வெண்மை புரட்சி நாயகர் வர்கீஸ் குரியன் கிறித்துவ மதத்துக்கு ஆதரவாக செயல்பட்டாரா?

பட மூலாதாரம், Getty Images
வெண்மைப் புரட்சியின் நாயகர் என்று போற்றப்படும் வர்கீஸ் குரியன் பிறந்த நாள் இன்று (நவம்பர் 26). அவர் இப்போது உயிருடன் இருந்தால் 97 வயதாகியிருக்கும். ஆனால், ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் தனது 91வது வயதில் மறைந்த வர்கீஸ் குரியன் பற்றி தற்போது சர்ச்சைகள் எழுந்துள்ளன.
குஜராத்தில் நரேந்திர மோதி முதலமைச்சராக இருந்தபோது அவரது அமைச்சரவையில் அங்கம் வகித்த பாஜக தலைவர் திலீப் சங்கானி இந்த சர்ச்சைகளை எழுப்பியிருக்கிறார். குஜராத் மாநிலம் அம்ரேலியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், 'அமூல் நிறுவனத்தின் பணத்தை குஜராத் மாநிலம் டாங் மாவட்டத்தில் மதமாற்றம் செய்தவர்களுக்கு வர்கீஸ் குரியன் நன்கொடை கொடுத்தார்' என்று கூறியதை மேற்கோள் காட்டி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அம்ரேலி நகரில் உள்ள அமர் பால் பண்ணையின் நிகழ்ச்சி ஒன்றில் தான் பேசியது திரித்து கூறப்பட்டதாக பிபிசியிடம் திலீப் சங்கானி தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
"நான் குரியன் வர்கீஸை மிகவும் மதிக்கிறேன். அவரது திறமையைப் பற்றி நான் எதுவுமே சொல்லவில்லை. ஆனால், டாங் மாவட்டத்தில் 'சபரி தாம்' கட்டுவதற்காக மக்கள் நன்கொடை கேட்டபோது, அதில் நம்பிக்கை இல்லை என்று கூறிய அவர், அதே காலகட்டத்தில் கிறித்துவ நிறுவனங்களுக்கு நன்கொடை அளித்தார்" என்று கூறுகிறார்.
1997ஆம் ஆண்டு குஜராத்தின் டாங் மாவட்டத்திற்கு வந்த சுவாமி அசீமானந்த், பழங்குடியினர் நலனுக்காக 'சபரி தாம்' என்ற அமைப்பை உருவாக்கினார். சிறுபான்மையினருக்கு எதிரான பேச்சுகளுக்காக அறியப்படும் அசீமானந்த், கிறித்துவ மிஷனரிகளுக்கு எதிரான பிரசாரத்தை தொடர்ந்து மேற்கொண்டார்.
திலீப் சங்கானியின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக குஜராத் கூட்டுறவு பால் விற்பனைக் கூட்டமைப்பிடம் டி.என்.ஏ பத்திரிகை கருத்து கேட்டது. இதுபோன்ற பொய்யான அறிக்கைகளுக்கு பதிலளிக்க விரும்பவில்லை என அதன் தலைவர் ராம் சிங் பர்மர் கூறிவிட்தாக டி.என்.ஏ செய்தி வெளியிட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
யார் இந்த வர்கீஸ் குரியன்?
கேரளாவில் பிறந்த குரியன், குஜராத் மாநிலம் ஆனந்தில் அரசு பால்பண்ணையை மேம்படுத்துவதில் வெற்றிகரமாக செயல்பட்டவர். இந்தியாவை உலகிலேயே மிகப் பெரிய பால் உற்பத்தி நாடாக உயர்த்தியவர் வர்கீஸ் குரியன்.
1973ஆம் ஆண்டு, குஜராத் கூட்டுறவு பால் விற்பனைக் கூட்டமைப்பை (GCMMF) நிறுவியவர் வர்கீஸ் குரியன். 34 ஆண்டுகள் இந்த கூட்டமைப்பின் தலைவராக பதவி வகித்தார் அவர். அமூல் என்ற வணிகப்பெயருடன் பால் பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் அமைப்புதான் இந்த குஜராத் கூட்டுறவு பால் விற்பனைக் கூட்டமைப்பு.
11 ஆயிரம் அதிகமான கிராமங்களைச் சேர்ந்த 20 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகளை உறுப்பினராக கொண்ட இந்த நிறுவனம், கூட்டுறவுத் துறையில் பால் மற்றும் பிற பொருட்களை தயாரித்து விற்பனை செய்து சரித்திர சாதனை புரிந்த பெருமை கொண்டது.
பத்மா ஸ்ரீ, பத்ம பூஷண் மற்றும் பத்ம விபூஷண் விருதுகளை வழங்கி இந்திய அரசு குரியனை பெருமைப்படுத்தியது. 1965 ஆம் ஆண்டில் ரமோன் மக்ஸாசே விருது வழங்கி பெருமைபடுத்தப்பட்டார் வர்கீஸ் குரியன்.
ஆனந்த் ஊரக மேலாண்மை நிறுவனத்தின் (IRMA) தலைவராகவும் வர்கீஸ் குரியன் பணியாற்றியிருக்கிறார். 'இந்தியாவின் மில்க்மேன்' என்றும் அழைக்கப்பட்டவர் குரியன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் பால் பற்றாக்குறை ஏற்பட்ட சமயத்தில், குரியனின் தலைமையின் கீழ், பால் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடையும் குறிக்கோளுடன் செயல்படத் தொடங்கியது. பிறகு ஒருகட்டத்தில், பால் உற்பத்தியில் அமெரிக்காவையே விஞ்சிவிட்டது இந்தியா என்ற நிலைமையும் உருவானது.

பட மூலாதாரம், Getty Images
நன்கொடை தொடர்பான சர்ச்சை
கிறித்துவ நிறுவனங்களுக்கு நன்கொடை அளித்த வர்கீஸ் குரியனின் நோக்கத்தை பாஜக தலைவர் கேள்வி எழுப்பியிருக்கிறார் என்றாலும், நன்கொடை வழங்குவது என்பது ஒரு நிறுவனத்தின் தனிப்பட்ட விஷயம்.
இந்த கேள்விக்கு பதிலளிக்கும் திலீப் சங்வானி, "இந்துக்களின் அமைப்பு, சபரி தாமிற்காக பணம் கேட்டபோது, அதில் நம்பிக்கையில்லை என்று கூறிய நிலையில், அவர் வேறு எந்த மத நிறுவனத்திற்கும் நன்கொடை கொடுத்திருக்கக்கூடாது. ஆனால் அவர் அப்படி செய்யவில்லை என்பது ஆவணங்களில் பதிவாகியிருக்கிறது".
அமைச்சராக இருந்தபோது அவர் இது தொடர்பாக என்ன செய்தார்? என்ற கேள்விக்கு பதிலளிக்கிறார் திலீப்.
"நாங்கள் விசாரணை நடத்தினோம். இந்து அமைப்புக்கு நன்கொடை வழங்க மறுத்த குரியன், கிறித்துவ மிஷினரிகளுக்கு நன்கொடை கொடுத்தது விசாரணையில் அம்பலமானது. ஆனால் இந்த விவகாரத்தில் அரசு எதுவும் செய்யமுடியாது. ஆனால், இது ஒருவரின் மனநிலையை காட்டுகிறது".
பதவி விலகல்
அதுமட்டுமல்ல, வர்கீஸ் குரியன் முறைகேடான வகையில் 15 ஆண்டுகள் குஜராத் கூட்டுறவு பால் விற்பனைக் கூட்டமைப்பின் தலைவராக இருந்திருக்கிறார் என்றும் பாஜக தலைவர் குற்றம் சாட்டுகிறார்.
2006ஆம் ஆண்டில், தன்மீதான விமர்சனங்களைத் தொடர்ந்து குரியன் அமூலின் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.
அந்த காலகட்டத்தில் பிபிசி, வர்கீஸ் குரியனிடம் நேர்காணல் நடத்தியது. குஜராத் கூட்டுறவு பால் விற்பனைக் கூட்டமைப்பின் உறுப்பினர்களின் நம்பிக்கை இழந்ததால் பதவியில் இருந்து விலகியதாக குரியன் அப்போது கூறியிருந்தார்.
வர்கீஸ் குரியனுக்கு எதிராக குஜராத் கூட்டுறவு பால் விற்பனைக் கூட்டமைப்பு நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தது. மேலும், தலைவர் பதவியில் போட்டியிடுவதற்கான அவரது வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி ரத்து செய்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :













