தடுமாறிய இங்கிலாந்து முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது எப்படி?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், க.போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
டி20 உலகக் கோப்பைத் தொடரில் அரையிறுதிக்கு குரூப் 2 பிரிவில் முதல் அணியாகத் தகுதி பெற்றிருக்கிறது இங்கிலாந்து அணி.
நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி, சூப்பர்-8 சுற்றுக்குத் தகுதியாவோமா அல்லது வெளியேற்றப்படுவோமா என்ற நிலையில் இருந்து, போராடி கடைசி நேரத்தில் சூப்பர் -8 சுற்றுக்குள் வந்தது. ஆனால், இப்போது முதல் அணியாக அரையிறுதிக்குத் தகுதியாகியுள்ளது. மேற்கிந்தியத்தீவுகள், தென் ஆப்ரிக்கா இடையே நடந்துவரும் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி இரண்டாவது அணியாக அரையிறுதிக்குள் செல்லும்.
பிரிட்ஜ்டவுனில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர்-8 சுற்றில், குரூப்-2 பிரிவு ஆட்டத்தில் அமெரிக்கா அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வென்றது.
முதலில் பேட் செய்த அமெரிக்கா 18.5 ஓவர்களில் 115 ரன்களில் ஆட்டமிழந்தது. 116 ரன்கள் இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி 62 பந்துகள் மீதமிருக்கையில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இந்த வெற்றியின் மூலம் குருப்-2 பிரிவில் இங்கிலாந்து அணி 3 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகளுடன் 1.992 என வலுவான நிகர ரன்ரேட்டில் முதலிடத்தைப் பிடித்து அரையிறுதியை உறுதி செய்துள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இரண்டாவது அணி யார்?
தென் ஆப்ரிக்கா அணியை வென்றாலே போதுமானது மேற்கிந்தியத்தீவுகள் அரையிறுதிக்குள் சென்றுவிடும்.
தற்போது மேற்கிந்தியத்தீவுகள் 2 புள்ளிகளுடன் 1.814 என வலுவான நிகர ரன்ரேட்டில் தென் ஆப்ரிக்காவைவிட வலுவாக இருக்கிறது. அதனால் தென் ஆப்ரிக்காவை போராடி வென்றுவிட்டாலே அரையிறுதி செல்லும். அதேபோல, மேற்கிந்தியத்தீவுகள் 2 புள்ளிகள் இருக்கும்நிலையில் தென் ஆப்ரிக்கா 4 புள்ளிகளுடன் இருக்கிறது. தென் ஆப்பிரிக்கா வென்றாலே 6 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்து அரையிறுதி செல்லும். அதனால், இன்றைய (திங்கள், ஜூன் 24) ஆட்டத்தில் வெல்லும் அணி அரையிறுதி செல்லும்.
இங்கிலாந்து அணிக்கு விதிக்கப்பட்ட எளிய இலக்கான 115 ரன்களை கேப்டன் பட்லர், பில் சால்ட்டும் சேர்த்து அடித்து நொறுக்கிவிட்டனர். பேட்டிங்கிற்கு சாதகமான பிரிட்ஜ்டவுன் ஆடுகளத்தில் வெளுத்து வாங்கிய பட்லர் 32 பந்துகளில் அரைசதம் அடித்து 38 பந்துகளில் 83 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்கமல் இருந்தார். இதில் 7 சிக்ஸர்கள் 6 பவுண்டரிகள் அடங்கும். பில் சால்ட் 25 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஃபார்மின்றி தவித்துவந்த ஜோஸ் பட்லர் இந்த போட்டியில் அதிரடியாக சதம் அடித்ததன் மூலம் இழந்த தனது ஃபார்மை மீட்டுள்ளது அந்த அணிக்கு பெரிய பலமாகும்.
இந்த ஆட்டத்தில் 4 ஓவர்கள் வீசி 13 ரன்கள் கொடுத்து, 13 டாட்பந்துகளுடன் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல்2 விக்கெட்டுகளை வீழ்த்திய அதில் ரஷீத் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பட மூலாதாரம், Getty Images
‘முதலிடம் பெற நினைத்தோம்’
வெற்றிக்குப்பின் இங்கிலாந்து கேப்டன் பட்லர் கூறுகையில், “எங்கள் அணியின் முழுத் திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்தேன் அது நடந்துள்ளது,” என்றார்.
“இந்த குரூப்பிலும் முதலிடம் பெற வேண்டும் என்று நினைத்தோம், அது நடந்துள்ளது. ரஷித், லிவிங்ஸ்டோன் அருமையாகப் பந்துவீசி, நடுப்பகுதியில் ரன்ரேட்டைக் குறைத்தனர். எங்களிடம் சிறந்த பந்துவீச்சாளர்கள் உள்ளனர். பேட்டிங்கை வலுப்படுத்த ஜோர்டனுக்கு வாய்ப்புக் கொடுத்தோம், முதல் போட்டியிலேயே ஹாட்ரிக் வீழ்த்தியது மகத்தான சாதனை,” எனத் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
முதல் இங்கிலாந்து வீரர்
இந்த உலகக் கோப்பைத் தொடரில் முதல்முறையாக வாய்ப்புப் பெற்ற இங்கிலாந்து ஆல்ரவுண்டர் கிறிஸ் ஜோர்டன் 5 பந்துகளில் 4 விக்கெட் வீழ்த்தி ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்தினார். இங்கிலாந்து அணியில் உலகக் கோப்பையில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஜோர்டான் பெற்றார். இதற்கு முன் அயர்லாந்து வீரர் குர்டிஸ் கேம்பர் மட்டுமே ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே பிரிட்ஜ்டவுன் நகரில் ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணியில் ஜோர்டன் இடம்பெற்றார்.
ஆனால் மழையால் அந்த ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து இதே மைதானத்தில் தோல்வி அடைந்த ஆட்டத்தில் இடம் பெற்றிருந்தார். அடுத்த போட்டியில் நீக்கப்பட்ட ஜோர்டன் நமீபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் மீண்டும் அணிக்குள் வந்தார்.
மார்க்வுட் பந்துவீச்சில் வேகம் மட்டுமே இருக்கும், ஸ்விங், வேரியேஷன்கள் பெரும்பாலும் இருக்காது என்பதாலும், பேட்டிங்கை வலுப்படுத்தவும் ஜோர்டன் கொண்டுவரப்பட்டார். பந்துவீச்சில் அதிகமான ஸ்லோவர் பந்துகளையும், வேரியேஷன்களையும் வெளிப்படுத்தி ஜோர்டன் பந்துவீசக்கூடியது.

பட மூலாதாரம், Getty Images
தடுமாறிய அமெரிக்கா
அமெரிக்கா அணி தொடக்கம் முதலே தடுமாறியது. டாப்ளி வீசிய முதல் ஓவரிலேயே கோஸ் 8 ரன்னிலும், பவர்ப்ளேயில் சாம்கரன் வீசிய கடைசி ஓவரில் டெய்லர் (12) ஆட்டமிழந்தனர். பவர்ப்ளே முடிவில் அமெரிக்க அணி 2 விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் சேர்த்தது.
அதன்பின் அதில் ரஷித், லிவிங்ஸ்டன் இருவரும் சேர்ந்து, அமெரிக்க அணியின் ரனரேட்டை இழுத்துப்பிடித்தனர். அடுத்த 6 ஓவர்களில் லிவிங்ஸ்டன், ரஷித் இருவரும் சேர்ந்து 25 ரன்களை மட்டுமே அமெரிக்க பேட்டர்களை அடிக்கவிட்டனர்.
அமெரிக்க அணியில் ஓரளவுக்கு பேட் செய்த நிதிஷ் குமார் 30 ரன்கள் சேர்த்திருந்தபோது ரஷித் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார், கேப்டன் ஜோன்ஸ் 10 ரன்னில் ரஷித் பந்துவீச்சில் கிளீன் போல்டாகினார்.
ஹாட்ரிக் சாதனை
19-வது ஓவரை ஜோர்டான் வீசியபோதுதான் ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்தினார். நியூசிலாந்து அணியில் இருந்து, அமெரிக்கா அணிக்காக ஆடிவரும் கோரி ஆன்டர்சன் (29) ப்ரூக்கிடம் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். இரண்டாவது பந்தில் அலிகான் க்ளீன் போல்டாகினார். ஒன்பதாவது விக்கெட்டுக்குக் களமிறங்கிய நோஸ்துஷ் கென்ஜி கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார். ஐந்தாவது பந்தில் நெட்ராவால்கர் க்ளீன் போல்டாகினார். ஐந்து பந்துகளில் தொடர்ந்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி, ஹாட்ரிக் சாதனையை ஜோர்டன் வீழ்த்தினார்.
நான்கு ஓவர்களை வீசிய ஜோர்டன் 10 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மேற்கிந்தியத்தீவுகளில் பர்படாஸை பூர்வீகமாகக் கொண்டவர் ஜோர்டன், இங்கிருந்து காலப்போக்கில் இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தார். தனது சொந்த மண்ணில் ஹாட்ரிக் வீழ்த்தியது ஜோர்டனுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

பட மூலாதாரம், Getty Images
ஏமாற்றிய கோரி ஆன்டர்சன்
ஒருநாள் போட்டியில் அதிவிரைவாக சதம் அடித்த வீரர் என்ற பெருமையுடன் கோரி ஆன்டர்சன் நியூசிலாந்து அணியில் இருந்தார். அங்கிருந்து அமெரிக்கா அணிக்குச் சென்றபின் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. கடந்த ஏப்ரல் மாதத்தில்தான் அமெரிக்க அணியில் இடம் பெற்ற கோரி ஆன்டர்சன் டி20 உலகக் கோப்பையில் பெரிய துருப்புச்சீட்டாக இருப்பார் எனக் கருதப்பட்டது. ஆனால், இந்தத் தொடரில் ஒரு போட்டியில்கூட கோரி ஆன்டர்சன் பெரிதாக எந்த ஆட்டத்தையும் வெளிப்படுத்தவில்லை.
இந்த உலகக் கோப்பைத் தொடரில் ஆன்டசனின் சராசரி 13 ரன்கள்தான். இந்த ஆட்டத்திலும் 29 ரன்கள் சேர்த்த ஆன்டர்சன் ஒரு சிக்ஸர் மட்டுமே சேர்த்திருந்தார், பவுண்டரிகள் அடிக்கவில்லை. இந்த 29 ரன்கள்தான் ஆன்டர்சன் டி20 உலகக் கோப்பையில் சேர்த்த அதிகபட்ச ஸ்கோர். மிகுந்த எதிர்பார்ப்புடன் அணியில் சேர்க்கப்பட்ட ஆன்டர்சன் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளார்.
ஆனால், கடைசிநிலை வீரர் ஹர்மீத் சிங் 17 பந்துகளில் 21 ரன்களில் சேர்த்து அதில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் விளாசி இருந்தார்.
தொடர்ந்து 5 சிக்ஸர்களை விளாசிய பட்லர்
டி20 உலகக் கோப்பையின் அரையிறுதி சுற்று நெருங்கிய நிலையில் பட்லர் ஃபார்முக்கு திரும்பியுள்ளது அந்த அணிக்கு பெரிய வலிமையாகும். பவர்ப்ளேயில் பட்லர் 26 பந்துகளில் 44 ரன்களைச் சேர்த்தார். நெட்ராவால்கர் பந்துவீச்சில் பட்லர் அடித்த இரு சிக்ஸர்களில், பந்து மைதானத்தின் மேற்கூரையில் இருந்த சோலார் பேனல்களை உடைத்தது.
ஹர்மித் சிங் வீசிய 9-வது ஓவரை பட்லர் கிழித்து எறிந்தார். இந்த ஓவரில் மட்டும் பட்லர் 5 சிக்ஸர்களை விளாசினார். இரண்டாவது பந்திலிருந்து ஐந்தாவது பந்துவரை தொடர்ந்து 4 சிக்ஸர்களையும், அதன்பின் வைடு பாலுக்குப்பின் கடைசிப்பந்தில் ஒரு சிக்ஸரையும் பட்லர் விளாசினார். இந்த ஓவர் தொடங்கும்போது 31 பந்துகளில் 48 ரன்கள் இருந்த பட்லர், அடுத்த 5 பந்துகளில் 30 ரன்கள் விளாசி 36 பந்துகளில் 78 ரன்களுக்கு உயர்ந்தார். 32 பந்துகளில் அரைசதம் அடித்த பட்லர், 38 பந்துகளில் 83 ரன்கள் சேர்த்தார்.
குறைந்த ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி விரைவாக இலக்கை எட்டி நிகர ரன்ரேட்டை இங்கிலாந்து உயர்த்திக் கொண்டு பாதுகாப்பாக அரையிறுதிக்குள் சென்றுவிட்டது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












