காதலனுடன் சேர்த்து வைப்பதாக கூறி அழைத்துச் சென்று சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் - இன்றைய முக்கியச் செய்திகள்

பட மூலாதாரம், Getty Images
இன்று (18/02/2025) இந்தியா மற்றும் இலங்கையின் நாளிதழ், இணையதளங்களில் வெளியான முக்கியச் செய்திகள் சில தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
காதலனுடன் சேர்த்து வைப்பதாக கூறி சென்னையைச் சேர்ந்த 14 வயது சிறுமி தஞ்சாவூரில் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார் என்றும் அது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
சென்னை நெசப்பாக்கத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன் காணாமல் போனார். அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டபோது அவர் தஞ்சாவூர் புதிய பஸ் நிலையம் பகுதியில் ஒரு வாலிபருடன் இருப்பதை அங்கிருந்த ரோந்து போலீசார் கண்டறிந்தனர். உடனடியாக இருவரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் தஞ்சாவூரை சேர்ந்த ஜெகதீஸ்வரன் ( வயது 24) என்பவர் சென்னையில் வேலை பார்த்தபோது இந்த சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. தன்னை காதலிப்பதாக ஜெகதீஸ்வரன் கூறியதை அந்த சிறுமி நம்பி அவருடன் பழகி வந்துள்ளார். இதையடுத்து கடந்த ஐந்து நாட்களுக்கு முன் அந்த சிறுமி வீட்டில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஜெகதீஸ்வரனை பார்ப்பதற்காக தஞ்சாவூர் சென்றுள்ளார்.
புதிய பேருந்து நிலையத்தில் காதலனை தேடி கொண்டிருந்தபோது சிறுமியிடம் ஒருவர் அறிமுகமாகி அவருடன் சேர்த்து வைப்பதாக கூறி தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று மூன்று நாட்களாக பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.
பின்னர் அந்த சிறுமியை சென்னைக்கு அனுப்புவதாக கூறி புதிய பேரூந்து நிலையத்துக்கு அழைத்து வந்தபோது போலீசாரிடம் அவர் சிக்கியுள்ளார் என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறுமியை வீட்டில் அடைத்து வைத்திருந்த புவனேஸ்வரனை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். மேலும் சிறுமியை தஞ்சைக்கு வரவழைத்த ஜெகதீஸ்வரனையும் கைது செய்தனர் என்கிறது தினத்தந்தி செய்தி.
- மஞ்சள் கரு, வெள்ளைக்கரு சிதையாமல் முட்டையை சரியாக வேக வைப்பது எப்படி?
- பெண் பிறப்புறுப்பு சிதைப்பு: இந்த வலிமிகுந்த நடைமுறையால் ஏற்படும் பாதிப்புகள்
- திருப்பரங்குன்றம் மலை யாருக்கு சொந்தம்? லண்டன் பிரிவி கவுன்சிலின் 1931 தீர்ப்பு கூறுவது என்ன?
- ராஜீவ் காந்தி ஓட்டிய விமானத்தை தீவிரவாதிகள் கடத்த முயன்றது ஏன்? ரா உளவு அமைப்பு தடுத்தது எப்படி?

வழிபாட்டுத் தலங்கள் வழக்கு ஏப்ரல் மாதம் விசாரணை - உச்சநீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images
வழிபாட்டு தலங்கள் சட்டம்-1991 தொடா்பான வழக்கை உச்சநீதிமன்றம் ஏப்ரல் மாதம் விசாரிக்கவுள்ளது என்று தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
உத்தர பிரதேசம் மாநிலம், வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி, மதுராவில் உள்ள ஈத்கா மசூதி, சம்பலில் உள்ள ஜாமா மசூதி ஆகியவை தொன்மையான ஹிந்து கோயில்களை இடித்து கட்டப்பட்டவை என்று ஹிந்துக்கள் தரப்பில் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன என்கிறது அந்த செய்தி.
வழிபாட்டுத் தலங்கள் - 1991 சட்டத்தை மேற்கோள்காட்டி, இத்தகைய வழக்குகளை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று முஸ்லிம் தரப்பு வாதத்தை முன்வைத்துள்ளது.
ஏனெனில், நாடு சுதந்திரமடைந்த 1947, ஆகஸ்ட் 15-ஆம் தேதியன்று நிலவிய வழிபாட்டுத் தலத்தின் மதத் தன்மையின் மாற்றத்தை வழிபாட்டுத் தலங்கள் சட்டம் தடை செய்கிறது. மேலும், மதத் தன்மையைப் பராமரிப்பதற்கான உரிமைகளை வழங்குகிறது.
மேலும் அந்த செய்தியில், வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு விதிகள்) சட்டத்தின் 2, 3 மற்றும் 4 பிரிவுகளை ரத்து செய்யக் கோரி மூத்த வழக்குரைஞா் அஸ்வினி உபாத்யாய் தாக்கல் செய்த மனு, பாஜக முன்னாள் எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனு உள்பட 6 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அனைத்தையும் ஒன்றிணைத்து தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, சஞ்சய் குமார் அமர்வு திங்கள்கிழமை விசாரணை நடத்தியது. அப்போது, இந்த வழக்கில் நிலுவையில் உள்ள மனுக்கள் மீதான விசாரணையை ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கும் வாரத்துக்கு பட்டியலிட்டு, மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மருத்துவர் சீட்டு இல்லாமல் மருந்துகள் விற்பனை - மருந்து கடைகள் உரிமம் ரத்து

பட மூலாதாரம், Getty Images
தமிழகத்தில் மருத்துவர் சீட்டு இல்லாமல் மருந்துகள் விற்பனை செய்யப்படுவது தொடர்பாக, தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்கக்கம் நடத்திய சோதனையில் பல மருந்தகங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தி டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
மாநிலத்தில் போதை பழக்கம் ஏற்படுத்தக் கூடிய வலி நிவாரணி போன்ற மருந்துகளை மருத்துவர் பரிந்துரை சீட்டு இல்லாமலும், பார்மசிஸ்ட் இல்லாமலும் விற்பனை செய்ததற்காக 17 மருந்து கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது
கூடுதலாக 59 மருந்தகங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அவை மருத்துவர் பரிந்துரை சீட்டு இல்லாமலும், உரிய ரசீதுகள் வழங்காமலும், மருந்துகளை அதிக விலைக்கு விற்றதாலும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்கிறது அந்த செய்தி.
சென்னையில் பிரபல துணிக்கடையில் ஒன்பது லட்சம் ரூபாய் கொள்ளை

பட மூலாதாரம், Getty Images
சென்னை தி.நகரில் உள்ள பிரபல துணிக்கடையிலிருந்து ஒன்பது லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து டிடி நெக்ஸ்ட் ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
தி.நகரில் உள்ள பட்டுப் புடவைகள் விற்கும் கடையில் நுழைந்த கொள்ளையர்கள் அங்கிருந்த ஒன்பது லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றனர். இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து ஞாயிற்றுக்கிழமை கடை திறந்த பிறகே, கடை ஊழியர்களுக்கு தெரிய வந்துள்ளது.
நான்காவது மாடியிலிருந்த மேற்கூரை சேதமடைந்திருப்பதை அவர்கள் கவனித்தனர். கல்லாப் பெட்டியிலிருந்து ஒன்பது லட்சம் ரூபாய் ரொக்கம் குறைவதையும் அவர்கள் கவனித்தனர். இதன் பிறகு மாம்பலம் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது என்கிறது அந்த செய்தி.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சிசிடிவி காட்சிகளைக் கொண்டு அவர்களை அடையாளம் கண்டறிய போலீஸார் முயன்று வருகின்றனர். கடையில் இதற்கு முன்பு வேலை பார்த்த ஊழியர்கள், பணத்தை கையாண்டவர்கள் குறித்த தகவல்களையும் போலீஸார் சேகரித்து வருகின்றனர் என செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது
இலங்கை தோட்டப் பகுதியில் வாழும் தமிழ் இளைஞர் மீது நாய்களை ஏவி துன்புறுத்தல்

பட மூலாதாரம், X/@ManoGanesan
இலங்கையில் தோட்ட உத்தியோகஸ்தர் ஒருவரால், தோட்டப் பகுதியில் வாழும் தமிழ் இளைஞர் மீது நாய்களை ஏவி துன்புறுத்திய சம்பவம் குறித்து முறையான விசாரணை வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கோரியுள்ளார் என்று இலங்கையின் வீரகேசரி செய்தி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
உடுகம ஹோமாதொல தோட்டத்தில் தமிழ் இளைஞர் தோட்ட உத்தியோகஸ்த்தரால் மனிதாபிமானமற்ற முறையில் தாக்கப்பட்டு நாய்களை விட்டு துன்புறுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளார். இதனை எம்மால் பார்த்துக் கொண்டிக்க முடியாது. தமிழ் இளைஞன் சிங்கள உத்தியோகஸ்த்தரை இவ்வாறு தாக்கியிருந்தால் கலவரம் தோற்றம் பெற்றிருக்கும். ஆகவே முறையாக விசாரணை செய்து சட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் நாடாளுமன்றத்தில் திங்கட்கிழமை வலியுறுத்தினார் என்கிறது அந்த செய்தி.
இந்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகிறது . ஒரு இளைஞனை நிலத்தில் தள்ளி நாய்களை கடிப்பதற்கு ஏவி விடுவது முற்றிலும் தவறு. நிலத்தில் தள்ளப்பட்டது தமிழ் இளைஞன், அவரை தள்ளிட்ட கிங்ஸ்லி என்பர் சிங்களவர் இருவரும் இலங்கையர்கள். ஆகவே இச்சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து பாருங்கள், என்று மனோ கணேசன் தெரிவித்தார் என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












