ஐ-பேக் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனைக்கு மத்தியில் நேரில் வந்த மமதா பானர்ஜி - என்ன நடந்தது?

பட மூலாதாரம், ANI
மேற்கு வங்கத்தில் நேற்று அரங்கேறிய ஒரு பரபரப்பான நிகழ்வில், அரசியல் ஆலோசனை நிறுவனமான ஐ-பேக்கின் தலைவர் பிரதீக் ஜெயினின் கொல்கத்தா இல்லத்தில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துக் கொண்டிருந்த அதே நேரத்தில் முதலமைச்சர் மமதா பானர்ஜி அங்கு சென்றடைந்தார்.
அங்கு சென்ற அவர், தனது கட்சியான திரிணாமுல் காங்கிரஸின் ஹார்ட் டிஸ்க்குகள், ஆவணங்கள் மற்றும் முக்கியமான தரவுகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்ய முயன்றதாக குற்றம் சாட்டினார்.
பிரதீக் ஜெயினைத் தனது கட்சியின் ஐடி பிரிவின் தலைவர் என்று குறிப்பிட்ட மமதா பானர்ஜி, அவரது வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது அரசியல் உள்நோக்கம் கொண்டது மற்றும் அரசியலமைப்பிற்கு எதிரானது என்று கூறினார்.
திரிணாமுல் காங்கிரஸின் ஆவணங்கள் மற்றும் கட்சியின் சட்டப்பேரவை தேர்தல் வேட்பாளர்களின் விவரங்கள் அடங்கிய ஹார்ட் டிஸ்க்குகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக அவர் கூறினார்.
'மேற்கு வங்கத்தில் மறைப்பதற்கு எதுவுமில்லை என்றால், ஒரு முதல்வர் ஏன் அதிகாரப்பூர்வ விசாரணை நடக்கும் இடத்திற்குச் சென்று கோப்புகளை எடுக்க வேண்டும்?' என பாரதிய ஜனதா கேள்வி எழுப்பியுள்ளது.
இந்த நாளை வங்கத்தின் 'கருப்பு தினம்' என்றும் அக்கட்சி வர்ணித்துள்ளது.
மமதா பானர்ஜி என்ன கூறினார்?

பட மூலாதாரம், ANI
அமலாக்கத்துறை அதிகாரிகள் ஹார்ட் டிஸ்க்குகளுடன் பல மொபைல் போன்கள், வேட்பாளர் பட்டியல் மற்றும் கட்சியின் உள் உத்திகள் தொடர்பான ஆவணங்களை எடுக்க முயன்றதாக மமதா பானர்ஜி கூறினார்.
"நான் அவற்றை மீட்டு வந்துவிட்டேன்" என்று அவர் தெரிவித்தார்.
"அமலாக்கத்துறையின் தடயவியல் குழு வந்திருந்தது. அவர்கள் எங்களது ஹார்ட் டிஸ்க்குகள், நிதி ஆவணங்கள் மற்றும் அரசியல் ஆவணங்களை எடுத்துக்கொண்டனர். பாஜகவிடம் பல கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ளன, ஆனால் சிபிஐ அல்லது அமலாக்கத்துறை அவர்களை ஒருபோதும் பிடிக்கவில்லை" என்று முதலமைச்சர் மமதா பானர்ஜி மேலும் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், "இவை அனைத்தும் நடந்து கொண்டிருப்பது எனக்குத் தெரியாது. நான் ஐ-பேக் தலைவர் பிரதீக் ஜெயினைத் தொடர்பு கொண்டேன், ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. பின்னர் தான் அமலாக்கத்துறை அவரது போனைப் பறிமுதல் செய்தது எனக்குத் தெரிந்தது" என்றார்.
"ஐ-பேக் நிறுவனம் எங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிகிறது. இது ஜனநாயகப் படுகொலை இல்லையா?" என மமதா பானர்ஜி கூறினார்.
மேலும் அவர், "உங்களால் (பாரதிய ஜனதா) எங்களை எதிர்த்துப் போராட முடியாவிட்டால் ஏன் வங்கத்திற்கு வருகிறீர்கள்? ஜனநாயக ரீதியாக எங்களை வெல்லுங்கள். ஏஜென்சிகளைப் பயன்படுத்தி எங்களது ஆவணங்கள், எங்களது உத்திகள், எங்களது வாக்காளர்கள், எங்களது தரவுகள் மற்றும் எங்களது வங்கத்தைக் கொள்ளையடிக்கிறீர்கள். இப்படிச் செய்வதன் மூலம் நீங்கள் வெற்றி பெறவிருந்த இடங்கள் பூஜ்ஜியமாகிவிடும்" என்றார்.
"அமித் ஷா வங்கத்தை வெல்ல வேண்டும் என்று நினைத்தால், அவருக்குத் துணிச்சல் இருந்தால் தேர்தல் மூலம் வெற்றி பெற்று வரட்டும்" என்றும் அவர் கூறினார்.
திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் குணால் கோஷ், பாரதிய ஜனதா அமலாக்கத்துறை மூலமாக வங்க தேர்தலில் தங்கள் கட்சியின் தேர்தல் பிரசாரத் திட்டங்களைத் திருட முயல்வதாகக் குற்றம் சாட்டினார்.
வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பாரதிய ஜனதா கட்சி உண்மையான வாக்காளர்களைத் துன்புறுத்தத் தொடங்கியுள்ளது. அனைத்து திரிணாமுல் தொண்டர்களும் வீதியில் இறங்கியதைக் கண்டு, ஓட்டுத் திருட்டு வேலை செய்யாது என்று உணர்ந்த அவர்கள், இப்போது தரவுத் திருட்டில் ஈடுபடுகிறார்கள். இப்போது சோதனை நடத்துகிறார்கள் என்றால் இத்தனை நாட்கள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? இன்று தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், ஐ-பேக் எங்களுக்காக ஆலோசனைப் பணிகளைச் செய்து வருகிறது."
"எங்களது தேர்தல் பிரசாரத் திட்டங்களை திருடும் முயற்சி இது. நாங்கள் எந்த விசாரணைக்கும் எதிரானவர்கள் அல்ல. அவசியமென்றால் இத்தனை நாட்கள் ஏன் சோதனை நடத்தவில்லை, சரியாக தேர்தலுக்கு முன்பாக ஏன் செய்கிறார்கள்? அவர்கள் திரிணாமுல் காங்கிரஸின் திட்டத்தை பாரதிய ஜனதாவிடம் கொடுக்க விரும்புகிறார்கள்" என்றார்.
பாரதிய ஜனதா என்ன கூறியது?

பட மூலாதாரம், ANI
மமதா பானர்ஜியைத் தாக்கிப் பேசிய பாரதிய ஜனதா கட்சி, உண்மையை எப்போதும் மறைக்க முடியாது என்றும், வங்கம் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறது, இந்த முறை பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களிக்கும் என்றும் கூறியுள்ளது.
அக்கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவில், "ஐ-பேக் அலுவலகம் மற்றும் அதன் தலைவர் பிரதீக் ஜெயின் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய பிறகு நடந்தவை, மிகவும் கவலையளிக்கும் கேள்விகளை எழுப்பியுள்ளன."
"ஒரு பதவியில் இருக்கும் முதல்வர்சம்பவ இடத்திற்கு மூச்சிரைக்க ஓடி வந்து, கட்சியின் ஆவணங்களையும் ஹார்ட் டிஸ்க்குகளையும் எடுத்துச் செல்வது என்பது வெறும் நிலைமையைக் கையாள்வதற்கான ஒரு முயற்சி மட்டுமல்ல, இது ஒரு ஆழமான சதியையே சுட்டிக்காட்டுகிறது."
"மேற்கு வங்கத்தில் மறைப்பதற்கு எதுவுமில்லை என்றால், ஒரு முதல்வர் ஏன் அதிகாரப்பூர்வ விசாரணை நடக்கும் இடத்திற்கு ஓடி வந்து கோப்புகளை எடுக்க வேண்டும்? அதுவும் ஒரு தனியார் நிறுவனத்தின் அலுவலகத்திற்கு ஏன் செல்ல வேண்டும்?"
"அந்த ஆவணங்களில் மறைந்திருக்கும் விஷயங்கள் குறித்தும், திரிணாமுல் காங்கிரஸின் அரசியல் பாதுகாப்பில் நடந்து வரும் தேச விரோத மற்றும் ஊழல் நடவடிக்கைகளின் அளவு குறித்தும் பலவற்றை இந்த நடத்தை கூறுகிறது" எனப் பதிவிட்டுள்ளது.
இதற்கிடையில், மேற்கு வங்க பாரதிய ஜனதா கட்சி தலைவரும் எம்.பி-யுமான சமிக் பட்டாச்சார்யா கூறுகையில், "அரசியலமைப்பு பதவியில் இருப்பவர் ஆதாரங்களையும் கோப்புகளையும் பறிப்பதன் மூலம் யாரைக் காப்பாற்ற முயல்கிறார்? நிலக்கரி ஊழல் மற்றும் ஹவாலா வழக்குகளில் தொடர்புடையவர்களைக் காப்பாற்றவே அவர் இதைச் செய்துள்ளார். இது மேற்கு வங்கத்தின் கருப்பு தினமாகும். 2026 தேர்தல்களில் திரிணாமுல் காங்கிரஸை வழி அனுப்ப வங்க மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள்" என்றார்.

பட மூலாதாரம், X/ED
அமலாக்கத்துறை என்ன கூறியது?
அமலாக்கத்துறை இது குறித்து விளக்கமளிக்கையில், எந்தவொரு அரசியல் கட்சியின் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்படவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது.
அமலாக்கத்துறை-யின் கூற்றுப்படி, தேடுதல் நடவடிக்கை அமைதியாக நடந்து கொண்டிருந்தது, ஆனால் பின்னர் மேற்கு வங்க முதல்வர், காவல்துறை மற்றும் மாநில நிர்வாக அதிகாரிகள் வந்த பிறகு, இரண்டு இடங்களிலிருந்து ஆவணங்கள் மற்றும் மின்னணு ஆதாரங்கள் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டன.
இந்த நடவடிக்கை முற்றிலும் ஆதாரங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்றும், இதற்கும் எந்தவொரு அரசியல் கட்சி அல்லது அரசியல் அமைப்பைக் குறிவைப்பதற்கும் தொடர்பில்லை என்றும் அமலாக்கத்துறை தெளிவுபடுத்தியுள்ளது.
எந்தவொரு அரசியல் கட்சியின் அலுவலகத்திலும் தேடுதல் நடத்தப்படவில்லை என்றும் அது கூறியுள்ளது.
இந்தச் சோதனைகளுக்கும் தேர்தலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்றும், இது பணமோசடிக்கு எதிரான வழக்கமான மற்றும் தொடர்ச்சியான நடவடிக்கையின் ஒரு பகுதி என்றும் அந்த முகமை கூறியுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












