அதானி குழுமத்தை காப்பாற்ற எல்ஐசி பணம் முதலீடா? அமெரிக்க நாளிதழ் செய்தியால் புதிய சர்ச்சை

பட மூலாதாரம், Bloomberg via Getty Images
அமெரிக்க செய்தித்தாளான 'வாஷிங்டன் போஸ்ட்' செய்தியில், "இந்திய பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி. (LIC-எல்.ஐ.சி) இந்திய அரசு அதிகாரிகள் பரிந்துரையின் பேரில் அதானி குழும நிறுவனங்களில் சுமார் 3.9 பில்லியன் அமெரிக்க டாலரை முதலீடு செய்தது" என்று கூறப்பட்டுள்ளது.
சில ஆவணங்களை மேற்கோளாகக் காட்டியிருக்கும் அந்த செய்தியில், அரசு தந்த அழுத்தத்தின் கீழ் ஒரு திட்டம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.
பொதுமக்களின் பணத்தை வலுக்கட்டாயமாக தவறாக பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டியிருக்கும் எதிர்க்கட்சியான காங்கிரஸ், கூட்டு நாடாளுமன்றக்குழு (JPC) மற்றும் பொதுக் கணக்குக் குழு (PAC) மூலம் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் பொய்யானவை என்றும் கூறி எல்.ஐ.சி நிறுவனம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
தங்களின் முடிவுகளில் எந்த வெளிப்புற அழுத்தமும் இல்லை என்றும், வேறு யாருக்கும் இதில் எவ்வித பங்கும் இல்லை என்றும் அந்நிறுவனம் சொல்லியிருக்கிறது.
அதேசமயம், இப்படிப்பட்ட முதலீடு கொண்ட எந்த அரசு திட்டத்திலும் தாங்கள் அங்கம் வகிக்கவில்லை என அந்த செய்தித்தாள் செய்திக்கு அதானி குழுமம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுவரை இந்த அறிக்கை பற்றி நிதி ஆயோக் எந்தப் பதிலும் கொடுக்கவில்லை என்று வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்திருக்கிறது.
உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக திகழும் கௌதம் அதானியின் சொத்து மதிப்பு சுமார் 90 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.
அவரது நிறுவனம் மீது இதற்கு முன்பும் மோசடி குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அது தற்போது அமெரிக்காவில் விசாரணையில் இருக்கிறது.
வாஷிங்டன் போஸ்ட் செய்தி என்ன?
இந்திய தொழிலதிபர் கௌதம் அதானியைப் பற்றிய ஒரு செய்தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் சனிக்கிழமை காலை வெளியிடப்பட்டது. அதில், அவரது நிறுவனத்தின் கடன் சுமை அதிகரித்து வருவதாகவும், பல அமெரிக்க மற்றும் ஐரோப்பிய வங்கிகள் அவருக்கு பணம் வழங்குவதில் தயக்கம் காட்டுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இப்படியொரு நெருக்கடியான சூழல் நிலவிய போது, அவருக்கு உதவி செய்ய இந்திய அரசு ஒரு தீட்டம் தீட்டியது.

பட மூலாதாரம், Getty Images
அந்த செய்தித்தாள், உள்ளக ஆவணங்களின் படி இந்திய அரசு அதிகாரிகள் ஒரு திட்டத்தை தயாரித்து, இந்த ஆண்டின் மே மாதத்தில் ஒரு பரிந்துரை செய்ததாகக் கூறியுள்ளது. அந்த முன்மொழிவில், அதானி குழுமத்தில் எல்.ஐ.சி நிறுவனம் சுமார் 3.9 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்வது குறித்து கூறப்பட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய அரசு நிறுவனமான எல்.ஐ.சி, வறுமையில் வாடும் மக்களின், கிராமப்புற பகுதிகளில் வாழும் குடும்பங்களின் காப்பீடு மற்றும் நிதி தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரு மதிப்பிற்குரிய நிறுவனமாகக் கருதப்படுகிறது.
அதானி துறைமுக நிறுவனம் தங்களது தற்போதைய கடனை சரிசெய்யத் தேவையான சுமார் 585 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு வங்கிப் பத்திரங்கள் வெளியிட வேண்டிய நிலை ஏற்பட்டிருந்த நிலையில், சரியாக அதே மாதம் இந்த எல்.ஐ.சி திட்டம் தீட்டப்பட்டதாகவும் அந்த செய்தித்தாள் தெரிவித்திருக்கிறது.
மே 30-ஆம் தேதி அந்த முழு பத்திர வெளியீடும் ஒரே முதலீட்டாளரான எல்.ஐ.சி மூலம் முடிக்கப்பட்டது என்று அதானி குழுமம் தெரிவித்ததாக வாஷிங்டன் போஸ்ட் குறிப்பிட்டிருக்கிறது.
இது அரசு அதிகாரிகள் இயற்றிய பெரிய திட்டத்தின் சிறு பகுதி என்றும், இதுவே அரசாங்கத்தில் அதானிக்கு இருக்கும் செல்வாக்குக்கு உதாரணம் என்றும் அந்த செய்தித்தாள் கூறியிருக்கிறது.
தாங்கள் வெளியிட்ட அந்த அறிக்கை, எல்.ஐ.சி மற்றும் நிதித்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிதி சேவை துறையிடமிருந்து (DFS) பெறப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டதாக வாஷிங்டன் போஸ்ட் அறிவித்திருக்கிறது.
இது தொடர்பாக சில இந்நாள் மற்றும் முன்னாள் அதிகாரிகளுடனும், அதானி குழுமத்தின் நிதி நடவடிக்கைகளில் அனுபவம் உள்ள மூன்று வங்கிப் பணியாளர்களுடனும் பேசியதாக அந்த செய்தித்தாள் கூறியிருக்கிறது. தங்கள் அடையாளம் வெளிவரக்கூடாது என்ற நிபந்தனையுடன் அவர்கள் பேட்டி வழங்கியதாகவும் அந்த செய்தித்தாள் குறிப்பிட்டிருக்கிறது.
திட்டக் கமிஷனுக்குப் பதிலாக உருவாக்கப்பட்ட நிதி ஆயோக் மற்றும் எல்.ஐ.சி உடன் இணைந்து நிதித்துறை அதிகாரிகளால் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது என்று அந்த செய்தித்தாள் கூறுகிறது.
அதானி குழுமத்தால் வெளியிடப்பட்ட 3.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பத்திரங்களை வாங்கவும், அதனுடைய நிறுவனங்களின் கூடுதல் பங்குகளை வாங்க சுமார் 507 மில்லியன் அமெரிக்க டாலரை பயன்படுத்தவும் எல்.ஐ.சியை நிதித்துறை அமைச்சக அதிகாரிகள் அறிவுறுத்தியதாக சில ஆவணங்கள் குறிப்பிடுகிறது என்று வாஷிங்டன் போஸ்ட் கூறுகிறது.
அதானி குழுமத்தின் பதில் என்ன?
இந்த விஷயத்தைப் பற்றி அதானி குழுமம் என்ன சொல்கிறது என்பதை அறிந்துகொள்ள அவர்களைத் தொடர்பு கொண்டிருக்கிறது வாஷிங்டன் போஸ்ட். எந்த அரசு திட்டத்திலும் தாங்கள் அங்கம் வகிக்கவில்லை என அந்த செய்தித்தாளுக்கு அதானி குழுமம் மறுப்பு தெரிவித்துள்ளது.
"எல்.ஐ.சி பல கார்பரேட் நிறுவனங்களில் முதலீடு செய்கிறது. அதானிக்கு அது முன்னுரிமை வழங்குகிறது என்பதும் தவறாக வழிநடத்துவது போல் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், எங்கள் நிறுவனங்களில் செய்த முதலீடுகளிலிருந்து எல்.ஐ.சி லாபம் ஈட்டியுள்ளது" என்றும் அதானி குழுமம் தெரிவித்திருக்கிறது.
பாரபட்சம் காட்டப்படுவதாக கூறப்படுவது ஆதாரமற்றது என்றும் மோதி தேசிய தலைவராவதற்கும் முன்பே தங்கள் நிறுவனம் வளர்ச்சியை எட்டியுள்ளது என்றும் அதானி குழுமம் கூறியுள்ளது.
எல்.ஐ.சி பதில் என்ன?

பட மூலாதாரம், Getty Images
எல்.ஐ.சி சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் அந்த ஊடக செய்தியை நிராகரித்திருக்கிறது. "எல்.ஐ.சி நிறுவனத்தின் முதலீட்டு முடிவுகளில் வெளிப்புற காரணிகள் தாக்கம் செலுத்துகின்றன என்று வாஷிங்டன் போஸ்ட் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானவை மற்றும் ஆதாரமற்றவை" என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
எல்.ஐ.சி தனது ஒருபக்க அறிக்கையில், "அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்ய ஒரு திட்டவட்டமான ஆவணத்தையோ அல்லது திட்டத்தையோ எல்.ஐ.சி தயாரித்ததில்லை. அனைத்து முதலீட்டு முடிவுகளும் விரிவான ஆய்வு மற்றும் கணக்கெடுப்புக்குப் பிறகு, நிர்வாகத்தின் கொள்கைகளின் அடிப்படையில் சுயாதீனமாகவாகவே எடுக்கப்படுகின்றன. நிதித்துறைக்கோ அல்லது வேறு எந்த குழுவிற்குமோ இந்த முடிவுகளில் பங்கு இல்லை" என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும், "அந்த கட்டுரையில் கூறப்பட்ட குற்றச்சாட்டு எல்.ஐ.சி-யின் முடிவெடுக்கும் முறையைப் பாதிக்கவும், அதன் மீதான நம்பிக்கையையும் பெயரையும் இந்தியாவின் வலுவான நிதி துறையின் அடித்தளத்தையும் கெடுக்கும் நோக்கத்தில் வெளியிடப்பட்டதாகவும் தோன்றுகிறது" என்றும் எல்.ஐ.சி வெளியிட்ட அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது.
எதிர்க்கட்சிகள் விமர்சனம்
அதானி குழுமத்தின் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக கூறி, பொதுமக்களின் பணம் 33,000 கோடி ரூபாயை எல்.ஐ.சி தவறாக பயன்படுத்தியிருக்கிறது என்று எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம் சாட்டியிருக்கிறது.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் தொடர்ச்சியாக பல பதிவுகளை செய்திருக்கிறது காங்கிரஸ்.
"இப்போது வாஷிங்டன் போஸ்ட் ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறது. அதில், அதானி அமெரிக்காவில் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட போது, உலகம் முழுவதும் வங்கிகள் அவருக்கு கடன் வழங்க மறுத்தன. பின்னர் மோதி அரசு எல்.ஐ.சி-க்கு அழுத்தம் கொடுத்து, அதானியின் நிறுவனங்களில் 3.9 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்ய வைத்தது" என்று காங்கிரஸ் கூறியிருக்கிறது.
மேலும், "எல்.ஐ.சி-க்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு இந்த முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அதேசமயம் ஏற்கெனவே அதானி குழும பங்குகளில் முதலீடு செய்து எல்.ஐ.சி பல நூறு கோடிகளை இழந்திருக்கிறது" என்றும் காங்கிரஸ் குறிப்பிட்டிருக்கிறது.
இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கோரியுள்ளது. முதற்கட்டமாக, நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழு (PAC) முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். "கடுமையான குற்ற வழக்குகளால் நிதி சிக்கலில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தை காப்பாற்றுவது அவர்களின் பணி என்று நிதித்துறை மற்றும் நிதி ஆயோக் அதிகாரிகள் யாரின் அழுத்தத்தில் முடிவு செய்தனர் என்ற கேள்வி எழுகிறது" என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
வாஷிங்டன் போஸ்ட் செய்தியை மேற்கொள்காட்டி எழுதியிருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான மெஹுவா மொய்த்ரா, "இந்த மோதி அரசு கௌதம் அதானி மீது தொடர்ந்து முதலீடு செய்துகொண்டே இருக்கிறது. ஒவ்வொரு முறையும் இந்திய மக்கள் அவரைக் காப்பாற்ற வேண்டியிருக்கிறது. இப்போது அவர்களின் நெருங்கிய பணக்கார நண்பரைக் காப்பாற்ற எல்.ஐ.சி 30,000 கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பதாக வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்திருக்கிறது" என்று எழுதியிருக்கிறார்.
இதுபற்றிப் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரும், பிரபல பத்திரிகையாளருமான சகாரிகா கோஷ், "கடினமாக உழைக்கும் கோடிக்கணக்கான இந்தியர்களின் பணத்தை எல்.ஐ.சி வைத்திருக்கிறது. அந்தப் பணத்தை முதலீடு செய்வது பற்றி சரியான விசாரணை நடந்ததா, இல்லை அந்தப் பணம் மோதியின் நண்பர்களுக்கு மட்டும்தானா?" என்று கேள்வியெழுப்பியிருக்கிறார்.
அதானி குழுமம் மீதான முந்தைய குற்றச்சாட்டுகள்
கடந்த ஆண்டு, அமெரிக்க நீதித்துறை மற்றும் அமெரிக்க பத்திரங்கள், பரிவர்த்தனை ஆணையம் (SEC) அதானி மற்றும் அவரது சில கூட்டாளிகள் மீது மோசடி குற்றச்சாட்டுகளை சுமத்தியது.
"கௌதம் அதானி மற்றும் அவரது கூட்டாளிகள் இந்தியாவில் உள்ள தங்கள் புதுப்பிக்கக் கூடிய ஆற்றல் (Renewable Energy) நிறுவனத்துக்காக 2.5 கோடி அமெரிக்க டாலர் (சுமார் இரண்டரை கோடி) லஞ்சம் கொடுத்தனர். அமெரிக்காவில் முதலீட்டாளர்களிடம் முதலீடு பெறும்போது இதனை மறைத்தனர்." என்பது குற்றச்சாட்டு.
இதைத் தொடர்ந்து, அதானி குழுமத்துடனான இரண்டு ஒப்பந்தங்களை கென்ய அரசு ரத்து செய்தது. இது அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்பையும் நற்பெயரையும் வெகுவாகப் பாதித்தது.
முன்னதாக, 2023 ஜனவரி 24 அன்று அதானி குழுமத்துக்கு எதிராக ஹிண்டென்பெர்க் ஒரு அறிக்கை தாக்கல் செய்தது. அதில், கௌதம் அதானி தனது ஏழு பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பங்குகளை முறைகேடாக அதிகரிக்கச் செய்ததன் மூலம் 2020 முதல் $100 பில்லியன் வருமானம் ஈட்டியதாக கூறப்பட்டிருந்தது.
அதுமட்டுமல்லாமல் பண மோசடி செய்வதற்காக கௌதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி 37 போலி நிறுவனங்களை நடத்திவருவதாகவும் ஹிண்டென்பெர்க் குற்றம் சாட்டியது.
ஆனால், இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று மறுத்தது அதானி குழுமம்.
பின்னர், இந்தியாவின் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி (SEBI), ஆய்வாளர்களுக்கான விதிகளை மீறியதாகக் கூறி ஹிண்டென்பெர்க் நிறுவனத்திற்கு 'ஷோ காஸ் நோட்டீஸ்' (Show cause Notice) அனுப்பியது.
2025-ஆம் ஆண்டு ஜனவரியில் ஹிண்டென்பெர்க் நிறுவனத்தை மூடுவதாக அதன் நிறுவனர் ஆண்டர்சன் அறிவித்தார். அதற்கு அவர் எந்த காரணமும் கூறவில்லை.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












