வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி அரையிறுதிக்கு தென் ஆப்ரிக்கா முன்னேற்றம் - கைகொடுத்த சுழல் வியூகம்

SA vs WI

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

மழையின் குறுக்கீடு, உள்நாட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பு, சொந்த நாட்டில் நடக்கும் உலகக் கோப்பை ஆட்டம் உள்ளிட்ட இந்த அழுத்தங்களைத் தாங்கிக்கொண்டு ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, சூப்பர்-8 சுற்றில் போராடித் தோற்றது.

மாறாக 10 ஆண்டுகளுக்குப்பின் தென் ஆப்ரிக்கா அணி டி20 உலகக் கோப்பை அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

வாட்ஸ் ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

தோல்வியே காணாத அணி

தென் ஆப்ரிக்கா அணி இதுவரை எட்டு டி20 உலகக் கோப்பைத் தொடர்களில் விளையாடினாலும், 2 முறை மட்டுமே அரையிறுதிக்குத் தகுதி பெற்றிருந்தது. 2009-ஆம் ஆண்டு அரையிறுதியில் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்த தென் ஆப்ரிக்கா 2014-ஆம் ஆண்டில் நடந்த டி20 உலகக் கோப்பையில் இந்தியாவிடம் அரையிறுதியில் தோற்றது. இந்த இருமுறையைத் தவிர அரையிறுதிக்கு தென் ஆப்ரிக்க அணி தகுதி பெறவில்லை.

இந்த டி20 உலகக் கோப்பைத் தொடங்கியதிலிருந்து இதுவரை ஒரு ஆட்டத்தில் கூட தோற்கவில்லை என்ற பெயரை தென் ஆப்ரிக்க அணி காப்பாற்றி வருகிறது. தற்போது மேற்கிந்தியத்தீவுகளை வென்றதன் மூலம் குரூப்-2 பிரிவில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

10 ஆண்டுகளுக்குப்பின் அரையிறுதி சென்ற தென் ஆப்ரிக்கா: சொந்த மண்ணில் வீழ்ந்த கரீபியன்ஸ்

பட மூலாதாரம், Getty Images

குரூப்-1 பிரிவில் யாருடன் மோதல் ?

ஆனால், அரையிறுதியில் குரூப்-1 பிரிவில் 2வது இடத்துக்கு வரும் அணியுடன் தென் ஆப்ரிக்கா மோதும். ஆனால், இன்று நடக்கும் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் இந்திய அணி வென்றால் முதலிடம் பெற்று அரையிறுதி செல்லும். ஆனால், அரையிறுதியில் தென் ஆப்ரிக்காவுடன் மோதாது. ஒருவேளை ஆஸ்திரேலிய அணி வென்றால் 4 புள்ளிகள் பெறும், ஆனாலும் அரையிறுதியை எந்த அணியும் உறுதி செய்யாது.

ஏனென்றால், வங்கதேசம்- ஆப்கானிஸ்தான் இடையிலான ஆட்டத்தில் ஒருவேளை ஆப்கானிஸ்தான் வென்றால், 4 புள்ளிகளுடன் நிகர ரன்ரேட் பார்க்கப்படும் என்பதால், குரூப்-1 பிரிவில் இந்தியாவின் வெற்றியைப் பொருத்தே யார் அரையிறுதி செல்வார் என்பது முடிவாகும்.

இந்தியா-ஆஸ்திரேலியா ஆட்டம்

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே இன்று இரவு நடக்கும் ஆட்டத்தில் மழை குறுக்கீடு இருக்க அதிக வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அரையிறுதி ஆட்டத்துக்கு ரிசரவ் நாள் இல்லை, மாறாக 250 நிமிடங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஒருவேளை மழையால் ஆட்டம் ரத்தானால், இந்திய அணி அரையிறுதி செல்லும், ஆஸ்திரேலிய அணி, வங்கதேசம்- ஆப்கானிஸ்தான் ஆட்டத்தின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும். ஒருவேளை ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால் ஆஸ்திரேலியா வெளியேறும், ஆப்கானிஸ்தான் அரையிறுதி செல்லும். ஆதலால் மழைதான் ஆஸ்திரேலியாவின் தலைவிதியை நிர்ணயிக்கும் கருவியாகும்.

ஆன்டிகுவாவில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 சுற்றில், குரூப்-2 பிரிவில் மேற்கிந்தியத்தீவுகள் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது தென் ஆப்ரிக்க அணி.

முதலில் பேட் செய்த மேற்கிந்தியத்தீவுகள் அணி 8 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் சேர்த்தது. 136 ரன்களை இலக்காகக் கொண்டு ஆட்டம் தொடங்கிய நிலையில் மழைக் குறுக்கிடவே தென் ஆப்பிரிக்காவுக்கு டிஎல்எஸ் முறையில் இலக்கு திருத்தப்பட்டு 17 ஓவர்களில் 123 ரன்கள் என்று மாற்றப்பட்டது. இதையடுத்து, 123 ரன்களைத் துரத்திய தென் ஆப்ரிக்கா 16.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் சேர்த்து வென்றது.

10 ஆண்டுகளுக்குப் பின்

2014-ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் தென் ஆப்ரிக்க அணியை இறுதிப்போட்டிவரை எய்டன் மார்க்ரம் கொண்டு சென்றார். அதன்பின் 10 ஆண்டுகளுக்குப்பின் சீனியர் அணியை அரையிறுதிவரை மார்க்ரம் கேப்டனாக இருந்து வழிநடத்தியுள்ளார்.

10 ஆண்டுகளுக்குப்பின் அரையிறுதி சென்ற தென் ஆப்ரிக்கா: சொந்த மண்ணில் வீழ்ந்த கரீபியன்ஸ்

பட மூலாதாரம், Getty Images

சுழற்பந்துவீச்சுக்கு முக்கியத்துவம்

அது மட்டுமல்லாமல் இந்த ஆட்டத்தில் மார்க்ரம் தொடக்கத்திலேயே சுழற்பந்துவீசத் தொடங்கி, 4 ஓவர்களை முழுமையாக வீசி 28 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். தென் ஆப்ரிக்க அணி டி20 உலகக் கோப்பை வரலாற்றில் சுழற்பந்துவீச்சுக்கு இந்த அளவு முக்கியத்துவம் அளித்து பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியதில்லை. இந்த ஆட்டத்தில் மார்க்ரம், ஷம்சி, கேசவ் மகராஜ் என 3 சுழற்பந்துவீச்சாளர்கள் பந்துவீசினர். இதற்கு முன் 2021-ஆம் ஆண்டில் இலங்கைக்கு எதிராக சுழற்பந்துவீச்சாளர்கள் அதிகமாகப் பந்துவீசியிருந்தனர்.

தென் ஆப்ரிக்கா என்றாலே வேகப்பந்துவீச்சில்தான் பலம் என்ற நிலையை மாற்றி, சுழற்பந்துவீச்சுக்கு மார்க்ரம் மாற்றியுள்ளார். இந்த போட்டியில் 12 ஓவர்களை சுழற்பந்துவீச்சாளர்கள் வீசி 79 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதில் ஷம்சி 3 விக்கெட், மார்க்ரம், மகராஜ் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

பேட்டிங்கில் படுமோசம்

மேற்கிந்தியத்தீவுகள் அணியும் பேட்டிங்கில் படுமோசமாகச் செயல்பட்டது என்பதை பதிவு செய்ய வேண்டும். மேற்கிந்தியத்தீவுகள் பேட்டர்கள் 58 டாட் பந்துகளை விட்டுள்ளனர். இது ஏறக்குறைய 9.4 ஓவர்களுக்கு சமம். அதாவது 10 ஓவர்களில்தான் 135 ரன்களை மேற்கிந்தியத்தீவுகள் வீரர்கள் சேர்த்தனர்.

அது மட்டுமல்லாமல் கெயில் மேயர்ஸ்-ரஸ்டன் சேஸ் ஆகியோர் சேர்ந்து 81 ரன்கள் சேர்த்து பார்ட்னர்ஷிப் அமைத்ததுதான் அணியை ஓரளவுக்கு கவுரவமான ஸ்கோருக்கு கொண்டு வந்தது. இல்லாவிட்டால் மேற்கிந்தியத்தீவுகள் அணி 100 ரன்களுக்குள் சுருண்டிருக்கும். சேஸ், மேயர்ஸ் தவிர இருபேட்டர்கள் மட்டுமே இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்டர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் பொறுப்பற்று ஆட்டமிழந்தனர்.

டிபெண்ட் சாத்தியமில்லை

மிகக்குறைவான ஸ்கோரை வைத்துக்கொண்டு டிபெண்ட் செய்ய நினைப்பது அமெரிக்கா போன்ற ஆடுகளங்களில் சாத்தியம். ஆனால், ஆன்டிகுவா, பர்படாஸ் போன்ற பேட்டர்களுக்கு சாதகமான விக்கெட்டில் சாத்தியமில்லை. இருப்பினும் மேற்கிந்தியத்தீவுகள் பந்துவீச்சாளர்கள் அனல் பறக்கும் பந்துவீச்சை வெளிப்படுத்தி, தொடக்கத்திலேயே தென் ஆப்ரிக்காவின் 2 விக்கெட்டுகளை 15 ரன்களுக்குள் வீழ்த்தி நெருக்கடி அளித்தனர்.

ஆனால் மழைக் குறுக்கீடு முடிந்து ஆட்டம் தொடங்கியபின், மார்க்ரம் (18), ஸ்டெப்ஸ் (29), கிளாசன் (22) ஆகியோரின் கேமியோ ஆட்டத்தை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றது. மேற்கிந்தியத்தீவுகள் வீரர்கள் நம்பிக்கையைத் தளரவிடாமல் போராடினாலும் கடைசி நேரத்தில் யான்சென் 21 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

சரியான உத்தி இல்லை

10 ஆண்டுகளுக்குப்பின் அரையிறுதி சென்ற தென் ஆப்ரிக்கா: சொந்த மண்ணில் வீழ்ந்த கரீபியன்ஸ்

பட மூலாதாரம், Getty Images

யான்சென் ஸ்பெஷலிஸ்ட் பேட்டர் இல்லை. அவரை கடைசிவரை நிலைத்து ஆடவும் மே.இ.தீவுகள் பந்துவீச்சாளர்கள் அனுமதித்திருக்கக்கூடாது. யான்சென் பலவீனத்தை அறிந்து சரியான பந்துவீச்சாளரைப் பயன்படுத்தி இருந்தால் நிச்சயம் மேற்கிந்தியத்தீவுகள் வெற்றி பெற்றிருக்கும். வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு இருந்தும், சரியான உத்திகளை மேற்கிந்தியத்தீவுகள் செயல்படுத்தாமல் விட்டதால் வெற்றியை இழக்க நேரிட்டது என்ற கூற முடியும்.

தென் ஆப்ரிக்கா மோசமான பீல்டிங்

தென் ஆப்ரிக்கா என்றாலே பீல்டிங்கிற்கு பெயரெடுத்தவர்கள். கிப்ஸ், ஜான்டி ரோட்ஸ், ஹன்சி குரோனியே, கல்லினன், மெக்மிலன் என பலரைக் குறிப்பிடலாம். ஆனால் இந்த ஆட்டத்தில் மட்டும் தென் ஆப்ரிக்க அணி 4 கேட்சுகளைத் தவறவிட்டனர். கேப்டன் மார்க்ரம், நோர்க்கியா, டேவிட் மில்லர், கேசவ் மகராஜ் என 4 பேரும் கேட்சுகளை கோட்டைவிட்டனர்.

கைகொடுத்த சுழல் வியூகம்

இந்த ஆடுகளத்தில் சுழற்பந்துவீச்சு சிறப்பாக ஒத்துழைத்ததால் கடைசிவரை ரபாடாவை பந்துவீச மார்க்ரம் அழைக்கவில்லை. கடைசி நேரத்தில் 18-வது ஓவரை வீச ரபாடா அழைக்கப்பட்டார். 62 டி20 போட்டிகளில் விளையாடிய ரபாடா இதுபோன்று கடைசிவரை பந்துவீசாமல் இருந்ததில்லை.

இதற்குமுந்தைய 61 ஆட்டங்களில் தொடக்கத்திலேயே முதல் 4 ஓவர்களிலேயே ரபாடா பந்துவீசிவிடுவார். ஐபிஎல் தொடர்களில் ரபாடாவை 10 ஓவர்களுக்கு மேல் பயன்படுத்தியுள்ளனர். 2021-ஆம் ஆண்டில் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிராக 5வது ஓவருக்குப்பின் ரபாடா ஒருமுறை பந்துவீசியுள்ளார். ஆனால், இதுபோன்று 18-வது ஓவர்வரை முதல் ஓவரைக்கூட வீசாமல் ரபாடா இருந்ததில்லை. ஆனாலும் தனக்குக் கிடைத்த வாய்ப்பை தவறவிடவில்லை. இரண்டு ஓவர்கள் மட்டுமே வீசினாலும் 7 ரன்கள் கொடுத்து ஒருவிக்கெட்டையும் வீழ்த்தினார்.

10 ஆண்டுகளுக்குப்பின் அரையிறுதி சென்ற தென் ஆப்ரிக்கா: சொந்த மண்ணில் வீழ்ந்த கரீபியன்ஸ்

பட மூலாதாரம், Getty Images

மழை சென்டிமென்ட்

தென் ஆப்பிரிக்க அணி தொடக்கத்திலேயே டீ காக், ரீசா ஹென்ட்ரிக்ஸ் விக்கெட்டைஇழந்து மழை குறுக்கிட்டு ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் தென் ஆப்ரிக்க அணியின் வாழ்க்கையில் விதி மீண்டும் விளையாடுகிறதோ என்று ரசிகர்கள் ஆதங்கம் அடைந்தனர், 1992, 2003, 2015 ஆகிய ஆண்டுகளில் தென் ஆப்ரிக்காவுக்கு நேர்ந்த கதி மீண்டும் ஏற்படுமா என்று நினைத்தனர். ஆனால், 75 நிமிடங்கள் தாமதத்துக்குப்பின் ஆட்டம் மீண்டும் தொடங்கிவிட்டது.

பேட்டிங்கில் மோசமாக செயல்பட்டோம்

தோல்வி அடைந்த மேற்கிந்தியத்தீவுகள் அணியின் கேப்டன் பாவெல் கூறுகையில் “கடைசி வரை போராடிய எங்கள் வீரர்களுக்கு பாராட்டுகள். இதுபோன்ற மோசமான பேட்டிங்கை எதிர்காலத்தில் மறந்துவிட வேண்டும். நடுப்பகுதியில் நாங்கள் சரியாக பேட் செய்யவில்லை. இது ரன் ஸ்கோர் செய்வதற்கு எளிதான விக்கெட் இல்லை. நடுப்பகுதி ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து நெருக்கடிக்கு ஆளாகினோம்,” என்றார்.

"பந்துவீச்சில் எங்கள் வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டனர். 135 ரன்களையும் டெபெண்ட் செய்ய முடியும் என்று போராடினர். தரவரிசையில் 9வது இடத்தி்ல் இருக்கும் அணிக்கும், 3வது இடத்தில் இருக்கும் அணிக்கும் இடையிலான மோதல் சிறப்பானதாக இருந்தது. கரீபியன் வீரர்களிடம் ஏராளமான திறமை இருக்கிறது, தொடர்ந்து குழுவாக செயல்பட்டு, மக்களை பெருமைப்படுத்த முயல்வோம். மக்களும் எங்களைத் தொடர்ந்து உற்சாகப்படுத்திக்கொண்டே இருந்தனர். இரவுவரை இருந்து எங்களுக்கு ஆதரவு அளித்த ஆன்டிகுவா மக்கள், கரீபியன் மக்களுக்கு நன்றி,” எனத் தெரிவித்தார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)