பொள்ளாச்சியின் 7 பிரபல சூட்டிங் ஸ்பாட்கள் இப்போது எப்படி உள்ளன?

- எழுதியவர், சேவியர் செல்வக்குமார்
- பதவி, பிபிசி தமிழ்
'''கட்டை வண்டி கட்டை வண்டி' பாட்டை இங்கேதான் எடுத்தார்கள். அப்போ கமலுக்கு சின்ன வயசு... 'கண்ணுபடப் போகுதய்யா சின்னக்கவுண்டரே' பாட்டு எடுத்தபோது விஜயகாந்தை பார்த்தோம். மனோரமா எங்க வீட்டுத் திண்ணையில வந்து உட்கார்ந்து சென்றிருக்கிறார். எல்லா நடிகரையும் பார்த்தோம். இப்போ யாரும் வருவதில்லை. ஏன் என்று தெரியவில்லை'' என்கிறார் சேத்துமடையைச் சேர்ந்த லட்சுமி.
அவர் மட்டுமல்ல, பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமத்து மக்களுக்கும் தமிழ், மலையாளம் சினிமா நடிகர்களை அருகிலே பார்த்த, பேசிய, படமெடுத்த அனுபவங்கள் இருக்கும்.
கால் நூற்றாண்டுக்கு முன்பு வரை 'மினி கோடம்பாக்கம்' என்று பெயர் பெறும் அளவுக்கு பொள்ளாச்சியில் ஒரே நேரத்தில் ஏராளமான படப்பிடிப்புகள் நடந்து வந்தன.
சமீபத்திய ஆண்டுகளாக படப்பிடிப்புகள் பெருமளவில் குறைந்துவிட்டன. ஆனாலும் அந்த இடங்கள் சுற்றுலா மையங்களாக மாறியுள்ளன.
கிராமத்துக் கதைகள் குறைந்து, நகரமயமாக்கல் தமிழ்ச் சினிமாவில் பிரதிபலிப்பதே, பொள்ளாச்சியில் படப்பிடிப்புகள் குறைந்ததற்கு காரணமென்று திரைத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
காதலிக்க நேரமில்லை முதல் கலகலப்பு வரை!
பொள்ளாச்சி, உடுமலை, வால்பாறை, தேனி, கம்பம், கோபிச்செட்டிபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், கால் நூற்றாண்டுக்கு முன்பு வரை ஏராளமான படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
அவற்றிலும் பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலை, அணைகள், ஆறுகள், வயல்வெளிகள், தென்னை மற்றும் பாக்கு தோப்புகள், பழமையான பண்ணை வீடுகள் ஆகியவை அதிகமிருப்பதால், ஒரு படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் இங்கு நடந்ததுண்டு. வண்ணப்படங்கள் எடுக்கத் தொடங்கிய காலத்திலேயே, பொள்ளாச்சியில் படப்பிடிப்புகள் நடந்ததுண்டு.
இதுபோல பொள்ளாச்சி, உடுமலை பகுதிகளில் ஏராளமான சூட்டிங் ஸ்பாட்கள் இருக்கின்றன. இத்தகைய சில இடங்களைப் பார்ப்போம்...

1. ஆழியாறு அணை
பரம்பிக்குளம் –ஆழியாறு பாசனத்திட்டத்தில் முதல் அணையாக 1962 ஆம் ஆண்டில் ஆழியாறு அணையை அன்றைய பிரதமர் நேரு திறந்து வைத்தார்.
அதற்கு அடுத்த ஆண்டிலேயே இயக்குநர் ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை படம் ஆழியாறு அணை பொதுப்பணித்துறை ஓய்வு விடுதியில் படமாக்கப்பட்டது. அந்தப் படத்தில் வரும் 'விஸ்வநாதன் வேலை வேணும்' பாடலில் அணையின் அழகு பதிவாகியிருக்கும்.
''சுயேச்சை வேட்பாளர் நாகராஜசோழன் 1500 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார்!''
அமைதிப்படை படத்தில் சத்யராஜ் தேர்தலில் வெற்றிப்பெறும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடமும் ஆழியாறு அணை ஓய்வு விடுதிதான்.
மெளனம் சம்மதம் படத்தில் மம்முட்டி–அமலா பேசும் காட்சிகள், 'கல்யாணத் தேனிலா காய்ச்சாத பால்நிலா' பாடலும் ஆழியாறு அணைப்பகுதியில்தான் படமாக்கப்பட்டிருக்கும்.
காதலுக்கு மரியாதை படத்தில் விஜய் பைக் ஓட்டிக்கொண்டு, 'ஓ பேபி பேபி என் தேவதேவி' என்று பாடுவதும் இந்த அணைக்கரையிலுள்ள ஒற்றையடிப்பாதையில்தான்.
இந்த அணைக்கும், அதையொட்டியுள்ள பூங்காவுக்கும் விடுமுறை நாட்களில் ஏராளமான கூட்டம் வருகிறது. பொள்ளாச்சியிலிருந்து 25 கி.மீ. துாரத்திலும், கோவையிலிருந்து 60 கி.மீ. துாரத்திலும் இந்த அணை அமைந்துள்ளது. இதற்கு அருகிலேயே குரங்கு அருவியும் இருக்கிறது.
2. திருமூர்த்தி மலை மற்றும் அணை

கோவையிலிருந்து சுமார் 75 கி.மீ. துாரத்திலும், உடுமலையிலிருந்து 20 கி.மீ. துாரத்திலும் உள்ளது திருமூர்த்தி மலை.
ஆழியாறு அணையைப் போலவே, திருமூர்த்தி அணையும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியே அமைந்துள்ளது. ஆழியாறு அணையை விட திருமூர்த்தி அணைப்பகுதியில் அதிகமான படப்பிடிப்புகள் நடந்திருக்கின்றன.
அணையில் நீர் வற்றிய காலங்களில் நீளமான மணற்பரப்பும், அணையை ஒட்டி அமைந்துள்ள பஞ்சலிங்க அருவியும், அது கடந்து வரும் இடத்திலுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலும் இந்த இடத்தை பன்முகத்தன்மையுள்ள ஒரு சுற்றுலா மையமாக மாற்றியிருக்கிறது.
வடகிழக்குப் பருவமழை காலங்களில் இந்த அணை நிரம்பியிருக்கும் போது படப்பிடிப்புகள் நடப்பதில்லை.
அணையில் இருக்கும் புல்வெளியில்தான் காதலுக்கு மரியாதை படத்தின் ''என்னைத் தாலாட்ட வருவாளா' பாடல் காட்சி படமாக்கப்பட்டது.
பொன்னியின் செல்வன் படத்தின் இரு பாகங்களிலும் இந்த அணை இடம் பெற்றிருக்கும், கார்த்தியின் குதிரையேற்ற காட்சிகளும், 'பொன்னி நதி' பாடலில் கார்த்தி நீரை அள்ளும் காட்சியும், இரண்டாம் பாகத்தில் சிறு வயது ஐஸ்வர்யாவாக 'பேபி' சாரா வரும் காட்சிகளும் இங்கே எடுக்கப்பட்டவைதான்.
இவற்றைத் தவிர்த்து நிறைய படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த இடமும் தற்போது முக்கிய சுற்றுலா மையமாக மாறியிருக்கிறது.
3. கேகே புதுார் தரைப்பாலம் – வின்னர் ஃபால்ஸ்

பொள்ளாச்சி அம்பராம்பாளையம் பகுதிக்கு அருகில் ஓடும் ஆழியாறு ஆற்றின் நடுவில் இருக்கிறது கேகே புதுார் தரைப்பாலம்.
கவுண்டமணி – செந்தில் நடித்த பல காமெடி காட்சிகள் அப்பகுதியில் படமாக்கப்பட்டதை கிராமவாசிகள் நினைவுகூர்கிறார்கள்.
சமீபத்தில் வந்த கலகலப்பு படத்தில் சில காட்சிகள் இந்த தரைப்பாலம் பகுதியில்தான் எடுக்கப்பட்டுள்ளன. இதற்கு சற்று தொலைவில்தான் 'வின்னர்' படத்தில் வடிவேல், பிரசாந்த் இடம்பெறும் காமெடி காட்சிகள் படமாக்கப்பட்ட சிறிய தடுப்பணை உள்ளது.
தடுப்பணையிலிருந்து தண்ணீர் வழிந்தோடும் பகுதிக்கு 'வின்னர் ஃபால்ஸ்' என்றே பெயர் வந்துவிட்டது.
4.காளியாபுரம் சாலைச் சோலை

பொள்ளாச்சியிலிருந்து ஆனைமலை செல்லும் வழியில் இருபுறமும் கூடாரம் போல அமைந்திருக்கும் புளியமரங்கள் உள்ள இடத்தின் குளுமையும் அழகும், அவ்வழியில் செல்லும் யாரையும் வாகனத்திலிருந்து இறங்கி நிற்க வைத்துவிடும்.
அதேபோன்று, காளியாபுரம் செல்லும் சாலையிலும் மரங்கள் அடர்ந்து சாலைக்கு கூடாரம் அமைத்திருக்கும். அங்கேயும் நிறைய பயணக்காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.
வானத்தைப்போல, தனுஷ் நடித்த மாப்பிள்ளை, ஆம்பள, சூர்யவம்சம் போன்ற படங்களில் இந்த சாலைகள் இடம்பெற்றிருக்கின்றன என்கிறார், லொகேஷன் உதவியாளர் சஃபீக். சமீபகாலமாக திருமண வீடியோக்கள் எடுக்கும் பலரும் இந்த சாலைகளில் மணமக்களை நிறுத்தி படமெடுப்பது அதிகமாக நடப்பதாகச் சொல்கிறார்கள் காளியாபுரம் பகுதி மக்கள்.
5. சிங்காநல்லுார் பங்களா

பொள்ளாச்சிக்கு அருகிலுள்ள சிங்காநல்லுார் கிராமத்தில் ஊருக்கு நடுவில் இந்த பங்களா அமைந்துள்ளது. சிவாஜியும் கமலும் இணைந்து நடித்த மெகா ஹிட் திரைப்படம் 'தேவர் மகன்' இந்த வீட்டில்தான் படமாக்கப்பட்டது. மற்ற காட்சிகளும் சூலக்கல், சேத்துமடை என பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில்தான் எடுக்கப்பட்டன.
முறை மாப்பிள்ளை, அரண்மனை, ஆம்பள, அன்பறிவு ஆகிய படங்களும் அந்த பங்களாவில்தான் எடுக்கப்பட்டதாகச் சொல்கிறார் லொகேஷன் உதவியாளரும் துணை நடிகருமான சஃபீக். சமீபகாலமாக தமிழ்ப்படங்களின் படப்பிடிப்புகள் குறைந்துவிட்டாலும் இந்த வீட்டில் மலையாளம், இந்தி திரைப்படங்கள் அதிகளவில் எடுக்கப்படுவதாகச் சொல்கிறார் அவர்.
படப்பிடிப்புகள் இல்லாத நாட்களில் பிறந்தநாள், வளைகாப்பு உள்ளிட்ட குடும்ப நிகழ்ச்சிகள் நடத்தவும் வாடகைக்குக் கொடுக்கப்படுகிறது.
6. கிழக்காடு வீடு

தென்னந்தோப்புக்கும், காய்கறித் தோட்டத்துக்கும் நடுவில், மலைகளின் பின்னணியில் ஓட்டுக்கூரையுடன் பிரமாண்டமாக காட்சியளிக்கிறது கிழக்காடு வீடு. பொள்ளாச்சி சேத்துமடை அருகேயுள்ள இந்த கிழக்காடு வீட்டில்தான் பம்பாய், நாட்டாமை, வானத்தைப்போல, சின்னக்கவுண்டர், சூரியவம்சம் உட்பட ஏராளமான படங்களுக்கு மாதக்கணக்கில் படப்பிடிப்பு நடந்துள்ளது.
இதே சேத்துமடை பகுதியில்தான் சகலகலாவல்லவன் படத்தின் 'கட்டை வண்டி கட்டை வண்டி பாடலின்' சூட்டிங் நடந்தது என்று நினைவுகூர்கிறார் லட்சுமி.
இப்போதும் இந்த வீட்டில் நிறைய மலையாளப் படங்களின் படப்பிடிப்புகள் நடப்பதாகச் சொல்கிறார் சஃபீக். மம்முட்டி, மோகன்லால், துல்கர் வரை பலரும் பொள்ளாச்சியில் படப்பிடிப்பு நடப்பதை விரும்புவார்கள் என்கிறார் அவர். பிபிசி தமிழ் அங்கு சென்றிருந்தபோது, மலையாளப் படத்துக்காக அந்த வீட்டை லொகேஷன் பார்க்க ஒரு குழு வந்திருந்தது.
7. டாப்ஸ்லிப்
பொள்ளாச்சி அருகில்தான் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட டாப்ஸ்லிப் வனப்பகுதி உள்ளது.
வனத்துறை அனுமதியுடன் அங்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். அங்குதான் சூரியன் படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் படமாக்கப்பட்டன. வெவ்வேறு மொழிகளின் படப்பிடிப்புகளும் நிறைய நடந்துள்ளன.
சமீபகாலமாக காப்புக்காடு பகுதிகளில் படப்பிடிப்புகளுக்கான கட்டுப்பாடுகள் அதிகம் இருப்பதால் டாப்ஸ்லிப் பகுதியில் படப்பிடிப்புகள் அதிகம் நடப்பதில்லை என்கின்றனர்.
அதேநேரத்தில் சேத்துமடை, காண்டூர் கால்வாய் போன்ற பகுதிகளிலும், பல்வேறு கிராமத்துத் தெருக்களிலும் நிறைய படப்பிடிப்புகள் நடக்கின்றன. இந்த இடங்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அந்த இடங்களில் எடுக்கப்பட்ட காட்சிகளை நினைவு கூர்வது வழக்கமாகவுள்ளது.
'பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்'
''பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கால் நூற்றாண்டுக்கு முன்பு வரையிலும் ஒரே நேரத்தில் ஐந்தாறு தமிழ்ப்படங்களில் படப்பிடிப்புகள் நடந்ததுண்டு. இதை நம்பி ஆயிரத்துக்கும் அதிகமான துணை நடிகர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், டிராவல்ஸ் நடத்துவோர் இருந்துள்ளனர். ஓட்டல் தொழிலும் சினிமா படப்பிடிப்புகளால் நன்றாக நடந்தது'' என்கிறார் லொகேஷன் மேனேஜர் பொள்ளாச்சி ராஜா.
''ஆனால் சமீபத்திய ஆண்டுகளாக படப்பிடிப்புகள் வெகுவாகக் குறைந்துவிட்டன. அதனால் இதை நம்பியுள்ள பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்ச் சினிமாவில் கிராமத்துக் கதையம்சம் கொண்ட படங்கள் வெகுவாகக் குறைந்துவிட்டதுதான் இதற்குக் காரணம்.'' என்கிறார் பொள்ளாச்சி ராஜா.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வயல்வெளிகளாக இருந்த பகுதிகள், தற்போது தென்னை, பாக்குத் தோப்புகளாக மாறிவிட்டதால் பொள்ளாச்சியின் அழகும் மாறிவிட்டதாகச் சொல்கிறார் பொள்ளாச்சி ராஜா.
கடந்த பத்தாண்டுகளில்தான் பொள்ளாச்சிக்கும் தமிழ்த்திரைப்பட உலகுக்குமான தொடர்பு அருகிப் போனது என்கிறார் கதாசிரியரும் நடிகருமான பிரசன்னா பாலச்சந்தர். கடந்த 90களில்தான் பொள்ளாச்சியில் படப்பிடிப்புகள் உச்சநிலையில் இருந்தன என்று கூறும் அவர், அப்போதுதான் கிராமப்புறங்கள் சார்ந்த படங்கள் நிறைய வந்தன என்கிறார்.
''ஆனால் 2000-ஆம் ஆண்டுக்குப் பின்பு நகரமயமாக்கல் வேகமானது. அதன்பின் நகரம் சார்ந்த படங்களே அதிகமானது. சமீபத்திய ஆண்டுகளில் கிராமியப் படங்கள் குறைந்து போயின. ஒன்றிரண்டு படங்கள் வந்தாலும் பாரதிராஜா, உதயகுமார் படங்கள் போல முழுமையான கிராமப் படங்கள் என்று வருவதேயில்லை.'' என்கிறார்.

இப்போதும் பொள்ளாச்சியில் வேறு மொழிப்படங்களின் படப்பிடிப்புகள் அதிகம் நடக்கும் நிலையில், இந்தத் தொழிலை மேலும் மேம்படுத்த ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டி போல இங்கும் அமைக்கலாம் என்று கூறுகிறார் லொகேஷன் மேனேஜர் பொள்ளாச்சி ராஜா.
''பொள்ளாச்சி, உடுமலை, வால்பாறை, உதகை, கொடைக்கானல், கோபிச்செட்டிபாளையம், தேனி உள்ளிட்ட பகுதிகளை மையப்படுத்தி, பொள்ளாச்சியில் இப்படி ஒரு படப்பிடிப்பு நகரத்தை அரசு அல்லது தனியார் அமைக்க முன் வந்தால் தமிழ்ச் சினிமாக்களின் இன்டோர், அவுட்டோர் படப்பிடிப்புகள் அனைத்தையும் ஒரே பகுதியில் எடுக்கலாம். செலவும் குறையும். பலருக்கும் தொழிலும், வேலைவாய்ப்பும் கிடைக்கும்.'' என்கிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












