பிகார் சட்டமன்ற தேர்தலில் தேஜஸ்விக்கு பின்னடைவு ஏன்? லாலு கட்சியின் எதிர்காலம் என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ரஜ்னீஷ் குமார்
- பதவி, பிபிசி ஹிந்தி
பிகாரில் முதல் கட்ட வாக்குப் பதிவுக்கு சற்று முன்பு, மழை பெய்து கொண்டிருந்தது. வானிலை மாற்றத்தால், அரசியல் தலைவர்களை ஏற்றிச் செல்லும் ஹெலிகாப்டர்கள் புறப்படுவதில் சிரமம் ஏற்பட்டது.
தேஜஸ்வி யாதவின் சகோதரரான, தேஜ் பிரதாப் யாதவ் நவம்பர் 1ஆம் தேதியன்று மஹூவாவுக்கு வரவிருந்தார். அவரது ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கான தளத்தின் முன்பாக ஒரு கூட்டம் கூடியிருந்தது. ஹெலிகாப்டர் தரையிறங்கும் நேரத்திற்காக மக்கள் வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால், வானில் கருமேகங்கள் சூழ்ந்திருந்தன.
பின்னர் தேஜ் பிரதாப்பின் மக்கள் தொடர்புக் குழு, பாதகமான வானிலை காரணமாக அவரால் பறக்க முடியவில்லை என்று கூறியது.
தேஜ் பிரதாப் ஆர்ஜேடியிலிருந்து வெளியேறி தனி கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிட்டார்.
அதே நேரத்தில், பிகார் முதல்வர் நிதிஷ் குமார் மஹூவாவில் ஒரு பேரணியை நடத்தினார். நிதிஷ் சாலை வழியாக வந்தார். அவர் மேடையில் ஏறி, ஒரு சிறிய உரையை நிகழ்த்தினார். லோக் ஜன்சக்தி(ராம் விலாஸ்) கட்சி வேட்பாளருக்காக பிரசாரம் செய்வதற்காக அவர் வந்திருந்தார்.
அக்கட்சியின் வேட்பாளர் சஞ்சய் சிங்கை முன்னிறுத்தி, "நீங்கள் அவருக்கு வாக்களிப்பீர்களா? நான் அவருக்கு மாலை அணிவிக்கவா?" என்று கேட்டார். கூட்டம் அதற்கு ஒப்புக்கொண்டது. நிதிஷ் அவருக்கு மாலை அணிவித்தார்.
தேஜஸ்வி யாதவும், பாதகமான வானிலை காரணமாகப் பல பேரணிகளை ரத்து செய்தார். ஆனால், 74 வயதான நிதிஷ் குமார், ஹெலிகாப்டர் ஓட்டுவதற்கு ஏற்ற வானிலை வர வேண்டுமென்று காத்திருக்கவில்லை.

பட மூலாதாரம், Hindustan Times via Getty Images)
பாதை எளிதாக இல்லை
கடந்த 2020ஆம் ஆண்டு பிகார் சட்டமன்றத் தேர்தலின்போது தேஜஸ்வி யாதவ் 200க்கும் மேற்பட்ட பேரணிகளில் உரையாற்றினார். இந்த முறை, அவர் 100க்கும் குறைவான பேரணிகளிலேயே உரையாற்றினார்.
தேஜஸ்வி யாதவ் தனது சொந்தத் தொகுதியான ரகோபூரில் ஆரம்பக் கட்ட வாக்கு எண்ணிக்கையின் போக்குகளில் முன்னிலை வகித்தார். இறுதியில், அவர் 14,532 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தேஜ் பிரதாப் யாதவ் மஹூவாவில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
கடந்த 2010ஆம் ஆண்டு ரகோபூரில் ரப்ரி தேவியை தோற்கடித்த சதீஷ் குமார், தேஜஸ்விக்கு கடுமையான போட்டியாக இருந்தார்.
தேஜஸ்வி யாதவ் 2015 சட்டமன்றத் தேர்தலில் ரகோபூரில் இருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். அது அவரது முதல் தேர்தல்.
அப்போது, நிதிஷ் குமாரும் லாலு யாதவும் இணைந்து தேர்தலில் போட்டியிட்டனர். இந்தக் கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்றது. மேலும் தேஜஸ்வி தனது முதல் பதவிக் காலத்தில் மாநிலத்தின் துணை முதல்வர் ஆனார்.
இரண்டு ஆண்டுகளுக்குள் நிதிஷ் குமார் மீண்டும் பாஜகவில் இணைந்தார். தேஜஸ்வி யாதவ் சுமார் ஒன்றரை ஆண்டுக்கு பின்தனது துணை முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பின்னர் அவர் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரானார்.
தேஜஸ்வி யாதவ் மீது ஊழல் குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டது. ஐ.ஆர்.சி.டி.சி நில மோசடி வழக்கில் அவருக்கு ஆகஸ்ட் 2018ஆம் ஆண்டு ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்த வழக்கு பாட்னாவில் உள்ள மூன்று ஏக்கர் நிலம் தொடர்பானது. அங்கு ஒரு வணிக வளாகம் முன்மொழியப்பட்டுள்ளது. 2006ஆம் ஆண்டு ரயில்வே அமைச்சராக இருந்தபோது ஒரு தனியார் நிறுவனத்திற்கு ஹோட்டல் நடத்துவதற்கான ஒப்பந்தத்தை வழங்கியதாகவும், அதற்கு ஈடாக ஒரு விலையுயர்ந்த நிலத்தைப் பெற்றதாகவும் லாலு யாதவ் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
தேஜஸ்வியின் தலைமையில், 2015, 2020, 2025 ஆகிய மூன்று தேர்தல்களில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் போட்டியிட்டுள்ளது. 2015இல் ஆர்ஜேடியும் நிதிஷ் குமாரும் ஒன்றாக இருந்தனர். அந்தக் கூட்டணி வெற்றி பெற்றது.
ஆர்ஜேடி 80 இடங்களைப் பெற்று மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது. 2020இல் ஆர்ஜேடி காங்கிரசுடன் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிட்டது. நிதிஷ் குமார் பாஜகவுடன் இணைந்தார்.
இந்தத் தேர்தலிலும், ஆர்ஜேடி 75 இடங்களை வென்று மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும், 2025 தேர்தல் தேஜஸ்வி தலைமையில் ஆர்ஜேடிக்கு 2010 தேர்தலைப் போலவே அமைந்தது. அப்போது,(2010-ல்) ஆர்ஜேடி 22 தொகுதிகளில் மட்டுமே வென்றது.
இந்நிலையில், ஆர்ஜேடியின் அடுத்த கட்டம் என்ன? 1990களில் லாலு யாதவ் அடைந்த அதே நிலையை தேஜஸ்வி யாதவ் அடைய முடியுமா?
முன்னாள் ஆர்ஜேடி தலைவர் பிரேம் குமார் மணி இதுகுறித்துப் பேசுகையில், எந்தக் கட்சியும் ஒரு சாதியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு போட்டியிட முடியாது என்றார். மேலும், "யாதவ சமூகத்தினர்கூட ஆர்ஜேடியுடன் முழுமையாக ஒன்றிணையவில்லை என்று நான் கருதுகிறேன்" என்று குறிப்பிட்டார்.
"தனபூரில் யாதவர்கள் ஆர்ஜேடியுடன் முழுமையாக இணைந்து இருந்தால், ராம்கிருபால் யாதவ் வெற்றி பெற்றிருக்க மாட்டார், ரித்லால் யாதவ்தான் வெற்றி பெற்றிருப்பார். ரகோபூரில் நெருக்கமான போட்டியும் இருந்திருக்காது" என்கிறார் பிரேம் குமார் மணி.
"முஸ்லிம்கள்கூட அவர்களை விட்டு விலகிச் செல்கிறார்கள். கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் சிவானில் ஹினா ஷஹாப் மூன்று லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்றார். அவர் ஆர்ஜேடி வேட்பாளராக இல்லாவிட்டாலும், முஸ்லிம்கள் அவருக்கு வாக்களித்தனர் என்பது தெளிவாகிறது. அதோடு, ஓவைசியின் கட்சி சீமாஞ்சலில் ஐந்து இடங்களை வென்றிருக்காது."
லாலு யாதவ் இந்த ஆண்டு ஜூன் 24ஆம் தேதியன்று, தொடர்ந்து 13வது முறையாக ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தேசிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 28 வருட பழமையான கட்சிக்கு லாலு யாதவ் தவிர வேறொரு தேசிய தலைவர் இருந்தது இல்லை. 77 வயதாகும் அவர் பல்வேறு உடல்நலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளார்.
லாலு யாதவின் அரசியல்
மார்ச் 10, 1990 அன்று, லாலு யாதவ் பிகாரின் 25வது முதல்வராகப் பதவியேற்றார். இப்போது லாலு யாதவ் தீவிர அரசியலில் இருந்து வெகு தொலைவில் இருக்கிறார். ஆனால் கட்சிக்குள் அவருக்கு இன்னும் கணிசமான முக்கியத்துவம் உள்ளது.
அவர் கல்லூரியில் படிக்கும்போதே அரசியலில் நுழைந்தார். 1977ஆம் ஆண்டு சாப்ரா மக்களவைத் தொகுதியில் இருந்து தனது முதல் தேர்தலை எதிர்கொண்டவர், அதில் வெற்றியும் பெற்றார். அப்போது அவருக்கு வயது 29 மட்டுமே.

பட மூலாதாரம், Getty Images
அவர் 42 வயது இருந்தபோதே நான்கு பெரிய தேர்தல்களிலும் வெற்றி பெற்றிருந்தார். அவை, 1977, 1989இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களும், 1980, 1985இல் நடந்த பிகார் சட்டமன்றத் தேர்தல்களும் ஆகும்.
லாலு யாதவ் முதலமைச்சர் ஆனபோது அவரது ஆட்சி பாணி முற்றிலும் புதியதாக இருந்தது. தொடக்க மாதங்களில், பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு திடீர் வருகை தருவார், அதிகாரிகளை பகிரங்கமாகக் கண்டிப்பார், ஏழைகளுடன் உணவு உட்கொள்வார், கிராமங்களில் அமைச்சரவைக் கூட்டங்களை நடத்துவார்.
முதலமைச்சரான பிறகு லாலு யாதவ் 1992ஆம் ஆண்டு பிகாரின் அதிகாரபூர்வ மொழியாக மைதிலி மொழிக்கு இருந்த அந்தஸ்தை ரத்து செய்தார்.
கடந்த 1990களில் ஹிந்துஸ்தான் டைம்ஸின் அரசியல் நிருபராக இருந்த சஞ்சய் சிங், "மைதிலி மொழி பிராமணர்களுடன் தொடர்புடையது. லாலு யாதவின் எழுச்சிக்கு முன்பு, மைதிலி பிராமணர்கள் பிகார் அரசியலில் ஆதிக்கம் செலுத்தினர். அவர் ஒவ்வொரு மட்டத்திலும் இந்த ஆதிக்கத்தை உடைக்க விரும்பியதாகக் கூறப்படுகிறது.
லாலு யாதவ் பிற்படுத்தப்பட்ட, தலித் மற்றும் சிறுபான்மை சமூகங்களின் சேவகராக ஒரு பிம்பத்தை வளர்த்துக் கொண்டார். பல தசாப்த கால அரசியல் வாழ்க்கை இருந்தபோதிலும், அவர் இந்த பிம்பத்தை உடைக்க விரும்பவில்லை" என்று விளக்கினார்.

பட மூலாதாரம், Getty Images
லாலு பார்த்த பிகார் இப்போது இல்லையா?
பிகார் மாநிலம், லாலு யாதவ் ஆட்சி செய்தபோது இருந்ததைப் போல் இப்போது இல்லை. ஒரு காலத்தில் முதல்வர் பதவியை வகித்த நபரைப் போல அவரும் இல்லை. அவரது உடல்நிலை சரியில்லாமல், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளார். அவர் தீவிர அரசியலில் இருந்தும் விலகி இருக்கிறார்.
"லாலு யாதவின் மரபு என்பது தேஜஸ்வியின் பலம். யாதவர்களும் முஸ்லிம்களும் இன்னும் ஆர்ஜேடியுடன் இருக்கிறார்கள். மற்றொன்று, லாலு மற்றும் அவரது மனைவி ராப்ரி தேவி ஆட்சியின் கீழ் பிகார் தடம் புரண்டது.
தேஜஸ்வி யாதவ் இன்னும் அந்த அரசியல் மரபின் நிழலில் இருந்து தப்பிக்க முடியாமல் இருக்கிறார். தேர்தல்கள் வரும்போதெல்லாம், யாதவர்கள் ஆட்சிக்கு வந்தால் அவர்கள் சட்டம் ஒழுங்கைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொள்வார்கள் என்ற கதை வலுப்பெறுகிறது," என்று தெரிவித்தார் சஞ்சய் சிங்.
மேலும், "தேஜஸ்வி யாதவின் எதிர்காலம் மிகவும் கடினமாக உள்ளது. ஊழல் வழக்கில் அவரது விசாரணை டிசம்பர் 4ஆம் தேதி தொடங்கும். குடும்பத்திற்குள் ஏற்கெனவே ஒரு பிளவு ஏற்பட்டுள்ளது. லாலு யாதவ் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். காங்கிரஸ் மிகவும் பலவீனமான நிலையில் இருந்தபோது அவரின் எழுச்சி ஏற்பட்டது," என்று சஞ்சய் சிங் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
"கடந்த 1989இல் பாகல்பூர் கலவரத்திற்குப் பிறகு, முஸ்லிம்கள் மாற்று வழிகளைத் தேடிக் கொண்டிருந்தனர். ஆனால் இப்போது நிலைமை முற்றிலும் வேறாக உள்ளது. பாஜக மிகவும் வலுவான கட்சி. நிதிஷ் குமாருடன் இருப்பது ஒரு நல்ல சமூக சமன்பாட்டை அதற்கு உருவாக்கியுள்ளது. அத்தகைய சூழ்நிலையில், யாதவர்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்தாலும்கூட, அவர்களால் ஆர்ஜேடி வெற்றி பெறுவதற்கு உதவ முடியாது," என்கிறார் அவர்.
ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் சிவானந்த் திவாரி, தேஜஸ்வி யாதவ் தற்போது தனது தந்தையின் அரசியலைச் செய்யத் தன்னால் முடியுமென்று நினைத்தால், அது தவறான மதிப்பீடு என்கிறார்.
"தேஜஸ்வி யாதவ் முழு கட்சியையும் ஒரு நபர் சார்ந்ததாக மாற்றியுள்ளார். முழு கட்சியின் பிரசாரமும் ஒரு நபரை மையமாகக் கொண்டிருந்தது. லாலு யாதவின் காலத்திலும் நிலைமை அப்படியே இருந்தது. இப்போது குடும்பத்திற்கு உள்ளேயே அதிகாரப் போராட்டம் தொடங்கிவிட்டது.
நான் ராப்ரி தேவியின் அரசில் அமைச்சராக இருந்தேன். அரசாங்கம் எவ்வாறு செயல்பட்டது என்று எனக்குத் தெரியும். லாலு ஆட்சியின்போது சட்டம் ஒழுங்கு ஒரு குடும்பத்தின் கைகளில் விழுவதாக மக்கள் கூறினால், அதில் ஓரளவு உண்மையும் இருக்கிறது," என்று சிவானந்த் திவாரி கூறுகிறார்.
அதோடு, "யாதவர்கள் தேஜஸ்வி யாதவுடன் இருக்கிறார்கள். முஸ்லிம்கள் கட்டாயத்தின் பேரில் அவருடன் இருக்கிறார்கள்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Hindustan Times via Getty Images
'பழைய வாக்கு வங்கியைக்கூட இழக்கும் நிலைமை'
டாடா சமூக அறிவியல் நிறுவனத்தின் முன்னாள் பேராசிரியரான புஷ்பேந்திரா, "ராஷ்ட்ரிய ஜனதா தளத்தால் புதிய வாக்காளர்களை ஈர்க்க முடியவில்லை" என்கிறார்.
"தேசிய ஜனநாயக கூட்டணியைப் பார்த்தால், யாதவர்கள் மற்றும் முஸ்லிம்கள் தவிர பிற அனைத்து சாதிகளும் அதில் உள்ளன. ஆனால் ஆர்ஜேடி-யால் புதிய வாக்காளர்களை ஈர்க்க முடியவில்லை. பிகார் நிலப் பிரபுத்துவத்தின் பிடியில் இருந்தபோது லாலு யாதவின் எழுச்சி ஏற்பட்டது.
அவர் அந்தப் பிடியைத் தாக்கி முறியடித்தார். தனது சொந்த பலத்தில் பத்து ஆண்டுகள் ஆட்சி செய்ய முடியும் என்பதை அவர் அறிந்திருந்தார். ஆனால் நிலப் பிரபுத்துவம் பலவீனமடைந்த பிறகு, அவரால் தாம் சாதிக்க வேண்டிய விஷயத்தை அடைய முடியவில்லை. நிதிஷ் குமார் எந்தப் புரட்சிகர மாற்றங்களையும் செய்யவில்லை. ஆனால் சாலைகள் மற்றும் மின்சாரத்தை வழங்கிய பெருமையை நிச்சயமாக அவருக்கு வழங்கலாம்," என்று விளக்கினார் பேராசிரியர் புஷ்பேந்திரா.
அவர் இதுகுறித்துக் கூறுகையில், "எதிர்க்கட்சிகள் வாக்குறுதிகளை மட்டுமே அளிக்க முடியும். ஆனால் ஆளும் கட்சிக்குத் தனது வாக்குறுதிகளைச் செயல்படுத்தும் உரிமை உண்டு. அதாவது, நான் சொல்ல வருவது என்னவெனில், மகா கூட்டணியின் பல நல்ல வாக்குறுதிகள் தேசிய ஜனநாயக கூட்டணியால் அவர்களின் அரசாங்கத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளன," என்றார்.

"பிகாரில் 40 லட்சத்திற்கும் அதிகமான திட்டப் பணியாளர்கள் உள்ளனர். அதன் பொருள் மதிய உணவு தயாரிப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பிற ஊழியர்களின் சம்பளம் தேர்தலுக்கு முன்பு இரட்டிப்பாக்கப்பட்டது. பிகாரில் லட்சக்கணக்கான பெண்களுக்குத் தலா ரூ.10,000 வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.
மறுபுறம், பிகாரில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு அரசு வேலை போன்ற தேஜஸ்வி யாதவ் அளித்த வாக்குறுதிகளை யாரும் நம்பவில்லை. ஆளும் கட்சி இவ்வளவைச் செய்து கொண்டிருக்கும்போது அதை யார் நம்புவார்கள்?" என்கிறார் புஷ்பேந்திரா.
ஆர்ஜேடி குடும்ப வட்டத்தில் இருந்து வெளியே வர வேண்டுமெனவும் யாதவர்களும் இந்துத்துவா அரசியலை விரும்புகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் புஷ்பேந்திரா கூறுகிறார்.
"முஸ்லிம்கள் ஆர்ஜேடியை ஆதரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மேலும், இந்துத்துவா அரசியல் யாதவர்களுக்கு விதிவிலக்கல்ல. இதனால் புதிய வாக்காளர்களைச் சேர்ப்பதற்குப் பதிலாக, அவர்கள் தங்கள் பழைய வாக்கு வங்கியையும் இழக்க நேரிடும்," என்கிறார் அவர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












