இந்தியாவின் பால் உற்பத்தி வரலாற்றை மாற்றி எழுதிய வெண்மைப் புரட்சி நாயகன் வர்கீஸ் குரியன்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
(உலக பால் தினத்தையொட்டி இந்தக் கட்டுரை மறுபகிர்வு செய்யப்படுகிறது)
உலகில் பால் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் நாடு இந்தியா. மிகச் சாதாரண நிலையில் இருந்து, இந்த நிலையை எட்டுவதில் பின்னணியில் இருந்த மனிதர் யார்?
ஒரு காலகட்டத்தில் இந்தியாவைப் பற்றிய வெளிநாட்டவரின் வர்ணனையில் கண்டிப்பாக மாடுகள் நிறைந்திருக்கும். பிரதான சாலைகள், வயல்வெளிகள்... எங்கும் மாடுகள், மாடுகள்தான். ஆனால், இவ்வளவு மாடுகள் இருந்தும் போன நூற்றாண்டின் நடுப் பகுதியில் இந்தியாவில் பால் மாவு இறக்குமதி செய்யப்பட்டுக்கொண்டுதான் இருந்தது.
இந்த நிலையை மாற்றியமைக்கும் நோக்கில் திட்டமிடப்பட்டதுதான் வெண்மைப் புரட்சி. ஆபரேஷன் ஃப்ளட் (Operation Flood) என்ற பெயரில் துவங்கப்பட்டு, போன நூற்றாண்டின் இறுதிக்குள் இந்தியாவை உலகின் மிகப் பெரிய பால் உற்பத்தியாளராக மாற்றியது இந்தத் திட்டம்.
இந்த மகத்தான முயற்சியின் முதுகெலும்பாக செயல்பட்டவர் வர்கீஸ் குரியன்.
கேரளாவில் உள்ள கள்ளிக்கோட்டையில் 1921ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் தேதி தனது பெற்றோருக்கு மூன்றாவது குழந்தையாகப் பிறந்தார் வர்கீஸ் குரியன்.
பள்ளிப்படிப்பை கோபிச்செட்டிப் பாளையத்தில் முடித்த பிறகு, சென்னை லயோலா கல்லூரியில் பிஎஸ்சி இயற்பியலும் பிறகு கிண்டி பொறியியல் கல்லூரியில் எந்திரப் பொறியியலும் படித்தார். இதற்குப் பிறகு ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடா ஸ்டீல் டெக்னிக்கல் இன்ஸ்ட்டிடியூட்டிலும் படித்தார்.
இதற்குப் பிறகு, பால் பண்ணைப் பொறியியல் குறித்து அமெரிக்காவில் படிப்பதற்கான உதவித் தொகை கிடைத்ததும், அங்குள்ள மிச்சிகன் ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் படித்தார்.
இந்த காலகட்டத்தில் அதாவது 1942- 43ல் பம்பாயில் இருந்த ஏராளமான பிரிட்டிஷ்காரர்கள் நோய்வாய்ப்பட்டனர். அதற்குக் காரணம் அவர்கள் குடித்துவந்த பால்தான் என்பது தெரியவந்தது. அந்தப் பாலின் மாதிரியை பரிசோதித்ததில் அவை மிகுந்த அசுத்தமாக இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து பாலுக்கென்றே ஒரு ஆணையரை நியமிக்க அரசு முடிவுசெய்தது. பாலின் தரத்தைக் கண்காணிக்க பால் துறை உருவாக்கப்பட்டது. பால் உற்பத்தி - விநியோகத்தில் அரசு முதன் முதலில் தலையிட ஆரம்பித்தது இப்படித்தான்.
அமெரிக்காவில் தனது படிப்பை முடித்த பிறகு, முன்பே செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி 1949ல் குஜராத்தில் இருந்த ஆனந்த்திற்கு வந்து சேர்ந்தார் வர்கீஸ் குரியன். அங்கிருந்த பால் ஆராய்ச்சி நிலையத்தை தேசிய பால் பண்ணை ஆராய்ச்சி நிலையம் நடத்திவந்தது. அங்கு சேர்ந்தார் வர்கீஸ் குரியன். மிக மோசமான நிலையில் இருந்த அந்த ஆராய்ச்சி நிலையத்தை செயல்படவைத்தார் குரியன்.
பிறகு அங்கு தேங்கிக் கிடந்த பால் பவுடரை வெற்றிகரமாக விற்பனை செய்ய ஆரம்பித்தார். இதற்குப் பிறகு, 1950ல் கைரா மாவட்டத்தின் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் பொது மேலாளராக நியமிக்கப்பட்டார் குரியன். இந்த காலகட்டத்தில் இந்த கூட்டுறவு அமைப்பால் சேகரிக்கப்படும் பாலின் அளவு தொடர்ந்து அதிகரித்தது. 1948ல் 200 லிட்டராக இருந்த கொள்முதல், 1952ல் 20,000 லிட்டராக உயர்ந்தது.
இதற்குப் பிறகு வர்கீஸ் குரியன் நியூசிலாந்திற்குச் சென்று பால் பதப்படுத்தும் தொழிலின் நுட்பங்களை நேரடியாக அறிந்துகொண்டார். இதற்குப் பிறகு கைரா மாவட்டத்தில் பால் பண்ணைத் தொழிலை மேம்படுத்த நியூசிலாந்து நிதியுதவி செய்தது. இதற்குப் பிறகு வர்கீஸ் குரியனுடன் அமெரிக்காவில் படித்த ஹரிசந்த் தலாயா அந்த கைரா மாவட்ட கூட்டுறவு அமைப்புடன் இணைந்துகொண்டார். அந்த காலகட்டத்தில் எருமைப் பாலை பவுடராக மாற்றும் தொழில்நுட்பம் கிடையாது.

பட மூலாதாரம், Getty Images
ஆனால், இதற்கு குரியனும் தலாயாவும் ஒரு வழியைக் கண்டுபிடித்தனர். இதற்குப் பிறகு யுனிசெஃபின் உதவியுடன் புதிய பால் பதப்படுத்தும் தொழிற்சாலை 1954ல் அமைக்கப்பட்டது. நிர்மாணிக்கப்பட்ட சமயத்தில் ஆசியாவின் மிகப் பெரிய பால் பண்ணை அங்கே உருவாக்கப்பட்டது.
இதற்குப் பிறகு பாலை சந்தைப்படுத்த ஒரு புதிய பிராண்ட் பெயரை வைக்க நினைத்தார் குரியன். அப்போது அமூல்யா என்ற சமஸ்கிருதப் பெயரிலிருந்து உருவாக்கப்பட்ட அமுல் என்ற சொல் சரியாக இருக்கும் என்றும் தோன்றியது. மேலும், Anand Milk Union Limited என்பதன் சுருக்கமாகவும் அமுல் அமைந்தது. 1957ல் இந்தப் பெயர் பதிவுசெய்யப்பட்டது.
முதலில் திரவ நிலை பால் உற்பத்தி, பிறகு பால் பவுடர் உற்பத்தி, பிறகு வெண்ணை உற்பத்தி என பால் தொழிலில் அடுத்தடுத்த கட்டங்களுக்கு வேகமாகச் சென்றது அமுல். இதற்குப் பிறகு திடப்படுத்தப்பட்ட பால், பாலாடைக் கட்டி, குழந்தைகளுக்கான உணவு போன்ற பொருட்களையும் அமுல் தயாரிக்க ஆரம்பித்தது.
டெல்லியில் பாலுக்கு ரேஷன்
அமுலின் வெற்றியைத் தொடர்ந்து, மிக மோசமாக இயங்கிவந்த தில்லி பால் வளத் திட்டத்தின் தலைவராக வர்கீஸ் குரியனை நியமித்து அதனைச் சரிசெய்ய அப்போதைய விவசாயத் துறை அமைச்சர் சி. சுப்பிரமணியம் முடிவுசெய்தார். அந்தத் தருணத்தில் தில்லியில் பாலுக்கு ரேஷன் முறை பின்பற்றப்பட்டு வந்தது.
இது பல்வேறு முறைகேடுகளுக்கு வழிவகுத்தது. ஆண்டுக்கு 10-12 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கிவந்தது. அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட குரியன் அதனைச் சரிசெய்து ஒப்படைத்தார். ரேஷன் முறை நீக்கப்பட்டது.
1964ல் பிரதமரான லால் பகதூர் சாஸ்திரி, கைரா மாவட்ட கூட்டுறவு பாணியில் நாடு முழுவதும் பால் உற்பத்தி பண்ணைகளை உருவாக்க தேசிய பால் வள மேம்பாட்டு வாரியத்தை உருவாக்க விரும்பினார். அந்தப் பொறுப்பை வர்கீஸ் குரியனிடம் ஒப்படைத்தார். ஆனால், இதற்காக ஒவ்வொரு மாநிலத்தையும் தனித்தனியாக வர்கீஸ் குரியன் அணுகியபோது, அவர்கள் இதில் பெரிதாக ஆர்வம்காட்டவில்லை. இந்தக் கட்டத்தில்தான் வெண்மைப் புரட்சிக்கான ஒரு ஆவணத்தை உணவு மற்றும் விவசாய அமைப்பின் வல்லுநரான மைக்கல் ஹால்சேவுடன் சேர்ந்து உருவாக்கினார் குரியன்.

பட மூலாதாரம், Getty Images
அந்தத் தருணத்தில், இந்தியாவில் பால் நுகர்வு சரிந்துகொண்டே வந்தது. 1950-51ல் 124 கிராமாக இருந்த தனி நபர் பால் நுகர்வு, 1970ல் வெறும் 107 கிராமாக சரிந்தது. உலகிலேயே மிக அதிகமான கால்நடைகள் இந்தியாவில் இருந்தபோதும் ஆண்டுக்கு 21 மில்லியன் டன்னுக்கு குறைவான பாலே உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. பால் பவுடர் பெரிய அளவில் இறக்குமதி செய்யப்பட்டு வந்தது.
இந்த காலகட்டத்தில் உலகில் பெரிய அளவில் பாலை உற்பத்தி செய்கிற நாடுகளில் மிக அதிக அளவில் பால் பொருள்கள் உற்பத்தியாகி தேங்கிக் கிடந்தன. அவற்றை மானியமாகப் பெற்று இந்தியாவுக்குக் கொண்டுவந்து நியாயமான விலையில் விற்பதன் மூலம், புதிய பால் கட்டமைப்புகளை உருவாக்கத் திட்டமிட்டார் குரியன். 1970ல் இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல்கிடைத்தது. இதனை நிர்வகிக்க இந்திய பால் பண்ணை கார்ப்பரேஷன் உருவாக்கப்பட்டது. அதன் தலைவராக குரியன் நியமிக்கப்பட்டார்.
முடிவுக்கு வந்த பால் பொருள் இறக்குமதி
இதற்குப் பிறகு நாடு முழுவதும் பாலைச் சேகரித்து பதப்படுத்தும் கட்டமைப்புகள் வேகமாக உருவாக்கப்பட்டன. 1975ல் பால் மற்றும் பால் பொருட்களின் இறக்குமதி முழுமையாக நிறுத்தப்பட்டது. இப்போது இந்தியாவில் தினமும் ஒரு கோடியே 80 லட்சம் லிட்டர் பால் கையாளப்படுகிறது. 1955ல் ஆண்டுக்கு 500 டன் வெண்ணெய் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது. இப்போது 12,000 டன் வெண்ணை உற்பத்தியாகிறது.
1981-85வரை வெண்மைப் புரட்சியின் இரண்டாவது கட்டம் செயல்படுத்தப்பட்டது. ஐரோப்பா வழங்கிய பால் பொருட்களை விற்பனை செய்து கிடைத்த வருவாய், உலக வங்கியின் கடன் ஆகியவை இந்தத் திட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்டன. 18ஆக இருந்த பால் உற்பத்தி மையங்கள் 186ஆக அதிகரித்தன. இந்தத் திட்டகால முடிவில் 42.5 கோடி கோடி பால் உற்பத்தியாளர்கள் உறுப்பினர்களாக இருக்கும் 43,000 பால் கூட்டுறவு சங்கங்கள் உருவாகிவிட்டன. வெண்மைப் புரட்சித் திட்டத்திற்கு முன்பு 22,000 டன்னாக இருந்த பால் பவுடர் உற்பத்தி 1989ல் 40,000 டன்னாக உயர்ந்தது.
1985லிருந்து 1996 வரையான மூன்றாவது வெண்மைப் புரட்சி காலகட்டத்தில் கூடுதலாக 30,000 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் துவங்கப்பட்டன. இதற்குப் பிறகு இந்தியாவில் பால் உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வந்தது. 1998ல் உலகில் அதிக பாலை உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா உருவெடுத்தது. உலக பால் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 20.17 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. வருடாந்திர பால் உற்பத்தி 198.44 மில்லியன் டன்கள்.
1950-51ல் 124 கிராமாக இருந்த தனிநபர் பால் நுகர்வு, இப்போது 406 கிராமாக உயர்ந்திருக்கிறது. பாலை இறக்குமதி செய்யும் நாடு என்ற நிலையிலிருந்து உலகிலேயே அதிக பாலை உற்பத்தி செய்யும் நாடாக இந்தியாவை மாற்றிய டாக்டர் வர்கீஸ் குரியன், 2012ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி குஜராத்தில் காலமானார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












