காயமடைந்தவர்களை அமித் ஷா நேரில் பார்த்த மருத்துவமனையில் என்ன நடந்தது? பிபிசி கள ஆய்வு

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பிரேர்னா
- பதவி, பிபிசி செய்தியாளர்
(எச்சரிக்கை : இந்த கட்டுரையில் உள்ள சில தகவல்கள் உங்களுக்கு சங்கடத்தை தரலாம்)
டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே திங்கட்கிழமை மாலை சுமார் 7 மணியளவில் ஒரு காரில் வெடிப்பு ஏற்பட்டது. அதில் பாதிக்கப்பட்டவர்கள் அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள லோக் நாயக் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மருத்துவமனைக்கு வெளியே இருந்து அவசர சிகிச்சைப் பிரிவு வரை எல்லா இடங்களிலும் பரபரப்பான சூழல் காணப்பட்டது.
மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வெளியே காவல்துறையினரும் பாதுகாப்புப் படையினரும் அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்தனர். மறுபுறம், பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வெளியே தங்கள் உறவினர்கள் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தனர்.
நாங்கள் 8 மணியளவில் லோக் நாயக் மருத்துவமனைக்கு சென்றபோது, ஊடகவியலாளர்கள் யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. சிலர் வெளியே ஓர் ஆம்புலன்ஸ் ஓட்டுநரிடம் பேசிக் கொண்டிருந்தனர்.
"அங்குள்ள சூழ்நிலையைப் பார்த்தால், அது ஒரு சிஎன்ஜி வெடிப்பு போலத் தெரியவில்லை. அப்படி இருந்திருந்தால், ஒரு வாகனத்துக்கு மட்டும் தீப்பிடித்திருக்கும். ஆனால் இங்கே பத்து முதல் பதினைந்து வாகனங்கள் தீப்பிடித்தன. அவை ஒன்றுக்கு ஒன்று வெகு தூரத்தில் நிறுத்தப்பட்டிருந்தன"என்று அவர் கூறுவது கேட்டது.
டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே திங்கட்கிழமை மாலை ஒரு கார் வெடித்துச் சிதறியது.
இந்தச் சம்பவத்தில் குறைந்தது எட்டு பேர் இறந்ததை டெல்லி காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்ட இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சம்பவ இடத்தையும் மருத்துவமனையையும் நேரில் சென்று பார்வையிட்டார்.
ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கூறியது என்ன?

நாங்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநரிடம் பேசினோம்.
அவரது பெயர் முகமது ஆசாத்.
"செங்கோட்டை அருகே வெடிப்பு நடந்துள்ளதாகவும், அங்கு உடனே செல்ல வேண்டும் என்றும் மருத்துவமனையிலிருந்து எங்களுக்கு தகவல் வந்தது. அதற்குப் பிறகு மருத்துவமனைக்கு வெளியே இருந்த எட்டு முதல் பத்து ஆம்புலன்ஸ்கள் உடனே அந்த இடத்திற்குச் சென்றன.
அங்கே சென்றபோது நான்கு அல்லது ஐந்து உடல்கள் கிடந்தன. ஓரிடத்தில் ஒரு உடல் பாகமும், இன்னொரு இடத்தில் மற்றொன்றும் கிடந்தன. எப்படியோ அவற்றை எடுத்து மருத்துவமனைக்குக் கொண்டு வந்தோம். காயமடைந்தவர்கள் யாரையும் நாங்கள் அங்கு பார்க்கவில்லை, ஏனெனில் அவர்கள் ஏற்கனவே மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கலாம்" என்று ஆசாத் பிபிசியிடம் கூறினார்.
இந்த உரையாடலுக்குப் பிறகு, இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அந்த மருத்துவமனைக்குள் செல்வதைக் காண முடிந்தது.
சம்பவத்தில் காயமடைந்தவர்களை அமித் ஷா நேரில் சந்தித்ததாக பெயர் வெளியிட விரும்பாத மருத்துவமனை ஊழியர் ஒருவர் எங்களிடம் தெரிவித்தார். டெல்லி முதல்வர் ரேகா குப்தாவும் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க மருத்துவமனைக்கு வந்தார்.
காயமடைந்தவர்களின் உறவினர்கள் கவலை

இதற்கிடையில், மருத்துவமனைக்கு வெளியே காயமடைந்தவர்களின் சில உறவினர்களை நாங்கள் சந்தித்தோம்.
பவன் சர்மா என்ற நபர், "தனது சகோதரியின் கணவரும், தனது மைத்துனருமான பவானி சங்கர் தற்போது மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், அவரைச் சந்திக்க அனுமதிக்கவில்லை" என்று கூறினார்.
மருத்துவமனையின் பிரதான வாயிலுக்குள் இருந்த பவனின் தந்தையுடனும் நாங்கள் பேசினோம்.
அவரும், காயமடைந்தவர்களை அவர்களது குடும்பத்தினர் சந்திக்க முடியவில்லை என்பதை உறுதிப்படுத்தினார்.
பவானி சங்கரின் நிலையை விவரித்த பவன், "சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே, என் மைத்துனரிடமிருந்து எனக்கு வீடியோ கால் வந்தது. அவரது முகத்தில் காயம் இருந்தது, கையிலும் காயம் ஏற்பட்டிருந்தது. அவரால் சரியாகப் பேசக்கூட முடியவில்லை" என்றார்.
அவர் செங்கோட்டை பகுதியில் டாக்ஸி ஓட்டுநராகப் பணியாற்றி வந்தவர் என்று பவானி சங்கரின் குடும்பத்தினர் கூறுகிறார்கள்.
ராகுல் என்பவர், தனது குடும்ப உறுப்பினரான ஜோகிந்தரைச் சந்திக்க முடியாமல் அவதியுற்றார்.
ஜோகிந்தரைப் பற்றி விவரித்த அவர், "ஜோகிந்தர் ஒரு டாக்ஸி ஓட்டுநர். அன்று மாலை தனது சகோதரிக்கு போன் செய்து, 'உடல்நிலை சரியில்லை, ஏதோ நடந்துவிட்டது' என்று கூறினார். அதன்பிறகு, குடும்பத்தினர் யாரும் அவரைச் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை," என்றார்.
'மருத்துவமனை நிர்வாகம் எங்களை அனுமதிக்கவில்லை'

காயமடைந்தவர்களில் சஃபான் என்பவரும் ஒருவர். அவரைச் சந்திக்க காத்திருந்த அவரது மாமா தாஜுதீன் எங்களிடம், "அவருக்கு 17 வயது. கார் வெடித்த போது சம்பவ இடத்திலிருந்து சில நூறு மீட்டர் தொலைவில் மின்சார ரிக்ஷாவில் அவர் கடந்து சென்று கொண்டிருந்தார். அவருக்கு காயம் ஏற்பட்டு ஒரு காதில் கேட்கும் திறன் போய்விட்டது" என்று கூறினார்.
மருத்துவமனை நிர்வாகம் காயமடைந்தவர்களைச் சந்திக்க எந்த குடும்ப உறுப்பினரையும் அனுமதிக்கவில்லை என்று அவர் கூறுகிறார்.
அனைத்து நோயாளிகளுக்கும் முறையாக சிகிச்சை அளிக்கப்படும் வரை பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க யாரையும் அனுமதிக்க முடியாது என்று மருத்துவமனை நிர்வாகம் கூறுவதாக தாஜுதீன் கூறுகிறார்.
"காயமடைந்த தங்களது உறவினர்களைச் சந்திக்க எங்களைப் போலவே மற்றவர்களும் காத்திருக்கிறார்கள்" என்று மருத்துவமனையின் உள்ளேயும், அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வெளியேயும் நிலவிய சூழ்நிலையை தாஜுதீன் விவரித்தார்.
'என் சகோதரனை பற்றி செய்திகளில் பார்த்தேன்'

அப்போது நேரம் இரவு 11.30 ஆகிவிட்டது.
ஒருவழியாக நாங்கள் மருத்துவமனைக்குள் நுழைந்தோம். அவசர சிகிச்சைப் பிரிவுக்கு முன்பு குழப்பமும் பரபரப்பும் நிலவியது.
பூர்ணிமா ஜெய்ஸ்வால் என்ற பெண் கதறி அழுது கொண்டிருந்தார். சில நிமிடங்களுக்கு முன்பு, காயமடைந்த தனது சகோதரரை ஸ்ட்ரெச்சரில் வைத்து வார்டுக்குள் அழைத்துச் செல்லப்படுவதை அவர் பார்த்திருந்தார்.
"நாங்கள் அவரை முதலில் செய்திகளில் பார்த்தோம். உள்துறை அமைச்சர் அமித் ஷா அவரைச் சந்தித்து கொண்டிருந்தார். அவர் காயமடைந்திருந்தார். அதை பார்த்தவுடனே நாங்கள் உடனே மருத்துவமனைக்குச் சென்றோம். அப்போது அவர் மிக மோசமான நிலையில் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டதைப் பார்த்தோம். அவரது மூக்கில் கட்டு போடப்பட்டிருந்தது. கைகளிலும் முகத்திலும் பலத்த காயங்கள் இருந்தன"என்று அவர் கூறுகிறார்.
அப்போது இன்னொரு பெண்ணின் அழுகைச் சத்தம் கேட்டது.
ஒரு பெண் வார்டில் இருந்து வெளியே வருவதைக் கண்டோம். கார் வெடிப்புச் சம்பவத்தில் அவர் தனது சகோதரனை இழந்திருந்தார்.
அந்தப் பெண்ணின் சகோதரருடைய பெயர் மொஹ்சின் மாலிக்.
அவர் செங்கோட்டை பகுதியில் இ-ரிக்ஷா ஓட்டி வந்தார். அவருடைய சகோதரியை ஆறுதல்படுத்த முயன்ற நபர், மொஹ்சினுக்கு 28 வயது என்றும் அவருக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் எங்களிடம் கூறினார். அவர் இப்போது உயிருடன் இல்லை என்று மருத்துவமனை நிர்வாகம் அவரது குடும்பத்தினருக்குத் தெரிவித்துள்ளது.
அதற்கு அருகிலேயே, நாங்கள் சிலரைச் சந்தித்தோம். அவர்களது உறவினர்கள் சாந்தினி சௌக் பகுதியில் வசித்து வந்தனர். சம்பவம் நடந்ததிலிருந்து அவர்களின் தொலைபேசிகள் அணைக்கப்பட்டுள்ளன.
அவர்களைக் குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடமோ அல்லது காவல்துறையிடமோ எந்த தகவலும் இல்லை.
"உறவினர்களைத் தேடி மருத்துவமனைக்கு வந்தேன்"

சந்தீப் எனும் நபர், தனது மைத்துனர் லோகேஷைத் தேடி அலைந்து கொண்டிருந்தார்.
இரண்டு மணி நேரமாக அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வெளியே அமர்ந்திருந்த அவர், தனது மைத்துனர் லோகேஷைப் பற்றி தெரிந்துகொள்ள முயற்சித்துக் கொண்டிருந்தார்.
"சம்பவம் நடந்த நேரத்தில், அவர் சாந்தினியில் ஓட்டுநருக்காகக் காத்திருந்தார். அவருடன் எங்கோ செல்ல திட்டமிட்டிருந்தார். கார் வெடித்த செய்தி வந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, ஓட்டுநரும் இறந்தவர்களில் ஒருவர் என்பதை நாங்கள் அறிந்தோம். ஆனால் எங்கள் மைத்துனர் பற்றிய எந்த செய்தியும் இல்லை. நாங்கள் அவருக்கு போன் செய்தோம், ஆனால் தொலைபேசி காவல்துறையிடம் இருந்தது. சம்பவ இடத்தில் தொலைபேசியைக் கண்டுபிடித்ததாக போலீசார் தெரிவித்தனர், ஆனால் மைத்துனரைப் பற்றி அவர்களிடம் எந்த தகவலும் இல்லை. போலீசார் எங்களை இந்த மருத்துவமனையில் விசாரிக்கச் சொன்னார்கள். நான் இரண்டு மணி நேரமாக இங்கே இருக்கிறேன், ஆனால் இங்கு யாருக்கும் எந்த தகவலும் தெரியவில்லை" என்றார்.
எங்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது, வார்டுக்கு வெளியே இருந்த மருத்துவமனை ஊழியர்கள் சந்தீப்பிடம், "நான்காவது வாயிலுக்குச் செல்லுங்கள், அங்கே சில தகவல்கள் கிடைக்கலாம்" என்று கூறினர்.
நாங்கள் கடைசியாக அதிகாலை 2.30 மணியளவில் அவருடன் பேசினோம். அப்போது அவர் மருத்துவமனையின் பிணவறைக்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அங்கு மருத்துவமனை ஊழியர்கள் அவரிடம் ஓர் உடலை அடையாளம் காணச் சொல்லியிருந்தனர்.
அதிகாலை 2 மணியளவில் மருத்துவமனையின் பொது தொடர்பு அதிகாரியை (PRO) மீண்டும் தொடர்பு கொள்ள முயன்றோம், ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












