விடுதலைப் புலிகள் தளபதிகளுடன் கால்பந்து விளையாடிய மைத்திரியின் இன்றைய நிலைமை

- எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
- பதவி, பிபிசி தமிழுக்காக
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய தளபதிகளுடன் கால்பந்து விளையாடிய இவர், இன்று தனது காலை இழந்து மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றார்.
மலையகத்தின் நாவலபிட்டி பகுதியில் பிறந்த மைத்திரிபாலன், நாட்டில் காணப்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக வவுனியா நோக்கி 1978ம் ஆண்டு காலப் பகுதியில் சென்றுள்ளார்.
நாவலபிட்டி சென் மேரிஸ் கல்லூரியில் ஆரம்ப கல்வியை தொடர்ந்த மைத்திரிபாலன், கால்பந்து விளையாடுவதில் மிகுந்த ஆர்வம் காட்டியுள்ளார்.
பாடசாலை விளையாட்டு போட்டிகளில் பங்குபற்றி இவர், வவுனியாவை நோக்கி சென்றதை தொடர்ந்து, அங்கு பகுதி நேரமாக கால்பந்தாட்ட போட்டிகளில் கலந்துக்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், வவுனியா பொது மைதானத்தில் நாளாந்தம் கால்பந்தாட்ட போட்டிகளில் விளையாடி வந்துள்ளார் மைத்திரிபாலன்.

கால்பந்து வீரர் காலை இழந்தது எப்படி?
1980ம் ஆண்டு காலப் பகுதியில் வவுனியாவில் தன்னுடன் விடுதலைப் புலிகள் அமைப்பின் தளபதிகள் கால்பந்து விளையாடியதாக மைத்திரிபாலன் கூறுகின்றார்.
''இவர் தான் எங்களுக்கு கோச்சர். எரியதாஸ் பந்து என்றால் சரியான பாரமாக இருக்கும் அந்த நேரம் வந்தது. தலையை போட பயம். என்ன பயப்படுறாய். போடு தலைய என சொல்வார். இவர்கள் எல்லாம் இருந்திருந்தால், இன்று எனக்கு இந்த நிலைமை வந்திருக்காது. இவரும் இறந்து விட்டார். அவருடைய குடும்பமே இறந்து விட்டது. சாவகச்சேரி பௌசர் குண்டு வெடிப்பில் பசிர் இறந்தார். இவருடைய தம்பி தான் அவர். கடலில் கப்பலில் கிட்டு உடன் சென்று இந்திய படை வந்த போது, அவர்களே வெடிக்க வைத்துக்கொண்டார்கள். அதில் இவரும் இறந்து விட்டார். ஒருவரும் இல்லை. மற்ற வீரர்கள் யாரும் நினைவில் இல்லை. எல்லாரும் வெளியில் இருக்கின்றார்கள். இந்த படத்தில் இரண்டு, மூன்று பேர் விடுதலைப் புலிகளில் முக்கியஸ்தர்கள் இருக்கின்றார்கள்" என மைத்திரிபாலன் தெரிவிக்கின்றார்.
90ம் ஆண்டு காலப் பகுதியில் திடீரென தனது காலில் ஏற்பட்ட காயமொன்றினால், தனது ஒரு காலை அகற்றுவதற்கு வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக மைத்திரிபாலன் தெரிவிக்கின்றார்.
''93ல் இந்த காலை எடுக்க வேண்டிய நிலைமை வந்தது. இந்த காலை எடுத்து, 6 மாதங்கள் சென்றவுடன், மற்ற காலிற்கும் வருத்தம் வந்தது. மூன்று வருடங்கள் வரை இந்த இரண்டு கால்களுக்கும் அவதிப்பட்டேன். காலை சுகப்படுத்திக் கொண்டு வீட்டிற்கு வந்த போது, வாழ்வாதாரத்திற்கு வழி இல்லை. சொந்தகாரர்களின் வீடுகளுக்கு போய் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். பிள்ளைகள் திருமணம் செய்துக்கொண்டார்கள். இந்த தொழிலை எமது ஐயா ஆட்கள் செய்தார்கள். நான் இந்த வேலையை பழகிக் கொண்டேன்" என அவர் கூறுகின்றார்.

சாம்புராணி தட்டு விற்று வருமானம்
தனது வாழ்வாதார தொழிலாக சாம்புராணி தட்டுக்களை தயாரித்து, வவுனியா நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் விநியோகித்து வருகின்றார் மைத்திரிபாலன்.
இந்த தொழிலின் ஊடாக கிடைக்கும் வருமானம், தனது வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல போதுமானதாக உள்ளது என அவர் கூறுகின்றார்.
எனினும், இந்த தொழிலை அடுத்த கட்டத்திற்கு நகரத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கும் மைத்திரிபாலன், பொருளாதார ரீதியில் பின்னடைவில் உள்ளமையினால் தொழிலை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாத நிலைமையை எதிர்நோக்கி வருகின்றார்.
''எனக்கு யாரும் சும்மா தர தேவையில்லை. கடனாக தந்தால் போதும். ஆட்களை போட்டு வேலைகளை செய்வேன். இந்த தொழிலை அப்படியே பெருப்பிக்கலாம். யாரும் உதவி இல்லை. மூன்று லட்சம் ரூபா இருந்தால் போதும்" என மைத்திரிபாலன் தெரிவிக்கின்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













