ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அதிர்ச்சி தந்த ஆப்கானிஸ்தான் - இந்தியாவுக்கு என்ன சிக்கல்?

பட மூலாதாரம், Getty Images
டி20 போட்டிகளைப் பொருத்தவரை ஆப்கானிஸ்தான் அணி கத்துக்குட்டி அல்ல என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. டி20 தொடரின் சூப்பர் 8 ஆட்டத்தில் பலமான ஆஸ்திரேலிய அணியை 21 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது அரையிறுதி வாய்ப்பை ஆப்கானிஸ்தான் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் ஆஸ்திரேலியாவை ஆப்கானிஸ்தான் அணி வெல்வது இதுவே முதன் முறையாகும். இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் கம்மின்ஸ் ஹாட்ரிக் சாதனை விழலுக்கு இறைத்த நீராய்ப் போனது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றியை ஆப்கானிஸ்தான் அணி சாத்தியமாக்கியது எப்படி? ஆப்கானிஸ்தான் வெற்றியால் இந்தியாவுக்கு என்ன சிக்கல்?
ஆப்கானிஸ்தான் வலுவான தொடக்கம்
செயின்ட் வின்சென்ட் நகரில் நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்த தொடரில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரஹ்மானுல்லா குர்பாஸ் இந்த ஆட்டத்திலும் முத்திரை பதித்தார். அவருடன் மற்றொரு தொடக்க வீரர் ஜாத்ரனும் சிறப்பாக விளையாட, ஆஸ்திரேலிய அணி விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறிப் போனது.
ஆடுகளத்தில் பந்துகள் நன்றாக சுழன்று திரும்பியதுடன், பவுன்சும் ஆயின. இதனால், பேட்டிங் செய்வது அவ்வளவு சுலபமானதாக இல்லை. இதனை உணர்ந்து கொண்டு நிதானமாக ஆடிய ஆப்கானிஸ்தான் தொடக்க ஜோடி பவர் ப்ளே ஓவர்களில் 40 ரன்கள் திரட்டியது. பேட்டிங்கிற்கு அவ்வளவாக ஒத்துழைக்காத ஆடுகளத்தில் பவுண்டரி, சிக்சர்கள் விளாசுவது கடினமாக இருந்ததால் ஆப்கானிஸ்தான் தொடக்க ஜோடி விக்கெட்டுகளுக்கு இடையே ஓடி ஒன்றிரண்டு ரன்களாக சேர்ப்பதில் அதிக கவனம் செலுத்தினர். இது அந்த அணிக்கு வெகுவாக கைகொடுத்தது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
தொடக்க ஜோடி சதம் அடித்து அசத்தல்
குர்பாஸ் - ஜாத்ரன் ஜோடியை பிரிக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் திணறித்தான் போனார்கள். ஆட்டத்தின் 16-வது ஓவரில்தான் இந்த ஜோடியை பிரிக்க முடிந்தது.
அந்த ஓவரின் 5-வது பந்தை ஸ்டாய்னிஷ் நல்ல லென்த்தில் வீச, ரஹ்மானுல்லா குர்பாஸ் கிரீசை விட்டு இறங்கி அடிக்க முயற்சித்தார். டைமிங் சரியாக இல்லாததால் பந்து பேட்டில் சரியாக படாமல், ஸ்கொயர் லெக் திசையில் நின்றிருந்த வார்னரிடம் கேட்ச் ஆனது. குர்பாஸ் 49 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 60 ரன் சேர்த்தார்.
ஆப்கானிஸ்தான் அணிக்கு குர்பாஸ் - ஜாத்ரன் தொடக்க ஜோடி 118 ரன்கள் சேர்த்து அசத்தியது.

பட மூலாதாரம், Getty Images
ஆப்கானிஸ்தான் விக்கெட்டுகள் சரிவு
தொடக்க ஜோடி பிரிந்ததும் ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஓமர்ஜாய் 2 ரன்னில் ஆடம் ஜம்பா பந்தில் கிளீன் போல்டானார். அடுத்த சில நிமிடங்களிலேயே, மறுமுனையில் நிலைத்து நின்ற தொடக்க வீரர் ஜாத்ரனும் 51 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அவரது விக்கெட்டையும் ஆடம் ஜம்பாவே வீழ்த்தினார்.
தொடக்க ஜோடி வீழ்ந்த பிறகு ஆப்கானிஸ்தான் வீரர்கள் பெரிய அளவில் ரன் சேர்க்காததால், அந்த அணியால் எதிர்பார்த்த அளவுக்கு ரன்களை குவிக்க முடியவில்லை.

பட மூலாதாரம், Getty Images
கம்மின்ஸ் ஹாட்ரிக் சாதனை
ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் வங்கதேசத்திற்கு எதிரான கடந்த போட்டியைப் போலவே இம்முறையும் ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தினார். 18-வது ஓவரின் கடைசிப் பந்தில் ஆப்கன் கேப்டன் ரஷித் கானை வீழ்த்திய அவர், 20-வது ஓவரின் முதலிரு பந்துகளில் முறையே கரீம் ஜானட், குல்புதீன் நயிப் ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்தார்.
அவர் வீசிய அடுத்த பந்திலும் விக்கெட் கிடைத்திருக்க வாய்ப்பு இருந்தது. ஆனால், முகமது நபி அடித்த பந்தில் கிடைத்த கேட்ச் வாய்ப்பை வார்னர் நழுவ விட்டார். வார்னர் கேட்ச் பிடித்திருந்தால் கம்மின்ஸ் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பார்.
20 ஓவர் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 148 ரன் சேர்த்தது. ஆஸ்திரேலியா தரப்பில் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பட மூலாதாரம், Getty Images
ஆஸ்திரேலியா அதிர்ச்சித் தொடக்கம்
149 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. அதிரடி தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் ஒரு ரன் கூட எடுக்காத நிலையில் நவீன் உல் ஹக் வீசிய முதல் ஓவரின் மூன்றாவது பந்திலேயே கிளீன் போல்டானார். மற்றொரு தொடக்க வீரர் டேவிட் வார்னரும் இம்முறை ஏமாற்றிவிட்டார். 8 பந்துகளில் 3 ரன் மட்டுமே சேர்த்த அவர் முகமது நபி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அணியை சரிவில் இருந்து தூக்கி நிறுத்த முற்பட்ட ஆஸ்திரேலிய கேப்டன் மிட்செல் மார்ஷாலும் நீண்ட நேரம் நிலைக்க முடியவில்லை. 2 பவுண்டரிகளுடன் 12 ரன் சேர்த்த அவரை நவீன் உல் ஹக் அவுட்டாக்கினார். இதன் பிறகு ஆஸ்திரேலிய வீரர்கள் யாராலும் நிலைத்து ஆட முடியவில்லை. அவர்கள் வருவதும் அவுட்டாகி வெளியேறுவதுமாகவே இருந்தனர். ஆனால், ஒருமுனையில் கிளென் மேக்ஸ்வெல் மட்டும் நிலைத்து ஆடி அணியை கரை சேர்க்கப் போராடினார்.

பட மூலாதாரம், Getty Images
நினைவில் வந்து போன ஒருநாள் உலகக்கோப்பை ஆட்டம்
ஆஸ்திரேலிய அணி ஒருமுனையில் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து கொண்டிருந்தாலும் மேக்ஸ்வெல் பேட்டில் இருந்து மட்டும் சிக்சர்களும், பவுண்டரிகளும் வந்த வண்ணம் இருந்தன. அதைப் பார்க்கையில், அண்மையில் இந்தியாவில் நடந்து முடிந்த ஒருநாள் உலகக்கோப்பை ஆட்டம் ஒன்றில், நடக்கவே சிரமப்பட்ட நிலையிலும் தனி ஒருவனாக இரட்டை சதம் அடித்து ஆப்கானிஸ்தானை ஆஸ்திரேலியா வெற்றி கொள்ள உதவிய அவரது ஆட்டம் ரசிகர்களின் நினைவில் வந்து போனது.
ஆனாலும், மேக்ஸ்வெல்லின் சவாலை 15-வது ஓவரில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் முடிவுக்குக் கொண்டு வந்தனர். குல்ஹாதின் நயீப் பந்துவிச்சில் நூர் அகமதுவிடம் கேட்ச் கொடுத்து மேக்ஸ்வெல் ஆட்டமிழந்தார். 41 பந்துகளை சந்தித்த அவர் 3 சிக்சர், 6 பவுண்டரிகளுடன் 59 ரன்களை சேர்த்தார். அப்போது ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்திருந்தது.

பட மூலாதாரம், Getty Images
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் முதல் வெற்றி
ஆப்கானிஸ்தான் வீரர்கள் துல்லியமான பந்துவீச்சையும், துடிப்பான பீல்டிங்கையும் மீறி ஆஸ்திரேலிய வீரர்களால் ரன்களை குவிக்க முடியவில்லை. அதன் கடைசிக் கட்ட வீரர்களும் சொற்ப ரன்களில் சரணடைந்தனர். முடிவில், 19.2 ஓவர்களில் 127 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆல்அவுட்டானது. இதனால், 21 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்று, உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேற்றப்படாமல் தப்பியது.
டெஸ்ட், ஒருநாள், இருபது ஓவர் என சகல விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆப்கானிஸ்தானின் முதல் வெற்றி இதுவாகும்.

பட மூலாதாரம், Getty Images
ஆப்கானிஸ்தான் வெற்றியால் இந்தியாவுக்கு சிக்கல்
இந்த போட்டியில் ஆப்கானிஸ்தானை ஆஸ்திரேலியா வெற்றி கொண்டிருந்தால், இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் சிக்கலின்றி எளிதில் அரையிறுதிக்கு முன்னேறி இருக்கும். தற்போது ஆப்கானிஸ்தானின் வெற்றி அந்த அணியின் அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
தற்போதைய நிலையில், குரூப் ஒன்றில் இந்தியா 2 வெற்றிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. ஆஸ்திரேலியாவும், ஆப்கானிஸ்தானும் தலா ஒரு வெற்றியுடன் 2 புள்ளிகள் பெற்றிருந்தாலும் ரன் ரேட் அடிப்படையில் ஆஸ்திரேலியா 2-வது இடத்தில் இருக்கிறது. 2 போட்டிகளிலும் தோற்றுப் போன வங்கதேசம் கடைசி இடத்தில் உள்ளது.
இந்தியா தனது கடைசி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வென்றால் சிக்கலின்றி அரையிறுதிக்குள் நுழையும். ஒருவேளை இந்தியா தோற்றுப் போனால் மற்ற அணிகள் விளையாடும் போட்டிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டியிருக்கும்.
ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோற்கும் அதேநேரத்தில், வங்கதேசத்திற்கு எதிராக ஆப்கானிஸ்தான் வெற்றி பெறும் பட்சத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் ஆகிய 3 அணிகளும் 4 புள்ளிகளுடன் இருக்கும். அப்போது நிகர ரன் ரேட் அடிப்படையில் முதலிரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குள் நுழையும்.

பட மூலாதாரம், Getty Images
கடைசி இடத்தில் உள்ள வங்கதேசத்திற்குக் கூட அரையிறுதி வாய்ப்பு இல்லாமல் இல்லை. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வங்கதேசம் மிகப்பெரிய வெற்றியை பெறும் அதேவேளையில், இந்தியா ஆஸ்திரேலியாவை வென்றால் வங்கதேசம், ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் ஆகிய 3 அணிகளும் தலா 2 புள்ளிகள் பெற்றிருக்கம். அவ்வாறான சூழலில் ரன் ரேட் அடிப்படையில் வங்கதேசம் அரையிறுதியில் நுழையலாம்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












