"யுக்ரேனுக்கு நல்ல பாதுகாப்பை கொடுப்போம்" - ஜெலன்ஸ்கியை சந்தித்த பின் டிரம்ப் அறிவிப்பு

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற டிரம்ப், ஜெலன்ஸ்கி சந்திப்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வெள்ளை மாளிகையில் நடைபெற்ற டிரம்ப், ஜெலன்ஸ்கி சந்திப்பு

வெள்ளை மாளிகையில் யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கியை வாயிலுக்கு வந்து அதிபர் டிரம்ப் வரவேற்றார். சிறிய உரையாடலுக்குப் பின்னர், இரு தலைவர்களும் செய்தியாளர்களை சந்தித்த போது , அவர்களிடம் கேள்விகள் முன் வைக்கப்பட்டன.

அப்போது, யுக்ரேனுக்கு பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்குவீர்களா? என டிரம்பிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த டிரம்ப் "அது தற்போது வரையிலும் விவாதிக்கப்படவில்லை. ஆனாலும் நல்ல பாதுகாப்பை வழங்குவோம் " என கூறினார்.

டிரம்ப் - ஜெலன்ஸ்கி சந்திப்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வெள்ளை மாளிகையின் ஜெலன்ஸ்கியை வரவேற்கும் டிரம்ப்

யுக்ரேனுக்கு அமைதி காக்கும் படைகள் அனுப்பப்படுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், "யுக்ரேன் மட்டுமின்றி அனைவருடனும் இணைந்து பணியாற்றுவோம், நீடித்த அமைதி நிலவுவதை உறுதி செய்வோம்" என்று கூறினார்.

நீடித்த அமைதிக்கு போர் நிறுத்தம் தேவையில்லை என்று கூறிய டிரம்ப், அப்படி போர் நிறுத்தம் ஏற்பட்டாலும் நன்றாக இருக்கும் என்றார்.

ஜெலன்ஸ்கிக்கு சுமாரான வரவேற்பு

அதிகாலையில் வாஷிங்டன் சென்றடைந்த ஜெலன்ஸ்கி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அதிகாலையில் வாஷிங்டன் சென்றடைந்த ஜெலன்ஸ்கி

வாஷிங்டன் டிசிக்கு வோலோடிமிர் ஜெலென்ஸ்கி சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்க்கும்போது, அலாஸ்காவில் விளாடிமிர் புதினுக்குக் கொடுக்கப்பட்ட வரவேற்புடன் ஒப்பிடும்போது ஜெலென்ஸ்கிக்கான வரவேற்பு மட்டுப்பட்டதாக இருப்பதாகவே தோன்றுகிறது என பிபிசி ரஷ்ய செய்தியாளர் லிஸா ஃபோக் எழுதுகிறார்.

மூன்று நாட்களுக்கு முன்பு, தனது விமானத்தில் இருந்து இறங்கிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்து டொனால்ட் டிரம்ப் நேரில் வரவேற்றார். இந்த வரவேற்பின்போது, அமெரிக்க போர் விமானங்கள் வானில் பறந்தன. இந்தக் காட்சி உலகம் முழுவதும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

ஆனால், இதற்கு நேர்மாறாக, ஜெலென்ஸ்கி விடியற்காலை நேரத்தில் வாஷிங்டனுக்கு வந்தபோது, அவருக்கான வரவேற்பு ஒப்பீட்டளவில் மட்டுப்பட்டதாகவே இருந்தது.

ஆனால், தனக்கு ஆடம்பரமாக வரவேற்பளிக்கவில்லை என்பதைப் பற்றி யுக்ரேன் அதிபர் பெரிதாக கவலைப்படவில்லை என்றாலும், யுக்ரேனில் போரை முடிவுக்கு வர வேண்டும் என்பதில் வெள்ளை மாளிகை புதினின் பக்கம் சாய்ந்து விடுமா என்பது பற்றியே அதிக கவலைப்படுகிறார்.

டிரம்புடனான இன்றைய சந்திப்பு ஜெலென்ஸ்கியின் அரசியல் வாழ்க்கையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

புதினுடனான தனது உச்சிமாநாடு குறித்து திருப்தியுடன் பேசிய அமெரிக்க அதிபரை, அமெரிக்க ஆதரவைப் பெற, ரஷ்யாவை விட யுக்ரேனே அதிக தகுதியானது என்று நம்ப வைப்பதே ஜெலென்ஸ்கியின் குறிக்கோளாக இருக்கும்.

"எங்களுக்கு அமைதி தேவை"

ஜெலன்ஸ்கி

பட மூலாதாரம், Getty Images

வெள்ளை மாளிகையில் இன்று அதிபர் டிரம்ப்பை சந்திக்கும் முன்னதாக செய்தியறிக்கை ஒன்றை ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ளார்.

இதன்படி "நம்பகத்தன்மையுடைய, நீடிக்கும் அமைதியே யுக்ரேன் மற்றும் ஐரோப்பிய யூனியனின் நோக்கம்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த செய்தியில் "நாம் கொலைகளை நிறுத்த வேண்டும், நம்பகமான கண்ணியமான அமைதியை நோக்கமாகக் கொண்டு பணியாற்றியதற்காக எங்களின் கூட்டாளிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதிபர் டிரம்ப் உடனான சந்திப்பக்கு முன்னதாக ஃபின்லாந்து, பிரிட்டன், இத்தாலி, ஐரோப்பிய யூனியன் மற்றும் நேட்டோ பொதுச்செயாலளர் ஆகிய தலைவர்களுடன் இணைந்து எங்களின் நிலைப்பாட்டை ஒருங்கிணைத்தோம்,. உண்மையான போர் நிறுத்தத்திற்கும்,புதிய பாதுகாப்பு கட்டமைப்பை நிறுவுவதற்கும் யுக்ரேன் தயாராக உள்ளது. எங்களுக்கு அமைதி தேவை" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒடேசாவில் ரஷ்யாவின் தாக்குதலால் சேதமடைந்த வீடு

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, ஒடேசாவில் ரஷ்யாவின் தாக்குதலால் சேதமடைந்த வீடு

"ஒரு பக்கம் பேச்சுவார்த்தை, மறு பக்கம் தாக்குதல்"

முன்னதாக, யுக்ரேன் மீதான ரஷ்ய தாக்குதல்கள், வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பை சந்திப்பதற்கு முன்பான புதினின் "இழிவான நடவடிக்கை" என ஜெலன்ஸ்கி சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்தார்.வாஷிங்டனில் இன்று பேச்சுவார்த்தை நடக்கும் நிலையில், யுக்ரேனின் மீது ரஷ்யாவின் தாக்குதல் தொடருவதாக ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில்," போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான கூட்டம் இன்று வாஷிங்டனில் நடைபெறுவதை அறிந்திருந்த போதும், இன்று காலை கார்கிவ், ஜபோரிஷியா, சுமி மற்றும் ஒடேசா பகுதிகளை ரஷ்யா தாக்கியுள்ளது" என்று குற்றம் சாட்டியுள்ளார்.

கார்கிவ் நகரில் பொதுமக்கள் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் தாக்குதல் நடந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள ஜெலன்ஸ்கி , "இது அப்பட்டமான இழிவான தாக்குதல்" என்று குற்றம் சாட்டியுள்ளதோடு, இது ரஷ்யாவுக்கு வெகுமதி அளிக்கக்கூடாது என்பதற்கான உதாரணம் என குறிப்பிடுகிறார்.

"ரஷ்ய போர் எந்திரம் எல்லாவற்றையும் மீறி உயிர்களை அழித்து வருகிறது. யுக்ரேன் மற்றும் ஐரோப்பா மீது அழுத்தத்தைத் தக்கவைக்கவும், இராஜதந்திர முயற்சிகளை அவமானப்படுத்தவும் புதின் கொலைகளைச் செய்வார்" என்று ஜெலன்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

"கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நாங்கள் உதவியை நாடுகிறோம். அதனால்தான் நம்பகமான பாதுகாப்பு உத்தரவாதங்கள் தேவை. அதனால்தான் இந்தப் போரில் பங்கேற்றதற்காக ரஷ்யாவுக்கு வெகுமதி அளிக்கப்படக்கூடாது." என்றும் அவர் எழுதியுள்ளார்.

''Stop என்ற வார்த்தையை காது கொடுத்து கேட்க வேண்டியது ரஷ்யா தான்'' - கொந்தளித்த ஜெலன்ஸ்கி
படக்குறிப்பு, ''Stop என்ற வார்த்தையை காது கொடுத்து கேட்க வேண்டியது ரஷ்யா தான்'' - கொந்தளித்த ஜெலன்ஸ்கி

வெள்ளை மாளிகைக்கு பெருநாள்

ஐரோப்பிய தலைவர்களின் வருகையால் இன்று வெள்ளை மாளிகைக்கு மிகப்பெரிய நாள் என, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இது அமெரிக்காவுக்கு மிகப்பெரிய கவுரவம் என்றும், இதன் விளைவுகள் என்ன என்பதைப் பார்க்கலாம் எனவும் ட்ரம்ப் தமது ட்ரூத் சோஷியல் வலைத்தள பதிவில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பிரிட்டன் பிரதமர் கீயர் ஸ்டாமர், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, ஜெர்மனியின் ஆட்சி மன்றத் தலைவர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் மற்றும் நேட்டோ தலைவர் ஆகியோரும் யுக்ரேனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் டிரம்பை சந்திக்கவுள்ளனர்.

தான் விரும்பிய உடனேயே ஜெலன்ஸ்கியால் இந்த போரை நிறுத்த முடியும் என, டிரம்ப் ட்ரூத் சோஷியல் சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டிருந்தார். ஆனால், யுக்ரேன் நேட்டோவில் இணைய அனுமதிக்கப்பட மாட்டாது என, பிபிசி செய்தியாளர் ஃப்ராங்க் கார்ட்னெர் தன்னுடைய கட்டுரையில் எழுதியுள்ளார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பிரிட்டன் பிரதமர் கூறியது என்ன?

பிரிட்டன் பிரதமர் அலுவலகத்தின் கூற்றுப்படி, கியர் ஸ்டாமர் இந்திய நேரப்படி இரவு 8.40 மணிக்கு வாஷிங்டன் சென்றடைகிறார்.

பிரதமரின் விமானப் பயணித்தின் போது பதிவு செய்யப்பட்ட வீடியோ ஒன்று எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் பேசியுள்ள ஸ்டாமர் ,"யுக்ரேனியர்கள் மட்டுமின்றி அனைவருமே இந்த போரை முடிவுக்கு கொண்டு வர விரும்புகின்றனர்" எனக்கூறியுள்ளார்.

"பிரிட்டனின் நலனுக்காகவே இதனை நாங்கள் சரிசெய்ய விரும்புகிறோம்" என்றும் கியர் ஸ்டாமர் கூறியுள்ளார்.

டொன்பாஸை ஒப்படைக்க கூறினால் ?

போர்க்களத்தில் முன்னணியில் உள்ள மற்ற பகுதிகளில் கட்டுப்பாட்டு கோட்டை தற்போதைய நிலையிலேயே இருக்கச் செய்வதற்கு ஈடாக, ரஷ்யாவுக்கு டொன்பாஸை—லுஹான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் ஆகிய பகுதிகளை—அதிபர் ஜெலன்ஸ்கி விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கலாம் என்பதை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து யுக்ரேனியர்களிடம் பிபிசியின் சர்வதேச செய்தியாளர் ஜோயல் கண்டர் கேட்டுவருகிறார்.

டான்பாஸ் என்று ஒன்றாக அழைக்கப்படும் லுஹான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் பகுதிகளை ஒப்படைப்பது ஒரு "துயரம்" என்று யுக்ரேன் வரலாற்றாசிரியர் யரோஸ்லாவ் ஹிரிட்சாக் கூறுகிறார்.

இந்த பகுதிகளில் கனிமங்கள், தொழில்கள் அதிகமாக இருப்பதுடன் "புகழ்பெற்ற அரசியல்வாதிகள், கவிஞர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களை" உருவாக்கியவை என்று அவர் கூறுகிறார்.

"இந்த பகுதிகளின் மக்கள்—குறிப்பாக சுரங்கத் தொழிலாளர்கள்—யுக்ரேன் அடையாளத்தை வலுப்படுத்துவதில் பெரும் பங்கு வகித்தனர்," என்று ஹிரிட்சாக் கூறினார்.

"இந்தப் போரை நான் கிலோமீட்டர்களில் அளவிடவில்லை, மனித உயிர்களில் அளவிடுகிறேன்," என்று டொனெட்ஸ்க் நகரமான கிரமாடோர்ஸ்கில் அவசர மீட்புப் பணியாளராக பணியாற்றும் 56 வயது யெவ்ஹென் ட்காச்சோவ் கூறுகிறார்.

"பல ஆயிரம் சதுர கிலோமீட்டர்களுக்காக பல்லாயிரக்கணக்கான உயிர்களை விட்டுக்கொடுக்க நான் தயாரில்லை," என்று அவர் கூறினார்.

"அதிபர் ஜெலென்ஸ்கி எதிரில் எந்த நல்ல பாதை எதுவும் இல்லாத ஒரு கவலையளிக்கும் சந்திப்பில் நிற்கிறார், " என்று எதிர்க்கட்சியான ஐரோப்பிய ஒற்றுமை கட்சியைச் சேர்ந்த யுக்ரேன் நாடாளுமன்ற உறுப்பினர் வோலோட்மிர் ஆரியேவ் கூறுகிறார்.

"போரை வரம்பற்ற காலத்திற்கு தொடர போதுமான படைகள் நம்மிடம் இல்லை," என்று ஆரியேவ் கூறினார். "ஆனால், ஜெலன்ஸ்கி இந்த நிலத்தை விட்டுக்கொடுத்தால், அது எங்கள் அரசியலமைப்பின் நிலைகுலைவாக மட்டுமல்லாமல், தேசத்துரோகத்தின் அடையாளங்களைக் கொண்டிருக்கலாம்."

எப்போது நடைபெறும்?

13:00 EST நேரப்படி (இந்திய நேரப்படி இரவு 10:30 மணி ) ஜெலன்ஸ்கி - டிரம்ப் சந்திப்பு இருக்கும் என்றும் அதற்கு இரண்டு மணிநேரம் கழித்து ஐரோப்பிய தலைவர்களுடனான டிரம்பின் சந்திப்பு இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதம் ஜெலன்ஸ்கி - டிரம்ப் இருவருக்கும் இடையே வெள்ளை மாளிகையில் காரசார விவாதம் நடைபெற்றது.

அமெரிக்க அதிபர் அலுவலகத்தில் நடந்த வாக்குவாதத்துக்கு முன்பே டொனால்ட் டிரம்புக்கும் யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஜெலன்ஸ்கிக்கும் இடையிலான உறவு மிகவும் மோசமாக இருந்தது.

அதற்கு முன்பாகவே ஜெலன்ஸ்கியை ஒரு சர்வாதிகாரி என்று அழைத்திருந்த அதிபர் டிரம்ப், "யுக்ரேன் போரைத் தொடங்கியது அவர் தான்" என்றும் கூறியிருந்தார்.

இம்முறை, ஜெலன்ஸ்கி எந்தவொரு விஷயத்துக்கும் எதிர்வினையாற்றுவதற்கு முன்பாக வார்த்தைகளை கவனமாக கையாள்வார் என எதிர்பார்க்கப்படுவதாக, இன்றைய சந்திப்பு குறித்து வெள்ளை மாளிகையிலிருந்து செய்தி சேகரித்து வரும் பிபிசி செய்தியாளர் பெர்ன்ட் டெபுஸ்மன் ஜூனியர். கடந்த முறை நிகழ்ந்தது போன்ற சூழலை ஜெலன்ஸ்கி தவிர்க்க வேண்டும் என, அவருக்கு எச்சரிக்கப்பட்டிருக்கலாம் என டெபுஸ்மன் குறிப்பிடுகிறார்.

(இது சமீபத்திய செய்தி புதுப்பிக்கப்பட்டு வருகிறது)

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு