, ஆசிரியர்கள் சாலையில் உறங்கியது, பேருந்துகளில் நெரிசலாகத் தள்ளி அனுப்பப்பட்டது என ஆசிரியர்கள் நடத்தப்பட்ட விதம், அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாதது ஆகிய விஷயங்கள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அதிமுக, தேமுதிக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், கண்டனம் தெரிவித்து, திமுக ஆட்சியை விமர்சித்துள்ளன.

தற்போதைய தகவலின்படி, போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், பள்ளிக்கல்வித்துறை செயலர் காகர்லா உஷாவுடன் நடைபெற்ற பேச்சுவார்தையின் முடிவில் போராட்டத்தைக் கைவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். வரும் திங்கள்(அக்9) முதல் பணிக்குத் திரும்ப உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர்கள் போராடக் காரணம் என்ன?

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தின் காரணம் என்ன? தீர்வு கிடைத்ததா? முழுவிவரம்

பட மூலாதாரம், SSTA

தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசுப் பள்ளிகளில் சுமார் 35,000க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் சுமார் 20,000 ஆசிரியர்கள் 2009ஆம் ஆண்டு மே 31ஆம் தேதிக்குப் பின்னர் நியமிக்கப்பட்டவர்கள்.

கடந்த 2009ஆம் ஆண்டு மே 31ஆம் தேதிக்கு முன்பு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8,370 அடிப்படை சம்பளமும், அதற்குப் பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.5,200 அடிப்படை சம்பளமும் வழங்கப்படுகிறது. அதாவது 2009ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதி முதல் நியமிக்கப்பட்ட சுமார் 20,000 ஆசிரியர்களுக்கு, அவர்களுககு முன்பு பணியில் சேர்ந்தவர்களுடன் ஒப்பிடும்போது குறைவான சம்பளம் வழங்கப்படுகிறது.

சமமான வேலை மற்றும் ஒரே விதமான பதவியை வகிக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு இடையே வித்தியாசமான அடிப்படை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டதால், ஊதிய முரண்பாடு ஏற்பட்டுள்ளது. திமுகவின் 2021 தேர்தல் அறிக்கையில், 311வது கோரிக்கையாக, இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு பிரச்னை சரிசெய்யப்படும், பாதிக்கப்பட்ட 20,000 ஆசிரியர்களுக்கு மற்ற ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவதுபோல காலமுறை ஊதியம் வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் பலமுறை இதை நினைவூட்டியும் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்கிறார் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் சங்கத்தைச் சேர்ந்த ஆசிரியர் சங்கீதா.

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தின் காரணம் என்ன? தீர்வு கிடைத்ததா? முழுவிவரம்

பட மூலாதாரம், SSTA

பிபிசி தமிழிடம் பேசிய ஆசிரியர் சங்கீதா, ''திமுக ஆட்சிக்கு வந்த பின்னரும், ஊதிய முரண்பாடு தொடர்வது குறித்து ஆசிரியர்கள் பலமுறை மனு அளித்துள்ளோம். 2023இல் மூன்று முறை அரசுக்கு நினைவூட்டல் அளித்தோம்.

அதோடு, கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி முதல் போராட்டம் குறித்த பேட்ஜ் அணிந்து பள்ளிக்குச் சென்றோம். ஏற்கெனவே அரசுக்கு தெரிவித்திருந்தபடி, செப்டம்பர் 28ஆம் தேதி எங்கள் சங்கத்தைச் சேர்நத சுமார் 7,000 பேர் டிபிஐ வளாகத்தில் குவிந்தோம்.

உண்ணாநிலை போராட்டத்திலும் ஈடுபட்டோம். ஆனால், எங்கள் நியாயமான கோரிக்கைக்கு த்தீர்வு கிடைக்கவில்லை,'' என்றார்.

போராட்டத்தில் நடந்தது என்ன? தீர்வு எட்டப்பட்டதா?

முதல் இரண்டு நாட்கள் தொடர்ந்து கோஷமிட்ட ஆசிரியர்கள், டிபிஐ வளாகத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். அரசாங்கம் நடத்தும் 'எண்ணும் எழுத்தும்'' பயிற்சியில் கலந்துகொள்ளப் போவதில்லை என்றும் அறிவித்தனர்.

போராட்டத்தின் மூன்றாவது மற்றும் நான்காவது நாட்களில், ஒரு சில ஆசிரியர்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டதால், சுமார் 300 பேர் வரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சிகிச்சைக்குப் பின்னர் அவர்கள் மீண்டும் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

இதையடுத்து, ஐந்தாம் நாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் தீர்வு எட்டப்படவில்லை என்பதால், ஆசிரியர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தின் காரணம் என்ன? தீர்வு கிடைத்ததா? முழுவிவரம்

பட மூலாதாரம், SSTA

நிதிசார்ந்த பிரச்னை என்பதால் உடனே தீர்க்க முடியாது என்றும் இதைக் களைய நிதி மற்றும் பள்ளிக் கல்வித்துறையைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு தீர்வு காணப்படும் என்றும் அமைச்சர் அப்போது தெரிவித்திருந்தார்.

ஆனால், ஏற்கெனவே, இதேபோல ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு, அதன்மூலம் எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை என்றும் கூறுகிறார் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஜெ.ராபர்ட்.

''டிசம்பர் 2022இல் நாங்கள் போராட்டம் நடத்தியபோது, மூவர் கமிட்டி அமைக்கப்படும், ஊதிய முரண்பாடு களையப்படும் என அமைச்சர் எங்களிடம் தெரிவித்தார். அதை அடுத்து, போராட்டத்தைக் கைவிட்டு, பணிக்குத் திரும்பினோம்.

ஆனால், ஜனவரி 2023இல் அமைக்கப்பட்ட மூவர் கமிட்டி இதுவரை அறிக்கை அளிக்கவில்லை. தற்போது மீண்டும் ஒரு கமிட்டி அமைப்பதாகவும், மூன்று மாதங்கள் கழித்து, அறிக்கையின் அடிப்படையில் தீர்வு எட்டப்படும் என்றும் அமைச்சர் கூறுகிறார். இதை நாங்கள் ஏற்க முடியாது,'' என்றார் ராபர்ட்.

பெண்கள் உதவி எண்ணை நாடிய பெண் ஆசிரியர்கள்

போராட்டம் நடந்த 8வது நாளன்று (அக் 7) அதிகாலை ஆசிரியர்கள் சிறு சிறு குழுவாகப் பிரிக்கப்பட்டு, சென்னை நகரத்தின் பல்வேறு சமுதாய நலக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டனர். பெரும்பாலான பெண் ஆசிரியர்கள், சமுதாய நலக்கூடத்தில் உள்ள கழிவறைகள் சுத்தமாக இல்லை என்றும் குடிப்பதற்குத் தண்ணீர் வசதிகூட இல்லை என்றும் கோஷமிட்டனர்.

போராட்டத்தில் மோசமாக நடத்தப்பட்டதாகக் கூறும் ஆசிரியர் யசோதா, ''வியாழக்கிழமை மாலை, போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் சமுதாய நலக்கூடத்தில் இருந்து வெளியேறலாம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தின் காரணம் என்ன? தீர்வு கிடைத்ததா? முழுவிவரம்

பட மூலாதாரம், SSTA

எங்கள் சங்கத்தினர் முடிவு செய்து, பெண் ஆசிரியர்கள் ஊருக்குத் திரும்பலாம் என்றும் பாதுகாப்பிற்காக சில ஆண் ஆசிரியர்கள் அவர்களுடன் செல்லலாம் என்றும் முடிவு செய்தோம். சங்கத்தின் தலைவர்கள் தொடர்ந்து சென்னையில் தங்கியிருந்து தீர்வு கிடைத்த பின்னர் வருவார்கள் என முடிவு செய்யப்பட்டது.

ஆனால் வியாழக்கிழமை இரவு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்த எங்களை காவலர்கள் வலுக்கட்டயமாக அழைத்து வந்து வேறு பேருந்தில் ஏற்றி, பல இடங்களில் பேருந்தை நிறுத்தி வைத்து எங்களைக் காக்க வைத்தனர்,'' என அவர் வருத்தத்துடன் கூறுகிறார்.

பேருந்தில் ஏற்றப்பட்ட ஆசிரியர்களிடம் பல மணிநேரம் கழித்துத்தான் அவர்கள் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டில் இறக்கிவிடப்படுவார்கள் என்று கூறப்பட்டதாகவும், ஆனால் பல மணிநேரம் பல இடங்களில் பேருந்தை நிறுத்தி வைத்திருந்தாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

மற்றொரு ஆசிரியர் சேகர், பேருந்தில் கூட்டமாக ஆசிரியர்களை ஏற்றி, அச்சுறுத்தியதாகவும் குற்றம் சாட்டுகிறார். சென்னை நகரத்தில் இருந்து வெளியேறிய பின்னர், பேருந்து எங்கு செல்கிறது எனப் பலமுறை கேட்டபோதும் எந்தப் பதிலும் தரப்படவில்லை என்கிறார் அவர்.

''பெண் ஆசிரியர்கள் பலரும் பெண்கள் உதவி எண் 181க்கு புகார் அளித்தனர். ஆனால் காவலர்கள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்வதாக பெண்கள் உதவி எண் அதிகாரிகளிடம் சொல்லிவிட்டு, விழுப்புரம் பேருந்து நிலையத்தில் இறங்கிவிட்டனர்,'' என்கிறார் சேகர்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் என்ன சொல்கிறார்?

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தின் காரணம் என்ன? தீர்வு கிடைத்ததா? முழுவிவரம்

பட மூலாதாரம், SSTA

இடைநிலை ஆசிரியர்கள் சந்திக்கும் ஊதிய முரண்பாடு மற்றும் போராட்டத்தில் அவர்கள் நடத்தப்பட்ட விதம் குறித்த விமர்சனங்கள் பற்றி விளக்கம் கேட்பதற்காக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷை தொடர்புகொள்ள பலமுறை தொலைபேசி வாயிலாக முயன்றோம். ஆனால் பலன் இல்லை. பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷாவை தொலைபேசி மூலமாகத் தொடர்புகொள்ளப் பலமுறை முயன்றும் பலன் இல்லை.

ஆசிரியர்களின் தொடர் போராட்டம் குறித்து முன்னர், ஊடகங்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், வேலைநிறுத்த போராட்டத்தை நிறுத்திவிட்டு ஆசிரியர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்றார்.

''இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு பற்றிய அறிக்கை ஒன்றைத் தயார் செய்ய ஒரு குழு அமைக்கப்படும். அந்தக் குழு, மூன்று மாத காலத்திற்குள் பரிந்துரைகளை அளிக்கும். அவை முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு உரிய முடிவு எடுக்கப்படும்.

இதை ஏற்று வேலை நிறுத்தத்தை ஆசிரியர்கள் கைவிட்டு, அரசாங்கம் நடத்தும் முக்கியப் பயிற்சியான 'எண்ணும் எழுத்தும்' பயிற்சியில் பங்குபெற வேண்டும். பயிற்சியை முடித்து பணிக்குத் திரும்ப வேண்டும்,'' என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், போராட்டத்தில் ஈடுபட்டு ஆசிரியர்கள் தங்களைத் தாங்களே வருத்திக்கொள்ள வேண்டாம், போராட்டம் மூலமாக, பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் முதல்வருக்கு மன உளைச்சலை ஏற்படுத்த வேண்டாம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

முதல்வர் ஸ்டாலினின் நிலைப்பாடு என்ன?

மு.க.ஸ்டாலின்

பட மூலாதாரம், DMK

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில், பலமுறை இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின், தற்போது எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் இருப்பதாக ஆசிரியர்கள் விமர்சிக்கின்றனர்.

கடந்த 2018 டிசம்பரில் போராட்டம் நடத்திய ஆசிரியர்களை சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் என்ற பொறுப்பில் இருந்த ஸ்டாலின், நேரில் சந்தித்து, திமுக ஆட்சி வந்த பின்னர் ஊதிய முரண்பாடு சரி செய்யப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

''அதிமுக ஆட்சியின்போது நாங்கள் நடத்திய ஒவ்வொரு போராட்டத்திற்கும் ஆதரவு தெரிவித்தவர் ஸ்டாலின். உண்மையில், திமுக ஆட்சி வந்ததும், எங்கள் கோரிக்கை நிறைவேறும் என்றுதான் நாங்கள் கனவு கண்டோம்.

ஆனால் எங்களுக்கு தீர்வும் தரப்படவில்லை. போராட்டத்தில் ஈடுபட்ட எங்களை மோசமாகவும் அரசு நடத்தியுள்ளது. அதிமுக ஆட்சியில் எங்களை காவல்துறையினர் தாக்கியது பற்றி விமர்சித்த ஸ்டாலின், தற்போது முதல்வராக இருப்பதால் எந்தக் கருத்தும் சொல்லாமல் இருக்கிறார். எங்கள் மீதான வன்முறை மிகவும் மோசமானது,'' என்று போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் கலைவாணி கூறுகிறார்.

ஸ்டாலினின் போக்கை விமர்சித்துள்ள, தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக தற்போது பதவி வகிக்கும், எடப்பாடி பழனிச்சாமி, ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையைக்கூட முழுமையாகப் பரிசீலிக்காமல் வலுக்கட்டாயமாக குடும்பத்தோடும் குழந்தைகளோடும் கைது செய்ததையும், அடிப்படைவசதிகள்கூட இல்லாமல் ஆசிரியர் குடும்பங்களை அடைத்து வைத்திருப்பதை, வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஊடகத்தினரிடம் குறிப்பிடுகையில், ஆசிரியர்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்ளக்கூடாது என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)