அலையாத்திக் காடுகள், படகு சவாரியை ரசிக்க ராமநாதபுரத்தில் நீங்கள் பார்க்க வேண்டிய 3 முக்கிய சுற்றுலா தலங்கள்

அரியமான் குஷி பீச்
படக்குறிப்பு, அரியமான் குஷி பீச்
    • எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

(2023ம் ஆண்டில் வெளியான இக்கட்டுரை மறுபகிர்வு செய்யப்படுகிறது.)

ராமநாதபுரத்தில் இருந்து 37 கிமீ தூரத்தில் கிழக்குக் கடற்கரை சாலையில் நாகப்பட்டினம் செல்லும் வழியில் தொண்டி அருகே உள்ளது காரங்காடு கடற்கரை கிராமம். இக்கிராமத்தில் சுமார் 4 கிமீ தூரத்திற்கு மேல் மக்கள் மனதைக் கவரும் வகையில் இயற்கை எழில் மிகுந்த மாங்குரோவ் என்ற அலையாத்திக் காடுகள் அடர்த்தியாக உள்ளது.

சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லவும் படகு சவாரி செய்யவும் தமிழக வனத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

படகுகளில் சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள் மாங்குரோவ் காடுகளின் அழகையும் பல்வேறு வகையான பறவைகளின் அழகையும் ரசித்துச் செல்கின்றனர்.

மேலும் சீசன் நேரங்களில் இங்கு வரும் பூநாரை, கூழைக்கிடா, வெள்ளை அரிவாள் மூக்கன், கருப்பு அரிவாள் மூக்கன், கரண்டி வாயன், கடல் பருந்து, போன்ற பல பறவைகளின் அழகையும் அங்குள்ள கண்காணிப்பு கோபுரம் மீது ஏறி நின்று பார்த்து ரசிக்கலாம்.

படகு சவாரியின்போது அலையாத்திக் காடுகளுக்கு இடையே இரை தேடியபடி செல்லும் சதுப்புநிலக் காட்டு பறவைகளான மஞ்சள் மூக்கு நாரை, குதிரைத் தலை கோட்டான், ஆலாக்கள், கடல் புறாக்கள், செந்நாரை, பவளக்காலி, கொக்குகள் ஆகியவற்றைக் கண்டு ரசிக்கலாம்.

கடல் நீருக்கு அடியில் வளரும் கடல் புற்கள், நட்சத்திர மீன்கள், கடல் தாவரங்களையும் அதன் ஊடாக வளரும் சிறு மீன் இனங்களையும் கடலில் மூழ்கியபடி (ஸ்கூபா டைவிங்) காணலாம். இதற்கென பிரத்யேகமான கண்ணாடி, மூச்சு விடும் கருவிகள் வழங்கப்படுகின்றன. பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை இவற்றைப் பயன்படுத்தலாம்.

காரங்காடுக்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கு கயாக் எனப்படும் கடல்நீரின் மீது துடுப்புப் போட்டு நாமே இயக்கும் படகுகள் வழங்கப்படுகின்றன. பாதுகாப்பு மிதவை உடையை அணிந்து கொண்டு கைகளில் துடுப்பைப் பயன்படுத்தி கடலின் ஆழம் குறைவாக உள்ள பகுதிகளுக்குச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரியமான் குஷி பீச்

ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 25 கி.மீ தூரத்தில், சவுக்கு மரங்கள் அடர்ந்துள்ள பகுதிக்குள் இருக்கிறது அரியமான் குஷி பீச். அரசு பேருந்தில் வரும் சுற்றுலா பயணிகள் உச்சிப்புளியை அடுத்துள்ள சுந்தரமுடையான் என்ற ஊரில் இறங்கி அங்கிருந்து ஆட்டோவில் அரியமான் கடற்கரைக்குச் செல்லலாம்.

அரியமான் கடற்கரைக்குள் நுழைய ஊராட்சி நிர்வாகம் சார்பில் வாகனங்களுக்குக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அரியமான் குஷி பீச்
படக்குறிப்பு, அரியமான் குஷி பீச்

சவுக்கு மரங்களைக் கடந்து மணலில் சிறிது தூரம் நடந்து சென்றால் பரந்து விரிந்த அமைதியான சூழலில் கடல் உள்ளது. அரியமான் கடற்கரை ஆழம் குறைந்த பகுதி என்பதால் அங்கு குடும்பத்துடன் குளித்து மகிழ்வதுடன் குளித்துக்கொண்டே சிறிய நாட்டுப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிப்பதைக் கண்டு ரசிக்கலாம்.

கடலில் அழகை ரசித்து படகு சவாரி செய்ய வனத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரியமான் வரும் சுற்றுலாப் பயணிகள் வீடுகளில் உணவு சமைத்து எடுத்து வந்து சவுக்குக் காடுகளுக்கு மத்தியில் அமர்ந்து குடும்பத்துடன் சாப்பிடுவார்கள். அல்லது அரியமான் கடற்கரை அருகே உள்ள சிறு கடைகளில் விற்பனை செய்யப்படும் கடல் உணவுகளை வாங்கிச் சாப்பிடலாம்.

அரியமான் குஷி பீச்சுக்கு காலை 8 மணியில் இருந்து மாலை 5 மணி வரை செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.. அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தவிர்த்துக் கூடுதல் நேரம் இருந்தால் அரியமானில் உள்ள சுற்றுலாப் பயணிகளை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் அனுப்பிவிடுவார்கள்.

குருசடை தீவு

ராமேஸ்வரத்தில் இருந்து ராமநாதபுரம் செல்லும் வழியில் சுமார் 9 கிமீ தூரத்தில் தெற்கு கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது குந்துகால் மீனவ கிராமம். குந்துகால் மீனவ கிராமம் அருகே கடலுக்குள் அமைந்துள்ளது குருசடை தீவு. குருசடை தீவுக்குச் செல்ல ராமநாதபுரம் வனத்துறை மண்டபம் வனச் சரகத்தின் கீழ் படகு சவாரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது ஒரேயொரு பயணியர் படகு மட்டும் பயன்படுத்தப்படுகிறது. இதில் அதிகப்பட்சம் 12 பேர் வரையிலும் அனுமதிக்கப்படுவார்கள். இந்தப் படகு சவாரி தினந்தோறும் காலை 7 மணியிலிருந்து மதியம் 2 மணி வரை இயக்கப்படுகிறது.

பயணிகள் பாதுகாப்பிற்காக லைஃப் ஜாக்கெட், பயிற்சி பெற்ற லைஃப் கார்டு ஒருவரும் படகில் பணியமர்த்தப்பட்டுள்ளார். படகு சவாரிக்கு ஒரு நபருக்கு ரூ.300 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கல்வி சுற்றலா வரும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் ரூ.250 வசூலிக்கப்படுகிறது.

குருசடை தீவு

பட மூலாதாரம், TN Forest Department

படக்குறிப்பு, குருசடை தீவு

படகில் பயணிக்கும்போது கடலுக்கு அடியில் உள்ள பவளப்பாறை, கடல் குதிரை, துள்ளிக் குதிக்கும் டால்பின்கள், மீன்கள் மற்றும் இதர கடல்சார் உயிரினங்கள், தாவரங்கள் போன்றவற்றைக் கண்டு ரசிக்கலாம். மேலும், தீவில் உள்ள இயற்கை அழகுக் காட்சிகள் மற்றும் வலசை வரும் பறவைகளை சுற்றுலாப் பயணிகள் படம் பிடிக்கலாம்.

தீவுகளின் முக்கியத்துவம் மற்றும் கடல்சார் சுற்றுச்சூழல் ஆகியவை குறித்து மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

கடல் சீற்றம் மற்றும் மோசமான வானிலை நிலவினால் படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தப்படும்.

பிச்ச மூப்பன் வலசை கண்ணாடி படகு சவாரி

மன்னார் வளைகுடா கடலில் வாழ்ந்து வரும் அரிய வகை உயிரினங்களை பொது மக்கள் கண்டு ரசிக்க ராமநாதபுரம் மாவட்ட வனத்துறையின் கீழ் இயங்கி வரும் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக்கட்டளையின் சார்பில் ஏர்வாடி அருகே உள்ள பிச்சை மூப்பன் வலசை கடற்கரை கிராமத்தில் இருந்து அரை நாட்டிக்கல் தொலைவில் உள்ள மணல் திட்டுக்கு சுற்றுலாப் பயணிகள் சென்று வர சுற்றுலா கண்ணாடிப் படகு சவாரி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிச்ச மூப்பன் வலசை கண்ணாடி படகு சவாரி
படக்குறிப்பு, பிச்ச மூப்பன் வலசை கண்ணாடி படகு சவாரி

ஒரே நேரத்தில் 12 பேர் இந்தப் படகில் சவாரி செய்யலாம். இந்தப் படகின் கீழ் பகுதியில் பிரத்யேகமாக பொருத்தப்பட்டுள்ள கண்ணாடி வழியாகக் கடலுக்கு அடியில் உள்ள அனைத்து வகையான அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் மட்டுமின்றி அரியவகை பவளப் பாறைகளையும் கண்டு ரசிக்கலாம்.

பிச்சை மூப்பன் வலசை கடற்கரையில் இருந்து சுற்றுலாப் பயணிகளுடன் புறப்படும் இந்தக் கண்ணாடி படகு சவாரி கடலுக்கு நடுவில் உள்ள ஒரு மணல் திட்டிற்கு செல்கிறது. அங்குச் சென்றதும் சுற்றுலா பயணிகள் படகில் இருந்து இறக்கி விடப்படுகிறார்கள்.

பிச்ச மூப்பன் வலசை கண்ணாடி படகு சவாரி
படக்குறிப்பு, பிச்ச மூப்பன் வலசை கண்ணாடி படகு சவாரி

சுற்றுலா பயணிகள் மணல் திட்டில் கரை ஒதுங்கியுள்ள பவளப்பாறைகளைக் கண்டு ரசிப்பதுடன் கடலில் இறங்கி மகிழ்கின்றனர். பின்னர் மீண்டும் சுற்றுலாப் பயணிகளை படகில் ஏற்றிக்கொண்டு படகுக்கு அடியில் பொருத்தப்பட்டுள்ள கண்ணாடிகள் மூலம் அந்த மணல் திட்டைச் சுற்றிலும் வாழ்ந்து வரும் கடல் வாழ் உயிரினங்களை வனத்துறையினர் சுற்றிக் காட்டுகின்றனர்.

இதற்காக வனத்துறையால் நபர் ஒன்றுக்கு 200 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு