ஓய்வு பெற்றவர்களுக்கு மீண்டும் அரசு வேலை - இளைஞர்கள் ஏமாற்றப்படுவதாக புகார்

அரசுப்பணி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசு

பட மூலாதாரம், tnpsc.gov.in

    • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் 70 வயதைக் கடந்த நபர், சுமார் 1 லட்ச ரூபாய் சம்பளத்துக்கு நூலகர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இவரைப்போல 64 வயதைக் கடந்த மூன்று பேர், பல்வேறு பிரிவுகளுக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் பணியமர்த்தப்பட்டனர். அரசுத்துறைகளில் இளைஞர்களை நியமிக்காமல் ஓய்வுபெற்றவர்களுக்கு அதிகம் வாய்ப்பளிக்கப்படுவதாக, அரசு ஊழியர் சங்கங்கள் குற்றம் சுமத்துகின்றன.

அரசுப் பணியில் போதிய வாய்ப்புகள் கிடைக்காததால், வாழ்வில் அடுத்தக் கட்ட திட்டங்கள் குறித்து எந்த முடிவும் எடுக்க இயலவில்லை என்று பலர் கூறுகின்றனர் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள்.

அரசுப் பணிகளில் ஓய்வுபெற்றவர்களை நியமிப்பது ஏன்? மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கூறும் விளக்கம் என்ன?

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் சுற்றுச்சூழல், பேரிடர், மாசுக்கட்டுப்பாடு, அரசின் கொள்கைகள் ஆகியவை குறித்து சுமார் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன.

இவற்றை பராமரிப்பதற்கு கடந்த ஜூன் முதல் வாரத்தில் நூலகர் பணிக்கு சுமார் 74 வயதான ஒருவர் தேர்வு செய்யப்பட்டார். "இப்பணிக்கு இளைஞர்கள் யாரும் முன்வராததால், இவற்றைக் கையாள்வதற்கு அனுபவம் வாய்ந்த நபர் நூலகராக நியமிக்கப்பட்டார்" என, ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் ஜெயந்தி தெரிவித்துள்ளார்.

வாரிய தலைவர் அளித்த விளக்கம்

இதேபோல், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, நிதித்துறை, உள்துறை ஆகியவற்றில் பணியாற்றி ஓய்வு பெற்ற சுமார் 64 வயதைக் கடந்த மூன்று பேர், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் பல்வேறு பிரிவுகளில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

"நிதி மற்றும் நூலகத் துறையில் அனுபவம் வாய்ந்த மூத்த ஊழியர்களை மட்டுமே நியமிக்க முடியும்" எனவும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் ஜெயந்தி தெரிவித்துள்ளார்.

வாரியத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு அரசிடம் கோரிக்கை வைத்தபோது தலைமைச் செயலகத்தில் இருந்து இவர்கள் பெயரை பரிந்துரை செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

நான்கு பேரும் அரசுப் பணியில் இறுதியாக பெற்ற சம்பளத்தையே புதிய பணியிடத்தில் பெற உள்ளதாகவும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

"இந்திய ஆட்சிப்பணி தேர்வில் வெற்றி பெறுகிறவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுவதைப் போல, தமிழ்நாடு அரசில் எந்தப் பணிக்குத் தேர்வானாலும் பயிற்சி பெற வேண்டும். நூலகர் பணிக்குத் தகுதியுள்ள நபர் இல்லை எனக் கூறுவதை ஏற்க முடியாது," என்கிறார், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் ஆர்.தமிழ்ச்செல்வி.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "கிராம நூலகராக மிக சொற்ப சம்பளத்தில் பலர் வேலை பார்க்கின்றனர். தங்கள் சம்பளத்தை உயர்த்துவதற்கு அவர்கள் பலகாலமாக போராடி வருகின்றனர். வெளிப்படையான போட்டி அறிவிக்கப்பட்டிருந்தால் அவர்களில் தகுதியான பலர் தேர்வு செய்யப்பட்டிருப்பார்கள். ஆனால், அரசு அதை விரும்புவதில்லை" என்கிறார்.

அரசுப்பணி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசு

பட மூலாதாரம், TN Gov

படக்குறிப்பு, கடந்த மே 2 அன்று மோட்டார் வாகன பராமரிப்புத்துறையில் 171 பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக வெளியான அரசாணை

போக்குவரத்துத் துறையில் முன்னாள் ராணுவத்தினர்

அரசுத் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களை மீண்டும் பணியமர்த்துவது தொடர்ந்து நடப்பதாகக் கூறும் தமிழ்ச்செல்வி, கடந்த மே 2 அன்று மோட்டார் வாகன பராமரிப்புத்துறையில் 171 பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக வெளியான அரசாணை ஒன்றை பிபிசி தமிழிடம் பகிர்ந்தார்.

தமிழ்நாடு போக்குவரத்துத் துறை செயலர் பணீந்திரரெட்டி வெளியிட்டுள்ள அந்த உத்தரவில், 'மோட்டார் வாகன பராமரிப்புத் துறையின் மூலம் 23 ஆயிரம் அரசு வாகனங்கள், பல்வேறு மாவட்டங்களில் உள்ள 20 ஆட்டோமொபைல் பணிமனைகள் மூலம் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு தொழில்நுட்பரீதியாக 842 இடங்களை நிரப்புவதற்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

இத்துறையில், கடந்த 5 ஆண்டுகளாக 632 இடங்கள் காலியாக உள்ளன. இதில், எலக்ட்ரீஷியன், ஃபிட்டர், ஸ்டோர் அட்டெண்டர், பம்ப் ஆபரேட்டர் ஆகிய பணிகளில் 171 இடங்களை மோட்டார் வாகன பராமரிப்புத்துறை நிரப்ப உள்ளது.

இவர்களை அவுட்சோர்ஸிங் அல்லது டெக்ஸ்கோ (Tamilnadu ExServiceman corporation) மூலம் தேர்வு செய்யலாம் என நிதித்துறை கருத்து தெரிவித்துள்ளது. இதை அரசு கவனமாக பரிசீலித்து அவுட்சோர்ஸிங் அல்லது டெக்ஸ்கோ மூலம் ஒப்பந்த அடிப்படையில் இவர்களைத் தேர்வு செய்யலாம்' எனத் தெரிவித்துள்ளார்.

"இந்தப் பணியிடங்களில் முன்னாள் ராணுவ வீரர்களை நியமிக்க உள்ளனர். அவர்கள் ஏற்கெனவே ஓய்வூதியம் பெறுகின்றனர். இதே பணியிடங்களுக்கு டிப்ளமோ அல்லது தொழிற்கல்வி (ஐடிஐ) படித்த மாணவர்களை தேர்வு செய்யலாம்" எனக் கூறுகிறார் ஆர்.தமிழ்ச்செல்வி.

இளைஞர்களுக்கு இந்தப் பணிகள் வழங்கப்பட்டால் அவர்கள் சுமார் 30 ஆண்டுகாலம் பணிபுரிய வாய்ப்புள்ளதாகக் கூறும் தமிழ்ச்செல்வி, "முன்னாள் ராணுவ வீரர்களை 32 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு தேர்வு செய்ய உள்ளனர். அதுவே, இளைஞர்களுக்கு வெறும் 22 ஆயிரம் சம்பளம் கொடுத்தால் போதும்" என்கிறார்.

"ஒரு துறையில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் காலியிடம் நிரப்பப்படவில்லை என்றால் நிதித்துறையின் ஒப்புதல் இல்லாமல் நிரப்பக் கூடாது என்ற விதி உள்ளது. இங்கு பத்து ஆண்டுகளைக் கடந்தும் பல துறைகளில் பணிகளை நிரப்பாமல் உள்ளனர்," எனக் கூறுகிறார், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஜெய ராஜராஜேஸ்வரன்.

"இதையே காரணமாக வைத்து ஓய்வுபெற்ற ஊழியர்களைத் தேர்வு செய்யும் வேலைகள் நடக்கின்றன. தொகுப்பூதியத்திலும் ஊழியர்களை நியமிக்கின்றனர்" எனவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

அரசுப்பணி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசு

பட மூலாதாரம், R Tamil Selvi

படக்குறிப்பு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் ஆர்.தமிழ்ச்செல்வி

"மனஉளைச்சல் ஏற்படுகிறது"

அரசுப் பணிக்குத் தேர்வாகும் நபர்களுக்கு வயது உச்ச வரம்பு உள்ளதாகக் கூறும் ஆர்.தமிழ்ச்செல்வி, "ஆனால், எந்தவித தகுதியைப் பற்றியும் கவலைப்படாமல் ஓய்வுபெற்றவர்களை வேலைக்கு எடுக்கின்றனர். இதன்மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை அரசு ஏமாற்றுவதாகவே கருத வேண்டியுள்ளது" எனவும் அவர் தெரிவித்தார்.

"ஓய்வூதியம் பெறும் நபருக்கு அதிக சம்பளத்தில் மீண்டும் அரசுப் பணி வாய்ப்பு கிடைக்கிறது. இதனால் அதிக மனஉளைச்சல் ஏற்படுகிறது," எனக் கூறுகிறார், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நரேந்திரன். இவர் கடந்த சில ஆண்டுகளாக போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருகிறார்.

அரசுப்பணிக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு போதிய வாய்ப்புகள் கிடைக்காததால், பலருக்கும் திருமணம் தள்ளிப் போகும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளதாகவும் பிபிசி தமிழிடம் அவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாத நிலவரப்படி, அரசின் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வைத்திருப்போரின் எண்ணிக்கை 53 லட்சத்து 74 ஆயிரமாக உள்ளதாக அரசின் செய்திக் குறிப்பு கூறுகிறது.

இவர்களில் ஆண்கள் 24 லட்சத்து 74 ஆயிரம் பேர் என்றும் பெண்கள் 28 லட்சத்து 98 ஆயிரம் பேர் என்றும் திருநர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 284 பேர் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

31 வயது முதல் 45 வயது வரையில் அரசுப் பணியை எதிர்நோக்கி காத்திருப்போரின் எண்ணிக்கை 16,94,518 பேர் என அரசு கூறியுள்ளது.

"ஓர் இடத்துக்கு 326 பேர் போட்டி"

"தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு இரண்டு முறை குரூப் 4 தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த ஆண்டு குரூப் 4 தேர்வு மூலம் 3,935 பேரை எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். இதையும் சேர்த்துக் கணக்கிட்டால், 15 ஆயிரம் பேர் வரை மட்டுமே தேர்வு செய்யப்பட்டதாகப் பார்க்க முடியும்" எனக் கூறுகிறார் நரேந்திரன்.

கடந்த ஆண்டு குரூப் 4 தேர்வு மூலம் 6244 பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்தது. ஆனால், இந்தப் பணியிடங்களுக்கு 20 லட்சத்து 37 ஆயிரத்து 94 பேர் போட்டியிட உள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்தது.

"அதாவது ஒரு பணியிடத்துக்கு சுமார் 326 பேர் போட்டியிட்டுள்ளனர். 2022 ஆம் ஆண்டு 7,500 குரூப் 4 பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டபோது, சுமார் 22 லட்சம் பேர் போட்டியிட்டதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்தது," எனக் கூறுகிறார் மாணவர் நரேந்திரன்.

சென்னை மாநகராட்சியில் பல மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியார் வசம் ஒப்படைத்துவிட்டதாகக் கூறும் தமிழ்ச்செல்வி, "அரசுத் துறைகளை தனியார்மயத்தை நோக்கிக் கொண்டு செல்லவே காலி பணியிடங்களை நிரப்பாமல் உள்ளனர்" என்கிறார்.

அரசுப்பணி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசு

பட மூலாதாரம், Jaya Rajarajeshwaran

படக்குறிப்பு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஜெய ராஜராஜேஸ்வரன்

அரசாணை 56 - அச்சப்படுவது ஏன்?

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் (2018 ஆம் ஆண்டு) அரசு அலுவலகங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் மற்றும் தேவையற்ற பணியிடங்களை அடையாளம் கண்டறிந்து அவற்றைக் களைவதற்காக அரசாணை எண் 56 வெளியிடப்பட்டது.

அந்த ஆணையில், 'அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஊதியம் மற்றும் அவர்களுக்கான படிகளை திருத்துவதற்கு தேவையான பரிந்துரைகளை வழங்குவதற்கு 2017 ஆம் ஆண்டு குழு ஒன்று அமைக்கப்பட்டது.

அரசுத் துறைகளில் பணியாளர் கட்டமைப்பை மதிப்பிடவும் செலவினங்களை குறைப்பதற்கும் ஆரம்பகட்ட நடவடிக்கையாக அவுட்சோர்ஸிங் அல்லது ஒப்பந்தம் மூலம் நியமிக்கும் பதவிகளை அடையாளம் காணவும் பணியாளர் சீர்திருத்தக் குழுவை அமைப்பதற்கு குழு பரிந்துரைத்துள்ளது.

அதன்படி, ஆதிசேஷைய்யா தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் அலுவல் செயலராக நிதித்துறை செயலர் சித்திக் ஐ.ஏ.எஸ் இருப்பார்' என உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

"இதை அனுமதிக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் கூறினார். 'தி.மு.க ஆட்சிக்கு வந்தால் மூன்றரை லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்புவோம்' என வாக்குறுதியும் கொடுத்தார். ஆனால், அதற்கு மாறாக அரசு நடந்து கொள்கிறது" எனக் கூறுகிறார், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஜெய ராஜராஜேஸ்வரன்.

"கடந்த அ.தி.மு.க ஆட்சியில் ஒவ்வொரு துறையிலும் உபரி பணியிடங்களைக் கண்டறிந்து குழுவிடம் பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அவற்றை முழுமையாக செயல்படுத்தும் வேலைகளை தி.மு.க அரசு மேற்கொள்கிறது" எனவும் அவர் விமர்சித்தார்.

'4 ஆண்டுகளில் 40 ஆயிரம் பேர்'

கடந்த மே 31 அன்று பா.ம.க தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில், 'தி.மு.க ஆட்சிக்கு வந்த நான்கு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், மொத்தமாகவே 70 ஆயிரம் பேருக்குத் தான் அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் சுமார் 40 ஆயிரம் பேர் மட்டுமே நிரந்தர பணியாளர்கள்' எனத் தெரிவித்துள்ளார்.

ஆண்டுக்கு சுமார் 50 ஆயிரம் பேர் அரசுப் பணிகளில் இருந்து ஓய்வு பெறும் நிலையில், வெறும் 40 ஆயிரம் பேருக்கு மட்டுமே நிரந்தர வேலையை அரசு வழங்கியுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.

2021 சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க வெளியிட்ட தேர்தல் அறிக்கையை மேற்கோள் காட்டிய அன்புமணி, 'மூன்றரை லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்புவதுடன் புதிதாக 2 லட்சம் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுப்பதாக தி.மு.க வாக்குறுதி கொடுத்தது. ஆனால், நிறைவேற்றவில்லை' எனவும் குறிப்பிட்டிருந்தார்.

அரசுப்பணி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசு

பட மூலாதாரம், kayalvizhi Selvaraj / Facebook

படக்குறிப்பு, அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. கருணை அடிப்படையிலும் வேலைகள் ஒதுக்கப்படுகின்றன என்கிறார் அமைச்சர் கயல்விழி செல்வராஜ்

அமைச்சர் கயல்விழி செல்வராஜ் சொல்வது என்ன?

அரசு ஊழியர் சங்கத்தின் குற்றச்சாட்டுகள் குறித்து, தமிழ்நாடு மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜிடம் பிபிசி தமிழ் பேசியது.

"அரசு துறைகளில் அதிகளவில் பணி நியமனங்கள் நடந்து வருகின்றன. 2025-26 ஆம் ஆண்டில் சுமார் 40 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதில், சுமார் 11 ஆயிரம் பணியிடங்கள் அங்கன்வாடி மையங்களில் நிரப்பப்பட உள்ளன.

இதுதவிர, போக்குவரத்துறையில் மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களை நிரப்ப உள்ளோம். ஆசிரியர் தேர்வு வாரியம், காவலர் தேர்வு வாரியம் ஆகியவை தங்களுக்கான பணியிடங்களை நிரப்பிக் கொள்கின்றன. அவ்வாறு நிரப்பும்போது காலியிடங்களின் விவரம் தெரியவரும்" எனக் கூறுகிறார்.

பொது சுகாதாரத்துறை உள்பட ஒவ்வொரு துறைகளும் தங்களுக்குத் தேவையான நபர்களை தேர்வு வைத்து எடுத்துக் கொள்வதாகக் கூறும் கயல்விழி செல்வராஜ், "அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. கருணை அடிப்படையிலும் வேலைகள் ஒதுக்கப்படுகின்றன" என்கிறார்.

மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மோட்டார் வாகன பராமரிப்புத்துறை ஆகியவற்றில் ஓய்வுபெற்றவர்களை தேர்வு செய்வது தொடர்பான சர்ச்சை குறித்துக் கேட்டபோது, "சில துறைகளில் ஆட்களை தேர்வு செய்யும்போது சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கின்றனர். இதனால் அவற்றை நிரப்புவதில் தாமதம் ஏற்படுகிறது" எனத் தெரிவித்தார்.

"தாமதத்தைக் களையும் வகையில் தற்காலிகமாக பணிகள் நிரப்பப்படுகின்றன. தவிர, தற்காலிகமாக தேர்வு செய்யப்படுகிறவர்களுக்கும் குடும்பங்கள் உள்ளன" எனக் கூறுகிறார், அமைச்சர் கயல்விழி செல்வராஜ்.

"சிலர் கூறுவதைப் போல அரசு திட்டமிட்டு எதையும் செய்வதில்லை" எனக் கூறும் கயல்விழி செல்வராஜ், "அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக அரசு செயல்பட்டு வருகிறது. அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு தனியாக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது" எனக் கூறினார்.

அரசு ஊழியர் சங்கங்களின் கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர்கள் அடங்கிய குழு ஒன்றை கடந்த பிப்ரவரி மாதம் முதமைச்சர் ஸ்டாலின் நியமித்தார்.

அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இதைக் குறிப்பிட்டுப் பேசிய அமைச்சர் கயல்விழி செல்வராஜ், " பணியிடங்களை நிரப்புவதில் ஏற்படும் தாமதத்தை சரிசெய்து காலிப் பணியிடங்களை நிரப்பும் வேலைகளை அரசு மேற்கொண்டு வருகிறது" எனவும் தெரிவித்தார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு