தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக எளிய இலக்கை கோட்டை விட்டாலும் இங்கிலாந்துக்கு வாய்ப்பு பிரகாசம்

SA vs ENG

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

டி20 உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர்-8 சுற்றில் குருப்-2 பிரிவில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென் ஆப்ரிக்கா அணி. இதன் மூலம் அரையிறுதிக்கு முதல் அணியாக தென் ஆப்ரிக்கா தகுதி பெறக்கூடிய வாய்ப்பைப் பெற்றுள்ளது. மே.இ.தீவுகளுக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் வென்றுவிட்டால் அந்த அணி அரையிறுதிக்கு எளிதாக முன்னேறும்.

அதிரடி நாயகன் டீ காக்

மேற்கிந்தியத்தீவுகளில் நடந்த டி20 லீக் தொடர்களில் டீகாக் விளையாடிய அனுபவம் இருந்ததால், ஆடுகளத்தின் தன்மையை எளிதாகப் புரிந்து கொண்டு செட்டிலாகினார். டீகாக்கை 6 முறை டாப்ளியும், மொயின் அலியும் ஆட்டமிழக்கச் செய்திருப்பதால், அவர்களை பந்துவீச கேப்டன் பட்லர் பயன்படுத்தினார். ஆனால் இருவரின் ஓவரையும் டீகாக் வெளுத்துவாங்கினார்.

குயின்டன் டீ காக் 22 பந்துகளில் அரைசதம் அடித்து உலகக் கோப்பையில் குறைந்தபந்துகளில் அரைசதம் அடித்த ஆரோன் ஜோன்ஸ் சாதனையுடன் டீ காக் இணைந்தார். பவர்ப்ளே ஓவர்களை சிறப்பாகப் பயன்படுத்திய டீகாக், தென் ஆப்ரிக்க அணிக்கு சிறந்த தொடக்கத்தை அளித்தார். பவர்ப்ளேயில் விக்கெட் இழப்பின்றி தென் ஆப்ரிக்க அணி 63 ரன்கள் சேர்த்தது.

பிபிசி தமிழ், வாட்ஸ்ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

டீ காக் 58ரன்களில் இருந்தபோது, அதில் ரஷீத் வீசிய பந்தில், பேக்வார்ட் ஸ்குயர் திசையில் அடித்த ஷாட்டை மார்க் உட் கேட்ச் பிடித்தார். களநடுவர் அவுட் வழங்கியநிலையில், டீகாக் 3வது நடுவருக்கு அப்பீல் செய்தார். அதை ஆய்வு செய்த 3வது நடுவர் பந்தை கேட்ச் பிடித்தபோது, பாதி பந்து தரையில் பட்டவாறு இருந்ததால் அவுட் வழங்க மறுத்துவிட்டனர். இந்த முடிவு சிறிதுநேரம் சலசலப்பை ஏற்படுத்தி நடுவர்களிடம் இங்கிலாந்து வீரர்கள் விளக்கம் கேட்டனர்.

டீ காக் 38 பந்துகளில் 65 ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக் காரணமாக இருந்தார். டீ காக்கிற்கு அடுத்தபடியாக மில்லர் 43 ரன்கள் பங்களிப்பு செய்தார். ஆனால் மற்ற வீரர்கள் பேட்டிங்கில் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இதனால் தென் ஆப்ரிக்க அணியால் மிகப்பெரிய ஸ்கோரை எட்டமுடியவில்லை. 20 ஓவர் முடிவில் 163 ரன்களை மட்டுமே அந்த அணி சேர்த்தது.

தென் ஆப்ரிக்க அணி பவர்ப்ளே முடிவில் 63 ரன்கள் சேர்த்தநிலையில் அடுத்த 14 ஓவர்களில் 100 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

SA vs ENG

பட மூலாதாரம், Getty Images

இங்கிலாந்து மந்தமான பேட்டிங்

இங்கிலாந்து அணி 13-வது ஓவர் வரை மந்தமாக ஆடிவிட்டு, அதன்பின்புதான் ஆட்டத்தை வேகப்படுத்தியது, முதல்நிலை வீரர்கள் யாரும் பெரிதாக பங்களிப்பு செய்யவில்லை.

14-வது ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 87 ரன்கள் சேர்த்திருந்தது. கடைசி 6 ஓவர்களில் இங்கிலாந்து வெற்றிக்கு 77 ரன்கள் தேவைப்பட்டன.

ரபாடா வீசிய 15-வது ஓவரில் லிவிங்ஸ்டன் ஒரு சிக்ஸரும், ப்ரூக் 2பவுண்டரிகளும் விளாசி 18 ரன்கள் சேர்த்தனர். நோர்க்கியா வீசிய 16-வது ஓவரில் ப்ரூக் 2 பவுண்டரிகள் உள்பட 13 ரன்கள் சேர்த்தார். பார்ட்மேன் வீசிய 17-வது ஓவரில் லிவிங்ஸ்டன் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர், ப்ரூக் ஒரு பவுண்டரி என 21 ரன்கள் சேர்த்து இங்கிலாந்தை வெற்றிக்கு அருகே கொண்டு வந்தனர்.

SA vs ENG

பட மூலாதாரம், Getty Images

ஆனால், 17-வது ஓவரிலிருந்து சுதாரித்த தென் ஆப்ரிக்க பந்துவீச்சாளர்கள் ஆட்டத்தை தங்கள் பக்கம் இழுத்துவந்தனர். ரபாடா வீசிய 18-வது ஓவரில் லிவிங்ஸ்டன், நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் ஹேரி ப்ரூக் இருவரும் ஆட்டமிழந்தனர்.

கடைசி நேரத்தில் 18 பந்துகளில் 25 ரன்கள் தேவை என்ற நிலையில், யான்சென், ரபாடா, நோர்க்கியா ஆகிய 3 அதிவேகப் பந்துவீச்சாளர்களும் துல்லியத் தாக்குதல் தொடுத்து தென் ஆப்ரிக்க அணிக்கு வெற்றி தேடித்தந்தனர்.

இந்தத் தோல்விக்கு முக்கியக் காரணம் இங்கிலாந்து பேட்டர்களின் மந்தமான ஆட்டமும், பொறுப்பற்ற பேட்டிங்கும்தான். தொடக்கத்திலேயே பவர்ப்ளே ஓவர்களை சிறப்பாகப் பயன்படுத்தி இருந்தால் கடைசி நேரத்தில் நெருக்கடி வந்திருக்காது. 13வது ஓவர்களுக்குப் பின்புதான் இங்கிலாந்து பேட்டர்கள் அதிரடி ஆட்டத்தையே கையில் எடுத்தனர். பட்லர்(17), பேர்ஸ்டோ(16), மொயின் அலி(9) என யாரும் எதிர்பார்த்த பங்களிப்பை அளிக்கவில்லை.

கடைசி நேரத்தில் ஹேரி ப்ரூக் 37 பந்துகளில் 53, லிவிங்ஸ்டோன் 33 ரன்கள் ஆகியோரின் 78 ரன்கள் பார்ட்னர்ஷிப்தான் ஆட்டத்தில் பரபரப்பைச் சேர்த்தது.

SA vs ENG

பட மூலாதாரம், Getty Images

தென் ஆப்ரிக்க பந்துவீச்சாளர்கள் அபாரம்

அதேசமயம், கிடைத்த வாய்ப்பை தென் ஆப்ரிக்க பந்துவீச்சாளர்கள் கச்சிதமாகப் பயன்படுத்தினர். அவர்கள் கடைசி 3 ஓவர்களில் 25 ரன்களை டிபெண்ட் செய்து அசத்தினர்.

18-வது ஓவரை வீசிய ரபாடா, லிவிங்ஸ்டோனை டீப் பேக்வார்ட் ஸ்குயர் திசையில் ஷாட் அடிக்க வைத்து கேட்சாக்கினார். இந்த ஓவரில் 4 ரன்கள் மட்டுமே வழங்கினார். 12 பந்துகளில் இங்கிலாந்து வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை வீசிய யான்சென் 4 ரன்களை மட்டுமே வழங்கினார். கடைசி ஓவரில் இங்கிலாந்து வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டன. 20வது ஓவரை வீசிய நோர்க்கியா செட்டில் பேட்டர் ஹேரி ப்ரூக்(53) விக்கெட்டை வீழ்த்தினார். அதன்பின் களத்தில் இருந்த சாம் கரனால் 5 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது

இங்கிலாந்து அணியைப் பொருத்தவரை பந்துவீச்சாளர்கள் சிறப்பான பணியைச் செய்தனர். சுழற்பந்துவீச்சாளர்கள் அதில் ரஷித், மொயின் அலி இருவரும் சேர்ந்து 7 ஓவர்கள் வீசி 45 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ரீஸ் டாப்ளியும் 4 ஓவர்களில் 23 ரன்கள் என கட்டுக்கோப்புடன் வீசினார்.

SA vs ENG

பட மூலாதாரம், Getty Images

தோல்விக்கு காரணம் என்ன?

இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் கூறுகையில் “ பவர்ப்ளேயில் டீ காக்கை அடிக்கவிட்டதுதான் நாங்கள் தோல்விக்கான காரணமாகப் பார்க்கிறோம். பவர்ப்ளேயில் அதிரடியாக ஆட வேண்டும் என்ற நோக்கத்தோடு டீகாக் இருந்தார். எங்களால் அவரின் ஆட்டத்துக்கு தடைபோட முடியவில்லை. 160 ரன்களை எளிதாக சேஸ் செய்துவிடலாம் என மகிழ்ச்சியுடன்தான் களமிறங்கினோம், ஆனால், தென் ஆப்ரிக்க பந்துவீச்சு சிறப்பாக இருந்தது.

பந்துவீச்சில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். ப்ரூக், லிவிங்ஸ்டன் இருவரின் பார்ட்னர்ஷிப் ஆட்டத்தை மாற்றி வெற்றிக்கு அருகே கொண்டு சென்று நாங்கள் வெல்லக்கூடிய நிலையில் இருந்தோம். ஆனால், டி20 கிரிக்கெட்டில் எதுவுமே நம் கைகளில் இல்லை. நாங்கள் இன்னும் தொடரில் உயிர்ப்புடன் இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

SA vs ENG

பட மூலாதாரம், Getty Images

அரையிறுதி செல்லுமா தென் ஆப்ரிக்கா?

இந்த வெற்றியின் மூலம் டி20 உலகக் கோப்பைத் தொடரில் லீக் சுற்றிலிருந்து சூப்பர்-8 வரை தோல்வி அடையாத அணி என்ற பெயரை தென் ஆப்ரிக்கா தக்கவைத்துள்ளது. சூப்பர்-8 சுற்றில் குரூப் 2 பிரிவில் 2 போட்டிகளிலும் வென்று 4 புள்ளிகளுடன், 0.625 நிக ரன்ரேட்டில் முதலிடத்தில் இருக்கிறது. இன்னும் மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் மட்டும் வென்றுவிட்டால் தென் ஆப்ரிக்க அணி 3வது முறையாக டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிடும்.

ஒருவேளை தென் ஆப்ரிக்கா அணி மேற்கிந்தியத்தீவுகள் அணியிடம் தோல்வி அடைந்தால், அமெரிக்க அணியை மேற்கிந்தியத்தீவுகளும், இங்கிலாந்து அணியும் வென்றால் 3 அணிகளும் தலா 4 புள்ளிகளுடன் அரையிறுதிக்குப் போட்டியிடும். அப்போது நிகர ரன்ரேட் கவனிக்கப்படும்.

ஆனால், தென் ஆப்ரிக்க அணியைப் பொருத்தவரை அதன் நிகர ரன்ரேட் பெரிதாக உயரவில்லை, 0.625 என்ற நிலையில்தான் இருக்கிறது. இந்த ரன்ரேட்டை இங்கிலாந்து அணியாலும் கடைசி லீக்கில் பெறும் வெற்றியால் கடக்க முடியும், மேற்கிந்தியத் தீவுகளும் அடுத்தடுத்து வெற்றி பெற்றால், தென் ஆப்ரிக்காவுக்கு கடும் போட்டியளிக்க முடியும். ஆதலால், தென் ஆப்ரிக்கா அணி அரையிறுதிக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டதேத் தவிர இன்னும் உறுதி செய்யவில்லை. மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தினால், தென் ஆப்ரிக்கா அரையிறுதி செல்வது உறுதியாகும்.

SA vs ENG

பட மூலாதாரம், Getty Images

இங்கிலாந்துக்கு வாய்ப்பு பிரகாசம்

இங்கிலாந்து அணி 2 போட்டிகளில் ஒன்றில் வெற்றி, மற்றொன்றில் தோல்வி என 2 புள்ளிகளுடன் வலுவான நிகர ரன்ரேட்டாக 0.412 என வைத்துள்ளது. அடுத்துவரும் அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றுவிட்டால், 4 புள்ளிகளுடன் வலுவான நிகர ரன்ரேட்டில் முதலிடத்தைப் பிடித்து அரையிறுதிக்குள் செல்ல முடியும். அமெரிக்காவை நடப்பு சாம்பியன் இங்கிலாந்து வெல்வது ஏறக்குறைய உறுதிதான் என்றாலும் நிகர ரன்ரேட்டை உயர்த்தும் அளவு வெற்றி அமைவது அவசியம்.

தமது கடைசி ஆட்டத்தில் தென் ஆப்ரிக்கா வெஸ்ட் இண்டீசையும், இங்கிலாந்து அணி அமெரிக்காவையும் சந்திக்கவிருப்பதால் இங்கிலாந்து அணிக்கு அரையிறுதி வாய்ப்பு இன்னும் பிரகாசமாகவே உள்ளது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)