வங்கதேசம்: வன்முறையில் சிக்கியுள்ள ஒரு நாடு இந்தியாவுக்கு எத்தகைய சவால்களை முன்வைக்கிறது?

பட மூலாதாரம், ANI
- எழுதியவர், ராஜேஷ் டோப்ரியல்
- பதவி, பிபிசி இந்திக்காக
2024-ஆம் ஆண்டு ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் வங்கதேசத்தில் வெடித்த வன்முறைப் போராட்டங்கள், ஷேக் ஹசீனாவின் அரசாங்கத்தை வீழ்த்தியது மட்டுமல்லாமல், அந்த நாடு உருவான காலத்திலிருந்தே மிகவும் எச்சரிக்கையுடன் பயணித்து வந்த பாதையிலிருந்தும் அதைத் திசை திருப்பியுள்ளது.
அது ஒரு பொருளாதார வளத்தை நோக்கிய பயணமாக இருந்தது.
2020-ஆம் ஆண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை விட வங்கதேசத்தின் வளர்ச்சி வேகமாக இருக்கப் போகிறது என்ற செய்தி பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
ஆனால், ஜூலை 2024-இல் சூழல் தலைகீழாக மாறியது.
1971-ஆம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் குடும்பங்களுக்கு இடஒதுக்கீடு தொடர வேண்டும் என்ற வங்கதேச நீதிமன்றத்தின் முடிவுக்கு எதிராகத் தொடங்கிய இளைஞர் போராட்டம் ஒரு ஆட்சி மாற்றத்திற்கே வித்திட்டது. ஆனாலும், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வங்கதேசம் வன்முறையின் பிடியில் சிக்கித் தவிக்கிறது.
நிலைமை எவ்வளவு மோசமாகியுள்ளது என்பதை வங்கதேச தேசியவாதக் கட்சியின் (BNP) தலைவர் ஒருவரின் கூற்றிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது.
அவர், "நாட்டில் ஜனநாயகத்திற்குப் பதில் ஏன் 'கும்பல் ஆட்சி' வந்துள்ளது?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இப்படியான சூழலில், இவை அனைத்தும் எப்படி நடந்தது? இந்த நிலைமை சீரடையுமா என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன.
கடந்த வியாழக்கிழமை 'இன்குலாப் மஞ்ச்' தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாதி உயிரிழந்த சம்பவம், வங்கதேசத்திற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவை மேலும் சீர்குலைத்துள்ளது. அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றுவிட்டதாக வதந்திகள் பரவி வருகின்றன.
வங்கதேசத்தில் நடந்த தற்போதைய சம்பவங்களைக் கருத்தில் கொண்டு, நிலைமை விரைவில் சீரடைய வாய்ப்புள்ளதா என்பதைப் புரிந்து கொள்ள பிபிசி ஹிந்தி சில நிபுணர்களுடன் உரையாடியது.
பொருளாதார நிலைமை மோசம்

பட மூலாதாரம், Getty Images
வங்கதேசத்தின் தற்போதைய சூழல் குறித்து தெற்காசியப் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் தனஞ்சய் திரிபாதி கூறுகையில், "ஷேக் ஹசீனா அரசாங்கம் அகற்றப்பட்டதில் இருந்து வங்கதேசத்தின் நிலைமை மோசமடைந்துள்ளது. அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் இல்லை, அராஜகம் நிலவுகிறது. இடைக்கால அரசாங்கம் எதையும் செய்யவில்லை. ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய பிறகு, அங்கு வன்முறையும், திட்டமிட்டத் தாக்குதல்களும் அதிகரித்துள்ளன. இதனால் அந்நாட்டின் பொருளாதார நிலை மிகவும் சீர்குலைந்துள்ளது"என்றார்.
"ஆனால், ஷேக் ஹசீனா ஆட்சிக் காலத்தில் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருந்தது என்று கூறிவிட முடியாது. மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) அதிகரித்தது உண்மைதான், ஆனால் அது உண்மையான பொருளாதார மேம்பாடாக மாறவில்லை. பொருளாதார சமத்துவமின்மை குறித்து அங்கு பல கேள்விகள் எழுப்பப்பட்டன" என்று பேராசிரியர் திரிபாதி கூறுகிறார்.
தொடர்ந்து பேசிய அவர், "இருப்பினும், அப்போது ஒரு கட்டமைப்பு இருந்தது. ஆனால் தற்போது வெளிநாட்டு முதலீடுகள் குறைந்துவிட்டன. குழப்பமான சூழல் நிலவும் போது பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படுவது இயல்பானது தான்" என்றும் குறிப்பிட்டார்.
அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷனின் ஆய்வு மற்றும் வெளியுறவுக் கொள்கைத் துறை துணைத் தலைவர் பேராசிரியர் ஹர்ஷ் வி பந்த் கூறுகையில், "ஷேக் ஹசீனா அரசாங்கத்தை அகற்ற வேண்டுமானால், அது ஜனநாயக ரீதியாக செய்யப்பட வேண்டும் என்று இந்தியா ஆரம்பத்திலிருந்தே கூறி வருகிறது. கடந்த ஆண்டு வங்கதேச வீதிகளில் நாம் கண்ட ஆவேசமான கும்பல்களின் வன்முறையிலிருந்து அந்த நாடு இன்னும் மீளவில்லை"என்றார்.
"முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு, கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு, இளைஞர் நலன் போன்ற உண்மையான பிரச்னைகளில் என்ன முன்னேற்றத்தைக் கண்டுள்ளது?அப்படி என்னால் எதையும் பார்க்க முடியவில்லை" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடிப்படைவாதிகள் ஆதிக்கம்
ஷேக் ஹசீனாவை எதிர்த்தவர்களும், அவர் சென்றால் நாடு ஒரு புதிய திசையில் பயணிக்கும் என்று நம்பியவர்களும் தற்போது ஏமாற்றமடைந்து வருகின்றனர் என்கிறார் பேராசிரியர் திரிபாதி.
"ஜனநாயகத்தில் அதிகாரத்தை அரசியலமைப்பு ரீதியாக மாற்றாமல், ஒரு கும்பலிடம் ஒப்படைத்தால், இன்று வங்கதேசத்தில் நடப்பதுதான் நடக்கும். இது இந்தியாவுக்கு முன்பாக, வங்கதேசத்திற்குத் தான் கவலைக்குரிய விஷயம்" என்று திரிபாதி கூறுகிறார்.
"வங்கதேசத்தில் எப்போதும் இந்தியாவுக்கு எதிரான ஒரு பிரிவு இருந்து வருகிறது, ஆனால் ஷேக் ஹசீனாவின் இருப்பால் அது செல்வாக்கு மிக்கதாக மாற முடியாமல் இருந்தது. இப்போது அது செல்வாக்கு மிக்க நிலையில் உள்ளது. வங்கதேசத்தில் உள்ள இந்திய எதிர்ப்பு சக்திகளும் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இருந்தன. ஏனெனில் ஹசீனா இந்தியாவை நோக்கி சாய்ந்திருப்பதாக அவர்கள் நம்பினர். ஹசீனாவை அகற்றுவதிலும் அதே சக்திகள் முன்னணியில் இருந்தன. அதே சக்திகள் இப்போது அங்கு ஆதிக்கம் செலுத்தும் அரசியல் சக்தியாக உள்ளன" என்று அவர் விளக்குகிறார்.
இதுகுறித்து பேராசிரியர் பந்த் கூறுகையில், "தற்போதைய சூழ்நிலை என்னவென்றால், வங்கதேசம் அடிப்படைவாதத்தை நோக்கி அழைத்துச் செல்லப்படுகிறது அல்லது அடிப்படைவாதக் கட்சிகள் அங்கு ஆதிக்கம் செலுத்துகின்றன அல்லது அங்கு அராஜகம் நிலவுகிறது. ஜனநாயக அமைப்புகள் சரிந்துவிட்டன, யாரும் எதையும் செய்ய விரும்பவில்லை. முன்பு, என்ன நடந்தாலும் அது இந்தியாவால் நடக்கிறது என்று மக்கள் கூறினர். ஆனால் இப்போது என்ன நடந்தாலும், அதற்கு வங்கதேசம் மட்டுமே பொறுப்பு, அதன் மக்களே அதற்குப் பொறுப்பு"என்றார்.
மேலும், "ஜனநாயக அமைப்புகள் குறிவைக்கப்படும் விதத்தைப் பார்க்கும்போது, முற்போக்கான பிரிவினர் அங்கு வந்து வாக்களிப்பார்கள் என்று நினைக்கிறீர்களா? ஒரு வகையில், அடிப்படைவாத குழுக்களை பிரதான நீரோட்டத்திற்குக் கொண்டு வந்து அதிகாரத்தை அவர்களிடம் ஒப்படைப்பதற்கான சூழலே அங்கு உருவாக்கப்பட்டு வருகிறது" என்று பேராசிரியர் பந்த் விளக்குகிறார்.
பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள தேர்தல்கள் பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும் என்று எதிர்பார்ப்பது வீண் என்றும் அவர் கூறினார்.

"தொடக்கத்தில் ஷேக் ஹசீனா வெளியேறினால் தங்களுக்குப் பலன் கிடைக்கும் என்று வங்கதேச தேசியவாதக் கட்சி நினைத்தது. இடஒதுக்கீட்டுக்கு எதிரான இயக்கத்தில் பிஎன்பி ஈடுபடவில்லை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. ஒரு அரசியல் கட்சியாக, பிஎன்பி சிதைந்துவிட்டது, 10 ஆண்டுகளாகத் தேர்தலில் போட்டியிடவில்லை, எந்தப் போராட்டங்களையும் நடத்தவில்லை. எனவே, முழு இயக்கத்தையும் வழிநடத்தி, ஹசீனாவை வெளியேற்றக் காரணமான ஜமாத்-இ-இஸ்லாமி மற்றும் சில தனித்த குரல்களே, தற்போது பலன் அடைகின்றன. இப்போது வங்கதேச தேசியவாதக் கட்சி இதைப் பார்க்கிறது. முன்பு, வங்கதேசத்தில் ஒரு வகையான 'இரு கட்சி முறை' இருந்தது, ஆனால் தற்போது அது மாறிவிட்டது"என்றார்.
இது இடைக்கால அரசாங்கத்தின் தோல்வியா?

பட மூலாதாரம், Getty Images
"வங்கதேசத்தின் தற்போதைய நிலைமைக்கு மிகப்பெரிய காரணம் இடைக்கால அரசாங்கத்தின் தலைவர் முகமது யூனுஸ் தான். நோபல் பரிசு பெற்ற யூனுஸ் எல்லாவற்றையும் சரிசெய்வார் என்ற வாக்குறுதியுடன் கொண்டு வரப்பட்டார், ஆனால் அவர் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டார். அவரது தலைமையில் வங்கதேசத்தின் நிலையைப் பாருங்கள். முகமது யூனுஸ் தீவிர அடிப்படைவாதிகளைக் கடுமையாக கண்டிப்பதை நான் பார்த்ததில்லை. ஒருவேளை அவர் அடிப்படைவாதிகள் ஆட்சிக்கு வர வேண்டுமென விரும்புகிறாரோ?" என்று பேராசிரியர் பந்த் கூறுகிறார்.
"பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு, இளைஞர் நலன் போன்ற எந்தவொரு அடிப்படைப் பிரச்னையிலும் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இந்த அரசு என்ன செய்துள்ளது? என்னால் எதையும் பார்க்க முடியவில்லை"என்றும் அவர் குறிப்பிட்டார்.
பேராசிரியர் திரிபாதி கூறுகையில், "இளம் தலைவர் ஹாதி கொல்லப்பட்ட வழக்கில், கொலையாளிகள் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இது உங்கள் உளவுத்துறை, காவல்துறை மற்றும் பாதுகாப்பு அமைப்புகளின் தோல்வியையே காட்டுகிறது. ஒரு இளம் தலைவரைக் கொல்ல சதி தீட்டப்பட்டு, வெளிப்படையாக அவர் கொல்லப்படுகிறார், பிறகு கொலையாளிகள் மிக எளிதாகத் தப்பிச் செல்கிறார்கள் என்றால் அது முறையற்ற நிர்வாகத்தையே குறிக்கிறது."
"இடஒதுக்கீட்டு முறையை நீக்கவில்லை என்பதால் ஹசீனாவுக்கு எதிராக போராட முன்வந்த மக்களும், இளைஞர்களும் இப்போது விரக்தியடைந்துள்ளனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் அடிப்படை பிரச்னைகளில் எந்த மாற்றமும் நிகழவில்லை. இனி வரும் காலத்திலும் மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இல்லை"என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவிற்கான சவால்கள்

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் வெளியுறவுக்கான நாடாளுமன்றக் குழு சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், 1971 போருக்குப் பிறகு வங்கதேசம் தொடர்பாக இந்தியா தனது மிகப்பெரிய வியூகச் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
இந்தியா-வங்கதேச உறவுகளின் எதிர்காலம் குறித்து பேராசிரியர் திரிபாதி அதிக நம்பிக்கை கொண்டிருக்கவில்லை.
"அவர்கள் ஆக்கப்பூர்வமாக ஏதாவது செய்து பொருளாதார நிலைமையை மேம்படுத்தும் வரை, அரசியல் ஆதாயத்திற்காக இந்தியாவை காரணம் காட்டி மக்களைத் திசை திருப்பிக் கொண்டே இருப்பார்கள்"என்று அவர் கூறுகிறார்.
மேலும்,"வங்கதேசத்தில் அரசியல் நிலைத்தன்மை ஏற்பட்டு, பொருளாதாரம் வளர்ச்சியடைந்தால், அவர்கள் இந்தியாவைத் துணையாகக் கொள்ள வேண்டியது அவசியமாகும். ஏனெனில் இந்தியாவுடன் அவர்கள் மிகப்பெரிய வர்த்தகத் தொடர்பைக் கொண்டுள்ளனர். ஆனால் அங்கு வன்முறையான சூழல் நிலவுவதாலும், பொருளாதார வளர்ச்சிக்கு வாய்ப்பு இல்லை என்பதாலும், இந்தியா தொடர்ந்து பலிகடாவாகப் பயன்படுத்தப்படும், இதனால் இந்தியாவுக்கு எதிரான மனநிலை அங்கே நீடிக்கும்"என்றார்.
வங்கதேசத்தில் நடக்கும் விஷயங்களில் இந்தியா தலையிட வாய்ப்பில்லை என்று பேராசிரியர் பந்த் கூறுகிறார்.
"இந்தியா இதில் தலையிடுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. ஏனெனில் இது முதன்மையாக வங்கதேசத்தின் உள்நாட்டு விஷயம். முற்போக்கான பாதையில் முன்னேற வேண்டுமா அல்லது அடிப்படைவாதப் பாதையில் முன்னேற வேண்டுமா என்பதை வங்கதேச மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்" என்று அவர் கூறுகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












