சளி, ஃப்ளூ, கோவிட்: அறிகுறிகள் ஒத்திருந்தாலும் இவை மூன்றும் எவ்வாறு வேறுபடுகின்றன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், மருத்துவர் ஆஸ்கார் டியூக்
- பதவி, மருத்துவர் மற்றும் பிபிசி மார்னிங் லைவ் நிகழ்ச்சி நிபுணர், லண்டன்
நீங்கள் இருமிக் கொண்டும் தும்மிக் கொண்டும் இருப்பவர்களை (அது உங்கள் மீதாக இல்லாமல் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்) அறிந்திருக்க வாய்ப்புள்ளது.
இப்போது நிறைய இருமல் மற்றும் சளி பாதிப்புகள் பரவிக் கொண்டிருக்கின்றன.
ஆனால், அது வெறும் சளியா அல்லது அது சளியை விட அதிக பாதிப்பா என்பதை அறிந்து கொள்வது எப்படி? அதைவிடமோசமான பாதிப்பைத் தவிர்ப்பது எப்படி?
மருத்துவர் ஆஸ்கார் டியூக் (பிபிசி மார்னிங் லைவ் நிகழ்ச்சியில் தோன்றும் மருத்துவர்) தனது சிறந்த ஆலோசனைகளைப் பகிர்ந்து கொள்கிறார்.
சளி வருவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
குளிர் காலநிலை நம் நோய் எதிர்ப்பு அமைப்புகளை எந்த அளவிற்குப் பாதிக்கிறது என்பது பற்றிய ஆய்வுகள் இன்னும் தெளிவாக இல்லை.
இருப்பினும், நாட்கள் இருட்டாவதால் நாம் சூடான, வசதியான, உள்ளரங்க இடங்களுக்குச் செல்லவே விரும்புகிறோம்.
இந்தச் சூழல் வைரஸ்களுக்கு பொருத்தமானதாக இருக்கிறது.
பள்ளிகள் மற்றும் மழலையர் பள்ளி வளாகங்கள், வைரஸ்கள் சுழலும் பெட்ரி டிஷ் (Petri dish - கிருமிகள் வளரும் ஒரு சிறிய கண்ணாடி தட்டு) போலச் செயல்படுகின்றன. அவர்கள் இந்தக் கிருமிகளை வீட்டிற்கு எடுத்து வரவும் கூடும்.
அதே சமயம், அதிகப்படியான மது அருந்துதல் மற்றும் விருந்து நிகழ்ச்சிகள் நோய் எதிர்ப்புச் சக்தியை மேலும் பலவீனப்படுத்துகின்றன.
சளியா, ஃப்ளூவா அல்லது கோவிட்டா?
சளி (Cold)
- அறிகுறிகள் படிப்படியாகத் தோன்றும்
- பெரும்பாலும் மூக்கு மற்றும் தொண்டையைப் பாதிக்கும்
- ஆரம்ப அறிகுறி - உங்கள் காதுகளில் அழுத்தம்
- சளியுடன் கூடிய இருமல்
ஃப்ளூ (Flu)
- திடீரெனத் தொடங்கும்
- முற்றிலும் களைப்பாக உணர்வீர்கள்
- காய்ச்சல், தசை வலி
- சோர்வு படுக்கை ஓய்வு தேவை
- வறட்டு இருமல்
கோவிட் (Covid)
- வழக்கமான ஃப்ளூ அறிகுறிகள்
- சுவை அல்லது வாசனை இழப்பு
- வயிற்றுப்போக்கு அல்லது வயிற்றுக் கோளாறு
சளி, ஃப்ளூ மற்றும் கோவிட் போன்ற தீவிரமான வைரஸ் பாதிப்புகளின் பல அறிகுறிகள் ஒன்றோடொன்று ஒத்துப்போகின்றன.

ஆனால், அந்தச் சரியான பாதிப்பைக் கண்டறிய உங்களுக்கு உதவும் சில குறிப்புகள் உள்ளன.
சளி என்றால்...
- சளி பெரும்பாலும் படிப்படியாகத் தொடங்கும்.
- இது உங்கள் மூக்கு மற்றும் தொண்டையின் பின்புறத்தைப் பாதிக்கும். சிலருக்கு வாயில் கூச்ச உணர்வு ஏற்படலாம்.
- காதுகளில் அழுத்தம் உருவாவது மற்றொரு ஆரம்ப எச்சரிக்கை அறிகுறியாகும்.
- வைரஸ் மேலும் பரவினால், அது உங்கள் நுரையீரலை அடைந்து தொல்லை தரும் இருமலை ஏற்படுத்தலாம்.
- ஆனால், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இந்த அறிகுறிகள் நாம் சாதாரணமாக மேற்கொள்ளும் பணிகளைத் தொடர முடியாத அளவு மோசமாக இருப்பதில்லை.
ஃப்ளூ பாதிப்பை பொருத்தவரை,
- ப்ளூ பொதுவாக உடல் வலி, காய்ச்சல் மற்றும் தசை பலவீனம் ஆகியவற்றை ருகிறது.
- ஃப்ளூ என்றால் நீங்கள் படுக்கையில் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை, ஆனால் அப்படி உங்களை உணரச் செய்யக்கூடும்.
கோவிட்டை பொருத்தவரை
- கோவிட்டின் ஒரு முக்கிய அடையாளம் சுவை அல்லது வாசனை இழப்பு ஆகும்.
- வீட்டில் தங்கி ஓய்வெடுத்து குணமடைவதுதான் இதற்கான பரிந்துரை.
- உங்களுக்கு உள்ளார்ந்த உடல்நலக் குறைபாடுகள் இருந்தால், மூச்சுத் திணறலை அனுபவித்தால் அல்லது அறிகுறிகள் மூன்று வாரங்களுக்குப் பிறகும் குறையவில்லை என்றால், உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறத் தயங்கக்கூடாது.
குணமடைவதில் உங்களுக்கு நீங்களே உதவ முடியுமா?

பட மூலாதாரம், Getty Images
நம் உடல் இயற்கையாகவே வைரஸ்கள் மற்றும் நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடுகிறது. இருப்பினும், சரியான மருந்துகளுடன் நாமும் உடலுக்கு உதவலாம்.
- பாராசிட்டமால்: மாத்திரை எடுத்துக் கொள்வதில் உங்களுக்கு ஒப்புதல் இருந்தால், இது அல்லது இப்யூபுரூஃபன் (ibuprofen) முதல் தேர்வாக இருக்கும். காய்ச்சலைக் குறைப்பதற்கும், நீங்கள் அனுபவிக்கும் எந்தவொரு வலியையும் தணிப்பதற்கும் இவை இரண்டும் சிறந்தவை. பல இருமல் மற்றும் சளி மருந்துகளில் பாராசிட்டமால் கலந்திருக்கும் என்பதால், நீங்கள் அதிக அளவில் எடுக்காமலிருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
- வைட்டமின் சி: இது சளியில் இருந்து பாதுகாக்க உதவும் என்று கருதப்படுகிறது. அதற்கு அதிக அறிவியல் ஆதாரங்கள் இல்லை. ஆரோக்கியமான, சமச்சீர் உணவில் கவனம் செலுத்துவது அதைவிட மிக முக்கியம்.
- வைட்டமின் டி: குளிர்ந்த மாதங்களில் வைட்டமின் டி கூடுதலாக எடுத்துக் கொள்ளுமாறு பிரிட்டனின் தேசிய சுகாதாரச் சேவை பரிந்துரைக்கிறது.
- மூக்கடைப்புக்கான தெளிப்பான் (Decongestant spray): நிச்சயமாக, அவை அருமையாக உணர்வைத் தந்து உடனடி நிவாரணம் அளிக்கின்றன. ஆனால், தெளிப்பான்களை அடிக்கடிப் பயன்படுத்துவது மீண்டும் அடைப்பை (rebound congestion) ஏற்படுத்தலாம். அவற்றை நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு மேல் பயன்படுத்த வேண்டாம்.
- சிக்கன் சூப் (Chicken soup): இந்த உணவு வைரஸ்களை நேரடியாக எதிர்த்துப் போராடுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆனால், அதன் வெப்பம் உங்கள் தொண்டையின் பின் பகுதியைச் சூடேற்றவும், சில அறிகுறிகளைத் தணிக்கவும் உதவும். இது கூடுதல் திரவங்களை உட்கொள்ள ஒரு நல்ல வழியாகும். ஏனெனில் நோய்த்தொற்றை எதிர்த்துப் போராடும் போது நீர்ச்சத்துடன் இருப்பது இன்றியமையாதது.
(உடல்நல செய்தியாளர் ஸ்மிதா முண்டாசாத்தின் கூடுதல் தகவல்களுடன்)
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












