இஸ்ரேலிடம் எடுபடாத அமெரிக்காவின் ராஜ தந்திரம் - ஜோ பைடன் முன்னுள்ள சவால் என்ன?

இஸ்ரேல் vs பாலத்தீனம்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், பார்பரா பிளெட் அஷர், அந்தோனி ஸர்ச்சர், வட அமெரிக்கா நிருபர்
    • பதவி, பிபிசி நியூஸ்

காஸா போர் குறித்து அமெரிக்கா ஒரு புதிய ராஜதந்திர முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது. வரவிருக்கும் வாரங்களில் இஸ்ரேலை சமாதானப்படுத்துவது தான் அது. இது ஜோ பைடன் நிர்வாகத்தின் ஒரு முக்கியத்துவம் மிக்க நடவடிக்கையாகும். மேலும் இந்த நடவடிக்கை வெற்றி பெறுமா என்பது போரின் அடுத்த கட்டத்தை தீர்மானிக்க உதவும் - அத்துடன் அமெரிக்காவில் அதிபரின் சொந்த அரசியல் அதிர்ஷ்டத்தை தீர்மானிக்கும் வாய்ப்பும் உள்ளது.

வெளிப்படையாகப் பேசினால், இஸ்ரேலின் போரைக் கட்டுப்படுத்துவதற்கான அமெரிக்க முயற்சி என்பது நேரடியான அழுத்தம் என்பதை விட உயிரிழப்புக்களைக் குறைப்பதற்கான ஆலோசனைகளை அளிப்பது என்ற வடிவத்தை எடுத்துள்ளது.

அமெரிக்க அதிகாரிகள் - பைடன் முதல் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின் வரை - இஸ்ரேலின் தற்காப்பு உரிமை என தாங்கள் முன்வைப்பதை தொடர்ந்து உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் ஹமாஸை அதிகாரத்தில் இருந்து அகற்றுவதை உறுதிப்படுத்தும் ராணுவ நடவடிக்கை மட்டுமே பலனளிக்கும் என்று அறிவித்தனர். எனவே பொதுமக்களை நோக்கிய தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்தவும் அவர்கள் வலியுறுத்திவருகின்றனர்.

தாக்குதல்கள் தொடரும் நிலையில், ​​​அவர்கள் குடிமக்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றி மேலும் வெளிப்படையாக வலியுறுத்தியுள்ளனர். அவ்வாறு செய்யாவிட்டால் அது இஸ்ரேலை "உத்தி ரீதியிலான தோல்விக்கு" தள்ளும் என்று எச்சரித்துள்ளனர்.

பைடனின் புதிய முன்னெடுப்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, காஸாவில் இஸ்ரேலிய ராணுவம் தொடர் தாக்குதலை நடத்திவருகிறது.

உலகின் பெரும்பாலானோர் இந்த அணுகுமுறையை, இந்த நூற்றாண்டின் மிகவும் கொடிய மற்றும் அழிவுகரமானதாக இருக்கும் என்றும், இடைவிடாத குண்டுவீச்சு தாக்குதல்களைக் குறைக்கத் தவறியதாக மாறும் என்றும் கருதுகின்றனர்.

முன்னெப்போதும் இல்லாத வகையில் ஹமாஸ் தாக்குதலால் அதிர்ச்சியடைந்த இஸ்ரேல் மீது செல்வாக்கு செலுத்த அமெரிக்க நிர்வாகத்திற்கு அவர்களின் வியூக ரீதியிலான நடவடிக்கைகள் தான் மிகவும் பயனுள்ள வழியாகும் என்று அமெரிக்க அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.

ஆயினும் அன்று முதல் அமெரிக்க கொள்கை ஜோ பைடனின் ஜனநாயகக் கட்சியை உடைத்தது மட்டுமின்றி இளம் மற்றும் அரபு அமெரிக்கர்கள் மத்தியில் அவருக்கு இருந்த முக்கிய ஆதரவை இழக்கும் நிலையை உருவாக்கியது. அதுமட்டுமின்றி உலக அரங்கில் அமெரிக்காவை தனிமைப்படுத்தியது என்றும் கூறலாம்.

பைடனின் புதிய முன்னெடுப்பு

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, பாலத்தீனர்கள் ரஃபாவில் உள்ள உணவு விநியோக நிலையத்தை சுற்றி திரண்டு உணவுப்பொருட்களைப் பெற்றுச் சென்றனர்.

இதுவரை, அமெரிக்க அதிபர் பைடனின் அணுகுமுறை வரையறுக்கப்பட்டதாக இருந்ததால், உறுதியான முடிவுகள் எட்டப்பட்டுள்ளன.

விடாப்பிடியான மற்றும் கடினமான ராஜதந்திர நடவடிக்கைகள் போரின் ஆரம்பத்தில் காஸாவுக்கு சில மனிதாபிமான உதவிகளை அனுமதிப்பதற்கான பாதையை தெளிவுபடுத்தின. மேலும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கும் நம்பிக்கையற்று வேதனையில் பரிதவித்த குடிமக்களுக்கு கூடுதல் உதவிகளை வழங்குவதற்கும் ஏழு நாள் போர் நிறுத்தத்தை அமல்படுத்தும் பேச்சு நடத்த அவை உதவின.

இந்த விஷயத்தில் அமெரிக்கர்கள் நிச்சயமாக மிகவும் கைகொடுத்துள்ளனர். இஸ்ரேலுக்கு மூத்த அதிகாரிகள் தொடர்ந்து பயணம் மேற்கொண்டு, யாரோ ஒருவர் எப்போதும் நேருக்கு நேர் கடினமான உரையாடல்களை நடத்திக் கொண்டிருந்தனர் என்று சொல்லுமளவுக்கு அமெரிக்கா ஒரு முக்கியப் பங்காற்றியுள்ளது.

"இந்த பயணங்கள் முக்கியமானவை. ஏனென்றால் நாங்கள் இஸ்ரேலியர்களுடன் சேர்ந்து கையாளும் நிலையான பிரச்னைகள் நிறைய இருந்தன," என்று ஒரு அமெரிக்க அதிகாரி கூறினார்.

இப்பகுதிக்கு பிளிங்கனின் மூன்று வருகைகள் ஒவ்வொன்றும் போர் நிறுத்த முயற்சிகளில் ஒரு சூறாவளியாக இருந்தது. மேலும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கும், மனிதாபிமான உதவிகளை அதிகரிப்பதற்கும், முழு மத்திய கிழக்கிலும் போர் பரவுவதைத் தடுப்பதிலும் அமெரிக்காவின் தொடர்ச்சியான முயற்சிகளை முன்னிலைப்படுத்த அவர் மிகவும் ஆர்வமாக உள்ளார்.

பொதுமக்களைப் பாதுகாப்பதில் முன்னேற்றம் காண மிக கடினமாகப் போராட வேண்டியுள்ளது. இந்த வாரம் காஸாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 20,000 ஐ எட்டியதாக ஹமாஸ் அமைப்பினர் நடத்தும் காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 7 அன்று தெற்கு இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர்; அதில் பெரும்பாலும் பொதுமக்கள். மேலும் இதே நாளில் 240 பேர் ஹமாஸால் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.

பைடனின் புதிய முன்னெடுப்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பைடனும், நெதன்யாகுவும் போர் நிறுத்தம் குறித்து பலமுறை பேச்சு நடத்தியுள்ளனர்.

போர் நிறுத்தம் - இஸ்ரேலை அமெரிக்கா சம்மதிக்க வைப்பது சாத்தியமா?

இஸ்ரேல் அவ்வாறு செய்ய நடவடிக்கை எடுக்கும் என்று உறுதியளித்த போதிலும், பிளிங்கன் தமது நோக்கத்திற்கும் முடிவுகளுக்கும் இடையே உள்ள "இடைவெளி" பற்றி பேசியுள்ளார்.

எனவே, போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேலை அமெரிக்க நிர்வாகம் சம்மதிக்க வைக்க முடியுமா என்பதற்கு ஜனவரி மாதம் ஒரு முக்கியமான சோதனை நிறைந்த காலமாக இருக்கும். காஸாவில் ராணுவ நடவடிக்கைகளை "தீவிரப்படுத்த" மற்றும் குண்டுவீச்சு மற்றும் பீரங்கிகளால் நடத்தப்படும் தாக்குதல்களில் குறைவான உயிரிழப்புகளை உறுதி செய்யும் வகையில் அதிக இலக்குகளில் தாக்குதல் நடத்த இஸ்ரேலை இந்த முயற்சிகள் நகர்த்துகின்றன.

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, போர் பல்வேறு கட்டங்களுக்கு நகர்வதைப் பற்றி பகிரங்கமாகப் பேசாவிட்டாலும், அவரது பாதுகாப்பு அமைச்சர் இது குறித்துப் பேசியுள்ளார்.

அமெரிக்க உத்திகளை விமர்சிப்பவர்கள், இஸ்ரேலின் போரில் அமெரிக்கா மிகவும் எச்சரிக்கையாக இருந்து அது திறம்பட போருக்கு உடந்தையாக உள்ளது என்று கூறுகின்றனர். விகிதாச்சாரமற்ற ராணுவத் தாக்குதல்களைக் குறைக்க இஸ்ரேலுக்கு இன்னும் வலுக்கட்டாயமாக அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் சுமார் 25 ஆண்டுகள் வெளியுறவுத்துறையில் மத்திய கிழக்கு ஆலோசகராக பணியாற்றிய ஆரோன் டேவிட் மில்லர், இந்த விஷயத்தில் இஸ்ரேலின் கொள்கையை மாற்ற அமெரிக்கா அழுத்தம் கொடுக்கக் கூடும் என்ற கருத்தை "மந்திர சிந்தனை" என்கிறார்.

"போர்க்கள இயக்கம் என்பது நமது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது. அதை மைக்ரோமேனேஜ் செய்வது ஒருபுறம் இருக்கட்டும்," என்று அவர் கூறுகிறார். இஸ்ரேலும் ஹமாஸும் சரிசெய்ய முடியாத பிரச்னைகளைத் தொடர்ந்து இலக்காகக் கொள்கின்றனர்.

பைடனின் புதிய முன்னெடுப்பு

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு போரின் போக்கை மாற்றும் முயற்சிகளில் அமெரிக்கா முனைப்புடன் ஈடுபட்டு வருகிறது.

இஸ்ரேலிடம் அமெரிக்காவின் ராஜ தந்திரங்கள் பலிக்காதது ஏன்?

சர்வதேச அமைதிக்கான கார்னகி இன்ஸ்டிடியூட்டில் இப்போது மூத்த ஊழியராக இருக்கும் மில்லர், "அமெரிக்காவின் நிர்பந்தங்களை இஸ்ரேல் தமக்குச் சாதகமாக இருக்கும் நேரங்களில் மட்டுமே ஏற்றுக்கொண்டுள்ளது" என வரலாறு காட்டுகிறது என்று கூறுகிறார்.

"இஸ்ரேலியர்களுக்கு முக்கியமான ஒரு விஷயத்தில் அழுத்தம் கொடுப்பது என்பது அவர்களுக்கு ஒரு கட்டாயமான மாற்றீட்டையோ அல்லது அவர்கள் பகுத்தறிந்து நியாயம் என உணரக்கூடிய ஒரு முடிவையோ வழங்காமல், ஒருபோதும் பலன் அளிக்காது," என்று அவர் கூறுகிறார்.

மூடிய கதவுகளுக்குப் பின்னால் கட்டுப்பாட்டைப் பற்றிப் பேசும் போது பகிரங்கமாக இஸ்ரேலை ஆதரிக்கும் "அரவணைப்பு முயற்சி" என்பது வியூக ரீதியில் இஸ்ரேலின் ராணுவ தாக்குதலைக் குறைக்க உதவுமா என்பது தெளிவாக இல்லை.

இதற்கிடையில், அமெரிக்கா, தன்னை உலக நாடுகள் தனிமைப்படுத்தும் நிலையில் தற்போது தனது நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகப் போராடி வருகிறது.

ஐக்கிய நாடுகள் சபையில், உடனடி மனிதாபிமான போர் நிறுத்தத்திற்கான பெரும் கோரிக்கைகளை அமெரிக்கா எதிர்த்ததை விட வேறு எங்கும் இது தெளிவாகத் தெரியவில்லை.

இந்த வாரம், காஸாவில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என ஐ.நா. சபை கடும் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், காஸாவிற்கு மனிதாபிமான அணுகலைக் கோரும் இரண்டாவது பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை நிறைவேற்ற அமெரிக்கா அனுமதித்தது. போரை இடைநிறுத்தம் செய்வது மற்றும் நிவாரணப் பொருட்களின் விநியோகத்தை கண்காணிக்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் தீவிர பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் இந்த அனுமதியை அமெரிக்கா அளித்தது.

ஹமாஸின் தலைமையையும் ராணுவத் திறனையும் அழிக்கும் இஸ்ரேலின் தாக்குதல்களைக் கட்டுப்படுத்தும் போர் நிறுத்தம் பற்றிய எந்த ஆலோசனையையும் அமெரிக்க நிர்வாகம் விரும்பவில்லை.

ஆனால் சில கூட்டாளிகள் கூட இந்த அணுகுமுறையைப் பற்றி வெளிப்படையாகப் பேசியுள்ளனர்.

"அமெரிக்கா தொடர்ந்து மரியாதையை இழந்து வருகிறது. அது ஒரு சக்தி வாய்ந்த தேசமாக நம்பகத்தன்மையை இழந்து வருகிறது" என்று முன்னாள் ஐரிஷ் அதிபர் மேரி ராபின்சன், தி எல்டர்ஸ் என்று அழைக்கப்படும் உலகளாவிய தலைவர்களின் குழுவின் சார்பாகப் பேசுகையில், RTE செய்திக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். "அமெரிக்கா போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது, ஆனால் இஸ்ரேலிய அரசாங்கம் அதற்குச் செவிசாய்க்கவில்லை," எனத்தெரிவித்துள்ளார் அவர்.

பைடனின் புதிய முன்னெடுப்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டெல் அவிவில் லாயிட் ஆஸ்டின் மற்றும் இஸ்ரேலின் யோவ் கேலன்ட் ஆகியோர் சந்தித்து போர் நிறுத்தத்துக்கான சாத்தியங்கள் குறித்து விவாதித்தனர்.

காஸாவை அழிக்கும் இஸ்ரேலின் தீவிர தாக்குதல்களால் அமெரிக்காவின் அரேபிய நட்பு நாடுகள் அதிர்ச்சியடைந்துள்ளன.

"அமெரிக்கா மற்றும் நமது பிராந்தியத்தில் மற்ற மேற்கத்திய நாடுகளின் நிலைப்பாட்டை இஸ்ரேல் ஆபத்தில் ஆழ்த்துகிறது" என்று ஜோர்டானிய வெளியுறவு அமைச்சர் அய்மன் சஃபாடி சமீபத்தில் வாஷிங்டனுக்கு மேற்கொண்ட ஒரு பயணத்தின் போது கூறினார்.

"இது பாலத்தீனர்களைக் கொல்வது மட்டுமல்ல... காஸாவில் அமைதியை நிலைநாட்டுவதற்காக அனைவரும் இணைந்து கடந்த 30 ஆண்டுகளாகக் கட்டியெழுப்பிய அனைத்தையும் அழிக்கும் நடவடிக்கையாகும்," என்றார் அவர்.

பிராந்திய மற்றும் சர்வதேச சமூகமும் ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களைக் கீழே போடவும், "பொதுமக்கள் பின்னால் ஒளிந்து கொள்வதை" நிறுத்தவும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று பிளிங்கன் வலியுறுத்தியுள்ளார்.

ஆனால் கடந்த வாரம் ஒரு நிதி திரட்டும் நிகழ்வில் பேசிய போது, அதிபர் பைடன் நிர்வாகத்தின் சில உள் ஏமாற்றங்களையும் ஒப்புக்கொண்டுள்ளார்.

"இஸ்ரேலை உலகின் பெரும்பாலான நாடுகள் ஆதரிக்கின்றன," என்று அதிபர் கூறினார். "ஆனால் அவர்கள் கண்மூடித்தனமான தாக்குதல்களின் காரணமாக அந்த ஆதரவை இழக்கத் தொடங்கியுள்ளனர்."

பைடன் இஸ்ரேலுக்கு எதிராக வலுவான நிலைப்பாட்டை எடுக்க உள்நாட்டிலும் அழுத்தம் அதிகரித்து வருகிறது. இந்த வாரம் நியூயார்க் டைம்ஸ் எடுத்த பொதுக் கருத்துக் கணக்கெடுப்பில் , 33% பதிவு செய்யப்பட்ட அமெரிக்க வாக்காளர்கள் மட்டுமே இஸ்ரேல்-பாலத்தீன மோதலை அதிபர் இப்படிக் கையாள்வதற்கு ஒப்புதல் அளித்துள்ளனர். 39% முதல் 44% வரையான பொதுமக்கள் இஸ்ரேல் தனது ராணுவ தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.

பைடனின் புதிய முன்னெடுப்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாலத்தீனர்களுக்கு ஆதரவாக நியூயார்க்கில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

ஜோ பைடன் முன்னுள்ள புதிய சவால்

2024 -ல் அதிபர் தேர்தலை நோக்கிப் பயணிக்கும் ​​பைடன் நிர்வாகம் அதன் தேர்தல் கூட்டணியின் முக்கிய உறுப்பினர்களிடமிருந்து மிக மோசமான அளவில் குறைவான ஆதரவை மட்டும் பெறுகிறது என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. 30 வயதிற்குட்பட்ட வாக்காளர்களில், 46% பேர் பாலத்தீனத்தின் பக்கம் அதிக அனுதாபம் காட்டுவதாகக் கூறியுள்ளனர். 27% மட்டுமே இஸ்ரேலியர்களுக்கு ஆதரவாக இருந்தனர்.

ஜனநாயகக் கட்சியின் சில முக்கிய தாராளவாத உறுப்பினர்கள், அமெரிக்காவின் நிபந்தனைகளை மீறி சில அமெரிக்க ஆயுதங்களை இஸ்ரேல் பயன்படுத்துவது குறித்த மனித உரிமை அமைப்பு விசாரிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை முன்வைத்துள்ளனர்.

ஜோ பைடனின் ஆதரவாளராகத் திகழும் ஒரு இடதுசாரி சுயேச்சையான வெர்மான்ட் செனட்டர் பெர்னி சாண்டர்ஸ், இந்த தீர்மானத்துக்கு ஆதரவளித்துள்ளார் என்பதுடன், போரின் போது இஸ்ரேலிய ராணுவம் "பொறுப்பற்ற மற்றும் ஒழுக்கக் கேடான" நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது என்று கூறினார்.

தனித்தனியாக, தேசிய பாதுகாப்பில் அதிக ஆர்வம் செலுத்தும் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களின் குழு ஒன்று வெள்ளை மாளிகைக்கு கடிதம் எழுதி, நெதன்யாகுவின் ராணுவ வியூகம் இஸ்ரேல் அல்லது அமெரிக்க நலன்களுக்கு ஆதரவாக இல்லை என்று வாதிட்டுள்ளது.

பைடனின் சொந்த நிர்வாகத்தில் இருந்தும் பல்வேறு கருத்து வேறுபாடுகள் வெளிப்பட்டு வருகின்றன. 800 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உடனடி போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் கடிதத்தை ஆதரித்துள்ளனர். இருப்பினும் பெரும்பாலானோர் அநாமதேயமாக செய்திருந்தாலும் ஒருவர் மட்டுமே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

"ஒவ்வொரு நாளும் வேலைக்கு வருவதற்கும், இந்த நிர்வாகத்திற்கு நான் முன்பு பெருமையாகப் பணியாற்றியதற்கும் இடையே நிறைய முரண்பாடுகளை உணர்ந்தேன். பின்னர் போர் நிறுத்தத்திற்கான வலியுறுத்தலின் செல்வாக்கு பெரிய அளவில் வரக்கூடிய வெற்றிடத்தை உணர்கிறேன்,” என்று ஒரு ஊழியர் பிபிசியிடம் கூறினார்.

இத்தகைய உணர்வு அமெரிக்க அதிபரின் கடினமான பிணைப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. பல உலகத் தலைவர்கள், கணிசமான எண்ணிக்கையிலான நிர்வாகத் தலைவர்கள் மற்றும் சுமார் பாதி அமெரிக்கப் பொதுமக்கள் தற்போதைய அமெரிக்க வியூகத்தில் மகிழ்ச்சியடைந்ததாகத் தெரியவில்லை.

ஆனால் அமெரிக்க அதிபர் இஸ்ரேலுடன் கடுமையாக நடந்து கொள்ளத் தொடங்கினால், இஸ்ரேலை ஆதரிக்கும் மற்ற பாதி அமெரிக்கர்கள் நிச்சயமாக எதிர்ப்பார்கள் - மேலும் அவரது தற்போதைய விமர்சகர்கள் திருப்தி அடைவார்கள் என்பதற்கு இன்னும் உத்தரவாதம் இல்லை.

இஸ்ரேலின் தாக்குதலை குறைப்பது முக்கியமானது. அது வேகமாக நடக்கவில்லை என்றால் பைடன் தனது அடுத்த கட்டத்தை தீவிரமாக பரிசீலிக்க வேண்டும்.

குறிப்பாக விரைவில் 2024-ம் ஆண்டின் அதிபர் தேர்தலுக்கு அவர் தயாராக வேண்டியிருக்கிறது. அவர் முதல் முறையாக அதிபர் பதவிக்கு வந்துள்ள நிலையில், பதவிக்காலத்தின் கடைசி ஆண்டு விரைவில் பிறக்கவுள்ளது. அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் எப்பொழுதும் ஒரு காரணியாக இருக்கும் உள்நாட்டு அரசியல், பெருகிய முறையில் அதிபருக்கு ஒரு அழுத்தமான கவலையாக மாறும்.

டொனால்ட் டிரம்பின் கொந்தளிப்பான ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட பாதிப்புகளுக்குப் பின்னர், நாட்டு மக்களுக்கு ஒரு நம்பிக்கையை ஊட்டி, அதிபர் பதவிக்கு வந்த ஒரு மனிதருக்கு, காஸா போர் அவரது அரசியல் அதிர்ஷ்டத்திற்கு ஒரு வலிமையான மற்றும் கடுமையான சவாலாக இருக்கிறது என்பது நிச்சயமாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்பதே உண்மை.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)