இரட்டை இலை சின்னத்திற்கு சிக்கல் வருமா? தேர்தல் ஆணையத்திற்கு செங்கோட்டையன் கடிதத்தின் பின்னணி

எடப்பாடி பழனிசாமி, கே.ஏ. செங்கோட்டையன்
    • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
    • பதவி, பிபிசி தமிழ்

அதிமுகவில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட மூத்த தலைவர் செங்கோட்டையன், இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. பிபிசி தமிழ் சார்பில் இதுகுறித்து பேசிய போது அவரது தரப்பு இதனை உறுதிப்படுத்தியது.

'எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குவதாகக் கூறப்படும் அ.தி.மு.க, உண்மையான அ.தி.மு.க அல்ல. தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக நிலுவையில் உள்ள விவகாரத்தில் தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும்' என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாக அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

"தேர்தல் ஆணையத்திற்கு செங்கோட்டையன் எழுதியுள்ள கடிதத்தால் எந்தப் பயனும் இல்லை" என அ.தி.மு.க தெரிவித்துள்ளது.

அரசியல் விமர்சகர்கள் இதுகுறித்து என்ன சொல்கிறார்கள்? இரட்டை இலைச் சின்னத்துக்கு மீண்டும் சிக்கல் வருமா?

செங்கோட்டையன் கடிதத்தின் பின்னணி

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோருடன் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அஞ்சலி செலுத்தினார்.

நிகழ்ச்சியில் அ.தி.மு.க முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலாவையும் செங்கோட்டையன் சந்தித்துப் பேசினார். 'இது கட்சி விதிகளுக்கு முரணானது' எனக் கூறி அ.தி.மு.கவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அவரை நீக்குவதாக அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

தனக்கு எந்தவித நோட்டீஸும் அனுப்பாமல் கட்சியைவிட்டு நீக்கிவிட்டதாக, அக்டோபர் 31-ஆம் தேதி செய்தியாளர் சந்திப்பில் கே.ஏ.செங்கோட்டையன் குற்றம்சாட்டினார். தன்னை நீக்கியதி கட்சி விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்று கூறி சட்டரீதியாக இந்த விவகாரத்தை எதிர்கொள்ளப் போவதாக அவர் கூறினார்.

இதற்குப் பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, "கடந்த ஆறு மாதங்களாக கட்சி விரோத நடவடிக்கையில் செங்கோட்டையன் ஈடுபட்டு வந்துள்ளார். அ.தி.மு.கவை முடக்குவதற்கும் பலவீனப்படுத்துவதற்கும் முற்பட்டால் அதைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க முடியாது" எனக் கூறினார்.

செங்கோட்டையன்

பட மூலாதாரம், KA Sengottaiyan

செங்கோட்டையனின் கடிதத்தில் என்ன உள்ளது?

இந்த நிலையில்தான், இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு கே.ஏ.செங்கோட்டையன் நவம்பர் 3-ஆம் தேதி தேர்தல் ஆணையத்துக்கு இமெயில் மூலமாக கடிதம் அனுப்பியுள்ளார். ஊடகங்களில் இதுகுறித்து செய்தி வெளியானாலும் செங்கோட்டையன் தரப்பு அதனை உறுதிப்படுத்தவோ, கடித நகலை பொதுவெளியில் வெளியிடவோ இல்லை.

இதுகுறித்து செங்கோட்டையனின் ஆதரவாளர் ஒருவரிடம் பிபிசி தமிழ் பேசியது. "இந்திய தேர்தல் ஆணையத்துக்கு (ECI) திங்கள்கிழமையன்று மின்னஞ்சல் மூலமாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் உள்ள விவரங்கள் மட்டுமே ஊடகங்களிடம் கசியவிடப்பட்டது" என்று மட்டும் பெயர் குறிப்பிட விரும்பாமல் தெரிவித்தார்.

அவரது கூற்றுப்படி "தேர்தல் ஆணையத்திடம் நிலுவையில் உள்ள இரட்டை இலைச் சின்னம் விவகாரத்தில் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும். எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குவதாகக் கூறப்படும் அ.தி.மு.க என்ற பிரிவு, உண்மையான அ.தி.மு.க அல்ல, கட்சியின் உண்மை நிலையை நிரூபிப்பதற்கான கால அவகாசத்தை ஆணையம் வழங்க வேண்டும்," என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

பிரதமர் மோதியுடன் செங்கோட்டையன்

பட மூலாதாரம், KA Sengottaiyan

படக்குறிப்பு, பிரதமர் மோதியுடன் செங்கோட்டையன்

இரட்டை இலைச் சின்னம் குறித்த செங்கோட்டையனின் கடிதம், அரசியல் ரீதியாக முக்கிய விவாதப்பொருளாக மாறியுள்ளது.

"தேர்தல் ஆணையம் சின்னத்தை முற்றிலுமாக முடக்குவது இல்லை. தற்காலிகமாக பயன்பாட்டு உரிமையை மட்டுமே ரத்து செய்து வந்துள்ளது. இரட்டை இலையின் பயன்பாட்டு உரிமையை ரத்து செய்ய வேண்டும் என்பது செங்கோட்டையனின் கோரிக்கையாக உள்ளது" எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்.

"செங்கோட்டையனுக்கு இதைவிட்டால் வேறு வழியில்லை. நீதிமன்றத்துக்கு அவர் சென்றாலும், 'தேர்தல் ஆணையத்தை அணுகினீர்களா?' என்றே நீதிமன்றம் கேட்கும். அதற்காகவே அவர் தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்" எனவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

இரட்டை இலைச் சின்னம் 2 முறை முடக்கம்

அ.தி.மு.கவை பொறுத்தவரை அக்கட்சியின் இரட்டை இலைச் சின்னம் இரண்டு முறை முடக்கப்பட்டுள்ளது.

1987 ஆம் ஆண்டு டிசம்பர் 24 அன்று அ.தி.மு.கவை தோற்றுவித்த எம்.ஜி.ஆர் மறைந்தார். அவரின் மறைவுக்குப் பிறகு ஜானகி மற்றும் ஜெயலலிதா என இரு அணிகளாக அ.தி.மு.க பிளவுபட்டது.

1989 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. சின்னத்துக்கு இரு அணிகளும் உரிமை கோரியதால் இரட்டை இலைச் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. தேர்தலில் சேவல் சின்னத்தில் 'ஜெ' அணியும் இரட்டைப் புறா சின்னத்தில் 'ஜா' அணியும் போட்டியிட்டன.

தேர்தல் முடிவில் இரு அணிகளும் வெற்றி பெறவில்லை. ஜெயலலிதாவுக்கு வழிவிட்டு அரசியலில் இருந்து ஜானகி விலகினார். இரட்டை இலைச் சின்னம் தொடர்பான மோதலும் முடிவுக்கு வந்தது. அ.தி.மு.க என்ற கட்சியும் இரட்டை இலைச் சின்னமும் ஜெயலலிதா பக்கம் வந்தது.

எடப்பாடி பழனிசாமி

பட மூலாதாரம், Edappadi Palaniswamy

படக்குறிப்பு, 2022 ஜூலை மாதம் பொதுக்குழுவை கூட்டி பன்னீர்செல்வத்தைக் கட்சியில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கினார்

அதன் பின்னர் 2016 டிசம்பர் மாதம் ஜெயலலிதா மறையும் வரையில் இரட்டை இலைச் சின்னத்துக்கு எந்தப் பிரச்னையும் வரவில்லை. அவரின் மறைவால் அ.தி.மு.கவில் குழப்பம் நிலவியது.

பன்னீர்செல்வம் முதலமைச்சரான பிறகு சில வாரங்களில் பதவி விலகினார். அவருக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி (2017) முதலமைச்சரானார். அப்போது ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணி என இரு தரப்புகளும் இரட்டை இலைக்கு உரிமை கோரின. 'இரு தரப்புகளும் அ.தி.மு.க என்ற பெயரையும் இரட்டை இலைச் சின்னத்தையும் பயன்படுத்த முடியாது' என, 2017 மார்ச் மாதம் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கு பொருந்தும் வகையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் இறுதி முடிவு பின்னர் அறிவிக்கப்பட உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் அப்போது தெரிவித்திருந்தது.

சின்னத்துக்கு உரிமை கோரிய ஓ.பி.எஸ், இ.பி.எஸ்

இதன்பிறகு பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் இணைந்தனர். அ.தி.மு.கவில் பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ஏற்படுத்தப்பட்டன.

2021 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் ஏற்பட்டது. 2022 ஜூலை மாதம் பொதுக்குழுவை கூட்டி பன்னீர்செல்வத்தைக் கட்சியில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கினார்.

2023 பிப்ரவரி மாதம் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலைச் சின்னத்துக்கு பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி என இரு தரப்புகளும் உரிமை கோரின.

இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த விவகாரத்தில் பொதுக்குழுவை கூட்டி முடிவு செய்யுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அ.தி.மு.கவின் பொதுக்குழு உறுப்பினர்களிடம் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் தென்னரசுவுக்கு ஆதரவு கேட்டு அக்கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் விண்ணப்பத்தில் கையொப்பம் வாங்கினார். ஒருகட்டத்தில் தனது வேட்பாளரை ஓ.பன்னீர்செல்வம் வாபஸ் பெற, அந்த இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்துக்கு சிக்கல் வரவில்லை.

ஓ. பன்னீர்செல்வம்
படக்குறிப்பு, ஜெயலலிதா மறைவுக்கு பின் பன்னீர்செல்வம் முதலமைச்சரான பிறகு சில வாரங்களில் பதவி விலகினார்.

தேர்தல் ஆணையம் விசாரிக்க அனுமதி

அடுத்து, பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக சிவில் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகளில் முடிவு எட்டப்படும் வரை இரட்டை இலைச் சின்னத்தை முடக்கி வைப்பதற்கு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சூரியமூர்த்தி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், 'மனு மீது நான்கு வாரங்களில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டும். பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மற்றும் வழக்கு தொடர்ந்துள்ள அனைவரின் கருத்துகளையும் கேட்டு முடிவெடுக்க வேண்டும்' என உத்தரவிட்டது.

ஆனால், இதன்பேரில் எந்த விசாரணையும் மேற்கொள்ளக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தின் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டது. இதனை நீக்குமாறு தேர்தல் ஆணையம் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது, 'உள்கட்சி விவகாரங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு எந்தவித அதிகாரமும் இல்லை' என அ.தி.மு.க தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், 'சட்டத்துக்கு உட்பட்டு தேர்தல் ஆணையம் விசாரணை மேற்கொள்ளலாம்' எனக் கூறி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்தது.

ஆனால், தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு காலக்கெடுவை நிர்ணயிக்குமாறு கடந்த ஏப்ரல் மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராக வேண்டிய நிலையில் உள்ளதாகவும் மனுவில் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். "இதற்கு எந்தவித முடிவும் எட்டப்படாத நிலையில்தான், தேர்தல் ஆணையத்துக்கு செங்கோட்டையன் கடிதம் அனுப்பியுள்ளார்" என்கிறார், அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி.

'பின்னணியில் பா.ஜ.க'

"கட்சி விதிப்படி பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்படவில்லை என்ற காரணத்தை தேர்தல் ஆணையம் முன்வைத்தால் அ.தி.மு.கவில் நிலைமை மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. பா.ஜ.க தரப்பில் இதற்கான நம்பிக்கை செங்கோட்டையனுக்கு கொடுக்கப்பட்டிருக்கலாம்" எனவும் ரவீந்திரன் துரைசாமி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

இதே கருத்தைக் கூறும் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன், "அனைத்தும் பா.ஜ.க திட்டப்படி நடப்பதாகவே பார்க்கிறேன். சில மாதங்களுக்கு முன்பு பா.ஜ.க மூத்த நிர்வாகிகளை செங்கோட்டையன் சந்தித்தார். அவர்கள் சொல்லாமல் தேர்தல் ஆணையத்துக்கு செங்கோட்டையன் கடிதம் எழுதுவதற்கு வாய்ப்பில்லை" என்கிறார்.

'கட்சிக்குள் எடப்பாடி வலுவாக இருக்கிறார்'

குபேந்திரன்

பட மூலாதாரம், Kubendran

படக்குறிப்பு, ஓ.பன்னீர்செல்வம் உள்பட யார் வெளியே போனாலும் அ.தி.மு.க சிதைந்துவிடப் போவதில்லை என கூறுகிறார் குபேந்திரன்

"எடப்பாடி பழனிசாமி கையில் மொத்த அ.தி.மு.கவும் உள்ளது. ஓ.பன்னீர்செல்வம் உள்பட யார் வெளியே போனாலும் அ.தி.மு.க சிதைந்துவிடப் போவதில்லை" என பிபிசி தமிழிடம் குபேந்திரன் தெரிவித்தார்.

" உள்கட்சி விதிகளை தேர்தல் ஆணையம் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை" எனக் கூறும் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம், "சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பலம், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களின் பலம் ஆகியவற்றைக் கணக்கிட்டால் அது எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ளது" எனக் கூறுகிறார்.

'ஜனவரி அல்லது பிப்ரவரியில் தெரியவரும்'

சின்னம் விவகாரத்தில் மறைமுகமான ஆட்டத்தை பா.ஜ.க நடத்தவே வாய்ப்புகள் உள்ளதாகக் கூறும் குபேந்திரன், "தன்னை அசைக்க முடியாது என்ற நம்பிக்கையில் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். அதை அசைத்துப் பார்ப்பதற்கு பா.ஜ.க முயற்சிப்பதாக இதைப் பார்க்கலாம். ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் தான் முழு விவரங்களும் தெரியவரும்" என்கிறார்.

தராசு ஷ்யாம்

பட மூலாதாரம், Tarasu Shyam

படக்குறிப்பு, "தொடக்கத்தில் செங்கோட்டையனை அழைத்து பா.ஜ.க பேசி வந்தது. தற்போது அவர்கள் யாரும் பேசுவதில்லை" என்கிறார் ஷ்யாம்

இந்த விவகாரத்தில் மாறுபட்ட கோணத்தை முன்வைக்கும் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம், "இதன் பின்னணியில் வேறு யாரும் உள்ளதாகத் தெரியவில்லை. தொடக்கத்தில் செங்கோட்டையனை அழைத்து பா.ஜ.க பேசி வந்தது. தற்போது அவர்கள் யாரும் பேசுவதில்லை" என்கிறார்.

தேர்தல் ஆணையத்துக்கு செங்கோட்டையன் கடிதத்தை எழுதியிருப்பதை குறிப்பிட்டுப் பேசிய ஷ்யாம், "எடப்பாடி பழனிசாமியை எதிர்ப்பதற்கான வழியாக அவர் இதைப் பார்க்கிறார்" எனவும் தெரிவித்தார்.

"அவர் எழுதியுள்ள கடிதத்துக்கு முக்கியத்துவம் இல்லை என்பதாக பார்க்க முடியாது. தன்னுடைய போராட்டத்தை பல்வேறு வழிகளில் செங்கோட்டையன் தொடர்வதாகவே இதனை எடுத்துக் கொள்ள முடியும்" எனவும் அவர் தெரிவித்தார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

'பின்னணியில் பா.ஜ.க இல்லை' - எஸ்.ஆர்.சேகர்

"தேர்தல் ஆணையத்துக்கு செங்கோட்டையன் கடிதம் அனுப்பிய பின்னணியில் பா.ஜ.க இல்லை" எனக் கூறுகிறார், தமிழக பா.ஜ.க மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "அ.தி.மு.கவை பலவீனப்படுத்துவதால் பா.ஜ.கவுக்கு எந்தவித லாபமும் இல்லை. அக்கட்சியில் இருந்து பிரிந்து சென்ற அனைவரையும் கட்சிக்குள் சேர்க்க வேண்டும் என்பது தான் பா.ஜ.கவின் நோக்கம்." எனக் கூறுகிறார்.

"பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோருடன் செங்கோட்டையன் சேர்ந்திருக்கிறார். அதனால் எடப்பாடி பழனிசாமிக்கு இடையூறு ஏற்படுத்தும் வேலைகளில் அவர் இறங்கியிருக்கலாம். இதற்கும் பா.ஜ.கவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை" என்று அவர் பதில் அளித்தார்.

'கடிதத்துக்கு மதிப்பு இல்லை' - அ.தி.மு.க

பாபு முருகவேல்

பட மூலாதாரம், Babu Murugavel

படக்குறிப்பு, தேர்தல் ஆணையத்துக்கு செங்கோட்டையன் தரப்பில் இருந்து கடிதம் கொடுக்கப்பட்டிருந்தாலும் அந்தக் கடிதத்துக்கு எந்தவித மதிப்பும் இல்லை என்கிறார் பாபு முருகவேல்

"தேர்தல் ஆணையத்துக்கு செங்கோட்டையன் தரப்பில் இருந்து கடிதம் கொடுக்கப்பட்டிருந்தாலும் அந்தக் கடிதத்துக்கு எந்தவித மதிப்பும் இல்லை" எனக் கூறுகிறார், அ.தி.மு.க வழக்கறிஞர் அணியின் இணைச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான பாபு முருகவேல்.

இரட்டை இலை மற்றும் பொதுச்செயலாளர் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் ஏற்கனவே உறுதிப்படுத்திவிட்டதாக பிபிசி தமிழிடம் கூறிய பாபு முருகவேல், "பொதுவாக, மனுவை யார் கொடுத்தாலும் அதைத் தேர்தல் ஆணையம் நிராகரிப்பதில்லை" என்கிறார்.

"செங்கோட்டையன் அனுப்பியுள்ள கடிதம், சட்டப்பூர்வமாக செல்லுபடியாகப் போவதில்லை. அவரின் கடிதத்தால் எந்தவித தாக்கமும் ஏற்படாது" எனவும் பாபு முருகவேல் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு