தெலுங்கு Vs தமிழ் படங்கள் ரிலீசில் மோதல் - விஜய்யின் வாரிசு படத்துக்கு என்ன சிக்கல்?

நடிகர் விஜய்யுடன், வாரிசு தயாரிப்பாளர் தில் ராஜு

பட மூலாதாரம், D.Maneksha

படக்குறிப்பு, நடிகர் விஜய்யுடன், வாரிசு தயாரிப்பாளர் தில் ராஜு
    • எழுதியவர், கல்யாண்குமார். எம்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

"சங்கராந்தி, யுகாதி மற்றும் தசரா போன்ற பண்டிகைக் காலங்களின்போது ஒரிஜனல் தெலுங்குப் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதிக தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய வேண்டும்’' என்கிற தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சமீபத்திய அறிக்கையால் எழுந்த சர்ச்சை, ஆந்திர திரைப்பட உலகில் மட்டுமல்லாமல் கோடம்பாக்கத்திலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

காரணம் பொங்கலுக்கு (ஆந்திராவில் யுகாதி) விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு ஆகிய இரண்டு பெரிய படங்கள் வெளிவரவிருக்கும் நேரத்தில் இது முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில் நடிகர் விஜய் இன்று தமது ரசிகர்களை சென்னை பனையூர் அலுவலக்கத்தில் சந்தித்த நிகழ்வுபரப்பரப்பை மேலும் கூட்டியுள்ளது.

இதனிடையே நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், “விழாக் காலங்களில் நேரடித் தெலுங்குப் படங்களுக்கு மட்டுமே ஆந்திராவில் முன்னுரிமை அளிக்கப்படும் எனும் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது.

துணிவு

“தமிழ்த் திரைப்படங்களின் வெளியீட்டுக்கெதிரான முடிவை, தெலுங்குத் தயாரிப்பாளர்கள் சங்கம் திரும்பப் பெறாவிட்டால், தமிழகத்தில் தெலுங்குத் திரைப்படங்களை வெளியிட விடமாட்டோம்,“ என்று ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

“இது தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் பிரச்னை. எங்களுக்குள் பேசி ஒரு உடன்பாடு எட்டப்படும். ஆனால் தன் கட்சி விளம்பரத்திற்காக முந்திரிக்கொட்டை மாதிரி சீமான் அறிக்கை விட்டிருப்பது சிறுபிள்ளத்தனமானது. அவர் அரசியலை, சினிமாவுக்கு வெளியே வைத்துக் கொள்ளட்டும்.

எதாவது நொண்டிக்காரணத்தை வைத்து கொரானா நெருக்கடியிலிருந்து வெளிவந்து இப்போதுதான் கொஞ்சம் வருமானம் பார்க்கும் தமிழ் சினிமாவைச் சேர்ந்த தொழில் நுட்பக் கலைஞர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ள வேண்டாம் என்று எல்லோர் சார்பிலும் கேட்டுக் கொள்கிறேன் “ என்கிறார் தன் பெயரை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட மூத்த தயாரிப்பாளர் ஒருவர்.

தன் பெயரை சொன்னால் இந்தப் பிரச்னையை சீமான் மேலும் வளர்க்க வாய்ப்புண்டு என்பதால்தான் தவிர்க்கச் சொல்கிறேன்” என்கிறார் அவர்.

வாரிசு

பட மூலாதாரம், D.Maneksha

சீமானின் குரலை ஆதரித்துப் பேசும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் ஏ.ஆர். கே. ராஜராஜா, “ பின்னால் இதுவொரு மொழிப் பிரச்னையாகி அதினால் படப்பிடிப்புகள் முடங்கி, அது தொழிலாளர்களுக்கு பாதிப்பாகிவிடக்கூடாது என்பதற்காகத்தான் முன்னரே ஒரு சினிமாக்காரராகவும் தன் கருத்தை பதிந்திருக்கிறார் சீமான். இதில் தவறில்லை. இந்தப் பிரச்னை சுமுகமாக முடிவுக்கு வரும் “ என்கிறார். இவர் பல தெலுங்குப் படங்களை தமிழில் மொழியாக்கம் செய்தவர்.

சங்கராந்தி அன்று ஆந்திராவில் சிரஞ்சீவியின் வால்டர் வீரைய்யா, பாலகிருஷ்ணாவின் வீர சிம்ஹாரெட்டி என்ற இரண்டு பெரிய படங்கள் வெளியாக இருக்கின்றன.

“ கடந்த 12ம் தேதி வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, ஏற்கனவே 2017ல் எங்கள் சங்கத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்தான். ஆனால் சில தயாரிப்பாளர்கள் அதை மீறி, மற்ற மொழி படங்களை ரிலீஸ் செய்தால், நேரடி தெலுங்குப் படங்களின் வசூல் பாதிக்கப்படும். அதனால்தான் மறுபடி அந்த அறிக்கையை நினைவுபடுத்த வெளியிட்டோம். ஆனால் இதனால் எந்தவித பிரச்னையும் இல்லாமல் இங்கே சங்கராந்தி அன்று எல்லா படங்களும் வெளியாகும்’’ என்கிறார் தெலுங்கு வர்த்தக சபையின் கெளரவ செயலாளரான டி பிரசன்னகுமார்.

வால்டர் வீரையா

ஆனாலும் இது தெலுங்கில் முன்னணி தயாரிப்பாளராகவும் விநியோகஸ்தராகவும் இருக்கும் ’தில்’ ராஜு என்பவரைக் குறி வைத்து வெளியிடப்பட்ட அறிக்கைதான் என்கிறார்கள் டோலிவுட் வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள். விஜய் படமான வாரிசு படத்தின் தயாரிப்பாளரும் இவர்தான்.

தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் வெளியாகவிருக்கும் இந்தப் படத்திற்கு ஆந்திராவில் சிக்கல் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த அறிக்கை இப்போது மறுபடி வெளியிடப்பட்டிருக்கிறது என்கிறார்கள் சிலர்.

வீரசிம்மா ரெட்டி

அதை ஒப்புக்கொள்கிறார் தயாரிப்பாளரான தில் ராஜு “காய்ச்ச மரம்தான் கல்லடி படும் என்பதுபோல என்மீது பலருக்கும் ஏனோ ஒரு பொறாமை இருக்கிறது. உயரத்தில் இருப்பவர்களுக்கு இதுமாதிரி பிரச்னைகள் வரத்தான் செய்யும். ஆனால் இதையெல்லாம் நான் ஈசியாக சால்வ் செய்து விடுவேன்.

இப்போது நம் சினிமா, ”பான் இண்டியா” என்று ஒரு வட்டத்திற்குள் வந்து விட்டபிறகு, தெலுங்கு, தமிழ், கன்னடம் என்று மொழி வித்தியாசம் பார்த்து அதில் சிலர் குளிர்காய விரும்புகிறார்கள். எந்தப் பிரச்னையும் இல்லாமல் எல்லா படங்களுக்கும் அந்தந்த ஹீரோக்களின் ரசிகர்களை உற்சாகப்படுத்த தயாராக இருக்கின்றன. வெற்றி தோல்வியை அந்த ரசிகர்கள்தான் தீர்மானிப்பார்கள் “ என்கிறார் தில் ராஜு.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: