தோனிக்கு அடுத்து சிஎஸ்கேவுக்கு தலைமை தாங்கப் போவது யார்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், க.போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
ஐ.பி.எல் டி20 தொடரில் 5 முறை சாம்பியன்ஷிப் பட்டம், 5 முறை பைனல் வரை சென்றது என ஒவ்வொரு லீக்கிலும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் (சி.எஸ்.கே) அணி கலக்கி வருகிறது.
எதிர்வரும் 2024 ஐ.பி.எல் சீசனில் சி.எஸ்.கே அணி என்ன செய்யப் போகிறது, எந்தெந்த வீரர்களை ஏலத்தில் வாங்க இருக்கிறது, என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
இதற்கு முக்கியக் காரணம் அந்த அணியின் கேப்டன் தோனி. அவரது வியூகம், களத்தில் எந்தெந்த வீரர்களை எப்படிப் பயன்படுத்தப் போகிறார், இந்த முறை கோப்பையை வெல்வாரா என்பதைக் காண ஒவ்வொரு லீக்கிலும் ரசிகர்கள் ஆர்வமாக இருப்பார்கள்.
கேப்டனாகத் தொடரும் தோனி
ஐ.பி.எல் டி20 தொடர்களின் ஒவ்வொரு போட்டியையும், சி.எஸ்.கே அணி தொடக்கம் முதல் நாக்-அவுட் சுற்றுக்குச் செல்லும்வரை திட்டமிட்டு அணுகும். சி.எஸ்.கே இல்லாத நாக்-அவுட் சுற்றுகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவுக்கு அணியைக் கட்டுக்கோப்பாக வழிநடத்தி, வியூகங்களை வகுத்து வெற்றியடைபவர் தோனி.
அதற்கு முக்கியக் காரணம் தோனியின் கேப்டன்ஷிப் மட்டுமல்ல, அணியில் இடம் பெறும் வீரர்களும்தான் என்று கூற வேண்டும். ஐ.பி.எல் ஏலத்தில் ஒவ்வொரு வீரரையும் சி.எஸ்.கே நிர்வாகம் பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுத்து அணிக்குள் கொண்டு வந்து சிறப்பாகச் செயல்படும்.
அந்தவகையில் 2024-ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்கான ஏலம் டிசம்பர் 19ம் தேதி துபாயில் நடக்க இருக்கிறது. இதற்காக ஒவ்வொரு அணியும் தக்கவைத்துக் கொண்ட, விடுவித்த வீரர்கள் பட்டியலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தன. அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக எம்.எஸ். தோனி தக்கவைக்கப்பட்டுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
யாரெல்லாம் விடுவிக்கப்பட்டனர்?
கடந்த சீசனில் அதிகபட்சமாக ரூ.16.25 கோடிக்கு வாங்கப்பட்ட இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் விடுவிக்கப்பட்டுள்ளார். ஐ.பி.எல் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக ராயுடு அறிவித்ததையடுத்து, ரூ.6.75 கோடிக்கு வாங்கப்பட்ட அவரும் விடுவிக்கப்பட்டார். இது தவிர, தென் ஆப்பிரிக்காவின் டுவைன் பிரிட்டோரியஸ், பகத் வர்மா, சுப்ரன்சு சேனாபதி, ஆகாஷ் சிங், நியூசிலாந்து வீரர் கெயில் ஜேமிசன், சிசான்டா மகாலா ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.
தற்போது சி.எஸ்.கே அணியின் கையிருப்பாக ரூ.31.40 கோடி இருக்கிறது. இந்தத் தொகையை வைத்து, எதிர்வரும் ஏலத்தில் எந்தெந்த வீரர்களை வாங்கப் போகிறது, எந்தெந்த வீரர்களை கைப்பற்றுவதற்கு சி.எஸ்.கே நிர்வாகம் முயற்சிக்கும் என்பது குறித்து அலசலாம்.
ஆல்ரவுண்டர்கள் மீது தீராக் காதல்
சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் ஆல்-ரவுண்டர்கள் மீது தீராக் காதல் கொண்டது. சி.எஸ்.கே அணி உருனதில் இருந்து அல்பி மோர்கல், ஸ்காட் ஸ்டைரிஸ், ஜேக்கப் ஓரம், டுவைன் பிராவோ என ஆல்-ரவுண்டர்கள் மீதான காதல் தொடர்ந்து வருகிறது. ஸ்பெசலிஸ்ட் பேட்ஸ்மேன் மீதான நம்பிக்கை வைப்பதைவிட, ஆல்ரவுண்டர்கள் மீதுதான் கேப்டன் தோனியும், நிர்வாகமும் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர் என்று ஐ.பி.எல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சி.எஸ்.கே கேப்டன் தோனி ஒருமுறை அளித்த பேட்டியில்கூட “இனிவரும் காலங்களில் லீக் போட்டிகளில் ஸ்பெசலிஸ்ட் பேட்டர், பந்துவீச்சாளர்களுக்கு அதிக கவனம் செலுத்தப்படாது. மாறாக ஆல்ரவுண்டர்கள் மீதே அதிக ஈர்ப்பு இருக்கும்,” எனத் தெரிவித்திருந்தார்.
கடந்த ஆண்டு ஐ.பி.எல் சீசனில்கூட ஆல்ரவுண்டர்களைத்தான் சிஎஸ்கே நிர்வாகம் அதிகளவில் விலைக்கு வாங்கி, அணியில் தக்கவைத்தது.
தற்போதைய நிலவரப்படி அம்பதி ராயுடு விடுவிக்கப்பட்ட நிலையில் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன் என்ற வகையில், ரஹானே, கெய்க்வாட், கான்வே, ஷேக் ரஷீத் ஆகியோர் மட்டுமே உள்ளனர்.
ஆனால், ஆல்ரவுண்டர்களைப் பொறுத்தவரை ரவீந்திர ஜடேஜா, ராஜ்வர்தன் ஹங்கேர்கர், மொயின் அலி, அஜெய் மண்டல், ஷிவம் துபே, நிசாந்த் சிந்து, சான்ட்னர், பகத் வர்மா ஆகியோர் உள்ளனர்.
கடந்த சீசனில் ரூ.16 கோடிக்கு வாங்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் பெரிதாக எந்தப் பங்களிப்பும் அணிக்குச் செய்யவில்லை. அவரது தேசிய அணிக்கான பணியும் அவருக்கு அதிகம் என்பதாலும், உடற்தகுதிப் பிரச்சினை இருப்பதாலும் அவரை சி.எஸ்.கே நிர்வாகம் விடுவித்துள்ளது. மற்றவகையில் எப்போதுமே சி.எஸ்.கே அணியில் ஆல்ரவுண்டர்களுக்கு இடம் அதிகமாகவே இருக்கும்.
பென் ஸ்டோக்ஸ், பிரிட்டோரியஸ் போன்ற ஆல்ரவுண்டர்கள் விடுவிக்கப்பட்டதால், ஏலத்தில் சிறந்த ஆல்ரவுண்டர்களை ஃபார்மில் இருக்கும் வீரர்களை விலைக்கு வாங்க சி.எஸ்.கே நிர்வாகம் அதிக ஆர்வம் காட்டும் என்று கூறப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
நடுவரிசைக்கு வலுவான பேட்டர் யார்?
அணியிலிருந்து அம்பதி ராயுடு விடுவிக்கப்பட்டதால், நடுவரிசைக்கு பலமான பேட்டர் அவசியம் என்பதை சி.எஸ்.கே நிர்வாகம் நன்கு அறிந்துள்ளது. ராயுடு ஒரு ‘மேட்ச் வின்னர்’ என்பதை சி.எஸ்.கே நிர்வாகம் நன்கு அறியும். களத்தில் நங்கூரமிட்டுவிட்டால், ராயுடு ஆட்டத்தை வென்று கொடுக்கும் திறமை கொண்டவர். அவர் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டது சி.எஸ்.கே அணிக்குச் சிறிய பலவீனம் என்றாலும் அதை வேறு ஒரு சரியான பேட்டர் மூலம் ஈடுகட்ட முயற்சிக்கும்.
அதேபோல வேகப்பந்துவீச்சாளர்கள் வரிசையில் சிசாண்டா மகாலா, ஆகாஷ் சிங், பிரிட்டோரியஸ், கெயில் ஜேமிஸன் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனால் இவர்களுக்குப் பதிலாக அடுத்ததாகஏலத்தில் எந்தெந்த வீரர்களை தேர்ந்தெடுக்க பயிற்சியாளர் பிளெம்மிங்கும், கேப்டன் தோனியும், நிர்வாகமும் முடிவெடுப்பார்கள் என்பது பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.
சி.எஸ்.கே அணியிலிருந்து கடந்த இரு சீசன்களுக்கு முன் விடுவிக்கப்பட்ட ஷர்துல் தாக்கூர் மீண்டும் சிஎஸ்கே அணிக்குள் ஏலத்தில் எடுக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. கொல்கத்தா அணியிலிருந்து வேகப்பந்துவீச்சாளர்களான பெர்குஷன், டிம் சவுதி, கார்த்திக் தியாகி, உனத் கட், முஸ்தபிசுர் ரஹ்மான், ரச்சின் ரவீந்திரா, ஹசரங்கா, ஷாருக்கான் ஆகியோரை ஏலத்தில் எடுக்க சி.எஸ்.கே நிர்வாகம் போட்டிபோடலாம்.

பட மூலாதாரம், Getty Images
ராயுடுவுக்குப் பதிலாக யார்?
சி.எஸ்.கே அணியிலிருந்து வலுவான நடுவரிசை பேட்டர் அம்பதி ராயுடு விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக ஐ.பி.எல் ஏலத்தில் மணிஷ் பாண்டேவை சி.எஸ்.கே நிர்வாகம் விலைக்கு வாங்க முயற்சிக்கும் என்று கூறப்படுகிறது.
டெல்லி கேபிடல்ஸ் அணியில் இருந்த மணிஷ் பாண்டேவை டெல்லி நிர்வாகம் அவரை விடுவித்துள்ளது. மணிஷ் பாண்டே என்றாலே ஐ.பி.எல் வரலாற்றில் முதன்முதலில் சதம் அடித்த வீரர் என்பதுதான் நினைவுக்கு வரும். திறமையான பேட்டரான மணிஷ் பாண்டேவுக்கு தொடக்கத்தில் இருந்தே எந்த அணியிலும் நீண்டகாலமாக நீடிக்கவில்லை, அதற்கு அவரிடம் நிலைத்தன்மையான பேட்டிங் இல்லாததே காரணமாகக் கூறப்படுகிறது.
2008-ஆம் ஆண்டு தொடக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்ட மணிஷ் பாண்டே, பின்னர் ஆர்.சி.பி, புனே வாரியர்ஸ், கே.கே.ஆர், சன்ரைசர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ, டெல்லி கேபிடல்ஸ் என அடுத்தடுத்து மாறிவருகிறார். இதுவரை 302 டி20 போட்டிகளில் விளையாடிய மணிஷ் பாண்டே, 3 சதங்கள், 39 அரைசதங்கள் உள்பட 6,849 ரன்களைக் குவித்துள்ளார். திறமையான வீரர்களை தோனி தட்டிக்கொடுத்து தயார் செய்யக்கூடியவர் என்பதால், இந்த முறை சி.எஸ்.கே நிர்வாகம் ராயுடுவுக்குப் பதிலாக மணிஷ் பாண்டேவை வாங்க முயற்சிக்கும்.
ஏலத்தில் சி.எஸ்.கே-வின் கவனம் யார் மீது?
இது தவிர, உலகக் கோப்பையில் கலக்கிய ஆல்ரவுண்டர் ரச்சின் ரவீந்திராவின் பெயர் ஏலத்தில் சேர்க்கப்பட்டால், அவரை வாங்குவதற்கு சி.எஸ்.கே முயலும் என்று கூறப்படுகிறது.
மேலும் பிக்ஹிட்டர் என்று அழைக்கப்படும் ஷாருக்கான் பஞ்சாப் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். தமிழக வீரரான ஷாருக்கானை தோனி நிச்சயம் பயன்படுத்த முயல்வார் என்பதால் அவருக்கும் சி.எஸ்.கே அணிக்குள் வர வாய்ப்புள்ளது.
ஆல்ரவுண்டர்கள் வரிசையில் ஹசரங்கா, ஜேஸன் ஹோல்டர், ஷர்துல் தாக்கூர், டிம் சவுதி ஆகியோரை வாங்குவதற்கு சி.எஸ்.கே அதிகமாக முயற்சிக்கலாம் எனத் தெரிகிறது.

பட மூலாதாரம், Getty Images
சி.எஸ்.கே-வின் அடுத்த கேப்டன் யார்?
இந்த சீசனுக்கும் தோனியே கேப்டன் பொறுப்பை ஏற்று இருப்பதால், வழக்கமான உற்சாகத்துடனும், துடிப்புடனும் ஒவ்வொரு போட்டியையும் அந்த அணி அணுகும்.
ஆனால், தற்போது தோனிக்கு 42 வயதாகிறது என்பதால், 2025-ஆம் ஆண்டின் சீசனிலும் தோனி கேப்டன் பொறுப்பேற்று விளையாடுவாரா என்ற கேள்வி உள்ளது. ஒருவேளை இந்த சீசனே தோனியின் கடைசி சீசனாகவும் இருக்கலாம் எனவும் பேசப்படுகிறது.
அப்படி ஒருவேளை 2025-ஆம் ஆண்டின் சீசனுக்கு தோனி சி.எஸ்.கே அணியில் இல்லாவிட்டால் யார் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்பது பெரிய எதிர்பார்ப்பாகும். ஏற்கெனவே ரவீந்திர ஜடேஜாவை கேப்டனாக நியமித்ததால் சி.எஸ்.கே அணி பல்வேறு குழப்பங்களைச் சந்தித்து, பின்னர் மீண்டும் தோனியே கேப்டன் பதவியே தொடர்ந்தார். அப்படியென்றால் அடுத்த கேப்டனாக யார் சி.எஸ்.கே அணிக்கு வரலாம் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.
சி.எஸ்.கே அணியும் சரி, தோனியும் சரி தொலைநோக்குப் பார்வை கொண்டவர்கள், தங்களின் முடிவும், தேர்ந்தெடுக்கும் வீரர்களும் நீண்டகாலத்துக்கு நிலைத்திருக்க வேண்டும் என விரும்புவர்கள். ஆதலால் அணியின் எதிர்காலம் கருதியே அடுத்த கேப்டன் நியமிக்கப்படலாம்.

பட மூலாதாரம், Getty Images
இவர்கள் இருவருக்கும் வாய்ப்புள்ளதா?
சி.எஸ்.கே அணியின் வியூகம், அடுத்த கேப்டன் யார் என்பது குறித்து விளையாட்டுத்துறை மூத்த பத்திரிகையாளர் முத்துக்குமாரிடம் பிபிசி தமிழ் பேசியது.
“சி.எஸ்.கே அணி எப்போதுமே தொலைநோக்கு சிந்தனையுடையது. நீண்டகால நலன் கருதித்தான் எந்த முடிவும் எடுக்கும். ஏற்கெனவே ஜடேஜாவை கேப்டனாக நியமித்து, அது தவறான முடிவு என்பதை உணர்ந்துவிட்டது. ஆதலால் அவர் பின்னால் கேப்டன் பதவியுடன் செல்லமாட்டார்கள்,” என்றார்.
“உள்நாட்டைச் சேர்ந்த இளம் வீரர் ஒருவர் அல்லது வெளிநாட்டு வீரர் ஒருவரைத்தான் கேப்டனாக சி.எஸ்.கே நிர்வாகம் நியமிக்க வாய்ப்புள்ளது. அந்த வகையில் என்னைப் பொறுத்தவரை சி.எஸ்.கே அணிக்கு அடுத்த கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் அல்லது டேவன் கான்வே நியமிக்கப்பட வாய்ப்புள்ளது,” என்றார் அவர்.
“ஏனென்றால், ஆசியவிளையாட்டுப் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக கேப்டன் பணியைச் செய்து தனக்குரிய பங்களிப்பை நிரூபித்துவிட்டார். சி.எஸ்.கே நிர்வாகம் இதைக் கணக்கில் எடுக்கலாம். நீண்டகாலநோக்கிலும் கெய்க்வாட்டுக்கு கேப்டன் பதவி தரப்படலாம். அதேபோல வெளிநாட்டு வீரர்களில் கான்வேக்கு அதிக வாய்ப்புள்ளது,” எனத் தெரிவித்தார்.
யார் யார் அணிக்குள் வரலாம்?
2024 ஐபிஎல் தொடரில் சி.எஸ்.கே அணி எந்தெந்த வீரர்களுக்கு முக்கியத்துவம் அளித்து ஏலத்தில் எடுக்கும் என்று முத்துக் குமார் பேசுகையில், “சி.எஸ்.கே நிர்வாகம் ஸ்பெசலிஸ்ட் பேட்டர், பந்துவீச்சாளர்களைவிட ஆல்ரவுண்டர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும். அதைத்தான் கேப்டன் தோனி விரும்புவார் என்று கேட்டிருக்கிறேன். அது மட்டுமல்லாமல், கடந்த முறை பென் ஸ்டோக்ஸிற்கு ரூ.16 கோடிக்கும் அதிகமாக செலவிட்டது சி.எஸ்.கே. ஆதலால் இந்த முறை ஏலத்தில் பெரிதாக ஆல்ரவுண்டர்களுக்கு செலவிடமாட்டார்கள், அதேநேரம் சிறந்த வீரர்களை நல்ல விலைக்கு வாங்கவும் தயங்கமாட்டார்கள், என்றார்.
மேலும் பேசிய அவர், “என்னைப் பொறுத்தவரை ஆல்ரவுண்டர்களில் ரச்சின் ரவீந்திரா, ஜேஸன் ஹோல்டர், ஹசரங்கா, டிம் சவுதி, முஸ்தபிசுர் ரஹ்மான், முருகன் அஸ்வின் ஆகியோரை விலைக்குவாங்க சிஎஸ்கே முயலும். இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லாமல் சிஎஸ்கே அணி நீண்டகாலமாக பயணித்து வருகிறது,” என்றார்.
“ஆதலால், இந்த முறை உனத்கத் அல்லது முஸ்தபிசுர் ரஹ்மான் அணிக்குள் வரலாம். டுவைன் பிராவோவுக்கு அடுத்தார்போல் மேற்கிந்தியத்தீவுகள் ஆல்ரவுண்டர் யாரையும் சி.எஸ்.கே தேர்ந்தெடுக்கவில்லை. இந்த முறை ஹோல்டர் விலை மலிவாக இருந்தால் அவரையும் சி.எஸ்.கே விலைக்கு வாங்கவும் வாய்ப்புள்ளது. தோனி இதுபோன்ற வீரர்களை சிறப்பாகப் பயன்படுத்தக்கூடியவர்,” என்றார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












