நியூஸ்கிளிக் வழக்கு: பத்திரிகை சங்கங்கள் தலைமை நீதிபதிக்குக் கடிதம்

பட மூலாதாரம், Getty Images
நியூஸ்கிளிக் செய்தி இணையதளத்தின் நிறுவனர் மற்றும் மனிதவளத் துறைத்தலைவர் ஆகியோர் ஏழு நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், பத்திரிகையாளர்கள் வீட்டில் சோதனை நடத்துவதற்கும் அவர்கள் மீது வழக்கு பதிவதற்கும் முறையான விதிமுறைகளை வகுக்குமாறு கோரி, நாடு முழுதுமுள்ள பத்திரிகையாளர் சங்கங்கள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதியுள்ளன.
சீனாவிடமிருந்து நிதி பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டிற்காக, நியூஸ்க்ளிக் செய்தி இணையதளத்தோடு தொடர்புடைய பத்திரிகையாளர்களின் வீடுகள் உட்பட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 3) டெல்லி போலீசார் சோதனை நடத்தி அவர்களின் மீது வழக்கு பதிவு செய்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து நேற்று (புதன்கிழமை, அக்டோபர் 4) நியூஸ்க்ளிக் நிறுவனர் பிரபீர் புர்கயஸ்தா மற்றும் அந்நிறுவனத்தின் மனிதவளத் துறைத்தலைவர் அமித் சக்ரவர்த்தி ஆகியோரை நீதிமன்றம் ஏழு நாள் போலீஸ் காவலுக்கு அனுப்பியது.
அவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய பிரஸ் கிளப், மும்பை பிரஸ் கிளப், இந்திய பத்திரிகையாளர்கள் சங்கம், ஊடகத்தில் இருக்கும் பெண்களின் கூட்டமைப்பு, உள்ளிட்ட 18 பத்திரிகை ஊடக அமைப்புகள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட்டுக்குக் கடிதம் எழுதியுள்ளன.
அக்கடிதத்தில், ‘பத்திரிகையாளர்களின் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக’ தெரிவிக்கப்பட்டிருக்கிறது. “பத்திரிகைத்துறை ‘பயங்கரவாதம்’ அல்ல. இதுபோன்ற நடவடிக்கைகள் எங்கு சென்று முடியும்,” என்றும் அதில் கூறப்படிருக்கிறது.
“பத்திரிகை ஆசிரியர்கள் மீதும் நிருபர்கள் மீதும் சிறு விஷயங்களுக்கும் தேசத்துரோக வழக்குகளும் பயங்கரவாத வழக்குகளும் பதியப்பட்டிருக்கின்றன. இவை பத்திரிகையாளர்களைத் துன்புறுத்தும் வகையில் அமைந்திருக்கின்றன,” என்றும் இச்சங்கங்கள் தங்கள் கடிதத்தில் தெரிவித்திருக்கின்றன.

பட மூலாதாரம், Getty Images
மேலும், அக்கடிதம், பத்திரிகையாளர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல, எனினும், விசாரணை என்ற பெயரில் கருவிகளைப் பறிமுதல் செய்வதில் ஒரு தீய நோக்கம் இருப்பதாகக் கூறுகிறது. “பத்திரிகைத்துறை மிரட்டப்படுவது சமூகத்தின் ஜனநாயக அடிப்படையை சீர்குலைக்கும்,” என்றும் அக்கடிதம் கூறுகிறது.
மேலும் இச்சங்கங்கள், தலைமை நீதிபதியிடம் மூன்று கோரிக்கைகளையும் வைத்திருக்கின்றன. அவை:
- பத்திரிகையாளர்களின் கைபேசிகளைப் பறிமுதல் செய்வதைத் தடுக்கும் வகையில் விதிமுறைகளை வகுப்பது,
- பத்திரிகையாளர்களை விசாரிப்பதற்கான வழிகாட்டுதல்களை உருவக்குவது,
- பத்திரிகையாளர்களைப் பற்றிய தெளிவில்லாத விசாரணைகள் மூலம் நீதிமன்றங்களை திசைதிருப்பும் வகையில் நடந்துகொள்ளும் விசாரணை அதிகாரிகளை அவர்கள் செயலுக்குப் பொறுப்பாக்குவது
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












