நேரலை, நியூசிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா

தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகளை இந்த பக்கத்தில் சுருக்கமாக பார்க்கலாம்.

முக்கிய சாராம்சம்

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நன்றி நேயர்களே

    பிபிசி தமிழின் இன்றைய நேரலை பக்கம் இத்துடன் நிறைவு பெறுகிறது. மீண்டும் நாளை காலை முதல் நேரலையாக , தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகளாவிய சமீபத்திய நிகழ்வுகளை இங்கே பார்க்கலாம். நன்றி! வணக்கம்!

  2. இஸ்ரேல் குறித்து இரான் அதிபர் கூறியது என்ன?

    இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன்

    பட மூலாதாரம், Iranian Presidency/Anadolu via Getty

    படக்குறிப்பு, இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன்

    இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன், நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து இரானிய தொலைக்காட்சியில் உரையாற்றினார், அப்போது கடந்த ஆண்டு நடைபெற்ற இஸ்ரேலுடனான போரையும் குறிப்பிட்டார்.

    பிபிசி பெர்சிய மொழி சேவையின்படி, கடந்த ஆண்டு நடைபெற்ற 12 நாள் போரில் இஸ்ரேலின் நோக்கம் இரானை "குழப்பத்தில்" தள்ளுவதாகும் என்று பெசெஷ்கியன் கூறினார்.

    "அவர்கள் நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் ஒரு குழுவுக்கு பயிற்சி அளித்தனர், வெளிநாட்டிலிருந்து பயங்கரவாதிகளை நாட்டுக்குள் கொண்டு வந்தனர். அவர்கள் மசூதிகள் மற்றும் சந்தைகளை எரித்தனர்" என்று இரான் அதிபர் மேலும் கூறினார்.

    இரானின் தற்போதைய நிலைமை குறித்து பெசெஷ்கியன் கூறுகையில், "மக்களுக்குச் சம்பந்தமில்லாதவர்களும் இந்த நாட்டுக்குச் சொந்தமில்லாதவர்களும் துப்பாக்கிகளால் மக்களைக் கொன்றனர். அவர்கள் சிலரின் தலையை துண்டித்தனர், சிலரை தீ வைத்துக் கொளுத்தினர்." என்றார்.

    அமெரிக்காவும் இஸ்ரேலும் இந்தக் "கலவரக்காரர்களிடம்", "முன்னேறுங்கள், நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்" என்று கூறுவதாக பெசெஷ்கியன் கூறினார்.

    "வழிகாட்டப்பட்ட" மற்றும் "பயிற்சி பெற்ற" நபர்கள் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி வீடுகளையும் சொத்துக்களையும் அழிப்பதாக இரானிய அதிகாரிகள் கூறுகின்றனர்.

    இதற்கிடையில், இரானில் இணையம் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக, நார்வேயை தளமாகக் கொண்ட இரானிய மனித உரிமைகள் அமைப்பு, போராட்டங்களில் குறைந்தது 192 பேர் கொல்லப்பட்டதாகக் கூறியது. "இந்தக் கொலைகளை பொறுத்துக்கொள்ள முடியாது" என்று பெசெஷ்கியன் கூறினார்.

  3. நியூசிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா

    இந்தியா, நியூசிலாந்து

    பட மூலாதாரம், Getty Images

    நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

    முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 300 ரன்கள் எடுத்திருந்தது. 301 ரன்கள் இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி நிதானமாக தொடங்கியது.

    நன்றாக தொடங்கிய ரோஹித் சர்மா 26 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதற்குப் பின்னர் களமிறங்கிய விராட் கோலி பவுண்டரிகளாக அடித்து அதிரடியாக ஆட்டத்தை தொடங்கினார்.

    தொடக்கத்தில் நிதானமாக ஆடிய ஷுப்மன் கில்லும் மெல்ல தனது ஸ்ட்ரைக் ரேட்டை அதிகரித்தார். இருவரும் 118 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அரைசதம் அடித்த ஷுப்மன் கில் 56 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    90 ரன்களைக் கடந்த நிலையில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 93 ரன்களில் ஆட்டமிழந்தார். 4வது பேட்டராக களமிறங்கிய துணை கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 49 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார்.

    அடுத்தடுத்த விக்கெட்டுகள் விழ ஒரு கட்டத்தில் ரன்ரேட் 7-ஐ கடந்தது. ஆனால் ஹர்ஷித் ராணாவும் கே.எல்.ராகுலும் நிலைத்து நின்று ஆடினர். இந்திய அணி 49வது ஓவரில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.

  4. இரான் போராட்டங்களில் 192 பேர் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் தகவல்

    இரான், போராட்டம்

    பட மூலாதாரம், Getty Images

    இரானில் கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வரும் போராட்டங்களில் 192 பேர் கொல்லப்பட்டுள்ளதாக நார்வேயைச் சேர்ந்த இரானிய மனித உரிமைகள் அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

    பிபிசி பாரசீக சேவையின்படி 192 போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டதை அந்த மனித உரிமைகள் அமைப்பு உறுதி செய்திருந்தாலும் உண்மையான எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

    நாட்டில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளதால் உயிரிழப்புகளை உறுதி செய்யும் நடைமுறை தடைபட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவிக்கிறது.

    வேறு சில ஆதாரங்களை மேற்கோள்காட்டி உயிரிழப்புகள் நூற்றுக்கணக்கிலும் அல்லது 2,000-க்கும் அதிகமாகவும் கூட இருக்கலாம் என அந்த அமைப்பு கூறுகிறது.

    போராட்டக்காரர்கள் உயிரிழப்பது அதிகரித்து வருவது பற்றி கவலை தெரிவித்துள்ள மனித உரிமை அமைப்புகள் சர்வதேச சமூகம் உடனடியாக செயல்பட வேண்டும் என்றும் கோரியுள்ளன.

  5. "டிரம்ப், கூட்டாளிகள் தப்புக்கணக்கு போட வேண்டாம்" - இரான் நாடாளுமன்ற சபாநாயகர் கூறியது என்ன?

    இரான், அமெரிக்கா

    பட மூலாதாரம், Getty Images

    அமெரிக்கா இரானைத் தாக்கினால் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் ராணுவ தளங்கள் "சட்டப்பூர்வ இலக்குகளாக" கருதப்படும் என, இரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகெர் கலிபாஃப் தெரிவித்துள்ளார்.

    பிபிசி உருது சேவையின்படி நாடாளுமன்ற அமர்வில் பேசிய அவர், "இரான் பதிலடி கொடுப்பதோடு தனது பாதுகாப்பு உத்தியை நிறுத்திக்கொள்ளாது. "தெளிவான மற்றும் சாத்தியமான அச்சுற்றுதல்களின்" அடிப்படையில் நடவடிக்கைகளை எடுக்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.

    இந்தச் செய்தி அமெரிக்க அதிகர் டிரம்ப் மற்றும் அவரது கூட்டாளிகள் "எந்த தப்புக் கணக்கும் போட்டுவிட வேண்டாம்" என்பதற்காகத் தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை பொருளாதாரம், அறிவுசார், ராணுவம் மற்றும் தீவிரவாதம் என நான்கு முனைகளில் இரான் எதிர்கொண்டு வருவதாக அவர் கூறினார்.

    இரானில் போராட்டக்காரர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைளைத் தொடர்ந்து டிரம்ப் ராணுவ நடவடிக்கையை ஆலோசித்ததாகவும் ஆனால் எந்த இறுதி முடிவும் எடுக்கவில்லை என்றும் அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

    இரானுக்கு சுதந்திரம் வேண்டும் என்றும் அமெரிக்கா உதவ தயாராக இருப்பதாகவும் டிரம்ப் சனிக்கிழமை வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில் தெரிவித்திருந்தார்.

  6. இந்தியா வெற்றி பெற 301 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து

    இந்தியா, நியூசிலாந்து

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, டேரல் மிட்ஷெல் அதிகபட்சமாக 84 ரன்கள் எடுத்தார்.

    நியூசிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

    வதோதராவில் நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்கள் சேர்த்தது.

    டேரல் மிட்ஷெல் அதிகபட்சமாக 84 ரன்கள் எடுத்தார். ஹென்ரி நிகோலஸ் மற்றும் டெவன் கான்வே முறையே 62 மற்றும் 56 ரன்கள் எடுத்தனர்.

    இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா மற்றும் ஹர்ஷித் ரானா தல 2 விக்கெட்டுகள் எடுத்தனர். குல்தீப் யாதவ் 1 விக்கெட் எடுத்தார்.

  7. டிரம்புக்கு நோபல் பரிசை வழங்க விரும்பும் வெனிசுவேலா தலைவர் - சாத்தியமா?

    டிரம்ப், வெனிசுவேலா

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, டிரம்ப் தனக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் எனக் கூறி வந்தார்.

    வெனிசுவேலாவின் எதிர்க்கட்சி தலைவரான மரியா கொரினா மசாடோ தனது வழங்கப்பட்ட அமைதிக்கான நோபல் பரிசை டிரம்புக்கு வழங்க அல்லது பகிர்ந்துகொள்ள விரும்புவதாக திங்களன்று ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

    ஆனால், நோபல் பரிசுகளை வழங்கும் நார்வேஜியன் நோபல் இன்ஸ்டிட்யூட் அதனை மறுதலித்துள்ளது. அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட பிறகு அதனை திரும்பப் பெறவோ, மாற்றவோ அல்லது மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவோ முடியாது என அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

    மேலும் அதில், "அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்கள், விருதைப் பெற்ற பிறகு என்ன கூறுகிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பது பற்றி நோபல் குழு கருத்து தெரிவிக்காது. பரிந்துரைக்கப்படும் நபர்களின் பணி மற்றும் முயற்சிகளை ஆராய்வது மட்டுமே குழுவின் வேலை." எனத் தெரிவித்துள்ளது.

    அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட பிறகு அந்த முடிவு எப்போதும் செல்லுபடியாகும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  8. நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஓடிஐ - இந்தியா முதலில் பௌலிங்

    இந்தியா - நியூசிலாந்து

    பட மூலாதாரம், Getty Images

    நியூசிலாந்து அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

    மூன்று போட்டிகள் கொண்ட ஓடிஐ தொடரின் முதல் போட்டி இன்று வதோதராவில் நடக்கிறது. மைக்கேல் பிரேஸ்வெல் தலைமையிலான நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    இந்திய அணியில் காயத்துக்குப் பிறகு மீண்டும் ஷ்ரேயாஸ் ஐயர் இடம்பெற்றிருக்கிறார். தமிழ்நாடு வீரர் வாஷிங்டன் சுந்தரும் அணியில் இடம்பிடித்திருக்கிறார். அவரோடு சேர்த்து ஜடேஜா, குல்தீப் என மொத்தம் 3 ஸ்பின்னர்களை இந்திய அணி களமிறக்கியிருக்கிறது.

    நியூசிலாந்து அணியில் ஸ்பின்னர் ஆதித்யா அஷோக் வாய்ப்பு பெற்றிருக்கிறார். இவர் தமிழ்நாட்டின் வேலூரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

  9. நியூசிலாந்து ஒருநாள் தொடர் இன்று தொடங்குகிறது: ரிஷப் பந்த் விலகல்

    ரிஷப் பந்த்

    பட மூலாதாரம், Getty Images

    இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று வதோதராவில் தொடங்குகிறது. இந்தத் தொடரின் இரண்டாவது போட்டி வரும் 14-ம் தேதி ராஜ்கோட்டிலும், மூன்றாவது போட்டி 18-ம் தேதி இந்தூரிலும் நடைபெறுகிறது.

    சுப்மன் கில் தலைமையிலான இந்த இந்திய அணியில் சீனியர் வீரர்களான விராட் கோலி, ரோஹித் ஷர்மா இருவரும் இடம்பெற்றிருக்கிறார்கள். அவர்கள் இருவரும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே தற்போது சர்வதேச அரங்கில் ஆடுவதால், இந்தப் போட்டிகளின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

    இந்நிலையில், பயிற்சியின்போது அடிபட்டதால் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் இந்தத் தொடரிலிருந்து விலகியிருக்கிறார். அவருக்கு வலதுபக்கம் வயிற்றுப்பகுதியின் பக்கவாட்டில் காயம் ஏற்பட்டிருக்கிறது.

    அவருக்குப் பதிலாக துருவ் ஜுரெல் அணியில் இணைந்திருப்பதாக பிசிசிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

    சில தினங்களுக்கு முன், டி20 தொடரிலிருந்து திலக் வர்மா காயம் காரணமாக வெளியேறியிருக்கிறார்.

    இன்று நடக்கும் முதல் ஒருநாள் போட்டி மதியம் 1.30 மணிக்குத் தொடங்கும்.

  10. சிரியாவில் ஐ.எஸ். இலக்குகளை தாக்கியது அமெரிக்க ராணுவம்

    அமெரிக்கா - சிரியா

    பட மூலாதாரம், US Central Command

    அமெரிக்காவும் அதன் கூட்டாளி படைகளும் சிரியாவில் உள்ள இஸ்லாமிக் ஸ்டேட் (ஐஎஸ்) குழுவின் இலக்குகளுக்கு எதிராகப் பெரிய அளவிலான தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைப்பீடம் (Centcom - டென்ட்காம்) அறிவித்துள்ளது.

    சிரியாவில் அமெரிக்க படைகள் மீது ஐஎஸ் நடத்திய உயிரிழப்பை ஏற்படுத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, ‘ஆபரேஷன் ஹாக்ஐ ஸ்டிரைக்’ (Operation Hawkeye Strike) என்ற நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சனிக்கிழமை இந்த தாக்குதல்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டதாக எக்ஸ் (X) தளத்தில் சென்ட்காம் தெரிவித்துள்ளது.

    பிராந்தியத்தில் தீவிரவாதத்தை கட்டுப்படுத்தவும், அமெரிக்க மற்றும் கூட்டணி படைகளை பாதுகாக்கவும் இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக சென்ட்காம் கூறியுள்ளது.

    “எங்களின் செய்தி தெளிவாகவும் வலுவாகவும் உள்ளது. எங்கள் போர்வீரர்களுக்கு தீங்கு விளைவித்தால், நீங்கள் உலகின் எந்த மூலையில் மறைந்திருந்தாலும், நாங்கள் உங்களைக் கண்டுபிடித்துக் கொல்வோம். நீதியைத் தவிர்க்க எவ்வளவு முயன்றாலும் பயனில்லை” என்று சென்ட்காம் தெரிவித்துள்ளது.

    20-க்கும் மேற்பட்ட விமானங்கள் பங்கேற்ற இந்த நடவடிக்கையில், அமெரிக்காவும் அதன் கூட்டணி படைகளும் 35-க்கும் மேற்பட்ட இலக்குகள் மீது 90-க்கும் அதிகமான துல்லியமான ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தின என்று பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் செய்தியிடம் ஒரு அதிகாரி தெரிவித்தார்.

    இந்த தாக்குதல்களில் F-15E, A-10, AC-130J, MQ-9 ஆகிய விமானங்களும், ஜோர்டானைச் சேர்ந்த F-16 போர் விமானங்களும் பங்கேற்றதாக அந்த அதிகாரி கூறினார். தாக்குதல்கள் நடைபெற்ற துல்லியமான இடங்கள் மற்றும் ஏற்பட்ட உயிரிழப்புகளின் அளவு குறித்து இன்னும் தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை. இந்த ராணுவ நடவடிக்கையைக் குறிப்பிட்டு எக்ஸ் தளத்தில் சனிக்கிழமை பதிவிட்ட பாதுகாப்புத் துறை அமைச்சர் பீட் ஹெக்செத், “நாங்கள் ஒருபோதும் மறக்கமாட்டோம்; ஒருபோதும் தளரமாட்டோம்" என்றார்.

    சிரியாவின் மத்திய பகுதியில் உள்ள பால்மைரா நகரில், டிசம்பரில் இஸ்லாமிக் ஸ்டேட் அமைப்பைச் சேர்ந்த துப்பாக்கிதாரி ஒருவர் நடத்திய திடீர் தாக்குதலில் இரண்டு அமெரிக்க சிப்பாய்களும், ஒரு அமெரிக்க சிவில் மொழிபெயர்ப்பாளரும் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ‘ஆபரேஷன் ஹாக்ஐ ஸ்ட்ரைக்’ நடவடிக்கையை டிரம்ப் நிர்வாகம் முதன்முதலில் அறிவித்தது.

    “இது ஒரு போரின் தொடக்கம் அல்ல. இது பழிவாங்கலின் அறிவிப்பு” என்று டிசம்பரில் இந்த நடவடிக்கையை அறிவிக்கும் போது ஹெக்செத் தெரிவித்திருந்தார்.

  11. வணக்கம் நேயர்களே!

    இன்று (11/01/2026) மதியம் வரையிலும் சமீபத்திய நிகழ்வுகளை இந்த பக்கத்தில் தொகுத்து தருவது பிரதீப் கிருஷ்ணா.

  12. உச்சநீதிமன்றம் வரை சென்ற மமதா பானர்ஜி, அமலாக்கத்துறை இடையிலான மோதல்

    உச்சநீதிமன்றம் வரை சென்ற மமதா பானர்ஜி, அமலாக்கத்துறை இடையிலான மோதல்

    பட மூலாதாரம், ANI

    மேற்கு வங்கத்தில், அரசியல் ஆலோசனை நிறுவனமான ஐ-பேக் நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையைத் தொடர்ந்து, அமலாக்கத் துறைக்கு மாநில அரசுடன் ஏற்பட்ட மோதல் தற்போது உச்ச நீதிமன்றத்தை எட்டியுள்ளது.

    கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஒத்தி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, சனிக்கிழமையன்று அமலாக்கத் துறை உச்ச நீதிமன்றத்தை அணுகியது.

    மறுபுறம், அமலாக்கத் துறை உச்ச நீதிமன்றத்தை அணுகக்கூடும் என்பதைக் கருத்தில் கொண்டு, மேற்கு வங்க அரசும் இன்று உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.

    உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தனது விசாரணை மற்றும் சோதனை நடவடிக்கைகளை மாநில அரசு தடுப்பதாகக் குற்றம் சாட்டிய அமலாக்கத் துறை, இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரியுள்ளது.

    எந்தவொரு மாநில அரசும் தனது செயல்பாடுகளில் தலையிட முடியாது என்றும், தான் நடுநிலையாகச் செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் வாதிடும் அமலாக்கத் துறை, தனது மனுவில் முதலமைச்சர் மமதா பானர்ஜி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.

    அதே நேரம், மாநில அரசு தாக்கல் செய்துள்ள கேவியட் மனுவில், அமலாக்கத் துறை தாக்கல் செய்யும் எந்தவொரு மனுவின் மீதும் முடிவெடுப்பதற்கு முன், தங்கள் தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    உச்சநீதிமன்றம் வரை சென்ற மமதா பானர்ஜி, அமலாக்கத்துறை இடையிலான மோதல்

    பட மூலாதாரம், ANI

    முழு விவகாரம் என்ன?

    நிலக்கரி ஊழல் விசாரணை தொடர்பாக அரசியல் ஆலோசனை நிறுவனமான ஐ-பேக் அலுவலகம் மற்றும் அதன் இயக்குநர் பிரதீக் ஜெயின் இல்லத்தில் அமலாக்கத் துறை கடந்த வியாழக்கிழமை சோதனை நடத்தியது. இதுகுறித்த தகவல் கிடைத்ததும், முதலமைச்சர் மமதா பானர்ஜி முதலில் பிரதீக் ஜெயினின் இல்லத்திற்குச் சென்றார், பின்னர் ஐ-பேக் அலுவலகத்திற்குச் சென்றார்.

    முதலமைச்சர் தனது அரசமைப்பு பதவியைத் தவறாகப் பயன்படுத்தி, சம்பவ இடத்திலிருந்து பல முக்கியமான ஆவணங்களையும் மின்னணு ஆதாரங்களையும் வலுக்கட்டாயமாக எடுத்துச் சென்றதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டுகிறது.

    இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறையும் திரிணாமூல் காங்கிரஸும் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுக்களைத் தாக்கல் செய்தன. அவை வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரவிருந்தன. இருப்பினும், நீதிமன்ற அறையில் ஏற்பட்ட அதிக கூட்டம் மற்றும் கூச்சல் குழப்பம் காரணமாக, நீதிபதி சுப்ரா கோஷ் விசாரணையை ஜனவரி 14ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

    இதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தை வேறொரு அமர்வுக்கு மாற்றுமாறு பொறுப்பு தலைமை நீதிபதி சுஜாய் பாலிடம் அமலாக்கத் துறை எழுத்துபூர்வமாகக் கோரிக்கை விடுத்தது. இருப்பினும், இந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, அமலாக்கத் துறை சனிக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

    முன்னதாக, விசாரணை என்ற பெயரில் திரிணாமூல் காங்கிரஸின் ரகசிய உத்திகள் தொடர்பான ஆவணங்களைக் கைப்பற்ற அமலாக்கத் துறை முயல்வதாக மமதா பானர்ஜி குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

  13. மகளிர் பிரீமியர் லீக்: யுபி வாரியர்ஸை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய குஜராத் ஜெயன்ட்ஸ்

    மகளிர் பிரீமியர் லீக்: யுபி வாரியர்ஸை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய குஜராத் ஜெயன்ட்ஸ்

    பட மூலாதாரம், Indranil MUKHERJEE / AFP via Getty

    மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவது போட்டியில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணி, யுபி வாரியர்ஸ் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது.

    இந்தப் போட்டியில், யுபி வாரியர்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச முடிவு செய்தது. குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.

    குஜராத் ஜெயன்ட்ஸ் அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் அதிகபட்சமாக 65 ரன்களும் அனுஷ்கா ஷர்மா 44 ரன்களும் எடுத்தனர்.

    சோஃபி டிவைனின் 38 ரன்கள், ஜார்ஜியா வெர்ஹாமின் 27 ரன்கள் ஆகியவற்றின் உதவியுடன் குஜராத் ஜெயன்ட்ஸ் அணி, யுபி வாரியர்ஸ் அணிக்கு 208 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது.

    யுபி வாரியர்ஸ் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    ஃபோப் லிட்ச்ஃபீல்ட் தவிர, யுபி வாரியர்ஸ் அணியின் வேறு எந்த வீரராலும் சோபிக்க முடியவில்லை. அவர் அதிரடியாக ஆடி 78 ரன்கள் குவித்தார்.

    குஜராத் ஜெயன்ட்ஸ் சார்பில் ரேணுகா சிங், சோஃபி டிவைன், ஜார்ஜியா வெர்ஹாம் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

  14. 'ஒரு தனிநபரின் உழைப்பு மட்டுமல்ல' - ஜன நாயகன் சான்றிதழ் சர்ச்சை பற்றி கமல்ஹாசன் கருத்து

    கமல்ஹாசன், ஜன நாயகன், பராசக்தி

    பட மூலாதாரம், X/Kamal Haasan

    படக்குறிப்பு, கமல்ஹாசன் இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். (கோப்புப் படம்)

    தமிழ் திரையுலக வெளியில் இந்த மாதம் விஜய் நடித்த ஜன நாயகன் மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி திரைப்படங்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டவையாக இருந்தன.

    ஜனவரி 9ஆம் தேதி வெளியாக வேண்டிய ஜன நாயகன் சான்றிதழ் கிடைக்காத காரணத்தால் தள்ளிப் போனது. வெளியீட்டிற்கு முந்தைய நாள் சான்றிதழ் வழங்கப்பட்ட பராசக்தி திரைப்படத்திலும் பல்வேறு மாற்றங்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தது விவாதப் பொருளானது.

    இந்த நிலையில் நடிகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன் இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், “திரைப்படம் என்பது ஒரு தனிநபரின் உழைப்பு மட்டுமல்ல; எழுத்தாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், கலைஞர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், வாழ்வாதாரத்திற்காக இந்தத் துறையை நம்பியிருக்கும் சிறு வணிகர்கள் என முழுமையான கூட்டமைப்பு ஒன்றின் கூட்டு முயற்சி” எனத் தெரிவித்துள்ளார்.

    திரைப்படத்திற்கு சான்றிதழ் வழங்கும் நடைமுறைகளை கொள்கை ரீதியாக மறுபரிசீலனை செய்வதே தற்போதைய தேவை என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் கமல்ஹாசன்.

    “திரைப்படத்திற்கு சான்றிதழ் வழங்குவதற்கான காலக்கெடுவை வரையறுத்தல், வெளிப்படையான மதிப்பீடு மற்றும் பரிந்துரைக்கப்படும் ஒவ்வொரு வெட்டு அல்லது திருத்தத்திற்கும் எழுத்துபூர்வமான, தகுந்த காரணங்களை விளக்குதல் ஆகியவை இதில் முக்கியமானவை,” என்றும் தெரிவித்தார்.

    திரைத்துறை முழுவதும் ஒன்றிணைந்து நமது அரசு நிறுவனங்களுடன் அர்த்தமுள்ள மற்றும் ஆக்கபூர்வமான உரையாடலில் ஈடுபட வேண்டிய தருணம் இது எனக் கூறிய கமல்ஹாசன், “இத்தகைய சீர்திருத்தங்கள் படைப்புச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும், அரசியலமைப்பு விழுமியங்களை நிலைநிறுத்தும், கலைஞர்கள் மற்றும் மக்கள் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்துவதன் மூலம் இந்தியாவின் ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்தும்” என்றார்.

  15. வணக்கம் நேயர்களே!

    இன்று (10/01/2026) இரவு வரையிலும் சமீபத்திய நிகழ்வுகளை இந்த பக்கத்தில் தொகுத்து தருவது மோகன்.

  16. 'போராட்டக்காரர்கள் டிரம்ப்பை மகிழ்விக்க முயல்பவர்கள்' - இரான் தலைவர்

    இரான்

    பட மூலாதாரம், Office of the Iranian Supreme Leader/WANA (West Asia News Agency)

    இரானின் அதி உயர் தலைவர் அயதுல்லா அலி காமனெயி, அரசாங்க எதிர்ப்புப் போராட்டக்காரர்களை 'பிரச்னை செய்பவர்கள்' என்றும், 'அமெரிக்க அதிபரை மகிழ்விக்க' முயல்பவர்கள் என்றும் அழைத்துள்ளார்.

    இரானில் நடக்கும் போராட்டங்களை “வன்முறையான சீர்குலைவு நடவடிக்கைகள் மற்றும் பரவலான சேதப்படுத்தல்கள்” என்று அமெரிக்கா மாற்றிவிட்டதாகக் குற்றம் சாட்டி, இரான் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவிற்கு (United Nations Security Council) ஒரு கடிதத்தையும் அனுப்பியது. இதற்கிடையில், இரான் பெரிய சிக்கலில் இருப்பதாக டிரம்ப் கூறினார்.

    பொருளாதார பிரச்னைகளை முன்னிட்டு தொடங்கிய இந்த போராட்டங்கள் 13வது நாளை எட்டியுள்ள நிலையில், இது கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப் பெரிய போராட்டங்களுள் பெரியதாக வளர்ந்துள்ளது. இதன் விளைவாக, இஸ்லாமிய குடியரசுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும், சிலர் மன்னராட்சியை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தும் கோரிக்கைகளும் எழுந்துள்ளன.

    மனித உரிமை அமைப்புகளின் தகவலின்படி, குறைந்தது 48 போராட்டக்காரர்களும் 14 பாதுகாப்புப் படை உறுப்பினர்களும் இரானில் உயிரிழந்துள்ளனர்.

    வெள்ளிக்கிழமை ஒளிபரப்பப்பட்ட உரையில், காமனெயி தன்னுடைய கடுமையான நிலைப்பாட்டை தொடர்ந்தார். "இஸ்லாமிய குடியரசு பல லட்சம் மரியாதைக்குரிய மக்களின் ரத்தத்தின் மூலம் ஆட்சிக்கு வந்தது என்பதையும், இதை மறுப்பவர்களின் முன்னால் அது பின்வாங்காது என்பதையும் அனைவரும் அறிந்துகொள்ளட்டும்" என்று கூறினார்.

    பின்னர், ஆதரவாளர்கள் கூடியிருந்த ஒரு கூட்டத்தில் அவர் தெரிவித்த கருத்துகள் அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டன. அப்போது, இரான் “அழிவை ஏற்படுத்தும் கூறுகளைக் கடுமையாக எதிர்கொள்வதற்குத் தயங்காது” என்று கூறி, தனது நிலைப்பாட்டை மேலும் கடுமையாக்கினார்.

    இதற்கிடையில், இரானின் ஐக்கிய நாடுகள் தூதர், “அச்சுறுத்தல்கள், தூண்டுதல் நடவடிக்கைகள், மேலும் நிலைமையின்மையும் வன்முறையும் வேண்டுமென்றே ஊக்குவிப்பது மூலம், அமெரிக்கா இரானின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுகிறது” என்று குற்றம்சாட்டி, பாதுகாப்பு கவுன்சிலுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.

  17. 'இரான் அரசு பெரும் சிக்கலில் உள்ளது' - டிரம்ப் கூறியது ஏன்?

    டொனால்ட் டிரம்ப்

    பட மூலாதாரம், Reuters

    இரானில் நடைபெற்று வரும் நாடு தழுவிய போராட்டங்கள் குறித்த தனது சமீபத்திய கருத்தில், இரான் அரசு "மிகப் பெரிய சிக்கலில்" இருப்பதாகத் தெரிவித்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.

    “கடந்த சில வாரங்களில் மக்கள் நகரங்களை கைப்பற்றியுள்ளனர்; இது உண்மையில் நடக்கும் என்று யாரும் நினைக்கவில்லை” என்று அவர் தெரிவித்தார். இந்த நிலைமையை தான் மிக நெருக்கமாக கவனித்து வருவதாக டிரம்ப் மீண்டும் வலியுறுத்தினார்.

    அவர் மேலும், “அவர்கள் (இரான் அரசு) முன்புபோல் மக்களை கொல்லத் தொடங்கினால், நாங்கள் நடவடிக்கை எடுப்போம். அவர்களுக்கு வலிக்கும் இடத்தில் நாங்கள் தாக்குவோம்” என்று கூறினார்.

    “அது ராணுவ இருப்பைக் குறிக்கவில்லை. அதாவது அவர்களுக்கு மிகவும்... மிகவும் வலிக்கும் இடத்தில் கடுமையாகத் தாக்குவது என்பதுதான். அப்படி நடக்கவேண்டாம் என்பதே எங்களின் விருப்பம்” என்றும் டிரம்ப் கூறினார்.

    இரானில், நாட்டின் பொருளாதாரத்தின் மோசமான நிலை காரணமாகத் தொடங்கிய அரசு எதிர்ப்புப் போராட்டங்கள் 13 நாட்களாக நடந்து வருகின்றன. மனித உரிமை அமைப்புகளின் தகவலின்படி, இந்த வன்முறைகளில் குறைந்தது 48 போராட்டக்காரர்களும் 14 பாதுகாப்புப் படை உறுப்பினர்களும் உயிரிழந்துள்ளனர்.

  18. அமெரிக்கா கிரீன்லாந்திற்கு 'உரிமையாளராக' வேண்டும் - டிரம்ப்

    கிரீன்லாந்து

    பட மூலாதாரம், Reuters

    ரஷ்யா மற்றும் சீனா கிரீன்லாந்தை கைப்பற்றாமல் தடுக்க, அந்தப் பகுதியை தங்களுடையதாக வைத்திருக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

    வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய போது பிபிசி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், “நாடுகள் எதையாவது பாதுகாக்க வேண்டுமென்றால், அதற்கு உரிமை இருக்க வேண்டும். குத்தகைகளை நீங்கள் பாதுகாக்க முடியாது. உரிமையைத்தான் பாதுகாப்பீர்கள். அதனால் நாங்கள் கிரீன்லாந்தை பாதுகாக்க வேண்டியிருக்கும்” என்று தெரிவித்தார். மேலும், இதை “எளிய வழியில்” அல்லது “கடினமான வழியில்” செய்வோம் என்றும் அவர் கூறினார்.

    இதற்கிடையில், நேட்டோ அமைப்பில் உள்ள டென்மார்க்கின் தன்னாட்சிப் பகுதியான கிரீன்லாந்தை வாங்குவது குறித்து அமெரிக்க நிர்வாகம் பரிசீலித்து வருவதாக சமீபத்தில் வெள்ளை மாளிகை தெரிவித்தது. அதே நேரத்தில், பலவந்தமாக அதை இணைத்துக் கொள்ளும் விருப்பத்தையும் முழுமையாக நிராகரிக்க முடியாது என்றும் கூறப்பட்டது.

    டென்மார்க்கும் கிரீன்லாந்தும், அந்தப் பகுதி விற்பனைக்கு அல்ல என்று தெரிவித்துள்ளன. ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால், அது அட்லாண்டிக் கடலின் இருபுறங்களையும் இணைக்கும் பாதுகாப்பு கூட்டணியின் முடிவாக அமையும் என்றும் டென்மார்க் எச்சரித்துள்ளது.

    கிரீன்லாந்து அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு மிக அவசியமானது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் பலமுறை கூறியுள்ளார். எந்த ஆதாரமும் இல்லாமல், அது “எங்கும் ரஷ்ய மற்றும் சீன கப்பல்களால் நிறைந்திருக்கிறது” என்றும் அவர் கூறியுள்ளார்.

    "நான் சீன மக்களை விரும்புகிறேன். நான் ரஷ்ய மக்களை விரும்புகிறேன்," என்று டிரம்ப் கூறினார். "ஆனால் கிரீன்லாந்தில் அவர்கள் அண்டை நாடுகளாக இருப்பதை நான் விரும்பவில்லை, அது நடக்காது. மேலும், நேட்டோ (Nato) இதைத் புரிந்துகொள்ள வேண்டும்," என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார்.

  19. கடைசி ஓவரில் 18 ரன்கள் எடுத்து மும்பை இந்தியன்ஸை வீழ்த்திய ஆர்சிபி

    வுமன்ஸ் பிரீமியர் லீக்

    பட மூலாதாரம், Getty Images

    மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூபிஎல்) தொடரின் நான்காவது சீசனை வெற்றியோடு தொடங்கியிருக்கிறது ஆர்சிபி. கடைசி ஓவரில் வெற்றி பெற 18 ரன்கள் தேவை என்ற நிலையில் அதை அந்த அணி கடைசி பந்தில் எடுத்து வெற்றியை வசப்படுத்தியது.

    டபிள்யூபிஎல் தொடரின் நான்காவது சீசன் ஜனவரி 9 அன்று நவி மும்பை டிஒய் பாடில் ஸ்டேடியத்தில் தொடங்கியது. நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸும், முன்னாள் சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் முதல் போட்டியில் மோதின.

    டாஸ் வென்று ஃபீல்டிங் தேர்வு செய்த ஆர்சிபி அணி மும்பைக்கு ஆரம்பத்திலேயே நெருக்கடி கொடுத்தது. அமீலியா கெர் நேட் சிவர்-பிரன்ட் என முன்னணி வீராங்கனைகள் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் கூட 20 ரன்கள் தான் எடுத்தார். இருந்தாலும் சஜனா சஜீவன், நிகோலா கேரி கூட்டணி அந்த அணியை நல்ல நிலைக்கு எடுத்துச் சென்றது. அதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது. தமிழ்நாடு வீராங்கனை ஜி.கமலினி 32 ரன்கள் எடுத்தார்.

    அடுத்து களமிறங்கிய ஆர்சிபி, கிரேஸ் ஹாரிஸ் மற்றும் ஸ்மிரிதி மந்தனாவின் அதிரடியால் நல்ல தொடக்கம் பெற்றது. 3 ஓவர்களிலேயே அந்த அணி 40 ரன்கள் எடுத்தது. ஆனால், ஐந்தாவது ஓவரில் இருந்து விக்கெட்டுகள் தொடர்ச்சியாக விழத் தொடங்கின. ஆனால், கடைசி கட்டத்தில் நடீன் டி கிளார்க் தனி ஆளாகப் போராடினார்.

    கடைசி ஓவரில் வெற்றி பெற அந்த அணிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது. முதல் இரண்டு பந்துகளுமே டாட் பால்களாக முடிந்திருந்தன. ஆனாலும், கடைசி 4 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் விளாசி ஆர்சிபி அணியை வெற்றி பெறவைத்தார் டி கிளார்க். அவர் ஆட்டமிழக்காமல் 44 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார். பந்துவீச்சிலும் அவர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியிருந்தார்.

  20. வணக்கம் நேயர்களே!

    இன்று (10/01/2026) மதியம் வரையிலும் சமீபத்திய நிகழ்வுகளை இந்த பக்கத்தில் தொகுத்து தருவது பிரதீப் கிருஷ்ணா.