இந்தியாவை பாகிஸ்தான் கடைசியாக வென்றது எப்போது? சூர்யகுமார் பேட்டியால் சூடுபிடிக்கும் விவாதம்

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட், ஆசிய கோப்பை போட்டி, Pakistan vs India, Ind vs Pak

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சூப்பர் 4 சுற்று போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை தோற்கடித்தது இந்திய அணி
    • எழுதியவர், பிரவீன்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

"15 ஓவர்கள் முடிந்ததுமே நான் போட்டியை பார்ப்பதை நிறுத்திவிட்டேன். ஏனென்றால் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போட்டியே இல்லை."

ஆசிய கோப்பையில் செப்டம்பர் 14-ஆம் தேதி நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்குப் பிறகு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி கூறிய கருத்து இது.

இதே போன்றதொரு சம்பவம் ஞாயிறு நடைபெற்ற சூப்பர் 4 போட்டியிலும் நடைபெற்றது. இந்திய கிரிக்கெட் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை வீழ்த்தியது.

போட்டிக்குப் பிறகு சோனி லைவ் தொலைக்காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம், பாகிஸ்தான் அணியால் தற்போது இந்திய அணியுடன் போட்டியிட முடிவதில்லை எனத் தெரிவித்தார்.

போட்டிக்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எந்தப் போட்டியும் இல்லை எனவே அதைப்பற்றிய கேள்விகள் கேட்கப்படுவதை நிறுத்த வேண்டும் என்று கூறினார்.

பாகிஸ்தான் இந்தியாவுக்கு சவால் தரும் போட்டியாளர் அல்லர் என்று கூறிய சூர்யகுமார், "நீங்கள் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள போட்டி பற்றி கேள்வி கேட்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். ஏனென்றால் என்னைப் பொருத்தவரை இரு அணிகள் 15-20 போட்டிகள் விளையாடி, ஒரு அணி 7-8 என்கிற கணக்கில் முடிவுகள் அமைந்தால் அதை நல்ல கிரிக்கெட் எனச் சொல்லலாம். ஆனால் 13-0, 10-1 (சரியான எண்கள் எனக்கு தெரியவில்லை) என இருந்தால் அது போட்டியல்ல." எனத் தெரிவித்தார்.

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட், ஆசிய கோப்பை போட்டி, Pakistan vs India, Ind vs Pak

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நேற்றைய ஆட்டத்தில் களத்தில் இரு அணி வீரர்களும் உரசிக் கொண்டனர்.

இருநாடுகளுக்கும் இடையே நடைபெற்ற சர்வதேச டி20 போட்டிகளின் முடிவுகள் பற்றி சூர்யகுமார் யாதவ் குறிப்பிட்டுள்ளார். இரு அணிகளுக்கும் இடையே இதுவரை நடந்துள்ள 15 போட்டிகளில் இந்தியா 11 போட்டிகளிலும் பாகிஸ்தான் 3 போட்டிகளிலும் வென்றுள்ளன. ஒரு போட்டி 'டை' ஆனது.

இந்தியா - பாகிஸ்தான் லீக் சுற்று போட்டிக்குப் பிறகு பேசிய கங்குலி, தான் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை விட ஆப்கானிஸ்தானுடனான போட்டியையே பார்க்க விரும்புவதாகத் தெரிவித்தார்.

"இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் மிகைப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 4 - 5 வருடங்களில் எதுவும் நடந்ததில்லை, போட்டி முடிவுகள் ஒருசார்பாகவே இருந்துள்ளன" என்கிறார் கங்குலி.

சூப்பர் 4 சுற்று போட்டிக்குப் பிறகு கங்குலியின் கருத்தையே வாசிம் அக்ரமும் தெரிவித்தார்.

"பாகிஸ்தான் இப்படி விளையாடுவதைப் பார்ப்பதற்கு கடினமாக உள்ளது. கடந்த 4-5 ஆண்டுகளாக பாகிஸ்தான் அணியால் இந்திய அணியுடன் போட்டி போட முடிவதில்லை." என்று தெரிவித்தார் அக்ரம்.

இந்தியாவை பாகிஸ்தான் கடைசியாக வென்றது எப்போது?

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட், ஆசிய கோப்பை போட்டி, Pakistan vs India, Ind vs Pak

பட மூலாதாரம், Getty Images

பாகிஸ்தான் அணி எந்தவொரு வடிவத்திலும் இந்திய அணியை வீழ்த்தி 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து 7வது முறையாக பாகிஸ்தான் அணி இந்திய அணியிடம் தோற்றுள்ளது.

கடைசியாக 2022-இல் நடைபெற்ற ஆசிய கோப்பை டி20 தொடரில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை தோற்கடித்திருந்தது.

இருநாடுகளிடைய உறவுகள் சுமூகமாக இல்லாததால் இருதரப்பு தொடர்கள் நடத்தப்படுவதில்லை. 2012-2013-இல் இந்தியாவிற்கு வந்த பாகிஸ்தான் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. அந்தத் தொடர் 1-1 என்கிற கணக்கில் டிராவில் முடிந்தது.

அப்போதிலிருந்து இரு அணிகளும் ஆசிய கோப்பை மற்றும் ஐசிசி தொடர்களில் மட்டுமே விளையாடி வருகின்றன.

ஒருநாள் போட்டிகளிலும் 2010 முதல் இரு நாடுகளிடையே 18 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் இந்தியா 13 போட்டிகளிலும் பாகிஸ்தான் 4 போட்டிகளிலும் வென்றுள்ளன, ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது.

எனினும் 2017-இல் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி போட்டியில் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியிருந்தது பாகிஸ்தான். ஆனால் அதன் பிறகு ஒருநாள் போட்டிகளில் இந்தியாவை பாகிஸ்தான் தோற்கடித்ததில்லை.

'இந்தியாவுடன் போட்டி போட முடியாது'

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட், ஆசிய கோப்பை போட்டி, Pakistan vs India, Ind vs Pak

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தற்போதைய இந்திய அணி பாகிஸ்தான் அணியை விட அனைத்து துறைகளிலும் வலுவாக இருப்பதாக முன்னாள் வீரர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்திய அணி அனைத்து துறைகளிலும் பாகிஸ்தான் அணியை விட வலுவாக இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறுகிறார்.

"பாகிஸ்தான் அணியால் சரியான நேரத்தில் விக்கெட் எடுக்க முடியவில்லை. அபிஷேக் சர்மா பேட்டிங் செய்யத் தொடங்கிய உடனே பாகிஸ்தான் கையிலிருந்து போட்டி விலகிச் சென்றது. இந்திய அணி மிக வலுவாக உள்ளது" எனத் தெரிவித்தார் ரவி சாஸ்திரி.

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்த பிறகு முதல் முறையாக ஆசிய கோப்பையில் தான் இரு அணிகளும் மோதுகின்றன.

தீவிரமான போட்டி இல்லாததால் இரு ஆட்டங்களின் போதும் போட்டியில் நடைபெற்றதை விட அதற்கு முன்பும் பின்பும் நடந்தவை தான் விவாதப் பொருளாக இருந்தன. இரு போட்டிகளிலும் இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள் கை குலுக்கவில்லை.

இரு போட்டிகளின்போதும் மைதானத்தில் காலி இருக்கைகள் இருந்தது ரசிகர்கள் இடையேயும் ஆர்வம் குறைந்து வருவதையே காட்டுகிறது.

ஞாயிற்றுக்கிழமை போட்டிக்குப் பிறகு ஏஎன்ஐ செய்தி முகமையிடம் பேசிய ரசிகர் ஒருவர், "அபிஷேக் சர்மா தனி நபராக பாகிஸ்தான் அணியை தோற்கடித்துள்ளார். பாகிஸ்தான் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெறும் என நான் நினைக்கவில்லை. இந்திய அணி இறுதி போட்டியில் இலங்கை அல்லது வங்கதேச அணியைச் சந்திக்கக் கூடும். இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது, தற்போதைய பாகிஸ்தான் அணியால் இந்தியாவுடன் போட்டிபோட முடியாது." எனத் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு